புதன், 23 ஜூலை, 2025

தமிழமுது –.79 . தமிழர் - அறநெறி வாழ்வியல். காமக் களிப்பு- பேரின்பம்:ஆடவர்.

 

தமிழமுது –.79 . தமிழர் - அறநெறி வாழ்வியல்.

காமக் களிப்பு- பேரின்பம்:ஆடவர்.

மன்மத லீலை வென்றார் உண்டோ…?

காமம்பருவ விளைவின் விழைவே. சங்கப்புலவர்கள் காமவிழைவை நோய் என்று கூறுவர். இப்பாலியல் வேட்கை உடலையும் உள்ளத்தையும் ஒருங்கே நின்று வருத்துவதால் அதனை நோய் என்றனர்.

ஆடவர், பெண்டிர் அறவழி நிற்றல் வேண்டும்;

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

 அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.” –குறள்: 148.

ஆடவர் கற்புடன் வாழ்தல் வலியுறுத்தி வள்ளுவர் கூறினார்.

பிறன் மனையாளைக் கண் எடுத்தும் பார்க்காத  ஒழுக்கம் உடையவன் சான்றோனாகும் தகுதி மட்டுமன்று அஃது அறமுமாகும்.

சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர்

நிறைகாக்கும் காப்பே தலை.-குறள்:57.

பருவமுற்ற மகளிரைக் கற்பொழுக்கம் கெடாது  கண்ணுக்குள் வைத்துக் காக்கும் காவல் என்ன பயனைத் தரும் ; மகளிர் பருவப் பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்தித்  தம்மைத் தாமே

 காத்துக்கொள்ளும் காப்பே சிறப்புடையதாம்.

காமக் களிப்பு- பேரின்பம்: ஆடவர்.

 

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள. –குறள். 1101.

கண்ணால் கண்டும் காதால் கேட்டும் நாவால் சுவைத்தும் மூக்கால் நுகர்ந்தும் உடலால் தழுவியும் துய்க்கப்பெறும் ஐம்புல  இன்பங்கள் யாவும்  ஒளி பொருந்திய வளையல் அணிந்த இப்பெண்ணிடத்தே  இருக்கின்றன. அஃதாவது  ஐம்புலன்களும் ஓரிடத்தில்  ஒரே நேரத்தில் ஒருசேர துய்க்கப்பெறும் காமக் களிப்பைக் குறித்தார்.

 

வேட்ட பொழுதின் அவையவை போலுமே

தோட்டார் கதுப்பினாள் தோள்.” –குறள். 1105.

 மலர் மணம் கமழும் அழகிய கூந்தலை இவளின் தோள்கள், விட்டகல நினையாத வேட்கையால் விழையும் விழையும் பொருள்களைப் போல, விருப்புடன் புணருந்தோறும் இன்பம் அளிக்கின்றனவே.

 

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்

செறிதோறும் சேயிழை மாட்டு,” குறள். 1110.

சான்றோர் நூல்களக் கற்குந்தோறும் அறியாத புதிய செய்திகளை அறிந்துகொள்வதைப்போல, அழகிய அணிகலன்கள் பொலிவு பெற அணிந்த இவளைப் புணருந்தோறும் காம இன்பம் முன்னினும் சிறந்து புதுமையாகத் தோன்றுகிறதே…!.

 

இன்பத்துள் சிறந்த இன்பம்:

வார்முலை முற்றத்து நூலிடை விலங்கினும்

கவ்வுப் புலந்துறையும் கழிபெருங் காமத்து

இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்.” – அகநானூறு.

 நெஞ்சே….!  தலைவியின் மார்பில் தோய்ந்து முயங்கும் முயக்கத்தினை ஒரு நூல் இடையே தடுப்பினும் அதனை வெறுத்து, மிகுந்த காதலோடு இன்பம் துய்க்கும் நுகர்ச்சியைக் காட்டிலும் சிறந்தது ஒன்று இல்லை. –என்றான் தலைவன்.

மன்மத லீலை வென்றார் உண்டோ…?

 

 

காமக் களிப்பு- பேரின்பம்: பெண்டிர்.

 

Pl. donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக