வெள்ளி, 18 ஜூலை, 2025

தமிழமுது –.76 . தமிழர் இயற்கை வழிபாடு. காதல் – காமம் . அறநெறி வாழ்வியல்.

 

தமிழமுது –.76 . தமிழர் இயற்கை வழிபாடு.

காதல்காமம் . அறநெறி வாழ்வியல்.

தமிழரின் வாழ்வியல் நெறியென வகுத்துக்கூறியதாவது அறம், பொருள், இன்பம் என மூன்றுமேயாம். வீடுபேறு என்பது தமிழர் நெறியன்று.

 

“ அறம்பொரு ளின்பம் உயிரச்சம் நான்கின்

திறந்தெரிந்து தேறப் படும்.” குறள். 501.

“ அறம், பொருள், இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து  ஒருவனைத் தெளிய வேண்டும் என்பது குறளின் கருத்தாகும்.

 

 அறம் பிறழாமலும் பொருளுக்காகக் கடமையில் தவறாமலும் இன்பத்தின் பொருட்டு ஒழுக்கம் தவறாமலும் உயிர்க்கு உண்டாகும் கேட்டுக்கு அஞ்சிக் கடமை தவறாமலும் உள்ளவனையே  தேர்ந்தெடுக்க வேண்டும்..

  அறம் பொருள் இன்பம் அடைதல் நூற்பயன் ‘ என்பதையே வடமொழிக்கு அடிமையான  பிற்காலத் தமிழர்கள்  ‘அறம் பொருள், இன்பம்  வீடு அடைதல் நூற்பயன் என்று திரித்துவிட்டனர். வீடும் உறுதிப் பொருளில் ஒன்று என்பது பழந்தமிழர் கொள்கை எனில் வள்ளுவர் திருக்குறளை நாற்பாலாகச் செய்யாமல்  முப்பாலாகச் செய்திருப்பாரா..?”

 

“ வள்ளுவர் ஓர் அறிவு நூற் புலவர், அரசியலறிஞர்  வாழ்வியல் கணக்கர், தமிழர் பண்பாட்டின் பெருமையை நன்குணர்ந்தவர்  தமிழினப் பற்றுடையவர்.   தமிழர் நாகரிகத்திற்கும் ஆரியர் நாகரிகத்திற்கும் உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்தவர். ஆகையால், அவ்வடபுல மக்களின் பொய் கூற்றுக்களும், போலிக் கொள்கைகளும் தமிழ் மக்களிடையே பரவி வருவதைத் தடுத்து, விலக்கி, மேலும் அவை பரவாமலிருக்க தமிழ் மக்களின் பழக்கவழக்கங்களாகிய ஒழுக்க முறைகளை, அகம், புறப் பாகுபாட்டைத் தழுவி அறம், பொருள், இன்பம் என முப்பாலாக்கி ஒரு நூல் செய்து தமிழர் பண்பாட்டை நிலைநிறுத்த எண்ணினார்.

 

வீடு பேறு என்பதும், வீடு என்பதும் அது ‘சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்து’ என்பதும் கற்பனைப் பேச்சாகும். திருக்குறளுக்கும்  வீட்டுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை. வினை, பிறப்பு, வீடு, இந்திரன் முதலிய இறையவர் பதங்களை அடைதல், நரகத்தை அடைதல், பிறப்பறுத்தல் வீடு பெறுதல் என்பனவெல்லாம்  ஒன்றுக்கொன்று முரணான விளங்காப் பேச்சுகளேயன்றிப் பயனுடைய பேச்சல்ல. குறளுக்கும் இப்பேச்சுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை.” –புலவர். குழந்தை.

 

 அறவழி:

 சங்கப் புலவர்களும் அறநெறி வாழ்வியலைப் போற்றினர்.

“ சிறப்புடை மரபும் பொருளும் இன்பமும்

அறத்துவழி வழிப்படூஉம் தோற்றம்…” –புறநானூறு. 31.

சிறப்பினை உடைய பொருளும் இன்பமும் அறவழிப்பட்டுச் சிறப்புறும். இதுவே வள்ளுவர் வாய்மொழி என்பதையும் அறிக.

” அறம் எனப்படுவது யாது எனக் கேட்பின்

மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்

உண்டியும்  உடையும் உறையுளும் அல்லது

கண்டதுஇல்… “ என்கிறது. மணிமேகலை.

 வாழும் உயிர்களுக்கெல்லாம் உணவும் உடையும் இடமும் அளிப்பதன்றி அறம் என வேறு எதனையும் சான்றோர் கண்டதில்லை.

Pl. donate:

R.KUMARAN,Thanjavur.

Account No: 0914101167707

IFSC CODE : CNRB 0001854

MICR CODE : 613015003.

.………………………தொடரும் ------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக