சான்றோர் வாய் (மை) மொழி : 121.. அறிவியல் சிந்தனைகள். தொல்தமிழர் –சித்தர்கள்.
எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
குறள். 355.
சித்தர்கள்,
தொன்மைக்காலத்தே காடுகளிலும் மலைகளிலும் சுற்றித் திரிந்து, இயற்கையின் அளப்பரிய ஆற்றலைக்
கண்டறிந்தனர்.
மானுட வாழ்வின் பல்வேறு நிலைகளை ஆராய்ந்து, மரணமிலாப்
பெருவாழ்வு வாழ்வதற்கான வழிகளைச் சுட்டிச் சென்றுள்ளனர். வாழ்வியல் நெறி, உளவியல், உடலியியல், மரம் செடிகொடிகள், இலை தழைகள், நீரியல், நிலவியல், வானியியல் இன்னபிற இயற்கைக் கூறுகளை அணு அணுவாக ஆராய்ந்தனர்.
“ செப்பரிய மூன்றுலகம்
செம்பொன் ஆக்குவோம்
செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்
இப்பெரிய உலகத்தை இல்லாமல் செய்வோம்
எங்கள் வல்லபம்கண்டு ஆடாய் பாம்பே.”
என்று
தம் ஆற்றலைப் புலப்படுத்துகிறார் பாம்பாட்டிச் சித்தர்.
சித்தர்கள், உடம்பையும் உயிரையும் பேணி வளத்தவர்கள்,
காயசித்தியினால் உடம்பை அழியாமல் ஆக்கி இறைநிலை பெற்றவர்கள்.
‘ உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.”
என்கிறார் திருமூலர்.
உடம்புக்குள்ளேயே
இறைவனைக் கண்டவர்கள் ; அகத்துள்ளே ஈசனைக் கண்டு புறத்துள்ள ஆரவாரங்களையெல்லாம் வெறுத்தனர்.
யோக
சித்தியினால் எமனையே வென்றவர்கள்.
“காலனை வென்ற கருத்தறிவாளர்க்குக்
காலங்கள் ஏதுக்கடி குதம்பாய்….” என்றார் குதம்பைச் சித்தர்.
உள்ளும்
புறமுமாக ஓடும் வாசி நிலையை யோகத்தினால் கட்டுப்படுத்தி ஞானம் பெற்றவர்கள்.
“காணரிது எவராலும் இருசுவாசம்
காண்பவனே சிவசித்தன்.” என்கிறார் வான்மீகர்.
உடல் உயிர் இரண்டும் வாழ்வாங்கு வாழும் நெறியை உணர்த்தியவர்களே
தமிழ்நாட்டு விஞ்ஞானிகளும் மெய்ஞ்ஞானிகளுமாகிய சித்தர்கள்.
.……………………சித்தர்கள்..…..…….தொடரும்…………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக