வெள்ளி, 26 செப்டம்பர், 2025

தமிழமுது –133. – பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.....”வடவேங்கடம் தென்குமரி- பனம்பாரனார்.”-2.

 

தமிழமுது –133. –  பண்டைய தமிழ்நாட்டின் எல்லைகள்.

தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம்:”

வடவேங்கடம் தென்குமரி- பனம்பாரனார்.”-2.

மூதறிஞர் வ.சுப. மாணிக்கனார்.

”இந்நிலக்கருத்தால் நாம் அறிவது என்ன? தெற்கே பஃறுளி யாறும் குமரிமலையும் இருந்த காலத்துப் பிறந்தது தொல்காப்பியம் எனவும் அந்நெடும் பகுதியில் வாழ்ந்த தமிழ்மக்களின் வாழ்க்கையும் தழுவி இலக்கணம் கூறியது தொல்காப்பியம்  எனவும் அறிகின்றோம். “தமிழ்கூறு நல்லுலகம்” என்றது கடல் கொள்ளப்படாது அன்றிருந்த பன்மலையடுக்கத்துக் குமரி முடியையும் உள்ளடக்கியதாம் எனவும் அறிகின்றோம். இத்தொன்னிலம் சங்க இலக்கியத்தாலும் சிலப்பதிகாரத்தாலும் அடியார்க்குநல்லார் உரையாலும் இறையனார் அகப்பொருள் உரையாலும் பெருமருங்கு தெளிவுபடும். “கடல் கொள்வதன் முன்பு பிறநாடும் உண்மையின் தெற்கும் எல்லை கூறப்பட்டது.” என்பார் இளம்பூரணார்.  இத்தகு கடல்கோள்கள்பற்றி நம் நாட்டவரும் பிறநாட்டவரும் பல்துறைச் சான்றுகள் கொண்டு நிறுவியுள்ளனர்.

 

தமிழ்கூறு உலகம் என்றளவில் சொல்லாமல் “நல்லுலகம்” என்று சொல்லிய அடைப் புணர்ப்பு நாட்டுப்பற்றுக்கும் மொழிப்பற்றுக்கும் அடையா ஊற்றுக்கண்ணாம்.

பண்டைக்கால எல்லைகள் தொல்லையுட்பட்டாலும். தொல்காப்பியப் பாயிரத்தின் மொழிநடை  காலவெல்லைப்படாது இன்றும் உயிர்ப்புடையதாக ஓடுகின்றது.

 

 அரசு ஆட்சி நாகரிகம் முதலிய மாற்றங்களால் எத்துணைத்தாக்குறினும் இன்றும் என்றும் தமிழ்கூறும் தமிழ்நாடாக விளங்கும் மொழி ஒழுக்கமே இவ்வுயிரோட்டத்துக்குக் காரணமாம். இம்மொழியொழுக்கச் சிறப்பினை நாம் உணர்வோமாக.

 

தமிழ் பேசப்படும் வழக்குமொழியாதலின் ‘தமிழ்கூறு’ என்ற வினைச்சொல் பெய்தார். முக்காலத்தும் நிகழ்மொழியாதலின், ’கூறு’ என வினைத்தொகை செய்தார். ‘என்றுமுள தென்றமிழ்’ என்பது கம்பர் கவிமொழி. ‘சீரிளமைத் திறம்’ என்பது சுந்தரனார் தரவுமொழி.

Pl. Donate:

R.KUMARAN,Thanjavur; Account No: 0914101167707 ;

IFSC CODE : CNRB 0001854 ; MICR CODE : 613015003.

Foreign Exchange / SWIFT Code : CNRBINBBBFD

 ……………………………………தொடரும் …………………

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக