செவ்வாய், 16 ஜூன், 2015

அகநானூறு – அரிய செய்தி -34 - 37

அகநானூறு – அரிய செய்தி -34

                                                                சேயோன்
நெடுவேள் மார்பின் ஆரம் போல
செவ்வாய் வானம் தீண்டி மீன் அருந்தும்
பைங்காற் கொக்கினம் நிரைபறை உகப்ப
எல்லை பைப்பயக் கழிப்பி குடவயின்
கல் சேர்ந்தன்றே பல்கதிர் ஞாயிறு-
-                                   -  நக்கீரனார்,அகம்.120:1-5
உரை:-முருகக் கடவுள் மிக்க செந்நிறம் உடையவரென்பது சேய், செவ்வேள் என்னும் பெயர்களாலும்  பலர்புகழ் ஞாயிறு கடற் கண்டாங்கு,. பவழத் தன்ன  மேனி என்பவற்றானும் அறியப்படும். செவ்வானத்திற்கு நெடுவேளின் செம்மேனியும் அவ்வானத்தையொட்டி வரிசையாகப் பறந்து செல்லும் கொக்கினத்திற்கு அவரது மார்பில் அணிந்த முத்தாரமும் உவமமாயின.
-       அகநானூறு – அரிய செய்தி -35

                                                                        புதைந்த செல்வம்
முந்நீர் -  படைத்தல் காத்தல் அழித்தல்
 வலம்படு முரசிற் சேரலாதன்
முந்நீரோட்டிக் கடம்புஅறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து
நல்நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
பணிதிறை தந்த பாடுசால் நன்கலம்
பொன்செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்றுவாய் நிறையக் குவைஇ அன்று அவண்
நிலம்தினத் துறந்த நிதியத்து .....
                                   மாமூலனார், அகநா.127 : 3-10
கடலிடையே உள்ள குறை நிலத்தில் தம்முடன் மாறுபட்ட பகைவரைப் புறங்காட்டி ஓடச்செய்து, அவருடைய காவல் மரமாகிய  கடம்பினை வெட்டி , அதனாற் செய்த வெற்றியுண்டாதற்குக் காரணமான முரசினையுடைய சேரலாதன், தம் முன்னோரைப் போல இமயத்தில் வளைந்த விற்பொறியைப் பொறித்தான்; மீண்டு வந்து ஆம்பல் என்னும் எண்ணளவு தம் பகைவர் பணிந்துகொடுத்த பெருமைமிக்க நல்ல அணிகலன்களோடு, பொன்னாற் செய்த பாவையினையும் வயிரங்களையும் மரந்தை என்னும் ஊரில் உள்ள தன் மனைக்கண் முற்றத்திடமெல்லாம் நிறையும்படி கொண்டு வந்து குவித்தான்; அன்று அவ்விடத்து நிலம் தின்னும்படி கைவிட்டுப்போன அந்நிதியம் போன்ற பெரும் பொருளை ....... (மரந்தை – சேரனின் நகரம்- மாந்தை பாடமும் உள்ளது) முந்நீர் – கடல், மூன்று செய்கை- மண்ணைக் காத்தலும் படைத்தலும் அழித்தலும் என்பார் அடியார்க்குநல்லார், சிலம்பு17:31-யாற்று நீரும் ஊற்று நீரும் மழைநீரும்,புறம் 9:10 விசேட உரை.முன்னீர்-நிலத்திற்கு முன்னாகிய நீரென்று உரைப்பாரும் உளர்.

அகநானூறு – அரிய செய்தி -36

                                                        புணர்ச்சி
மன்றுபாடு அவிந்து மனைமடிந்தன்றே
கொன்றோரன்ன கொடுமையோடு இன்றே
யாமம் கொளவரின் கனைஇ காமம்
கடலினும் உரைஇ கரை பொழியும்மே
எவன்கொல் ............................
               கபிலர் குறிஞ்சி- அகநா.128: 1-5
மன்றங்கள் ஒலி அடங்கின; மக்கள் உறங்கினர்; கொல்வதுபோல் கொடும் நடுயாமம் வந்தது; என்னிடம் செறிந்து கிடக்கும்  காம வேட்கையோ கடலினும் பரவிக் கரை கடந்துசென்றது; எனது நல்ல நெஞ்சமோ மயங்கி என்னையும் நின்னையும் கேட்டறியாது கைகடந்து சென்று விட்டது. என் செய்வேன்.

அகநானூறு – அரிய செய்தி -37

பாண்டிய – முத்து
இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர்நடைப் புரவி கால்வடுத் தபுக்கும்
                வெண்கண்ணனார், அகநா.130:9,10
குளிர்ந்த ஒளியினையுடைய முத்துக்களைப் பரந்து வரும் கடல் அலைகள் கொணர்ந்து வந்து தரும்; அம்முத்துக்கள் குதிரைகளின் கால்களை வடுப்படுத்தும்.

முத்துச்சிப்பி கரையொதுங்குமா?- ஆய்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக