வியாழன், 25 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி -106-110

அகநானூறு – அரிய செய்தி -106 
                            ஞாயிறு –பெருமை –வலமாக எழுதல் – ஏன் ?
பயங்கெழு திருவின் பல்கதிர் ஞாயிறு
வயங்கு தொழில் தரீஇயர் வலன் ஏர்பு விளங்கி
மல்குகடல் தோன்றியாங்கு .....................
               மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார், அகநா. 298: 1 – 3
உலகில் வாழும் உயிர்களுக்குப் பயன்மிக்க செல்வத்தைத் தரும் பலகதிர்களையுடைய ஞாயிறானது, அவ்வுயிர்கள் விளங்குதற்கு ஏதுவாகிய பல்வகை தொழில்களைத் தருமாறு , வலமாக எழுந்து, நீர்முக்க கடலிலே தோன்றினாற்போல.  ‘ வழையமல் அடுக்கத்து வலனேர்பு ’..........அகநா. 328 : 1
திருமுருகாற்றுப்படை
உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு..
.
               -நக்கீரர், திருமுரு.1, 2
உலகில் வாழும் உயிர்கள் எல்லாம் மகிழும்படி, மேருவை வலமாக எழுந்து, பற்பல சமயத்தவரும் புகழ்கின்ற ஞாயிறு கீழ்க் கடலிடத்தே எழக் கண்டாற்போன்று..
அகநானூறு – அரிய செய்தி -107
                                                       வரதட்சினை
……………….. ஆய்தொடிக் குறுமகள்
நலம்சால் விழுப் பொருள் கலம்நிறை கொடுப்பினும்
பெற; அருங்குரையள் ஆயின்…….
………………………………………..
பெருநீர்க் குட்டம் புணையொடு புக்கும்
படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின்
தருகுவன் கொல்லோ தானே….
                    அம்மூவனார், அகநா. 280 : 4 – 11
இளமகளாகிய அவள், நலம்தரும் சீரிய பொருள்களோடு அணிகலன்கள் பலவும் நிறையக் கொடுத்தாலும் பெறுதற்கு அரியவள்………………… அவள் தந்தையுன் தொழிலாற்றியும் பணிந்தும் சார்ந்தும் இருந்தால் அறத்தை எண்ணி அவளை நமக்குத்தருவானோ?
அகநானூறு – அரிய செய்தி -108 
                                                         மாங்காடு
 மகளிர் மாங்காட்டு அற்றே ....                                                                                                                                                              
தெய்வ மகளிர் வாழும் மாங்காடு என்னும் ஊர் காப்பு மிகுதி உடையது./மகளிர் வாழும் இவ்வூர் தெய்வக் காப்பு மிக்கது.
-நடுகல் வழிபாடு,சுவரில் கோடு –கணக்கு
அகநானூறு – அரிய செய்தி -109
                                                              சுவரில் எழுதுதல்
……………………..தோற்றிய
செய்குறி ஆழி வைகறோ றெண்ணி
எழுதுசுவர் நனைந்த அழுதுவார் மழைக்கண்
                                          பொருந்தில் இளங்கீரனார், அகநா. 351 :9 – 11
 சுழித்த  செய்குறியாய வட்டத்தை, நாள்தோறும் எண்ணி, அவை எழுதப்பட்ட சுவர், நனைதற்கு ஏதுவாய அழுதலால் கண்ணீர் பெருக..( பல்லி நிமித்தமும்)
அகநானூறு – அரிய செய்தி -110 
                                       எழுத்துடை நடுகல் –குயில் எழுத்து
இருங்கவின் இல்லாப் பெரும்புன் தாடி
கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்
பெயர்பயம் படரத் தோன்றுகுயில் எழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன்
ஆறுசெல் வம்பலர் விட்டனர் கழியும்
                    மதுரை மருதன் இளநாகனார், அகநா. 297 : 5 – 10
அழகிழந்த பொலிவற்ற தாடியினையும் அஞ்சாமையையும் உடைய மறவர்கள் தம் அம்புகளை அச்சம் தரும் நடுகல்லில் தீட்டுவர்; அதனால் பக்கம் தேய்ந்து மெலிந்துபோன நடுகல்லில் பெயரும் பெருமையும் விளங்கத் தோன்றுமாறு பொறிக்கப்பட்ட எழுத்துக்களை ஒன்று சேர்த்துப் பொருள் பொருத்தமுடன் படித்துப்பார்க்க இயலாதவராய், வழி நடை வருத்தத்தால் தளர்ச்சியுடன் செல்லும் வழிப்போக்கர்கள் அதனை விடுத்து அகன்று செல்வர். ( குயில் எழுத்துபொறித்த எழுத்து, சேக்கோள் தண்ணுமை - ஏறு கோட் பறைபோர்ப் பறை ) (குறுந். 12 )


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக