சனி, 13 ஜூன், 2015

சோதிடம் உண்மையா….? பகுதி- 3

சோதிடம் உண்மையா….? பகுதி- 3

 கோவலனின் கட்ட காலம்
                            இலங்கையில் வழக்கில் உள்ள “ கண்ணகி வழக்குரை”என்னும் காவியத்தில் “ கோவலன் சிலம்பு விற்கச் செல்லும் வழியில் வெற்றிலை பாக்கு வைத்துச் சோதிடம் கேட்டதாகக் குறிப்பு இருக்கிறது. சோதிடர் வெற்றிலை பாக்கு எடுத்து வகுத்து “ சிங்க ராசி உதயமாகையினால் நன்மைப் பலன் இல்லை” என்று கூறுகிறார். மேலும் கோவலன் மனைவியுடன் மதுரைக்குச் சிலம்பு விற்க வந்தமை; அட்டமத்து சனிப் பார்வையால் பொருள்களைத் தோற்றமை; தட்டான் ஒருவனால் கொலையுண்ணப்போவது ஆகியவற்றையும் கூறுகிறார்.
                         இக்காவியத்தில் மாதவியின் ஜாதகமும் கணித்துக் கூறப்பட்டுள்ளது. “ ஏழாம் இடத்தில் வெற்றி நின்றதால் வருகணவன் செங்கையினால் உள்ள பொருள் தோற்பான்; அவன் தேவி கொங்கையினால் அழியும் கூடல் “ என்றும் கூறப்பட்டுள்ளது.
மேல் நாட்டில் சோதிடம்
                      கோபர் நிகஸ் இறந்து மூன்று ஆண்டுகள் கழித்துப் பிறந்தவரான டைகோ பிராகே (Tycho Brahae 1546 – 1601)என்னும் டேனிஷ் நாட்டு வானியல் அறிஞர் சோதிடக் கலையில் வல்லவராக விளங்கினார்.
                  என்றோ நிகழவிருக்கும் ஒரு வரலாற்று நிகழ்ச்சியை அன்றே கூறினார்; அதன்படியே அவ்வரலாறும் நிகழ்ந்தது. பின்லாந்து நாட்டில் பிறக்கும் இளவரசன் ஒருவன் ஜெர்மனியை வென்று அன்றே (1632 இல்) இறந்து விடுவான் என்று கூறினார். அவர் கூறியதைப் போலவே பல ஆண்டு களுக்குப் பிறகு பின்லாந்து நாடில் பிறந்த கஸ்டவ்ஸ் அடால்பஸ் ( Gustavus Adophus 1594 – 1632 ) King of Sweden1611 – 32 Known as the Lion of the North) ஜெர்மனியைத் தாக்கி வெற்றி கொள்ளும் நிலையில் 1632இல் போரில் கொல்லப்பட்டான்.( Tycho himself won great renown by one his prophecies. He announced that a prince born in Finland would lay Germany waste and would disappear in 1632. Years afterward Gustavus Adolphus who was born in Finland overran Germany and was killed in the moment of victory at the battle of Liitzen in 1632)
                        மேற்சுட்டிய சான்றுகள் யாவும் சோதிடம் உண்மை என்ற கூற்றுக்கு அரணாக அமைகின்றன. காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதை   - சோதிடம் உண்மை என்பதற்குப் பொருத்தமானதாகும்.


சோதிடம் சுத்தப் பொய்
                            சோதிட வல்லுநர் சிலரே – சோதிடம் சுத்தப் பொய் என்று கூறுகின்றனர். சோதிடம் உண்மை என்று நம்பியிருந்த டைகோ பிராகே – பிற்காலத்தில்  மனிதனுடைய விதியை கோள்கள் நிர்ணயிக்கிறது என்ற கொள்கையில் நம்பிக்கை இழந்தார் ( But in his later years even Tycho ceased to believe that the stars had anything to do with the destiny of humanbeings)
 
                 டைகோவின் நண்பர் கெப்லர்  ( Kepler 1571 -1630- was born at Wellin Writemberg German) வானியல் வல்லுநராகவும் சிறந்த சோதிடராகவும் விளங்கினார். டைகோ இறந்த பிறகு அவர் விட்டுச் சென்ற வானியல் ஆய்வினைத் தொடர்ந்து நடத்திக் கோள்களின் இயக்க விதிகளைக் கண்டறிந்தார். கெப்லர் சோதிடம் குறித்து –” அறிவார்ந்த வானியல் அன்னைக்குப் பிறந்த மூட மகள்” என்று வருணித்தார். பிறிதொரு சமயத்தில்  “ இயற்கை ஒவ்வொரு உயிருக்கும் பிழைப்புக்கான வழியை வழங்கி இருக்கிறது அதேபோல வானவியலாரின் தேவைகளை (பிழைப்பு) நிறைவு செய்வதற்குச் சோதிடவியல் உருவாக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
                    எல்.டி. சாமிகண்ணு பிள்ளை (1865 -1925) இந்தியக்காலக் கணிதம்(1911) என்ற நூல் வழி இந்தியக் கால வர்த்தமானம் பற்றிய எல்லா விவரங்களையும் துல்லியமாக விளக்கிய வானியல் அறிஞர்; சோதிடக் கலையிலும் கைதேர்ந்தவர் என்றாலும் இவருக்குச் சோதிடப் பலன்களிலே நம்பிக்கை இல்லை. விஞ்ஞான முறையில் வானசாத்திரங்களை வெளிப்படுத்திய இவர்  வான சாத்திரத்திற்கு மாறான சோதிடத் துறையிலே இறங்கியது சிலருக்கு வியப்பாகத் தோன்றலாம். சர்.டி. மாதவராவ் போலவே இவரும் கிரக நிலைக்கும் மானிடப் பிறப்புக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்.” மானிட வாழ்வில் தோன்றும் தொழுநோய் மடத்தனம் குருடு பைத்தியம் போன்ற துயரங்களுக்கும் கிரக நிலக்கும் எவ்வித தொடர்பும் இல்லை; தொடர்பு கற்பித்தல் அநுபவ அறிவுக்குப் பொருந்துதாக இல்லை என்பது இவர் துணிபு”.
                         சோதிடத்தின் நம்பகம் (1922) என்ற நூலில் குழந்தைகளின் பிறப்பு – உறவினர்களின் இறப்பு- பரீட்சைகளிலும் வழக்குகளிலும் வெற்றி தோல்விகள் இவைகளைப் பற்றி முன்னதாகவே கணித்துக் கூறப்பெற்றுள்ள சோதிடப் பலன்களை வானநூற் பயிற்சி இன்றியே புத்தி சாதுர்யம் படைத்த யாரும் சொல்லலாம்; பலன் கூறும் சோதிடரும் பலனுக்குரிய சாதகனும் – பலன்களிலே மிகச்சிலவேதான் பலிக்கின்றன என்பதை அறிவர்.
                        இவைகளை மிகவும் விவரமாகவும் விவாத திறத்துடனும் ஆராய்ந்து பிள்ளையவர்கள் எய்திய முடிவை நம்மால் ஏற்றுக் கொள்ளாமல் இருக்க  முடியாது. சோதிடம் விஞ்ஞானம் அல்ல என்பதை இவர் மிகத் துணிச்சலுடன் கூறியுள்ளார்.
                      “ சோதிடமும் விஞ்ஞானமும் வடதுருவம் – தென் துருவம் போன்றவை என்பதில் சந்தேகமே இல்லை; என்றாலும் சோதிடம் ஓர் அனுபவக் கலை என்பதை மட்டும் யாரும் மறுக்க முடியாது. சோதிடனது கூர்த்த மதியும் சாதகனது ஆசா பாசங்களையும் நம்பியே சோதிடக் கலை உயிர் வாழ்கிறது..” என்பது பிள்ளையவர்களின் முடிந்த முடிபாகும்.
                     வானசாத்திரத்தையும் சோதிடத்தையும் அறிவியல் முறையில் ஆராய்ந்து தெளிந்த அறிஞர் சாமிக்கண்ணு பிள்ளை தமது முடிவுகளுக்கு தகுந்த சான்றுகளை முன்வைத்துள்ளார்.
 பிருஹத் ஜாதக உரை மறுப்பு
பிருஹத் ஜாதகத்திற்கு உரை வகுத்துள்ள கடலங்குடி நடேச சாஸ்திரிகள்  கிரகங்கள் மனிதர்கள் மீது ஆட்சி செலுத்தும் நிலையை விளக்கி இருப்பது விநோதகமாக இருக்கிறது.
                         “ இப்பொழுது கிரகங்களுக்குப் பிராமணர் முதலிய நான்கு வகுப்புக்கு அதிபதியாயிருக்கும் தன்மையையும் ஸத்வம் – ரஜஸ் – தமஸ் என்ர மூன்று குணங்களுக்கு அதிபதியாயிருக்கும் தன்மையையும் “ உவ ஜாதிகா” விருத்தத்தில் விளக்கப்பட்டுள்ளது; அஃதாவது பிராமணர்களுக்குச் சுக்கிரன் – குரு இவர்களும் சத்திரியர்களுக்கு அங்காரகனும் சூரியனும் – வைசியர்களுக்குச் சந்திரனும் சூத்திரர்களுக்குப் புதனும் சங்கர ஜாதிகளான சண்டாளன் முதலியோர்க்குச் சனியுமதிபன்.
                         இதற்கு மேலும் விளக்கமளிக்கும் சாஸ்திரிகள் நாயுடு முதலிகளுக்குச் செவ்வாய் சூரியன் இவர்கள் அதிபதிகள் என்றும் மற்ற சூத்திர வகுப்பைச் சேர்ந்தவர்களுக்குப் புதன் அதிபன் என்றும் சாணான் முதலியோர்க்குச் சனி அதிபன் என்றும் துருஷர்களுக்கு ராகு அதிபன் என்றும் ஆங்கிலோ இண்டியன் வெள்ளைக்காரன் இவர்களுக்குக் கேது அதிபனென்றும் வைத்துக் கொண்டு பலன் கூறுவது அனுபவத்தில் பெரிதும் ஒத்து நடக்கின்றது “ என்று கூறுகின்றார்.
                      கிரகங்களைச் சாதிவாரியாகப் பிரித்துவைத்து மனிதனை உயர்பிறப்பாளன் என்றும் இழி பிறப்பாளன் என்றும் உறுதிப்படுத்த முயல்வது எவ்வகையில் அறிவுக்குப் பொருத்தமானது ? மனிதர்களைப் பேதப்படுத்திப் பிழைப்பை நடத்த நாள்களும் கோள்களும் எவ்வளவு இலகுவாகக் கையாளப்படுகின்றன என்பதற்கு மேற்கூறிய விளக்கங்களே சான்றாம். அறிவினால் உயர்ந்தோரே சிறந்தோர் என்பது தமிழரின் அறிவுக் கொள்கை ; மாறாகக் கால வெள்ளத்தில் கரைந்து கொண்டிருக்கும் வகுப்புவாதக் கொள்கைகளி நிலைநிறுத்த சோதிடம் துணையாகக் கொள்ளப்படுகிறது என்பது வெள்ளிடை மலை. மனிதன் பிறப்பில் கிரகங்கள் ஆட்சி செய்யவில்லை ; அவைகள் ஆட்சி செய்வதாகப் புனைந்துரைக்கப்படுகின்றன என்பதே உண்மை.
சோதிடம் என்னவாயிற்று..?
                       கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த சிலப்பதிகாரக் காப்பியத்தில் சோதிடம் பொய்த்துவிட்ட செய்தியை அறியமுடிகிறது. கோவலன் – கண்ணகி திருமணம் நடந்த் முறையை இளங்கோவடிகள்….
 வானூர் மதியஞ் சகடணைய வானத்துச்
 சாலியொரு மீன் தகையாளைக் கோவலன்
  மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்
தீவலஞ் செய்வது காண்பார்…………
                        அஃதாவது “ மதியம் சகடு (உரோகிணி) அணைந்த நாளிலே – பார்ப்பான் – மறையிற் சோதிடாங்கத்துள் வணிகர்க்குக் கூறிய நெறியிலே சடங்கு காட்ட இவர் இங்ஙனம் தீவலம் செய்கின்ற இதனைக் காண்கின்றவர் கண்கள் முற்பவத்தில் செய்த தவம் யாதுகாணென்பாராயும் “என்று உரை விளக்கம் தருகிறது.
                         சோதிடத் தத்துவங்கள் யாவும் விளங்க நிகழ்ந்த கோவலன் கண்ணகி திருமணம் என்னவாயிற்று  என்பதை யாவரும் அறிவர். காண்பார்கண்கள் கலங்கிக் கண்ணீர் மல்க; வரலாறு காணாத துன்பத்தைச் சுமந்து; துடிதுடித்துச் செத்தான் கோவலன். கண்டோர் கதிகலங்க ; கற்புக்கடம் பூண்ட பொற்புடை தெய்வமாய் ஆனாள் கண்ணகி.  கோவலன் கண்ணகி வாழ்க்கையைச் சோதனைக் களமாக்கியது சோதிடம்.  சோதிடத்தைக் காப்பாற்ற கோவலனின் ஊழ்வினையைக் காரணமாகக் கூறிச் சமாதானம் செய்ய முயல்வது கொடுமை . மூடநம்பிக்கைகளில் மூழ்கியிருப்போர்க்குக் கிரக ஆறுதல் கூறித் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதும் சோதிடத்தின் இயல்பே.  ஒரு பொய்யை மறைக்க பல பொய்கள் கூறித்தானே ஆகவேண்டும்.
 அறிவு அற்றங் காக்கும் கருவி
                              அறிவு -  அழிவு வாராமல் காக்கும் கருவியாகும். புற்றீசல் போல் பெருகிய புராண இதிகாசங்கள் மூடநம்பிக்கைகளைப் பரப்பவும் பாதுகாக்கவும் தோன்றியவையே. யாதவர்குலத் தோன்றல் கண்ணனைக் கொல்ல – கம்சனைத் தூண்டியது சோதிடம் தான். ரோகிணியில் குழந்தை பிறந்தால் தாய் மாமனுக்கு ஆகாது என்பது சுத்தப் பொய் ; அதற்கு நானே சான்று.
 மனிதன் தனக்கு வரக்கூடிய துன்பங்கள் அனைத்திற்கும் பிறரே காரணம் என்று கருதுகிறான். இப்படிப்பட்டவர்களுக்கு அறிவு ஆறுதல் தருவதில்லை. குறுக்கு வழியில் இன்பத்தைப் பெறும் முயற்சியில் பிறரை வஞ்சித்து வாழவும் கண்டுபிடித்த கருவிதான் – சோதிடம்.
                       மூடநம்பிக்கைகளில் மூழ்கி இருக்கும் மக்கள் அறிவையும் அறிவார்ந்த உழைப்பையும் இழந்து -அற்ப சுகம் தேடி அலைந்து – மானம் மரியாதையோடு கைப்பொருளையும் இழந்து வாடுகின்றனர். மக்களைப் பலவீனப்படுத்தும் சக்திகளிடமிருந்து  மக்களைக் காப்பாற்றியாகவேண்டும் ; அதற்கு ஒரே வழி– தாய்மொழி வழிக் கல்வியே !
                       கல்வியின் பயன் அல்லது கற்றவன் என்பதன் பொருள் பட்டம் பதவிகளைக் குறிப்பதல்ல; நன்மை தீமைகளை ஆராய்ந்து பார்க்கும் பகுத்தறிவைக் குறிப்பதாகும். அறிவு ஒன்றே மனிதனை அழிவிலிருந்து காக்கும் ஆற்றல் உடையது- வள்ளுவன் வாக்கே – மெய்.
 சான்றோர் வாக்கு
 வாதி புளுகன்
மாந்திரீகன் வீண்புளுகன்
சோதிடன் என்பவனோ தங்கமே
சுத்தப் புளுகனடி ஞானத் தங்கமே !

முற்றும்

1 கருத்து:

  1. எல்.டி.சுவாமிக்கண்ணு பிள்ளை கண்டுபிடித்த சிலப்பதிகாரத்தின் காலம் கி.பி.756.1000 வருடத்திற்கு ஒரு முறை வாணியல் கணக்கு ஒரே மாதிரிதான் இருக்கும். சங்க கால புலவர் மாமூலனார் காலத்தின் மூலம் கணக்கிட்டதில் சிலப்பதிகாரம் கி.மு 3ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதி என்று (கி.மு 225-கி.மு 245).பிற்காலத்தில் எங்கள் கணக்கீட்டில் தெரிந்தது சுவாமிக்கண்ணு பிள்ளையின் வாணியல் கணக்கு மிகவும் சரியாக 1000 வருடம் குறைவாக மதிப்பிட்ள்ளார் என்று. சிலப்பதாகார காலம் (கி.மு 225-கி.மு 245).துவாரகை இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஆனால் குருசேத்திர போருக்கான சான்றுகள் இல்லை.மகாபாரதத்தில் வரும் நாடுகள் முறைப்படி (கி.மு 7 ஆம் நூற்றாண்டு).ஆரியர்கள் பயன்படுத்திய மட்கல பண்பாடு கி.மு 1100 கு முன்பல்ல. ஆனால் துவாரகை கி.மு 1500கு முன்பே அழிந்துள்ளது.இந்த வருடங்களை 1830 லேயே கண்டுபிடிச்சாச்சு.

    பதிலளிநீக்கு