வெள்ளி, 31 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1292


திருக்குறள் -சிறப்புரை :1292

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறிஎன் நெஞ்சு. ----- ௨ ௯ ௨

நெஞ்சே..! நம்மிடத்துத் தலைவர் அன்பில்லாதவர் என்று அறிந்திருந்தும், அவரிடம் சென்று சேர்ந்தால் சினம் கொள்ளமாட்டார் என்று கருதி சென்றனையேஎன்னே உன் அறியாமை..!

பயப்பு என் மேனியதுவே நயப்பு அவர்
நார் இல் நெஞ்சத்து ஆரிடையதுவே
செறிவும் சேண் இகந்தன்றே அறிவே
ஆங்கண் செல்கம் எழுக என ஈங்கே
வல்லா கூறியிருக்கும்………” –குறுந்தொகை.

பசலை நோய் என் உடம்பின்கண் பரவி உள்ளது. அந்நோய் நீங்குவதற்கு உரிய காதல், என்னிடத்து அன்பில்லாமல், அவரிடம் அன்புகொண்டு சென்ற நெஞ்சத்துடன், செல்லுதற்கு அரிய தொலைவில் உள்ளது. உயிரைப் பற்றிக்கிடக்கும் என் அறிவு, அவர் இருக்கும் இடம் தேடி எழுக என யாம் செய்ய இயலாதன கூறி, இங்கே என்னுடன் இருக்கும்…!

திருக்குறள் -சிறப்புரை :1291


திருக்குறள் -சிறப்புரை :1291

130. நெஞ்சொடு புலத்தல்

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீ எமக்கு ஆகா தது ---- ௨ ௯க

நெஞ்சே..!  அவர் நெஞ்சம் அவரோடு பொருந்தி, நம்மை நினைக்காதிருக்கும்போது, நீ மட்டும் என்னோடு பொருந்தாது அவரையே நினைத்துக்கொண்டிருக்கிறாயே ..! யாது கருதினை..?

அம்மவாழி தோழி சிறியிலை
நெல்லி நீடிய கல்காய் கடத்திடை
பேதை நெஞ்சம் பின் செல சென்றோர்
கல்லினும் வலியர் மன்ற
பல்லிதழ் உண்கண் அழப் பிரிந்தோரே.” ----ஐங்குறுநூறு.

வாழி தோழி..! சிறிய இலைகளைக் கொண்ட நெல்லி மரங்கள் அடர்ந்து வளர்ந்த, கற்கள் வெயிலால் சூடேறிக் கிடக்கும் காட்டில், அறியாமை மிக்க என் நெஞ்சம் அவரைப் பின் தொடர, பல இதழ்களால் அழகுபெற்ற நீல மலர் போலும் மையுண்ட என் கண்கள் அழுமாறு பிரிந்த நம் காதலர் மெய்யாகவே கல்லைக் காட்டினும் வலிய நெஞ்சம் படைத்தவராவார்.

வியாழன், 30 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1290


திருக்குறள் -சிறப்புரை :1290

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று. ---- ௨ ௯0

முதலில் என்னைக்கண்ட அளவில் கண்ணினால் மட்டும் கலங்கிப் பிணங்கினாள். பின்னர்  என்னைக்கண்டதும் என்னைவிட விரைந்துவந்து, தன் ஊடலை மறந்து என்னைத் தழுவினாள்.

கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து
உருவுகிளர் ஏர்வினைப் பொலிந்த பாவை
இயல் கற்றன்ன  ஒதுக்கினள் வந்து
பெயல் அலைக் கலங்கிய மலைப்பூங் கோதை
இயல் எறி பொன்னிற் கொங்கு சோர்பு உறைப்பத்
தொடிக்கண் வடுக்கொள முயங்கினள்
வடிப்புறு நரம்பில் தீவிய மொழிந்தே.” ----அகநானூறு.

நெஞ்சே..! அலர் அஞ்சி,  கடல் மீன்கள் துயிலும் நள்ளிரவில், அழகு கிளர்ந்த பொலிவினையுடைய செய்தொழிலால் சிறந்தபாவை, நடை கற்றாற் போன்ற நடையினளாய், மெல்ல மெல்ல வந்து, மழையின் அலைத்தலால் கலங்கிய பூ மாலையினின்றும்  உலைக்களத்து அடிக்கும்பொழுது தெறித்து விழும் பொன் துகள் போல், தேன் துளித்து விழ,  யாழ் நரம்பின் ஒலிபோல, இனிய மொழிகளைக்கூறி,  வட்டமான முலைக்கண்ணில் வடுவுண்டாகத் தழுவினாள்.

திருக்குறள் -சிறப்புரை :1289


திருக்குறள் -சிறப்புரை :1289

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்.---- ௨ ௮ ௯

மலரினும் மென்மைத்தன்மை வாய்ந்த காம இன்பத்தின் இயல்பறிந்து, அவ்வின்பத்தைத் துய்ப்போர் சிலரேயாவர்.

பொய்கை ஆம்பல் அணிநிறக் கொழுமுகை
வண்டுவாய் திறக்கும் தண் துறை ஊரனொடு
இருப்பின் இருமருங்கினமே கிடப்பின்
வில்லக விரலின் பொருந்தி அவன்
 நல்லகம் சேரின் ஒரு மருங்கினமே.” ----குறுந்தொகை.

பொய்கையில் உள்ள ஆம்பலின், அழகிய நிறத்தையுடைய கொழுவிய முகையானது வண்டுகளுக்குத் தன்னுடைய இதழ்களாகிய வாயைத் திறக்கும். இத்தகைய தண்ணிய நீர்த் துறையையுடைய தலைவனொடு, புணராது ஊரில் இருத்தலைச் செய்தால், நாங்கள் இரு வடிவினை உடையவர்கள் ஆவேம்.  துயிலிடத்தின்கண் அவ்வூரனுடைய நல்ல மார்பினைச் சேர்ந்து அணைத்தால் வில்லைத் தம்முன்னே அகப்படுத்திய விரல்களைப்போல, இருவரும் ஒரு வடிவினம் ஆவேம்.

புதன், 29 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1288


திருக்குறள் -சிறப்புரை :1288

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு. ----- ௨ ௮ ௮

கள்  உண்பார்க்கு இழிவுதரும் துன்பத்தைச் செய்தாலும் மேன்மேலும் அதனை  விரும்பி  உண்பதைப்போல,  தலைவ..! நீ, மீண்டும் மீண்டும் எம்மைப் பிரிந்து வருத்தினாலும் நின் மார்பினைத் தழுவுதல் இன்பம் தருவதாக உள்ளது.

மகிழ்ந்ததன் தலையும் நற உண்டாங்கு
விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை
இருங்கரை நின்ற உப்புஒய் சகடம்
பெரும்பெயல் தலைய வீந்தாங்கு இவள்
இரும்பல் கூந்தல் இயல் அணி கண்டே.”---- குறுந்தொகை.

ஏறுதற்கரிய கரையில் நின்ற வண்டியில் ஏற்றப்பட்ட உப்பு, பெருமழையால் சிறுக சிறுகக் கரைந்து அழிந்து, பின் சகடமும் அடித்துச் செல்லப்படுவதப்போல. உடல் நிற்க உயிர் அழிய,   யான் கலங்கி, அவளைக் குறையிரந்த போது மறுத்தனள்.  இவளது கரிய பலவாகிய கூந்தலோடு கூடிய, இயற்றப்பட்ட அழகினைக் கண்டு நீ ஒரு முறை விரும்பிய பின்னரும் விருப்பத்தை அடைந்தனை. நின் செயல் கள்ளை உண்டு அறிவு அழிந்ததன் மேலும் அதனை விரும்பி உண்பது போல் உள்ளது.

திருக்குறள் -சிறப்புரை :1287


திருக்குறள் -சிறப்புரை :1287

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து. ----- ௨ ௮ ௭

தம்மை இழுத்துக்கொண்டுபோகும் என்பதை அறிந்திருந்து ஓடும் வெள்ளத்தில் பாய்பவரைப்போல, காதலரோடு பிணங்குவதில் பயனில்லை என்பதை அறிந்திருந்தும் அவரோடு பிணங்குவதில் என்ன பயன் உடைத்து..?

ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்
உறைகழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப
மறைதிறன் அறியாளாகி ஒய்யென
நாணுனள் இறைஞ்சி யோளே பேணிப்
பரூஉப் பகை ஆம்பல் குரூஉத் தொடை நீவிச்
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே.” –அகநானூறு.

அன்புமிக்க நெஞ்சமொடு போர்வையைக் கவர்தலின், உறையினின்று எடுத்த வாளைப்போல, அவள் உருவம் வெளிப்பட்டு விளங்க, மறையும் வகை அறியாதவளாகி, ஆம்பல் பூவின் முறிக்கப்பட்ட இதழ்களால் தொடுத்த  பருத்த நிறம் பொருந்திய மாலையை நீக்கி, வண்டுகள் ஒலிக்கும் ஆராய்ந்த மலரினைச் சூடிய, நீண்ட பலவாய கூந்தலின் இருளால், மறைத்தற்குரிய உறுப்புகளை மறைத்து, விரைவாக நாணி விருப்புற்று இறைஞ்சினாள் ..! அத்தகையாள் இன்று நாம் பல கூறி உணர்த்தவும் உணராது ஊடுகின்றாள் ; இவள் என்ன உறவினள் நமக்கு..?

செவ்வாய், 28 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1286


திருக்குறள் -சிறப்புரை :1286

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை.------ ௨ ௮ ௬

காதலரைக் காணுகின்ற போது அவருடைய தவறுகளைக் காணாதவளாகின்றேன் ;  அவரைக் காணாதபோது அவருடைய தவறல்லாத பிற நல்ல குணங்களைக் காணாதவளாகின்றேன்.

இனிப் புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின்
 நனிச் சிவந்த வடுக்காட்டி நாண் இன்றிவரின்எல்லா
துனிப்பென் யான் என்பேன்மன் அந்நிலையே அவற்காணின்
தனித்தே தாழும் இத்தனி இல் நெஞ்சு.” ---கலித்தொகை.

தோழி…! இனிதாகக் கூடிய அழகினையுடைய பரத்தையரின் பற்கள் பதிந்த வடுக்களைக் காட்டி, நாணமின்றியே வருவான் ; வந்தால் துனித்திருப்பேன் என்று யான் கூறுவேன் ; ஆனால், அந்நிலையிலே அவனைக் கண்டால், மனத்தைத் தனக்கு உரித்தாக்கல் இல்லாத நெஞ்சு தவறுகளோடு கூடிய அந்நிலைதன்னிலே என்னை நீக்கி, அவனிடத்தே தாழ்ந்து விடுகின்றது, என் செய்வேன்….?

திருக்குறள் -சிறப்புரை :1285


திருக்குறள் -சிறப்புரை :1285

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட விடத்து. ---- ௨ ௮ ௫

கண்ணுக்கு மை தீட்டும் போது அஞ்சனக் கோலினைக் காணமுடியாத கண்ணேபோல் கணவனை நேரில் காணும்போது, அவருடைய தவறுகள் கண்ணுக்குத் தெரிவதில்லை.

நெடிய திரண்ட தோள்வளை நெகிழ்த்த
கொடியன் ஆகிய குன்றுகெழு நாடன்
வருவதோர் காலை இன்முகம் திரியாது
கடவுட் கற்பின் அவனெதிர் பேணி
மடவை மன்ற நீ எனக் கடவுபு
துனியல் வாழி தோழி சான்றோர்
புகழும் முன்னர் நாணுப
பழியாங்கு ஒல்பவோ காணுங்காலே.” ---குறுந்தொகை.

தோழி..! நெடிய திரட்சி உடைய தோளில் அணிந்த வளையை நெகிழச் செய்த கொடுமை உடையோனாகிய குன்ற நாடன், பரத்தையர் வீட்டிலிருந்து நின்னைக் காண வருங்கால், நின்னுடைய கடவுள் தன்மையுடைய கற்பு திரியாமல், இனிய முகம் மலர்ந்து எதிர்கொண்டு பேணுதலால், நீ உறுதியாக அறியாமை உடையவள் ஆயினை என்று, என்னை வினாவி, என்பால் வருத்தமுறாதே. அறிவ்வான் அமைந்தவர் தம்முன்னர்ப் பிறர் புகழ்ந்து கூறும் மொழிகளைக் கேட்க நாணமடைவர். அத்தகைய மென்மையுடையவர், பழியைக்கண்டு உரைக்குங்கால், எங்ஙனம் தாங்கும் வலிமையுடையர் ஆவரோ..?

திங்கள், 27 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1284


திருக்குறள் -சிறப்புரை :1284

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றதுஎன் நெஞ்சு. ----- ௨ ௮ ௪

தோழி…! காதலரைக் காணாது தவித்தபோது  அவரோடு ஊடல் கொள்ள நினைத்தேன், ஆனால் அவரைக் கண்டபோது  ஊடலைத்துறந்து, கூடிமகிழ விரைந்தது என் நெஞ்சம்.

கடைஇய நின் மார்பு தோயலம் என்னும்
இடையும் நிறையும் எளிதோநிற்காணின்
கடவுபு கைத்தங்கா நெஞ்சு என்னும் தம்மோடு
உடன்வாழ் பகை உடையார்க்கு.” ----கலித்தொகை.

உன்னைக் கண்டால் என்னை உன்னிடத்தே செலுத்தித் தானும் உன்னிடத்தே வந்து தங்கிவிடும் நெஞ்சு என்று சொல்லப்படும் தம்மோடு உடன் வாழ் உட்பகையை உடையவள் நான் ; முன்னர் என்னை நின்மேல் வீழ்வித்த நின் மார்பை தழுவ மாட்டேன் என்று கூறும் நிறை என்னும் குணத்தையும் பெறுதல் எளிதன்றோ? அஃது அரிதன்றோ..என ஊடல் தீர்ந்தாள் கூறினாள்.


திருக்குறள் -சிறப்புரை :1283


திருக்குறள் -சிறப்புரை :1283

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணாது அமையல கண். --- ௨ ௮ ௩

தலைவர், நம்மை விரும்பி மதிக்காது, தாம் விரும்பியவற்றையே செய்யினும் அவரைக் காணாது கண்கள் அமைதி பெறுவதில்லையே..!

குறுந்தாட் கூதளி ஆடிய நெடுவரை
பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன்
உட்கை சிறுகுடை கோலி கீழிருந்து
சுட்டுபு  நக்கியாங்கு காதலர்
நல்கார் நயவார் ஆயினும்
பல்கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே.” –குறுந்தொகை.

குறுகிய தாளினையுடைய கூதங்கொடி, காற்றால் அசைகின்ற நெடிய மலையில் இருக்கும் பெரிய தேனடையை கண்ட  கால்களற்ற முடவன், தன்னுடைய உள்ளங்கையக் குழித்துக் கொண்டு, அம்மலையின் கீழிருந்தபடியே தேனடையைக் கைவிரலால் சுட்டிக்காட்டித் தன் உள்ளங்கையை நாவினால் நக்கி இன்புற்றாரைப்போல, நம் காதலர் அத்தேன் போலத் தன்னைத் தருதலும் செய்யாது, நம்மை விரும்புதலும் செய்யார், ஆயினும், பல காலங்களில் அவரைக் கண்ணால் கண்டிருத்தல் நம் உள்ளத்திற்கு இனிமை தருவதாய் உள்ளது.

ஞாயிறு, 26 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1282


திருக்குறள் -சிறப்புரை :1282

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின். ----- ௨ ௮ ௨

மகளிர்க்குப் பனையளவாகக் காமவேட்கை விளையுமானால், தினையளவும் தலைவரோடு ஊடல் கொள்ளாதிருத்தல் வேண்டும்.

தீரா முயக்கம் பெறுநர்ப் புலப்பவர்
யார்  நீ வருநாள் போல் அமைகுவம் யாம் புக்கீமோ
மாரிக்கு அவாவுற்றுப் பீள்வாடும் நெல்லிற்கு ஆங்கு
ஆராத் துவலை அளித்தது போலும்
ஓர் பாட்டு ஒருகால் வரவு. “-------கலித்தொகை.

தலைவ…! நின் இடைவிடாத  முயக்கத்தைப் பெற்று இன்புறும் பரத்தையரை புலப்பவர் யார்..? ஓர் யாண்டுக்கு ஒரு முறை வருகின்ற நின் வரவு, பெருமழைக்கு விரும்பி வாடிய நெற்பயிருக்குச் சிறு தூறல்கள் போன்றது என்ன பயனைத்தரும்..? வெப்பத்தைக் கிளப்பிவிட்டு அதிக துயரத்தைத்தானே தரும். நின் வரவும் அதிக வருத்தத்தைத் தருவதாகும். ஆதலான் நீ முழுதும் மனந்திருந்தி வரும்வரையும் யாம் ஆற்றியிருப்போம்…!


திருக்குறள் -சிறப்புரை :1281
129. புணர்ச்சி விதும்பல்

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற்கு உண்டு. ----- ௨ ௮க

நினைத்த பொழுதே மகிழ்ச்சி தருவதும்  கண்ட பொழுதே களிப்படைதலும்  காம வேட்கை உடையார்க்கு உண்டு ; கள் உண்பார்க்கு அவை இல்லை.

"உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்து நின்று
உள்ளினை வாழி நெஞ்சே கள்ளின்
மகிழின் மகிழ்ந்த அரிமதர் மழைக்கண்
சின்மொழிப் பொலிந்த துவர்வாய்ப்
பன்மாண் பேதையிற் பிரிந்த நீயே.” ----அகநானூறு.

 நெஞ்சே…! கள்ளால் ஆகிய மகிழிச்சியைப்போல, மகிழ்தற்கு ஏதுவாகிய, செவ்வரிபடர்ந்த அழகிய குளிர்ந்த கண்களையும் சிலவாகிய மொழிகளால் பொலிவுற்ற வாயினையும் பலவாய மாண்புகளையும் உடைய, நீ, தலைவியைப் பிரிந்துவந்த பின்னும் அவளின் அழகிய மார்பைத் தழுவுதலை விரும்பி, மீண்டு நின்று நின் முயற்சியினைக் கைவிடத் துணிந்தாய், இது தகுமோ..?