ஞாயிறு, 12 மே, 2019

திருக்குறள் -சிறப்புரை :1254


திருக்குறள் -சிறப்புரை :1254

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும். ------- ௨ ௫ ௪

 யான், பருவ விருப்பிற்கு இசையாத நிறைவுடையவள் என்று கருதியிருந்தேன். ஆனால் இன்றோ காமவிருப்பு என் ஆற்றலைக்கடந்து  ஊர் மன்றத்தில் பலர் அறிய வெளிப்படுகின்றது.

 அரிதே தோழி நாண் நிறுப்பாம் என்று உணர்தல்
 பெரிதே காமம் என் உயிர் தவச் சிறிதே
பலவே யாமம் பையுளும் உடைய
சிலவெ நம்மொடு உசாவும் அன்றில்.” -----கலித்தொகை.

 தோழி…! நம்முடைய நாணத்தை விடாமல் நிறுத்திப் பேணுவோம் என்று உணர்வதே அரிதாக இருக்கின்றது ; காரணம்  காமவேட்கையோ பெரிதாக உள்ளது ;  உடம்பில் உள்ள உயிரோ மிகமிகச் சிறிதாக உள்ளது ; நமக்கு வருத்தத்தைத் தரும் யாமங்களும் பலவாயின.அத்தகைய யாமங்களில் துயிலாதபடி, துணையைப் பிரிந்து  வருந்தி நம்மோடு உசாவும் அன்றில்களும் சிலவே….!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக