செவ்வாய், 4 ஜனவரி, 2022

தன்னேரிலாத தமிழ் –395: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –395: குறள் கூறும்பொருள்பெறு.

 

314

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்.


தமக்குத் துன்பம் செய்த ஒருவரைத் தண்டிக்க நினைத்தால் முதற்படியாக, அவர் வெட்கித் தலை குனியும்படியாக ஒரு  நன்மையைச் செய்வதோடு, அவர் செய்த துன்பத்தையும் மறந்துவிடு.


நல்லோர் நற்பண்பு: துன்பம் செய்தார்க்கும் நன்மைசெய்வர். 


செய்தல் வேண்டுமால் நன்றே வானோர்

அரும்பெறல் உலகத்து ஆன்றவர்

விதும்புறு விருப்பொடு விருந்து எதிர் கொளற்கே.”புறநானூறு,213.


வேந்தே…! வானோர் உறைகின்ற உயர்ந்த உலகத்தின்கண் உறைபவர், விரைந்து விருப்பத்தோடு ஏற்றுக்கொள்ளுமாறு நீ, என்றும் நன்றே செய்தல் வேண்டும்.

திங்கள், 3 ஜனவரி, 2022

தன்னேரிலாத தமிழ் –394: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –394: குறள் கூறும்பொருள்பெறு.

 

303

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய

பிறத்தல் அதனான் வரும் .


வெஞ்சினத்தால் விளைவது தீமை ஒன்றே அதனால்,  எவரிடத்தும் சினம் கொள்வதை மறந்துவிடு.. முற்றிலும் மறந்துவிடு.


வள்ளுவத்தில்,  நினைக்க வேண்டியவை நிறைய இருக்க, மறக்க வேண்டிய ஒன்றே ஒன்றை, மறவாது கூறிய வள்ளுவரை மறக்காதே. 

           

கற்ற கல்வி அன்றால் காரிகை

 செற்றம் செறுத்தோர் முற்ற உணர்ந்தோர்.” ---மணிமேகலை,23.


காரிகையே..! கற்ற கல்வி ஒன்றே மெய்யுணர்வு ஆகாது ; உள்ளத்தில் வெகுளி தோன்றாமல் அடக்கியவர் எவரோ அவரே முற்றவும் கற்ற அறிவுடையோர் ஆவர்.

 

ஞாயிறு, 2 ஜனவரி, 2022

தன்னேரிலாத தமிழ் –393: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –393: குறள் கூறும்பொருள்பெறு.


300                                                        

யாம்மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற.


உண்மையிலேயே யாம் கண்டவற்றுள் வாய்மையைவிடச் சிறந்த ஒன்று வேறு எதுவும் இல்லை. மனிதனுக்குப் பெருமை தருவது வாய்மை ஒன்றே


வாய்மை - எவராலும் வெல்லுதற்கு அரிய ஒன்று. 


கள்ளார் கள்உண்ணார் கடிவ கடிந்தொரீஇ

எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார்தள்ளியும்

வாயில் பொய் கூறார் வடுவறு காட்சியார்

சாயில் பரிவது இலர்.” – நாலடியார், 157.


சான்றோராவர்  திருடார்; கள் குடியார்;  தள்ளத்தக்கனவற்றைத் தள்ளி வைப்பார்;  எவரையும் இகழ்ந்து பேசார்;  வாயால் பொய் மொழியார்; வறுமை வந்துற்றபோதும் வருத்தம் கொள்ளார்.

சனி, 1 ஜனவரி, 2022

.தன்னேரிலாத தமிழ் –392: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –392: குறள் கூறும்பொருள்பெறு.

 

298

புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை

வாய்மையால் காணப் படும்.


உள்ளுக்குள் நிறைந்த அழுக்கை ( பொய், கொலை, களவு, காமம்….) வைத்துக்கொண்டு, குளித்து மூழ்கிப் பூசுவன பூசுவதால் மட்டும் ஒருவன் தூய்மை உடையவனாக முடியாது ;  அவன் அப்பழுக்கற்றவன் என்பது உண்மையைப் பேசும் உயர் குணத்தால் மட்டுமே வெளிப்படும்.


புற அழுக்கை நீரால் கழுவு ; அக அழுக்கை வாய்மையால் நீக்கு.


எய்திய செல்வத்தர் ஆயினும் கீழ்களைச்

செய் தொழிலால் காணப்படும்.” ---நாலடியார், 350.


எவ்வளவுதான் செல்வம் பெற்றவராயிருந்தாலும் செய்யும் தொழில்களைக் கொண்டு அவர்கள் கீழ் மக்களே என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.