வெள்ளி, 24 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1278


திருக்குறள் -சிறப்புரை :1278

நெருநற்றுச் சென்றாரெம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து. ------ ௨ ௭ ௮

எம் காதலர் நேற்றுதான் பிரிந்து சென்றார் ; அப்பிரினால் வருத்தமுற்ற யாம்,  எம் அழகிய மேனி பசலை படர்ந்து பல நாட்கள் உடையேம் ஆனோம்.

கருங்கால் வேம்பின் ஒண் பூ யாணர்
என்னை இன்றியும் கழிவது கொல்லோ
ஆற்றயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக்
குழைய கொடியோர் நாவே
காதலர் அகல கல்லென் றவ்வே.”----- குறுந்தொகை.

வேம்பின் கரிய காம்புகளில் உள்ள, ஒள்ளிய மலர்களின் புது வருவாயானது, என்னுடைய தலைவன் இல்லாமையால், நுகரப் பெறாமல், பயனின்றிக் கழியுமோ..? தலைவன் என்னைவிட்டு அகன்றமையால் அது குறித்துக் கொடுமை கூறும் மகளிரின் நாக்குகள், தாம் குழைவின்றி, அலர் கூறி, யாற்றின் அருகில் உயர்ந்து வளர்ந்துள்ள வெள்ளிய கொம்புகளை உடைய அத்தி மரத்தின்,  பல நண்டுகள் பற்றிக் குழைந்த ஒரு பழத்தைப் போல, யான் வருந்தும்படி, கல் என்ற முழக்கத்தை உடையவாயின. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக