ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்----144

 

தன்னேரிலாத தமிழ்----144

உயிரினம் குறித்து ஆராய்ந்த தொல்காப்பியரின் - - பகுப்பாய்வு

மாற்றருஞ் சிறப்பின் மரபியல் கிளப்பிற்

பார்ப்பும் பறழும் குட்டியும் குருளையும்

கன்றும் பிள்ளையும் மகவும் மறியுமென்ற

ஒன்பதும் குழவியொடு இளமைப் பெயரே

                                                            (தொல். 1500)

இந்நூற்பாவின் பொருளாவது..

                        இத்தலைச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின் இருதிணைப் பொருளும் பற்றிவரும் இளமைப் பெயர் உணர்த்துதல் நுதலிற்று. பார்ப்பு முதலாகக் குழவியீறாகச் சொல்லப்பட்டவொன்பதும் இளமைப் பெயர் என்றவாறு.

அவற்றுள்-

                   பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றினிளமைப் பெயர்களாகச்சுட்டியுள்ளமை அறிவியல் நோக்குடையன.

பறவைதம் பார்ப்புள்ளஎன்று கலித்தொகையும்வெள்ளாங் குருகின் பிள்ளையும் பலவேஎன ஐங்குறுநூறும் கூறுவதைக் காணுங்கள்.பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்ற ஆய்வு 18 ஆம் நூற்றாண்டுவரை நடந்தது.கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் திருத்தக்கத் தேவர்பறவைகள் காற்றில் மிதப்பதில்லை ;  காற்றைக் கிழித்துக்கொண்டு ஏகும்என்று குறிப்பிட்டுள்ளார்பறவைகள் காற்றைவிடக் கனமானவை.

  பறவைகள் புலம் பெயர்தலைவலசை போதல் என்று இலக்கியங்கள் குறிக்கின்றன.

 புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்

விதுப்புற அறியா ஏமக் காப்பினை

   --குறுங்கோழியூர் கிழார் புறநா. 20: 18-19

                   என்று புறநானூறு குறிப்பிடுகின்றது.” வதிபுள்என்பது ஓரிடத்து நிலைத்து வாழும் பறவையைக் குறிப்பதாகும். பறவைகள் உணவிற்காகவும் இனவிருத்திக்காகவும் இடம்பெயர்தலை ஆய்வாளர்கள் விரிவாக ஆராய்ந்து வருகின்றனர். உயிரின வகைப்பாடு ஆய்வாளர்கள் (Taxonomists) சுமார் 300 ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகின்றனர்

                        சுவீடன் நாட்டு ஆய்வாளர் லின்னேயஸ் (1707 – 1778)  உயிரினங்களுக்கு லத்தீன் மொழியில் இரு பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தினார். கடந்த 230 ஆண்டுகளில் சுமார் 15 இலட்சம்உயர்நிலைஉயிரினங்கள் இவ்வகையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. உயிரியல் நிபுணர் ஜெ.பி.எஸ்.ஹால்டேனிடம் உயிரினங்கள் குறித்துக் கேட்டபோதுஆண்டவனுக்கு வண்டுகள் மீது அபரிதமான அபிமானம் உள்ளதாகத் தோன்றுகிறதுஎன்றார். உயிரினங்களில் நான்கில் ஒரு பகுதி வண்டுகளாக உள்ளன. தமிழில் தும்பி  உயர் சாதி வண்டாகக் குறிக்கப்படுகிறது.

சனி, 29 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்----143

 

தன்னேரிலாத தமிழ்----143

ஆறறிவு

                           ஆறாவது அறிவாகிய மனத்தைப் பெற்ற மனிதன் அதன்வழி சிந்திக்கும் திறனைப் பெற்றிருக்கிறான். மனத்தின் தெளிவு நடத்தையின்வழி வெளிப்படுகிறது. தொல்காப்பியரின் உளவியல் ஆய்வு சிக்மண்ட் பிராய்டின் உளவியல் ஆய்வுக்கு முன்னோடியாக விளங்குகிறது.”ஆறறிவதுவே அவற்றொடு மனனே” – என்னும் கூற்று பிராய்டின் கண்டுபிடிப்பாகப் போற்றப்படுகிறது. அவற்றொடுஎன்னும் ஒரு சொல்லால் தொல்காப்பியர் உளவியல் குறித்து ஆராய்ந்த விஞ்ஞானி ஆகிறார்.  அதாவது விலங்குணர்ச்சியை உள்ளடக்கிய ஆறாவது அறிவைப் பெற்றது மனித இனம் என்பதுதானே பிராய்டின் கண்டுபிடிப்பு.

               கி.பி. 1856 இல் செக்கோஸ்லாவிய நாட்டில் பிறந்து ஆஸ்திரியாவில் வாழ்ந்த சிக்மண்ட் பிராய்டு பிறப்பால் யூதர். ஹிட்லரின் யூதர் இன ஒடுக்கத்தில் இவரும் தப்பவில்லைகொடுமைப்படுத்தப்பட்டார். இவருடைய ஆய்வுரைகள் கொளுத்தப்பட்டன. மனம் என்றால் என்ன ; மனத்திற்கும் நோய்க்கும் என்ன தொடர்பு..? என்பதை இவர் அறிவியல் நெறிப்படி விளக்கியதாலே மருத்துவ உலகில் மாபெரும் புரட்சிகள் நிகழ்ந்தன. உளவியல் அடிப்படையில் உலகில் எல்லாருமே பைத்தியம்தான் ; விழுக்காடுதான் வேறுபடுகிறது. பிராய்டு கூறுகிறார்மனத்துள் மறைக்கப்படும் எண்ணங்களாலேயே நோய்க்கு ஆளாகிறார்கள். மனநோய் உண்டாவது ஒருபுறம் மனத்தின் பலவீனத்தை அறிவிக்கிறது; இன்னொருபுறம் அத்தீய நினைவின் சக்தியிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும் உதவுகிறதுஎன்கிறார்.

                         உயிரினங்களுள் பறவைகள் குறித்து ஆய்வுசெய்த புலவர்கள் பல அரிய கருத்துக்களைக் கூறியுள்ளனர். பறத்தலினால் பறவை என்று பெயர் பெற்றது. புள் என்பது பறவையினத்திற்கான பொதுப்பெயர். காண்க கிட்டிப்புள்(ஆங்கிலேயர் கைப்பற்றிக்கொண்ட தமிழனின்சிறுவர் விளையாட்டு -  கிரிக்கெட்) எழுந்து பறப்பதால் அச்சிறு கட்டைக்குப் புள் என்று பெயர்.(Bird – a feathered animal with two wings and two legs)

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

தன்னேரிலாத தமிழ்----142

 

தன்னேரிலாத தமிழ்----142

 

 

மக்கள் தாமே ஆறு அறிவுயிரே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே

                         -தொல். 1532

                              மக்களுக்கு மெய் வாய் கண் மூக்கு செவி என ஐம்பொறிகளும் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என ஐம்புலன் உணர்வுகளும் இருப்பதால் ஐயறிவும்ஆறாவதாக மனம் என ஒன்று பெற்று நன்மை தீமை அறிவதாலும் சிந்திப்பதாலும் அவர்களை ஆறறிவு உடைய உயிரினம் என்பார் தொல்காப்பியர். பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பேஎனக் கூறியதால் மக்களைப் போன்று ஆறு அறிவு உடையனவாக குரங்கு யானை கிளி முதலியவற்றுள் மன உணர்வுடைய உளவாயின் அவையும் ஆறறிவுயிராய் அடங்கும் என உரை வகுத்துள்ளார் இளம்பூரணர்.

                          இவ்வாறு  தொல்காப்பியர் உயிர்களை வகைப்படுத்தியுள்ளமை வியப்பிற்குரியதாகும். இரண்டு மூன்று நான்கு அறிவுடையவை முதுகெலும்பற்றவை; ஐந்து ஆறு அறிவுடையவை முதுகெலும்புள்ளவை.

                   உயிர்களின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை அறிவியல் வழியாக மெய்ப்பித்துக் காட்டிய சி. ஆர். டார்வின் ஓரணு உயிரிலிருந்து மனிதன் படிப்படியாக வளர்ந்துள்ள நிலையை 1858 இல் வெளியிட்டார். அறிவியல் உலகம் அவரை அதிசயமாகப் பார்த்தது. டார்வினின் இந்த அரிய கண்டுபிடிப்பு கடவுள் உயிர்களைப் படைத்தார் ; மனிதனைப் படைத்தார் என்ற மதக் கொள்கைகளைத் தகர்த்தெறிந்தது. டார்வின் - அரிஸ்டாட்டிலுக்கும் எம்பெடோகிளசுக்கும் கடன்பட்டிருப்பதைப்போல தொல்காப்பியருக்கும் கடன்பட்டுள்ளார் என்பதை உலகம் ஒப்புக்கொள்ள வேண்டும்.