புதன், 10 செப்டம்பர், 2025

தமிழமுது –120 – தொல்தமிழர் உணவு –கள்..?தேறல் (கள்) உண்ட மயில்.

 

தமிழமுது –120 –  தொல்தமிழர் உணவுகள்..?

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு.”

குறிஞ்சிப்பாட்டு :

தேறல் (கள்) உண்ட மயில்.

   அந்நிலை…..

நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர

ஒய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ

ஆகம் அடைய முயங்களில் அவ்வழி

பழுமிளகு உக்க பாறை நெடுஞ்சுனை

முமுதற் கொக்கின் தீம்கனி உதிர்ந்தென

புள் ஏறி பிரசமொடு ஈண்டி பலவின்

நெகிழ்ந்து உகுநறும் பழம் விளைந்த தேறல்

நீர்செத்து அயின்ற தோகை வியலூர்ச்

சாறுகொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி

அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள்

கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல்

வரையா மகளிரின் சாஅய் விழைதக._ 184 – 195.

 

 தலைவன், தலைவியை அணுகிய அளவில், தனக்கு இயல்பாகிய நாணமும் அச்சமும் இவளிடம் வெளிப்பட்டுத் தோன்றியமையால், விரைந்து அவனிடமிருந்து இவள் நீங்க முற்பட்டபோதிலும் அவன் விடாமல், அவளைக் கையால் அணைத்து, அவள் மார்பு, தன் மார்பில் ஒடுங்கும்படி தழுவினான். பழுத்த மிளகு சிந்திக்கிடக்கின்ற கற்பாறையில் உள்ள நீண்ட சுனையில், மாவின் இனிய பழங்கள் உதிர்ந்தன ; பலா விரிந்து தேன் சிந்தும் நறிய பழத்தானும் உண்டாகிய கள்ளின் தெளிவு நிரம்புவதால் தன்னை நுகரும் தேனீக்களை விலக்கி, தேனடைகள் உகுத்த தேனுடன் கலந்து, அத்தேறலைத் தனக்கு உண்பதற்கு ஒத்த எளிய நீராகக் கருதி மயில் உண்டது, விழாக்கள் கொள்வதற்கு உரிய இடங்களைக் கொண்ட அகன்ற ஊர்களில் விழா நடைபெறும் களத்தில் மேம்படச் சென்று, அரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் ஒலிப்ப ஆடுகின்ற மகள், கழாய்க் கயிற்றில் ஏறி ஆடும் போது தாளத்திற்கு ஆற்றாது தளர்வது போல் மயில் தளர்ச்சியடையும், மயிலின் தளர்ச்சியும் ஆடுமகளின் தளர்ச்சியும் புணர்ச்சியின்பின் தலைவி அடைந்த நிலையைக் குறிப்பால் உணர்த்தும்.

 

(ஒய்யென – விரைந்து, (ஒலிக்குறிப்புச்சொல்) ; ஆகம் – மார்பு ; முயங்குதல் – தழுவுதல் ; உக்க – உதிர்ந்த ; கொக்கு – மாமரம் ; புள் – பறவை, ஈண்டு வண்டுகளைக் குறித்த்து ;  பிரசம் – தேன் ;  செத்து – கருதி ; அயின்ற – உண்ட ; தோகை – மயில் ; சாறு – விழா : நந்தி – மிகுந்து ;  ஆங்கண் – அவ்விடத்து ; வியல் ஊர் – பெரிய ஊர்.)

 

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

.………பத்துப்பாட்டு………………தொடரும் ----------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக