திங்கள், 29 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-261.

 

தன்னேரிலாத தமிழ்-261.


மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை மழையும்

தவம் இலார் இல்வழி இல்லை தவமும்

அரசிலார் இல்வழி இல்லை அரசனும்

இல்வாழ்வார் இல்வழி இல்.” =நான்மணிக்கடிகை, 47.


மழையில்லாமல் உலகத்தார்க்கு எதுவும் இல்லை ; தவத்திறம் உள்ளவர் இல்லையேல் மழை இல்லை ; அத்தவமும் செங்கோன்மை இல்லாத இடத்தில் இல்லை ; அச்செங்கோன்மையும் நற்குடி மக்கள் இல்லா இடத்தில் இல்லை.

ஞாயிறு, 28 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-260.

 

தன்னேரிலாத தமிழ்-260.


பால் இல் குழவி அலறவும் மகளிர்

பூ இல் வறுந் தலை முடிப்பவும் நீர் இல்

வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும்

இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல்.  -புறநானூறு, 44.


பால் இல்லாது குழந்தைகள் அழுகின்றனர்; மகளிர் பூவின்றி வெறுங் கூந்தலை முடிக்கின்றனர்; நல்ல வேலைப்பாடு அமைந்த வீட்டில் உள்ளோர் நீர் இல்லாது வருந்திக் கூவுகின்றனர் ; இனியும் இங்கே இருத்தல் கொடுமையன்றோ..?

சனி, 27 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-259.

 

தன்னேரிலாத தமிழ்-259.

ஒறுப்பாரை யான் ஒறுப்பன் தீயார்க்கும் தீயேன்

வெறுப்பார்க்கு நான் மடங்கே என்ப ஒறுத்தியேல்

ஆர்வம் மயக்கம் குரோதம் இவை மூன்றும்

ஊர் பகை நின்கண் ஒறு.” –அறநெறிச்சாரம், 99.

 எனக்குத் துன்பம் செய்கின்றவர்க்குத் துன்பம் செய்வேன்; தீயவர்களுக்குத் தீமை செய்வேன் ; என்னை வெறுப்பாரை நான்கு மடங்கு அதிகமாக நானும் வெறுப்பேன் என்று உலகத்தார் கூறுவர்; நெஞ்சே..! நீயும் இவற்றை விரும்பி மேற்கொண்டு மற்றவர்களை அடக்க நினைத்தால் ஆசை, அறியாமை, பகை உணர்ச்சி ஆகிய மூன்றும் உன்னிடத்தே தோன்றும் பகைகளாகும். எனவே, இப்பகைகளையெல்லாம் அடக்கி வாழ்தல் நன்றாம்.

வியாழன், 25 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-258

 

தன்னேரிலாத தமிழ்-258.

நல் அறம் எந்தை நிறை எம்மை நன்கு உணரும்

கல்வி என் தோழன் துணிவு எம்பி அல்லாத

பொய்ச் சுற்றத்தாரும் பொருளோ பொருள் ஆய

இச் சுற்றத்தாரில் எனக்கு.”அறநெறிச்சாரம், 161.

தலைசிறந்த அறமே என் தந்தை ; காப்பன காத்து, கடிவன கடியும் அறிவே என் தாய் ; நன்மை தீமைகளை உணர்வதற்குக் காரணமான கல்வியே என் தோழன் ;  தக்கன துணியும் மனத் தெளிவே என் தம்பி ; சிறந்த உறுதியைப் பயக்கும் இச் சுற்றத்தாரைக்காட்டிலும் தந்தை, தாய், தோழன், உடன்பிறந்தார் என்று அழைக்கப்படும் பொய்ச் சுற்றத்தார் எமக்கு உறுதி பயப்பரோ..? இல்லை என்பதாம்.  

 

புதன், 24 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-257.

 

தன்னேரிலாத தமிழ்-257.

கல்லான் கடை சிதையும் காமுகன் கண் காணான்

புல்லான் பொருள் பெறவே பொச்சாக்கும் நல்லான்

இடுக்கணும் இன்பமும் எய்தியக் கண்ணும்

நடுக்கமும் நன் மகிழ்வும் இல்.”அறநெறிச்சாரம், 151.

கற்று அறியாத மூடன் கடையனாய் அழிவான்  ; காமம்மிக்கவன் சேரத் தகுந்த, சேரத்தகாத மகளிர் இவர் என்பதை அறியான் ;  அற்பனோ செல்வம் கிடைத்தவுடன் தன் தகுதி மறந்து ஆடுவான் ; அறிவுடைய நல்லவன் இன்பம் துன்பம் இரண்டையும் அடையும் போது முறையே மகிழ்தலும் வருந்துதலும் அற்றவன் ஆவான்.

புதன், 17 மார்ச், 2021

தன்னேரிலாத தமிழ்-256.

 

தன்னேரிலாத தமிழ்-256.

நன்னன் மருகன் அன்றியும் நீயும்

முயங்கற்கு ஒத்தனை மன்னே வயங்கு மொழிப்

பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடுமழை

அணங்குசால் அடுக்கம் பொழியும் நும்

மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே.”புறநானூறு, 151.

நின் முன்னோன் பெண்கொலை புரிந்த நன்னன் ஆவான் ; நின் நாட்டைப் பாடிவருவோர்க்குக் கதவு அடைக்கும் தன்மையுடையது ஆதலால், எம்போல்வர் நின் விச்சிமலையைப் பாடுதல் ஒழிந்தனர்.