சனி, 6 ஜூன், 2015

பத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 1

பத்துப்பாட்டு – பொன்மொழிகள் - 1
                       திருமுருகாற்றுப்படை - நக்கீரர்
  கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பு...
                                                                                         17
ஒருவர் கையால் புனைந்து இயற்றாத இயற்கை அழகு

பார் முதிர் பனிக் கடல் கலங்க உள் புக்குச்
சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல்
                                                                                         45, 46
நிலம் முற்றுப்பெற்ற குளிர்ந்த கடலே கலங்கும்படி உள்ளே சென்று, சூரபன்மாவாகிய தலைவனைக் கொன்ற, சுடர்விடும் இலை வடிவாகிய நெடுவேல்.
நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப
இன்னே பெறுதி நீ முன்னிய வினையே
                                                                                         65, 66
புலவனே ! நீ, வீடுபேறு வாய்க்க வேண்டும் என்று விரும்பினாயானால் உன் மனத்தில் எழுந்த அவா கைகூடுவதோடு, நல்வினைப் பயனால்  நீ  நினைத்தவை எல்லாம்  இப்பொழுதே அடையப் பெறுவாயாக.
கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத்
தாம் வரம்பு ஆகிய தலைமையர் ...
                                                                                       133, 134
முனிவர்கள், கற்றோரால் சிறிதும் அறியப்படாத பேரறிவினை உடையவர்கள்; கற்றறிந்தவர்களுக்குத்  தாமே எல்லையாகிய தலைமைத் தன்மை உடையவர்கள்.
பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே
அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக
                                                                                           268, 269
பலரும் புகழ்ந்து போற்றும் பெருமை உடையோனே ! நன்றாகிய சொற்களையுடைய புலவர்களுக்கு அரியேறு போன்றவனே ; அரிதிற் பெறும்வீட்டின்பமாகிய பெரிய பொருளை அடியவர்க்கு நல்கும்  முருகப் பெருமானே.
யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது
நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின்
நின் அடி உள்ளி வந்தனென்
                                                                                                      277 -  279
முருகப் பெருமானே! யான் அறிந்த அளவில் நின்னைப் புகழ்ந்து, நின் இயல்பு முழுவதையும்  அளந்தறிதல் எம்மைப் போன்றவர்களுக்கு  இயலாமையான் இடையறாது நின் திருவடியைப் பெற வேண்டும் என்று நினைத்து வந்தேன்.
                                  முற்றும்                      




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக