சனி, 6 ஜூன், 2015

பத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 5 -6

பத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 5                
 முல்லைப் பாட்டு - காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்
பாடு இமிழ் பனிக் கடல் பருகி வலன் ஏர்பு
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை
                                                                                 4 - 6
அலையோசை முழங்கும்  குளிர்ந்த கடல் நீரைக் குடித்து எழுந்த மேகம்,அகன்ற உலகத்தை வளைத்து, வலமாக உயர்ந்து எழுந்து  , மலைகளில் தங்கி மழையைப் பொழிந்த புல்லிய மாலைக் காலம்.
பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள்
                                                                                             55
நாழிகைக் கணக்கு அளந்து அறியும் நுண்ணறிவு உடைய கணக்கர்கள்.
                                                             முற்றும்


 பத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 6
மதுரைக் காஞ்சி - மாங்குடி மருதனார்
மழை தொழில் உதவ மாதிரம் கொழுக்கத்
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த
                                                                       10 – 12
மழை வேண்டுங்காலத்துத் தவறாது பெய்து  நாடெங்கும் விளையுள் பெருகி வளம் கொழிக்கும். ஒரு விதைப்பில் விதைத்த விதை ஆயிரமாய்ப் பெருகி விளைய, விளைநிலங்களும் மரங்களும் பல்லுயிர்களும் தாம் பயன் கொடுக்கும் தொழிலை ஏற்றுக்கொண்டு தவறாமல் வழங்க...
தென் குமரி வடபெருங்கல்
குண குட  கடலா எல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
                                                                          . 70 – 72
தென்திசையில் குமரியையும் வடதிசையில் இமயமலையையும் கிழக்கிலும் மேற்கிலும் கடலையும் எல்லைகளாகக்கொண்ட   நிலப்பரப்பில் வாழ்வோர் யாவரும் தம்முடன் பாண்டியனுக்கு உள்ள பழைய உறவைச் சொல்லி அவன் ஏவல் கேட்டு ஒழுகுமாறு வெற்றியோடு  வாழ்ந்த வெற்றியாளர்களின் தலைவனே.
நட்டவர் குடி உயர்க்குவை
செற்றவர் அரசு பெயர்க்குவை
                                                                           131, 132
நெடுஞ்செழியன்,  தன்னுடன் நட்புக்கொண்டவர்களின் குடியை உயர்த்தும் பண்புடையவன் ; பகைத்தவர் நாட்டைக் கைக்கொள்ளும் ஆற்றலும் உடையவன்.
வாழாமையின் வழி தவக் கெட்டுப்
பாழ் ஆயின நின் பகைவர் தேஎம்
                                                                           175, 176
செழியனே! நின்னுடைய ஏவலைக் கேட்டுப் பணி செய்து வாழாது, நிலை கெட்டுப் பகைத்தமையால் அவர்தம் நாடுகள் பாழாயின.                                                                              
உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே
                                                                              197, 198
ஒரு பொய் கூறுவதால் உயர்ந்த உலகம் அமிழ்தொடு கிடைத்தாலும் அதனைப் விட்டொழித்து வாய்மையுடன் நட்புச் செய்தலை உடையவன் நெடுஞ்செழியன்.
தென் புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழு நிதி பெறினும்
பழி நமக்கு எழுக என்னாய் ...
                                                                        202 – 204
தென் திசையிலுள்ள மலைகள் எல்லாம் நிறையும்படி வாணன் என்ற சூரன் வைத்த சீரிய நிதிக் குவியலைப் பெற்றாலும்  பிறர் கூறும் பழி நமக்கு வருமே என்று அப்பொருளைச்  செழியன் கருதான்.
திரை இடு மணலினும் பலரே உரை செல
மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே
                                                                                        236, 237
 இவ்வுலகில், புகழ் பெறாது  பயனின்றி இறந்தோர் கடல் அலை குவிக்கும் மணலினும் பலராவர்.                                                        
நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்
                                                                                    498, 499
நன்மை தீமைகளை  ஆராய்ந்து தீமைகளை விலக்குபவர்;  அன்பும் அறமும் எக்காலத்தும் தம்மைவிட்டு நீங்காது பாதுகாப்பவர்; பழியிலிருந்து  நீங்கி உயர்ந்து  விளங்குபவர்; பரவிய புகழால் நிறைந்தவர்;  செம்மை சான்றவர்; அரசனால் காவிதிப் பட்டம் பெற்ற அமைச்சர் பெருமக்கள்.
பாணர் வருக பாட்டியர் வருக
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக என
இருங்கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர்  களிற்றொடும் வீசி
                                                                           749 - 752
 செழியன்,  காட்சிக்கு எளியனாய் இருந்து  கவிதையாகிய புது வருவாயையுடைய புலவர்களுடன் பாணர் வருக, பாடினி வருக என அழைத்து அவர்தம் சுற்றத்தாரால் பாதுகாக்கப்படும்  இரவலர்க்கெல்லாம்  கொடிஞ்சியை உடைய நெடிய தேர்களை யானைகளோடும் கொடுத்தனன்.                                                                                                                                                                                                                                                                                    
மகிழ்ந்து இனிது உறைமதி பெரும
வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே
                                                                       781, 782
செழியனே !  உனக்கென வரையறுத்துக் கொடுக்கப்பட்ட வாழ்நாட்கள் முழுதும் மகிழ்ந்து இனிது  இருப்பாயாக.
முற்றும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக