சனி, 4 ஜனவரி, 2025

சான்றோர் வாய் (மை) மொழி : 117. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் – சங்க காலம்.-3.

 

சான்றோர் வாய் (மைமொழி : 117. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர்சங்க காலம்.-3.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள். 355.

 

 மக்கள் வாழ்க்கையின் இருபெரும் பிரிவுகள்

1. அகம் :

ஒத்த அன்பான் ஒருவனும் ஒருத்தியும்  கூடிகின்ற காலத்துப் பிறந்த பேரின்பம் அக்கூட்டத்தின் பின்னர் அவ்விருவரும் ஒருவருக்கொருவர் தத்தமக்குப் புலனாக இவ்வாறிருந்ததெனக் கூறப்படாததால் யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்ந்து இன்பமுறுவதோர் பொருளாதலின் அதனை அகம் என்றார், எனவே, அகத்தே நிகழ்கின்ற இன்பத்திற்கு அகமென்றது ஓர் ஆகுபெயராம்.”

 

2. புறம் என்றதன் பொருளாவது :

” இதனை ஒழித்தன ஒத்த அன்புடையார் தாமேயன்றி எல்லார்க்குத் துய்த்துணரப்படுதலானும் இவை இவ்வாறிருந்ததெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும் அவை புறமெனவேபடும்.”  என்று உரை வகுத்தார் நச்சினார்க்கினியர்.

 மேற்சுட்டிய அரும்பொருள்கள் வழி அறியப்பெறுவன, பொருள இலக்கணவிளக்கமும் அகம் எம்றதும் புறம் என்றதும் எட்தன்மையன என்று -  உலகம் தட்டை என்ற காலத்துக்கு முன்னும் ; உலகம் உருண்டை என்ற உண்மை என்று அறிந்த காலத்துக்கு முன்னும் ; உலகம் உருவம் பெறாக் காலத்துச் சூரியனின் இயக்க ஆற்றல் அறிந்து, உலகியல் , வாழ்வியல், உளவியல் ஆகிய அறிவியல் ஆகிய  அறிவியல் துறைகள்சார்ந்து, நாடக வழக்கும் உலகியல் வழக்கும் ஆராய்ந்து தொல்காப்பியர் தோர்றுவித்த தொன்மை அறிவியல் கருவூலம் தொல்காப்பியம் என்று அறிக.

அறிவியல் சிந்தனை :

 

முதற் பொருள் “ முதலெனப் படுவது நிலம் பொழுது இரண்டின் ; இயல்பென மொழிப இயல்பு உணர்ந்தோரே. “ தொல்காப்பியம் -4.

 

முதல் எனப்படுவது – நிலம், பொழுது இவ்விரண்டின் இயல்பை உணர்ந்தோர் கூறுவர் என்பதாம்.  நிலத்தொடு பொழுதை (காலம்)  சார்த்திக் கூறியிருப்பது அறிவியல் சிந்தனையாகும்.

காலம் சார்பியலானது என்ற தொல்காப்பியக் கோட்பாடு, ஐஸ்டின்’  கண்டுபிடித்த காலம் சார்பானது என்னும்  சார்பியல் கோட்பாட்டிற்கு  முன்னுரையாக / அடிப்படையாக விளங்குவதக் காணலாம்.

 மேலும்  ஐவகை நிலப்பகுப்பு ;  காலப்பகுப்பு –இறந்த காலம் ;  நிகழ் காலம் ; எதிர்காலம்.  நாள் பகுப்பு  - சூரியன் (பகல், இரவு.)

 

 தொல்தமிழர் பண்பாடு :

தமிழர் பண்பாடு அறிவியல் சிந்தனைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.  தமிழரின் வாழ்வியல் நெறிமுறைகளை முன்னரே சுட்டுயுள்ளேன் இன்றைய அறிவியல் உலகில் , உலகம் போற்றும் உன்னத பழக்க வழக்கங்கள் (பொங்கல் பண்டிகை, சல்லிக்கட்டு, முற்காலத்தில் சிறிய பொற்காசுகளைக் காளையின் கொம்பில்  கட்டிக் களத்தில் விடுவர்.) பலராலும் பாரட்டப்படுவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

 

 நமது கடமை :

தொகாப்பியம் சுட்டும் “அகரமுதல் னகர இறுவாய்” எழுத்துக்களிலும் அவ்வெழுத்துக்களால் வார்க்கப்பட்ட சொற்களிலும் அவை புலப்படுத்தும் பொருள்களிலும் பொதிந்துள்ள அரிய அறிவியல் நுட்பங்களைப் பல்துறை வல்லுநர்களோடு கலந்துரையாடித் தொல்காப்பியரின் – தொல்காப்பியர் வழிவந்த சான்றோர் பெருமக்களின் நுண்ணறிவை – அறம் சார்ந்த அறிவியல் அறிவை உலகுக்கு உணர்த்த வேண்டியது தமிழர்தம் கடனாம் என்பதை மறவற்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக