செவ்வாய், 30 செப்டம்பர், 2025

தமிழமுது –137. – பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்......”வடவேங்கடம் = இமயமலை ’-4.

 

தமிழமுது –137. –  பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.

குறுங்கோழியூர் கிழார் – புறநானூறு: 17.

வடவேங்கடம் = இமயமலை ’-4.

“தென்குமரி வடபெருங்கல்

குண குடா கடலா எல்லை

குன்று மலை காடு நாடு

ஒன்றுபட்டு வழிமொழிய

கொடிது கடிந்து கோல் திருத்தி

படுவது உண்டு பகல் ஆற்றி

இனிது உருண்ட சுடர் நேமி

முழுது ஆண்டோர் வழி காவல…”- 1- 8.

 

தென் திசையில் குமரி மலையையும் வட திசையில் இமயத்தையும் கிழக்கு மற்றும் மேற்குத் திசைகளில் கடற் பரப்பையும் எல்லைகளாகக் கொண்டு இவ்விடைப்பட்ட நிலம் விளங்கும். இங்குக் குன்றும்மலையும் காடும் நாடும் எனப் பல்வகை நிலப்பகுதிகள் உடையோர் பலரும் ஒருமைப்பட்டு வழிபடவும் தீயன போகவும் கோல் செங்கோலாகவும் உரிய இறைப்பொறுள் பொருளுண்டு நடுநிலையுடன் தம் சுடர் விளங்கும் ஆணைச் சக்கரத்தை இனிதாகச் செலுத்தவும் வல்லவராய் வாழ்ந்தோர் நின் முன்னோர், அவ்வாறிருந்து மண் முழுதும் ஆண்ட அன்னவர்தம் மரபினைக் காத்தவனே…!

 

என்று சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் புகழ்ந்து  குறுங்கோழியூர் கிழார், பாடியது.

 

குண,குட, கடல் என்றாற்போலக் குமரிக்கண் கடல் கூறப்படாமையால்  குமரி,  கடல் கோளுக்கு முன்னையது இப்பாட்டென்பது தெளிவாகும்.

 


Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 ……………………………………தொடரும் …………………

திங்கள், 29 செப்டம்பர், 2025

தமிழமுது –136. – பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்........”வடவேங்கடம் = இமயமலை ’-3.

 

தமிழமுது –136. –  பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.

பதிற்றுப்பத்து  :குமட்டூர்க் கண்ணனார்

வடவேங்கடம் = இமயமலை ’-3.

“கவிர்ததை சிலம்பில் துஞ்சும் கவரி

பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும்

ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்

தென் அம் குமரியொடு ஆயிடை

மன்மீக் கூறுநர் மறம் தப கடந்தே. -2: 21 – 25.

 

முள் முருக்க மரங்கள்அடர்ந்து வளர்ந்துள்ள இமயமலையின் பக்கமலையில் கவரி மான்கள் தூங்குகின்றன ; அவ்வாறு தூங்கும்போது அவை பகற்பொழுதில் தாம் நீர் அருந்திய அருவியையும் உண்ட நரந்தம் புல்லையுமே கனவில் காணும் வாழ்க்கையுடையன ; அவ்வாறு அமைதி நிறைந்ததும் முனிவர்கள் நிறைந்து விளங்கும் பெரும் புகழ் உடையதுமான இமயமலைக்கும் தென் திசையில் விளங்கும் அழகிய குமரிக்கும் இடைப்பட்ட நிலத்தை ஆளும் மன்னர்களுள் செருக்கால் தம்மை உயர்த்திக் கூறிக் கொள்பவர்களுடைய வீரம் அழியுமாறு அவர்களோடு எதிர்நின்று போரிட்டு வென்றாய் என்று இமயவரம்பன் வெற்றிச் சிறப்புகளைப் புகழ்ந்துரைக்கின்றார் புலவர்.

 

( கவிர் – முள் முருக்க மரம் ; ததைதல் – நெருங்குதல் ; கவரி – கவரி மான்  ; ஆரியர் – முனிவர்கள்.)

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 ……………………………………தொடரும் …………………

 

ஞாயிறு, 28 செப்டம்பர், 2025

தமிழமுது –135. – பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்......”வடவேங்கடம் = இமயமலை ’-2.

 

தமிழமுது –135. –  பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.

காரிக்கிழார் : புறநானூறு: - 6.

”வடவேங்கடம் = இமயமலை ’-2.

”வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்

குணாஅது கரைபொரு தெடுகடற் குணக்கும்

குடாஅது தொன்று முதிர் பெளத்தின் குடக்கும்.” : - 1-4.

வடக்கிலிருக்கும் பனி தங்கிய நெடிய இமயமலையின் வடக்கும் தெற்கில் இருக்கும் அச்சந்தரும் குமரியாற்றின் தெற்கும் கிழக்கில் இருக்கும் கரையை மோதுகின்ற சகரரால் தோண்டப்பட்ட கடலின் கிழக்கும் மேற்கில் இருக்கும் பழையதாய் முதிர்ந்த பெருங்கடலின் மேற்கும் கீழே இருக்கும் நிலம், வான், சுவர்க்கம் என்ற மூன்றும் சேர்ந்து அடுக்கிய முறையில் தோன்றும் நிலத்தில் நீடு வாழ்வாயாக என்று மேலும் பலவாறாகப் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் புகழ்ந்து பாடினராக.,

 

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 ……………………………………தொடரும் …………………

சனி, 27 செப்டம்பர், 2025

தமிழமுது –134. – பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்......”வடவேங்கடம் = இமயமலை ’

 

தமிழமுது –134. –  பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.

பரணர் : பதிற்றுப்பத்து -43.

வடவேங்கடம் = இமயமலை ’

”கடவுள் நிலைய கல் ஓங்கு நெடுவரை

வடதிசை எல்லை இமயம் ஆக

தென் அம் குமரியொடு ஆயிடை அரசர்

முரசுடைப் பெருஞ் சமம் ததைய ஆர்ப்பு எழ

சொல் பல நாட்டைத் தொல்கவின் அழித்த

போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ.” – 6-11.

 

கடவுள் நிலையுடைய கற்கள் ஓங்கிய உயர்ந்த பக்க மலைகளைக் கொண்ட, இமயம் வடதிசை எல்லையாகவும் தெற்கில் குமரி(மலை) எல்லையாகவும் கொண்டு இடைப்பட்டஅரசர்களுடைய வலிமை கெடும்படி ஆரவாரித்து எழுந்து புகழ்ந்து சொல்லப்பட்ட பல நாடுகளின் பழமையான அழகினை அழித்த போர் வல்லமையும் பொன்னால் செய்யப்பட்டல்  மாலையினையும் உடைய குட்டுவன். ( கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்,)

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 ……………………………………தொடரும் …………………

 

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

தமிழமுது –133. – பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.....”வடவேங்கடம் தென்குமரி- பனம்பாரனார்.”-2.

 

தமிழமுது –133. –  பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.

தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம்:”

வடவேங்கடம் தென்குமரி- பனம்பாரனார்.”-2.

மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார்.

”இந்நிலக்கருத்தால் நாம் அறிவது என்ன? தெற்கே பஃறுளி யாறும் குமரிமலையும் இருந்த காலத்துப் பிறந்தது தொல்காப்பியம் எனவும் அந்நெடும் பகுதியில் வாழ்ந்த தமிழ்மக்களின் வாழ்க்கையும் தழுவி இலக்கணம் கூறியது தொல்காப்பியம்  எனவும் அறிகின்றோம். “தமிழ்கூறு நல்லுலகம்” என்றது கடல் கொள்ளப்படாது அன்றிருந்த பன்மலையடுக்கத்துக் குமரி முடியையும் உள்ளடக்கியதாம் எனவும் அறிகின்றோம். இத்தொன்னிலம் சங்க இலக்கியத்தாலும் சிலப்பதிகாரத்தாலும் அடியார்க்குநல்லார் உரையாலும் இறையனார் அகப்பொருள் உரையாலும் பெருமருங்கு தெளிவுபடும். “கடல் கொள்வதன் முன்பு பிறநாடும் உண்மையின் தெற்கும் எல்லை கூறப்பட்டது.” என்பார் இளம்பூரணார்.  இத்தகு கடல்கோள்கள்பற்றி நம் நாட்டவரும் பிறநாட்டவரும் பல்துறைச் சான்றுகள் கொண்டு நிறுவியுள்ளனர்.

 

தமிழ்கூறு உலகம் என்றளவில் சொல்லாமல் “நல்லுலகம்” என்று சொல்லிய அடைப் புணர்ப்பு நாட்டுப்பற்றுக்கும் மொழிப்பற்றுக்கும் அடையா ஊற்றுக்கண்ணாம்.

பண்டைக்கால எல்லைகள் தொல்லையுட்பட்டாலும். தொல்காப்பியப் பாயிரத்தின் மொழிநடை  காலவெல்லைப்படாது இன்றும் உயிர்ப்புடையதாக ஓடுகின்றது.

 

 அரசு ஆட்சி நாகரிகம் முதலிய மாற்றங்களால் எத்துணைத்தாக்குறினும் இன்றும் என்றும் தமிழ்கூறும் தமிழ்நாடாக விளங்கும் மொழி ஒழுக்கமே இவ்வுயிரோட்டத்துக்குக் காரணமாம். இம்மொழியொழுக்கச் சிறப்பினை நாம் உணர்வோமாக.

 

தமிழ் பேசப்படும் வழக்குமொழியாதலின் ‘தமிழ்கூறு’ என்ற வினைச்சொல் பெய்தார். முக்காலத்தும் நிகழ்மொழியாதலின், ’கூறு’ என வினைத்தொகை செய்தார். ‘என்றுமுள தென்றமிழ்’ என்பது கம்பர் கவிமொழி. ‘சீரிளமைத் திறம்’ என்பது சுந்தரனார் தரவுமொழி.

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 ……………………………………தொடரும் …………………

 

வியாழன், 25 செப்டம்பர், 2025

தமிழமுது –132. – பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்......”வடவேங்கடம் தென்குமரி- பனம்பாரனார்.”

 

தமிழமுது –132. –  பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.

தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம்:”

”வடவேங்கடம் தென்குமரி- பனம்பாரனார்.”

மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார்.

”வடவேங்கடந் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து..”

அகலவுரை:

வடக்கே திருவேங்கட மலையின் வட பகுதி, தெற்கே குமரிமலையின் தென்பகுதி, கிழக்கும் மேற்கும் கடல்கள். இந்நான்கும் எல்லையாக, இவற்றுக்கு உட்பட்ட பெருநாடே தமிழ் மொழி பேசும் நன்மக்கள் வாழும் நிலமாகும்.

 

திறனுரை:

“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து” என்பதன் விளக்கம். கிழக்கும் மேற்கும் கடல்கள்; நிலங்கள் இல்லை; ஆதலின்  இத்திசைகளுக்கு எல்லை வெளிப்படை, வேங்கட மலையின் வடபகுதிவரையும் குமரிமலையின் தென்பகுதி வரையும் தமிழக எல்லைக்கு உட்பட்டன என்பது வடவேங்கடம், தென்குமரி என்ற அடைகளின் கருத்து. வடவேங்கடத்துக்கு வடக்கிலும் தென்குமரிக்குத் தெற்கிலும் வேற்று மொழிகளும் வேற்றரசுகளும் தொல்காப்பியர் காலத்து இருந்தன ; ஆதலின் இந்த இரு திசைகளுக்கு மட்டும் நிலவெல்லைகள் குறித்தார்.

 

 இதனையுட்கொண்டே, “ நாற்பெயரெல்லை யகத்தவர் வழங்கும்  யாப்பின் வழியது” என்று தொல்காப்பியர் செய்யுளியலில் தெரிவிப்பர். இன்று காண்பதுபோல் தெற்கும் குமரிக்கடலாக இருந்திருப்பின் வடதிசைப்பகுதிக்கே எல்லை கூறியிருப்பார். தென்குமரியென்று நிலவெல்லை வரையப்பட்டிருத்தலின், தொல்காப்பியர் காலத்து நீண்டநிலப்பரப்பும் பிறவும் குமரிக்குத் தென்பால் கிடந்தமை தெளிவு.

 

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 ……………………………………தொடரும் …………………

புதன், 24 செப்டம்பர், 2025

தமிழமுது –131. – பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள். ”இலெமூரிய அல்லது குமரிக்கண்டம்.”-6.

 

தமிழமுது –131. –  பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.

இலெமூரிய அல்லது குமரிக்கண்டம்.”-6.

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை.

 

கடல் கொண்ட தென்னாடு:

இன்றைய உலக அமைப்புடன் ஒப்பிட்டு நோக்கினால் ஆப்பிரிக்காவின் ஒரு பகுதி இந்துமாக்கடல்,தெற்கு ஆசியா, பசிபிக்கடலின் தென்பகுதி, ஆஸ்திரேலியா இத்தனையையும் இலெமூரியாக் கண்டம் உள்ளடக்கி இருந்தது.

அந்நாளில் இன்றைய ஆசியாவுன் பெரும்பகுதியும் ஐரோப்பா,ஆப்பிரிக்கா, அமெரிக்கா இவையும் பெரும்பாலும் சதுப்பு நிலங்களாகவே இருந்தன. சில பகுதிகள் கடலுள் ஆழ்ந்தும் இருந்திருகக்கூடும்.அந்நாளில் நீர்மட்டத்திற்கு

 மேல் உயர்ந்த பகுதி இலெமூரியா ஒன்றே. மற்ற இன்றைய கண்டங்களெல்லாம் நீருள் அமிழ்ந்தும் அமிழாதும் இருந்த சதுப்பு நிலங்களே ஆகும்.

 

“அழிந்துபோன இலெமூரியா”  என்ற ஆங்கில நூலின் ஆசிரியர்.” இந்நாளில் இலெமூரியர் அக்கண்டங்களைச் சுற்றிப் பார்த்து அவற்றின் படங்கள் வரைந்து வைத்துள்ளனர்.” என்றும் அவை இன்றும் இருக்கின்றன என்றும் கூறுகிறார்.” ஆனால் அந்நாடுகளுள் ஒன்றும் அன்று விளைவதில்லை; அன்றி மனித வாழ்க்கைக்கோ உயிர் வாழ்க்கைக்கோ ஏற்றதாக இருக்கவுமில்லை.

 

ஆகவே, மனித வாழ்க்கைக்கும் உயிர் வாழ்க்கைக்கும் முதல் பிறப்பிடம் இந்த இலெமூரியாவே ஆகும். மனித நாகரிகத்தின் தொடக்கமும் இங்கேதான் ஏற்பட்டிருக்க வேண்டும். கிட்டத்தட்ட நூறாயிரம் ஆண்டுகளாக மனித வகுப்பு தவழ்ந்து வளர்ந்த தொட்டில் இவ் இலெமூரியாக் கண்டமே எனலாம்.

 

இலெமூரியாக் கண்டம் 2,00,000 ஆண்டுகட்கு முன் முதல் 50,000 ஆண்டுகட்குமுன் வரை இருந்ததென்றும் 50,000 ஆண்டுகட்கு முன் பெரும்பாலும் அழிந்ததென்றும் கூறினோம். அதில் மீதியாகித் தமிழ்நாட்டுடன் ஒட்டிக்கிடந்த பகுதியே குமரி நாடாயிருக்க வேண்டும். இலெமூரியாவை விழுங்கிச் சுவைகண்ட கடல் இதனையும் சிறிது சிறிதாக விழுங்கி வந்திருக்க வேண்டும்.

 

 ஐயா அவர்களின் இலெமூரியாக் கண்டத்தின் ஆய்வு மிகவும் பரந்து விரிந்த ஆய்வாகும். ஈண்டு அவ்வாய்வின் சுருக்கம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 ……………………………………தொடரும் …………………

செவ்வாய், 23 செப்டம்பர், 2025

தமிழமுது –130. – பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள். ”இலெமூரிய அல்லது குமரிக்கண்டம்.”-5.

 

தமிழமுது –130. –  பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.

இலெமூரிய அல்லது குமரிக்கண்டம்.”-5.

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை.

 

கடல் கொண்ட தென்னாடு:

ஆரிய நாகரிகத்தினும் தமிழ் நாகரிகம் பன்னூறு மடங்கு பழைமையுடையது என்பதைச் சேர சோழ பாண்டியராகிய மூவேந்தரது தொடக்கற்ற பழம் பெருமையே காட்டும்.  திருக்குறளில் பழங்குடி என்னும் தொடரை விளக்குகையில் பரிமேலழகர், “சேர சோழ  பாண்டியரென்றாற்போலப் படைப்புக்காலந்தொட்டு மேம்பட்ட குடி.” என்று கூறுவது காண்க.

 

கி.மு 1000 ஆண்டுகட்கு முன்னதாகக் கூறப்படும் பாரதப் போரில் உதியஞ்சேரலாதன் என்னும் சேர மன்னன் இரு படைக்கும் சோறு வழங்கியதாகப் புறப்பாடல் ஒன்று கூறுகின்றது. இங்ஙனம் பெருஞ்சோறு வழங்கிய காரணத்தால் இவன் “ பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்” என அழைக்கப்பட்டான். இவனைப் பாடிய புலவரான ‘முரஞ்சியூர் முடிநாகராயரும்’ இவன் காலத்தவராதலின் பாரத காலந்தொட்டே தமிழிற் சிறந்த பாக்கள் இருந்தமை மறுக்க முடியாத உண்மையாகிறது.

 

 பாரதக் கதையில் பாண்டியனது தலைநகர் மணவூர் என்று கூறப்படுவதனால் அஃது இடைச் சங்கத்தினும் பிந்தியது என்றும், வான்மீகியாரின் இராமாயணத்தில் கவாடபுரமே தலைநகராகக் கூறப்படுவதலால் அஃது இடைச் சங்க காலத்தில் இருந்ததென்றும் தலைச்சங்கம் இராமாயணத்திற்கும் மகாபாரதத்திற்கும் மிகப் பழைமையானது என்றும் ஏற்படுகின்றன.

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 ……………………………………தொடரும் …………………

திங்கள், 22 செப்டம்பர், 2025

தமிழமுது –129. – பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.”இலெமூரிய அல்லது குமரிக்கண்டம்.”-4.

 

தமிழமுது –129. –  பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.

இலெமூரிய அல்லது குமரிக்கண்டம்.”-4.

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை.

 

கடல் கொண்ட தென்னாடு:

கடல்கோள்களுக்குத் தப்பி நின்று திரும்பத் தமிழ் நாகரிகத்தை நிலைநாட்டிய நிலந்தரு திருவிற் பாண்டியனைத் திராவிட நாட்டரசனாகிய ’சத்தியவிரதன்’ என்றும் அரசமுனி,என்றும் மனு என்றும் வடநூல்கள் பலவாறாகக் கூறின.

 

ஊழி வெள்ளத்தினின்றும் தப்பி அவனது பேழை தங்கிய இடம் பொதிகைமலை ஆகும். இதனையே வடமொழியாளர் ‘ மலையமலை’ என்பர். இஃது அன்றைய பாண்டிநாட்டின் பெரும்பகுதிக்கும் வடக்கே இருந்ததால் வடமலை எனப்பட்டுப் பின் பெயர் ஒற்றுமையால் மேருவுடன் வைத்து எண்ணப்பட்டது.

இவ்வெள்ளக்கதைகள் பல புராணங்களிலும்காணப்படுபவை. அன்றியும் இராமாயணத்தில் இரண்டாம் ஊழியில் மணிகளாலும் முத்துகளாலும் நிரம்பப் பெற்றுச் சிறப்புடன் விளங்கிய பாண்டியன் தலைநகரான கவாடபுரத்தைப் பற்றியும்  மகாபாரதத்தில் அதன்பின் மூன்றாம் ஊழியில் தலைநகராயிருந்த மணவூரைப்பற்றியும் விவரிக்கப்பட்டிருப்பதையும் காண்க.

 

இங்ஙனம் இயற்கைச் சான்றுகளும் தென்மொழி, வடமொழி மேற்கோள்களும் ஒரே முகமாக நிலைநாட்டும் இவ்வுண்மையை எளிதில் மறுக்கவோ, புறக்கணிக்கவோ இயலாது.

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 ……………………………………தொடரும் …………………

ஞாயிறு, 21 செப்டம்பர், 2025

தமிழமுது –128. – பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள். ...”இலெமூரிய அல்லது குமரிக்கண்டம்.”-3.

 

தமிழமுது –128. –  பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.

இலெமூரிய அல்லது குமரிக்கண்டம்.”-3.

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை.

 

கடல் கொண்ட தென்னாடு:

தலைச்சங்க நாட்களில்பஃறுளியாற்றிற்கும் குமரி யாற்றிற்கும் இடைப்பட்ட பகுதி, அளவிலும் சிறப்பிலும் பாண்டி நாட்டின் மிகச்சிறந்த பாகமாயிருந்திருக்க வேண்டும், அது 49 நாடுகளாக வகுக்கப்பட்டிருந்ததென்றும் இரண்டு ஆறுகட்குமிடையே 700 காவத அளவு அகன்று கிடந்ததென்றும் அறிகிறோம்.

இரண்டாவது கடல்கோளால் கவாடபுரம் கடல் கொள்ளப்பட்டது. அதன்பின் சிலகாலம் ‘மணவூர்’ பாண்டியன் தலைநகரமாக இருந்தது. பின் மூன்றாம் முறைக் கடல்கோளால் அம்மணவூரும், குமரியாறும் அழியவே, பாண்டியன் மதுரை வந்து அங்கே கடைச் சங்கத்தை நிறுவினான்.

சிலப்பதிகாரத்தில், மாடலன் குமரியாற்றில் நீராடியதாக்க் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், கதை முடிந்ததன்பின் எழுதப்பெற்ற பாயிரத்தில் தொடியோள் பெளவமெனக் குமரி கடலாகக் கூறப்பட்டுள்ளது. இவ்விரு காலப்பகுதிகளுக்குகிடையே அஃதாவது கோவலன் இறந்து சில நாட்களுக்குப் பின்னாகக் குமரியாறு கடல் கொள்ளப்பட்டுக் குமரிக் கடலாயிற்று. என்பார் ‘பேராசிரியர்.”

குமரியாறு கடலுள் அமிழ்ந்த காலத்தை ஒட்டியே ‘மணிமேகலையுள் கூறப்பட்டபடி காவிரிப்பூம்பட்டினம் கடல் வயமானது. வங்களாக் குடாக்கடலில் உள்ள சில பெரிய தீவுகளும் இதனுடன் அழிந்திருக்க வேண்டும். “நாகன் நன்னாட்டு நானூறி யோசனை வியன்பா தலத்து வீழ்ந்து கேடெய்தும்” என்றது காண்க.

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 ……………………………………தொடரும் …………………

 

சனி, 20 செப்டம்பர், 2025

தமிழமுது –127 – பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள். ”இலெமூரிய அல்லது குமரிக்கண்டம்.”-2.

 

தமிழமுது –127 –  பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.

இலெமூரிய அல்லது குமரிக்கண்டம்.”-2.

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை.

 

கடல் கொண்ட தென்னாடு:

இந்நாடு தமிழகத்தின் ஒரு பகுதி மட்டுமன்று ; தமிழரினம், தமிழ் நாகரிகம் என்பவற்றின் தாயகம் என்றே கூறவேண்டும்.ஏனெனில், தமிழைத் தொன்றுதொட்டு வளர்த்த சங்கங்கள் மூன்றனுள், தலைச்சங்கம் நடைபெற்ற ‘தென்மதுரையும்’ இடைச்சங்கம் நடைபெற்ற ‘கவாடபுரமும்’  இக்குமரிப் பகுதியிலேயே இருந்தன.

எனவே, தலைச்சங்க காலமாகிய முதல் ஊழியிலும் இடைச்சங்க காலமாகிய இரண்டாம் மூன்றாம் ஊழிகளிலும் இக்குமரிப் பகுதியிலேயே தமிழர் ஆட்சியும் நாகரிகமும் மொழி வளர்ச்சியும் ஏற்பட்டன என்பதும், தெற்கிலிருந்து கடல் முன்னேறி வரவர அவர்கள் வடக்கு நோக்கிப் பரந்து சென்றனர் என்பதும் விளங்குகின்றன.

 தமிழ் நூல்களில் மூன்று கடல்கோள்களைப் பற்றித் தெளிவான குறிப்புகள் காணப்படுகின்றன.

 முதல் கடல்கோளால் பஃறுளியாறும் குமரிக்கோடும் கடலில் கொள்ளப்பட்டன. பஃறுளியாற்றின் கரையிலிருந்த தென்மதுரையே பாண்டியன் தலைநகரம், தலைச்சங்கமிருந்த இடமும் ஆகும். இக்கடல்கோள் நிகழ்ந்தகாலத்திலிருந்த பாண்டியனே நெடியோன் என்று புறநானூற்றிலும், நிலந்தரு திருவிற் பாண்டியன் என்று ’தொல்காப்பியப் பாயிரச் செய்யுளிலும் ‘  குறிக்கப்பட்டவனாவன்.

கடல்கோளின் பின்னர் இவன் வடக்கே போய்க் கவாடபுரத்தைத் தலைநகராக்கிக்கொண்டான். இங்கேதான் இடைச்சங்கம் நடைபெற்றது………………..

 

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 ……………………………………தொடரும் …………………

 

வெள்ளி, 19 செப்டம்பர், 2025

தமிழமுது –126 – பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.- ”கடல் கொண்ட தென்னாடு.”

 

தமிழமுது –126 –  பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.-

”கடல் கொண்ட தென்னாடு.”

பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை.-

இலெமூரிய அல்லது குமரிக்கண்டம்.”

“இன்றைய தமிழ்நாடு ‘திருவேங்கடம் முதல் கன்னியாகுமரி வரை பரந்து கிடக்கின்றது. ஆனால், முன் நாட்களில் தமிழ்நாட்டின் பரப்பு இதனினும் பன்மடங்கு மிகுதியாக இருந்ததென்று கொள்ளச் சான்றுகள் பல உள்ளன.

 மிகப்பழைய இலக்கணங்களிலும் நூல்களிலும் உரைகளிலும் குமரி முனைக்குத் தெற்கே நெடுந்தொலைவு நிலமாயிருந்தது என்றும் அந்நிலப்பகுதி பல்லூழிக்காலம் தமிழ்நாட்டின் ஒரு கூறாயிருந்து பின் படிப்படியாகக் கடலுள் மூழ்கிவிட்ட்தென்றும் ஆசிரியர்கள் உரைக்கின்றனர்.

இப்பரப்பிலிருந்த நாடுகள், அரசுகள், மலைகள், ஆறுகள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகளும் விவரங்களும் ‘சிலப்பதிகாரம், புறநானூறு முதலிய பழைய நூல்களில் காணப்படுகின்றன. ஆங்கிருந்த மலைகளுள் ‘குமரி மலை’ ஒன்று என்றும் ஆறுகளுள், குமரி, பஃறுளி இவை தலைமையானவை என்றும் தெரிகின்றன.

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 ……………………………………தொடரும் …………………

செவ்வாய், 16 செப்டம்பர், 2025

தமிழமுது –125 – தொல்தமிழர் உணவு –கள்..?கள், சிறப்புக்குரிய விருந்துணவாகும்.

 

 -முடிவுரை-

தமிழமுது –125 –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

புறநானூறு:

கள், சிறப்புக்குரிய விருந்துணவாகும்.

 

சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே

பெரிய கள் பெரினே

யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே

சிறு சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே

பெரும் சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே” – 235: 1- 5:

 ஔவையார். அதியமான்நெடுமானஞ்சியைப் புகழ்ந்து பாடிய பாடல் .

சிறிதளவு கள்ளைப் பெற்றால் எமக்குத் தருவான்;

பெருமளவு கள்ளைப் பெற்றால்அதனை நாங்கள் உண்டு பாட, அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்;

சிறிதளவு சோறாக இருந்தாலும் அதை மிகப் பல கலங்களில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்பான்;

பெருமளவு சோறாக இருந்தாலும், அதை மிகப் பல கலங்களில் இட்டுப் பலரோடும் பகிர்ந்து உண்பான்.

 தொல் தமிழர் வாழ்வியலில் கள் சிறப்புக்குரிய விருந்துணவாகும்.

போர்க்கள வெற்றிக் கொண்டாட்டங்களிலும் விழாக்களில் நிகழ்த்தும் மகிழ்ச்சி ஆரவாரத்திலும்  கள், சிறப்பிடம் பெறும் . குறிப்பாக மகிழ்ச்சிக்  கொண்டாட்டங்களில் பல வகையான இறைச்சிகளோடு கள் உண்டு மகிழ்தல்  நடைபெறும்.

மன்னர்கள் இருக்கையிலிருந்து எழுந்து   புலவர்களை எதிர்கொண்டு அழைப்பர். புலவர்களுக்கு வேண்டுமளவு பொருள் கொடுத்து மகிழ்வர்.

 மேற்சுட்டியுள்ள ஒளைவயார் பாடலில் மன்னனை நாடிவந்த புலவருக்குச் சிறப்பளிக்கும் பொருட்டு ‘கள்’ கொடுத்து மகிழ்ந்தான் மன்னன்;  புலவரும் மன்னனின் விருந்தோம்பும் பண்பினைப் பெரிதும் பாராட்டியுள்ளார் என்பதறிந்து மகிழ்க.  

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

தமிழமுது ……………………………………தொடரும் ………

திங்கள், 15 செப்டம்பர், 2025

தமிழமுது –124 – தொல்தமிழர் உணவு –கள்..?.......தேனில் வடித்த ,கள்ளின் தெளிவு.

 தமிழமுது –124 –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

மலைபடுகடாம்.

தேனில் வடித்த ,கள்ளின் தெளிவு.

 

கரும் கொடி மிளகின் காய்த் துணர்ப் பசும் கறி

திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல்

கான் நிலை எருமைக் கழை பெய் தீம் தயிர்

நீல் நிற ஓரி பாய்ந்து என நெடு வரை

நேமியின் செல்லும் நெய்க் கண் இறாஅல்

உடம்புணர்பு தழீஇய ஆசினி அனைத்தும்

குடமலைப் பிறந்த தண் பெரும் காவிரி

கடல் மண்டு அழுவத்துக் கயவாய் கடுப்ப

நோனாச் செருவின் நெடும் கடைத் துவன்றி.” – 521 -  529.

 

         

நன்னன் அரண்மனையில் காணப்படும் பொருள்கள்:

கரிய மிளகுக் கொடிகளில் காய்ந்த பசிய மிளகு, நல்ல மூங்கில் குழாயில் வைக்கப்பட்ட முற்றிய தேனால் வடிக்கப்பட்ட கள்ளின் தெளிவு,  காட்டில் வாழும் எருமையின் , மூங்கில் குழாயில் தோய்க்கப்பட்ட தயிர், நெடிய மலைப் பகுதியில், முற்றியதால் நீல நிறத்தையுடைய ஓரி பரவிய ஒழுகும் தேனைத் தன்னிடம் கொண்ட தேனடைகள் , நன்றாகத் தேர்ந்துகொள்ளப்பட்ட ஆசினிப்பலா ஆகிய யாவும், குடகு மலையில் பிறந்த குளிர்ந்த பெரிய காவிரி ஆறு , சென்று சேரும் மிக்க ஆழத்தையுடைய புகார் முகத்தைப் போல, பகைவர்கள் பொறுத்தற்கு இயலாத போரினையுடைய நன்னனின் தலைவாசலில் ஒருங்கு திரண்டன.

கள்ளும் தயிரும் மூங்கில் குழாய்களில் ஊற்றிப் பாதுகாக்கப்படுவன.

(கறி -  மிளகு ; அமை – மூங்கில் ; விளைந்த – முற்றிய ; ஓரி – நீல நிறம் ; இறால் – தேனடை ; ஆசினி – பலாவின் ஒரு வகை ; அழுவம் – ஆழம்.)     

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………பத்துப்பாட்டு………………முற்றிற்று ----------------------------

 

ஞாயிறு, 14 செப்டம்பர், 2025

தமிழமுது –123 – தொல்தமிழர் உணவு –கள்..?.......தேனில் வடித்த , கள் , நெல்லால் ஆக்கிய கள்.

 

தமிழமுது –123 –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

மலைபடுகடாம்.

தேனில் வடித்த , கள் , நெல்லால் ஆக்கிய, கள்.

 

“ஏறித் தரூஉம் இலங்குமலை தாரமொடு

வேய்ப் பெயல் விளையுள் தேக்கட் தேறல்

குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறை

பழஞ் செருக்கு உற்ற நும் அனந்தை தீர

அருவி தந்த பழம்சிதை வெண்காழ்

வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை

முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை

பிணவுநாய் முடிக்கிய தடியொடு விரைஇ.” – 170 -177.

வள்ளல்  நன்னன் மலைநாட்டில் கூத்தர்கள் பெற்ற விருந்து.

கூத்தர்களே…! நீங்கள், பெண் நாய் ஓடிச் சென்று கெளவிக் கொண்டு வந்த உடும்பின் தசையொடு, வேகமாக ஓடும் கடமானின் ஓட்டத்தைக் கெடுத்து குறவர் கொன்ற கடமானின் இறைச்சியையும், முள்ளம் பன்றியைக் கொன்ற பசிய கொழுப்புடைய பிளக்கப்பட்ட தசையையும் கலந்து உண்டு.

 

 மூங்கில் குழாய்க்குள் நிரப்பப்பெற்ற முற்றிய தேனால் செய்யப்பட்ட கள்ளின் தெளிவைக் குறைவின்றி இடையிடையே நிரம்பப்பருகிப் பின் நெல்லால் சமைக்கப்பட்ட கள்ளினை உண்டு மகிழ்ந்து, விடியற்காலத்தில் கள்ளுண்டு மகிழ்ச்சியுற்ற நும்முடைய மயக்கம் தீரும்படி மலைக் குறவர் வழங்கும் நல்ல உணவுகளை உண்டு நிறைந்த மகிழ்ச்சியுடன் ‘விருந்தினைப் பெற்றேம்’  என்று உறவு முறையுடன் குறவர்கள் மலை மீது ஏறிக் கொணர்ந்த அரும் பொருள்களையும் பெற்றுச்  சென்வீராக.

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………பத்துப்பாட்டு………………தொடரும் ----------------------------