ஞாயிறு, 31 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…48.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…48.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

”மந்திரிக்கு அழகு வரு பொருள் உரைத்தல்.”

 

இயற்கையாலோ செயற்கையாகவோ நாட்டில் விளையும் நன்மை தீமைகளை அறிவு நுட்பத்தால் முன்னரே ஆராய்ந்து அறிந்து ஆளும் அரசனுக்கு எடுத்துரைப்பதே அமைச்சருக்குப் பெருமையாம்..

 

”மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்

நன்று அறி உள்ளத்துச் சான்றோர்.” –அரிசில் கிழார், பதிற்றுப்பத்து; 72.

 

மக்களைக் காப்பதற்குரிய அறிவுரைகளக் கூறும் அறம் நிறைந்த உள்ளத்தை உடைய சான்றோர்.( அமைச்சர் எனப்படுவர்.)

சனி, 30 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…47.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…47.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

“கல்விக்கு அழகு கசடற மொழிதல்”

கல்வியறிவு உடையவன் என்பதை அவன் பேசும் பேச்சைக் கொண்டே அறிந்துகொள்ளலாம். படித்தவன்   பிறர் மனம் நோகும்படி ஒருபோதும் பேசமாட்டான். குற்றம் குறை இல்லாதபடி பேசுவதே படித்த படிப்பின் சிறப்பாகும்.

 

“ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்” – மதுரைக் கூடலூர் கிழார் ; முதுமொழிக்காஞ்சி;10.

 

இவ்வுலகத்தில் உள்ள மக்கள் எல்லாருள்ளும் உயர்வடைய விரும்புவோன் பிறரிடம் காணப்படும் சிறந்த இயல்புகளையே பேசப் பழகுதல் வேண்டும்.

 

வெள்ளி, 29 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…46.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…46.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

 நீதி நூல்கள் வரிசையில் நறுந்தொகை எனப்படும் வெற்றிவேற்கையின் ஆசிரியர், பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் ஒருவரான  அதிவீர ராம பாண்டியர் ஆவார். இவர் திருநெல்வேலி நிலப்பகுதியில், 1564 – 1604 ஆம் ஆண்டுவரை ஆட்சி புரிந்தவர்.  நைடதம் , காசிக்காண்டம் உள்ளிட்ட 13 நூல்களைப் படைத்துள்ளார்.

 

”எழுத்தறி வித்தவன் இறைவன் ஆகும்.”

கல்வி கற்பிக்கும் ஆசிரியன் கண்முன்னே தோன்றும் கடவுள் ஆவான்.

 

”அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முத்தற்றே உலகு  எனும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க’  எழுத்து இதுவென அகரம் தொடங்கித் தாய்மொழியைக் கற்பித்து அறிவுடையோன் ஆக்கும் ஆசிரியப்பணியைப் போற்றுகின்றார் புலவர்.

”எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து.” – சமண முனிவர்கள், நாலடியார்;14.2.

கல்வியைப் போல் அறியாமை என்னும் நோயைத் தீர்க்கும் மருந்து வேறு ஒன்று எந்த உலகத்திலும் இருப்பதாக நாம் அறியவில்லை.

 

வியாழன், 28 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…45.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…45.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

”தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் – கோவை

திருவாசகமும் திருமூலர் சொல்லும்

ஒருவாசகம் என்று உணர்.”

 

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் தமிழ் கூறும் நான் மறையாம் ( அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்காம்)  திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் அருளிய   தேவாரமும் ; மாணிக்கவாசகர் அருளிய  திருக்கோவையாரும்   திருவாசகமும், திருமூலர் அருளிய திருமந்திரமும்  ஆகிய நூல்கள் சான்றோர் ஆக்கியளித்தவையாகும் அவை யாவும் வழுவின்றி மானுட சமுதாயம் வாழ்ந்திட வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்தளித்துள்ளன என்பதறிந்து அவற்றை முழுமையாகக் கற்றுணர்வாயாக.

 நன்றி.

புதன், 27 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…44.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…44.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

 

“கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்

எல்லாரும் சென்றுஅங்கு எதிர்கொள்வர் – இல்லானை

இல்லாளும் வேண்டாள் மற்று ஈன்றெடுத்த தாய் வேண்டாள்

செல்லாது அவன் வாயில் சொல்.”

 

 பொருள் இல்லை என்றாலும் கலவியறிவு உடையவனே சிறப்புடையன் என்று ஊரார்  போற்றுவரோ? போற்ற மாட்டார்..!  பொருள் பெற்றவனையே புகழ்ந்து போற்றுவர்.  கற்றவனே ஆயினும் பொருள் இல்லாதவனை, மனைவியும் விரும்ப மாட்டாள்; பெற்ற தாயும் கூட அவன் நல்ல மகன்  இல்லை என்று .வெறுத்து ஒதுக்குவாள்; பொருள் இல்லாதவன் சொல்லை எவரும் மதிக்க மாட்டார்கள்.

 

“ அருள் உடையாரும் மற்று அல்லாதவரும்

பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை.” – முன்றுறை அரையனார், பழமொழி; 269.

அருள் உடைய நல்லார் முதல் அருள் அல்லாதார் வரை, பொருள் உடையோரைப் புகழ்ந்து போற்றாதார் இல்லை.

 

செவ்வாய், 26 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…43.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…43.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் வேழத்தில்

பட்டுருவுங் கோல் பஞ்சிற் பாயாது – நெட்டிருப்புப்

பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்

வேருக்கு நெக்கு விடும்.”

 

வலிமை உடைய யானையின் உடலில் பாயும் அம்பு, மெல்லிய பஞ்சிப் பொதியுள் பாயாது ;  பாரையால் பிளக்க முடியாத கருங்கல் பாறை  வளரும் மரத்தின் வேருக்குப் பிளந்து விடும். அதுபோல்,  இனிய சொற்களைக் கடுஞ் சொற்கள் வெல்வதில்லை; இனிய சொற்களே என்றும் வெல்லும்.  

 

“ ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும்

காய்ந்து அமைந்த சொல்லார் கறுத்து.”– சமண முனிவர்கள்; நாலடியார்,7.

:3

பல நூல்களையும் ஆராய்ந்து, அறநூல்கள் கூறும் வழியிலே நின்று, உயர்ந்தோரிடம் பல உண்மைகளைக் கேட்டறிந்து வாழ்கின்ற அறிவுடையார் எந்நாளும் சினந்து கடுஞ் சொற்களைக் கூறமாட்டார்கள்

திங்கள், 25 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…42.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…42.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

”ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆஞ்செல்வம்

மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் – சோறிடும்

தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக

உண்ணீர்மை வீறும் உயர்ந்து.”

 

 அறம் :  நன்றே செய்க ; இன்றே செய்க ….!

 

ஆற்று வெள்ளத்தினால் உண்டாகும் மேடும் பள்ளமும் போல நாம் வாழுங்காலத்து உயர்வு வரும்போது செல்வமும் பெருகும் ;  தாழ்வு நேரும் போது குறையும் . ஆதலால்  இல்லாதார் நம்மிடம் வந்து உயிர் வாழ உதவி கேட்பார்கள் அவர்களுக்கு இல்லை என்று கூறாது  சோறு போடுங்கள், தண்ணீரும் கொடுங்கள், இத்தகைய அறச்செயலே, கருணையே நம்மனத்தை மாண்புடையதாக்கும்.

 

“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்

பெற்றான் பொருள் வைப்புழி- குறள் ; 226.

 

வாடும் வறியவரின் கடும் பசியைத் தீர்க்க வேண்டும். அதுவே  பொருள் பெற்ற ஒருவன், அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

சேர்த்த பொருளைப் பெட்டியில் மறைத்து வைக்காது ; பசியோடு வருவாரின்  வயிற்றை உன்  பொருள் வைக்கும் இடமாகக் கொண்டால்  (உணவு கொடுத்து)  பிற்காலத்தில் உன் பெயர் விளங்கும் பேறு பெருவாய்.

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…41.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…41.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

மரம் பழுத்தால் வெளவாலை வாவென்று கூவி

இரந்தழைப்பார் யாவரும் இங்கில்லை – சுரந்த அமுதம்

கற்றாதரல் போல் கரவாது அளிப்பரேல்

உற்றார் உலகத்தவர்”

 

உலகத்தார் அனைவரும் உறவினர் ஆவாரே….!

 

மரத்தில் பழம் பழுத்தால். வெளவாலை யாரும்  கூவி அழைக்காமல் அது தானே மரத்தை வந்து சேரும். பசு மாடு தன்னிடம் உள்ள பாலை ஒளிக்காமல் கொடுப்பது போல் தம்மிடம் உள்ள பொருளை ஒளிக்காமல் இல்லார்க்கும் இயலாதவர்க்கும் கொடுப்பவர்களுக்கு  உலகத்தார் எல்லோரும் உறவினர்கள் ஆவர்.

 

“ இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது

வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்

எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே.” – பெருஞ்சித்திரனார், புறநானூறு; 163.

 

 என் இனிய துணைவியே..! குமணன் எனக்கு அளித்த செல்வத்தை இன்னார் இனியார் என்று பாராது, என்னையும் கேட்காது, நாம் மட்டுமே வளமாக வாழவேண்டும் என்று பாதுகாத்து வைத்துக் கொள்ள நினையாது எல்லோர்க்கும் வழங்கி மகிழ்வாயாக.

சனி, 23 டிசம்பர், 2023

“இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…40.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…40.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

”உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்

எண்பது கோடி நினைந்து எண்ணுவன – கண் புதைந்த

மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச் 

சாந்துணையும் சஞ்சலமே தான்”

எங்கே நிம்மதி….எங்கே நிம்மதி…அங்கே எனக்கோர் இடம் வேண்டும்=  இப்படி ஏங்கும் மனம் யாரிடம் தான் இல்லை?

ஒரு நாளில் உண்பது ஒரு படி அரிசிச் சோறு ; உடுப்பது நான்கு முழ ஆடை;  ஆனால் மனம் எண்ணுவதோ எத்தனை கோடி நினைவுகள் ;  இருப்பதை விடுத்துப் பறப்பதைப் பிடிக்க எண்ணித் துன்புறும் மக்களே..!,  அமைதி இல்லாமல் சாகும் வரை துன்பத்தில் உழல்வதுதான் வாழ்க்கையோ…? மனமே !  ’செல்வம்  என்பது  சிந்தையின் நிறைவே ’என்பதை அறிந்து வாழ்வாயாக..!

 

”கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு

அகறல் ஓம்புமின் அறிவுடையீர்…..” – காமக்கணிப் பசலையார், நற்றிணை.;243.

 

அறிவுடையீர்..! சூதாடு கருவி புரண்டு விழுதல் போல நிலையில்லாத வாழ்க்கையின் பொருட்டுப் பொருளைத் தேடி, அருமையான நுங்கள் காதலியரை விட்டுப் பிரியாது கலந்தே இருங்கள்.

வியாழன், 21 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…39.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…39.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

”மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்

கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்

பசி வந்திடப் போம் பறந்து.”

 

பெருமைக்குரிய குணங்களைக் கொண்டு நல்லவனாக வாழ்ந்து வருபவனாயினும் ; வறுமையில் துன்புறும் நிலை வருமேயானால் , அவன் உயிரினும் மேலாகப் போற்றிப் பாதுகாத்து வந்த , மானம், குடிப்பிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடைமை, பதவி, தவம், உயர்வு, தொழில் முயற்சி, காதல் ஆகிய பத்தும் பசி வந்தால் பறந்துபோகும்.

 

‘பசிப்பிணி மருத்துவன் இல்லம்

அணித்தோ சேய்த்தோ கூறுமின் எமக்கே” –புறநானூறு.173.

பசி நோயைத் தீர்க்கும் மருத்துவனாகிய சிறுகுடி பண்ணனின் இல்லம் அருகிலா….தொலைவிலா…? கூறுங்கள் எமக்கே.!

புதன், 20 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…38.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…38.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

”ஆன முதலில் அதிகம் செலவானால்

மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை

எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்

நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.”

 

வரவுக்கு மீறி அதிகமாகச் செலவு செய்பவன், வரவு அறிந்து வாழத் தெரியாதவன், தன் கையிருப்பும் விரைந்து கரைந்துபோக,  மானமும் அறிவும் கெட்டுப் பழி பவங்களுக்கு ஆளாகிக் கடனாளியாகித் துன்புறுவான்.வரவறிந்து வாழத் தெரியாதவன் வாழ்க்கை நரக வாழ்க்கையாக ஏழ்பிறப்பும் தீமை புரிந்தவனாய், திருடனாய், நல்லாரும் வெறுத்து ஒதுக்கக் கூடிய இழி நிலை அடைந்து அழிவான்.

 

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும். –குறள். 479.

 

 தன் கைப்பொருள் அளவு அறிந்து  வாழாதவன் வாழ்க்கை எல்லாம் (மாடி, மனை, கோடி பணம் , மனைவி, மக்கள் மகிழ்ச்சி, சூழும் சுற்றம்…… ) இருப்பதுபோல் தோன்றி எதுவும் இல்லாமல் மறைந்து அழியும்.

 

செவ்வாய், 19 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…37.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…37.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

“பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்

கேடுகெட்ட  மானிடரே கேளுங்கள் – கூடுவிட்டிங்கு

ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பர்

பாவிகாள் அந்தப் பணம்.”

பாடுபட்டு உழைத்துச் சேர்த்து வைத்த பணத்தை, தாமும் உண்ணாமல், பிறருக்கும் கொடுத்து உதவாமல் மறைத்து வைக்கும் பாவிகளே..! நீங்கள் இறந்தபின் அந்தப் பணத்தை யார் சொந்தம் கொண்டாடுவர்…. யார் அனுபவிப்பர்..?

 

செல்வம் எல்லாம் சேர்த்தாலும்

சுவரு வைத்துக் காத்தாலும் –நீ

செத்த பின்னே அத்தனைக்கும்

சொந்தக்காரன் யாரு?

துணிவிருந்த கூறு..! ரொம்ப

பெரியவரும் எளியவரும்

எங்கே போனார் பாரு..!— மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

 

திங்கள், 18 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…36.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…36.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

”நீரும்நிலமும் நிலம் பொதியும் நெற்கட்டும்

பேரும் புகழும் பெருவாழ்வும் – ஊரும்

வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சம் இல்லார்க்கு என்றும்

தரும் சிவந்த தாமரையாள் தான்.”

பிறரை வஞ்சிக்கும் எண்ணம் இல்லாதவன் வாழ்வான். திருமகளின் அருளால்; அவன் பெற்ற நீர் வளமும் நிலவளமும் நல்ல விளைச்சலைத்தரும்.

வெள்ளை உள்ளம் கொண்ட அவனுக்குப்  பேரும் புகழும்  செல்வமும் தேடிவர, நிறைந்த வாழ்நாளும் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வான்.

 

“கள்ளும் களவும் காமமும் பொய்யும்

வெள்ளக் கோட்டியும் விரகினில் ஒழிமின் .” இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் ; 30: 197, 198.

கள்ளுண்ணலையும் களவாடும் எண்ணத்தையும் இழிகாமத்தையும் பொய் உரைத்தலையும் பயனில பேசுவோர் நட்பையும் உறுதியுடன் கைவிடுங்கள்.

 

சனி, 16 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…35.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…35.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

”செய்த தீவினைஇருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்

எய்த வருமோ இருநிதியம் – வையத்து

அறும் பாவம் என்ன அறிந்து அன்றிடார்க்கு இன்று

வெறும் பானை பொங்குமோ மேல்.”

 

அறவழி நின்றால் செய்த பாவம் நீங்கும் என்பதை உணராது அறவழி நீங்கினார் இப்போது வறுமையில் வாழ்கின்றனர். அவர்களுடைய வறுமைக்குக் காரணம் அவர்கள் செய்த தீவினைகளே என்பதை உணராமல் தெய்வத்தை நொந்துகொள்வதால் பயனில்லை.

 

பால் பானை பொங்கும் ; வெறும் பானை பொங்குமோ..? நல்வினை ஆற்றினால் நன்மையே விளையும் ; தீவினை செய்தால் தீமையே விளையும்.

வெள்ளி, 15 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…34.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…34.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

”மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.”  -குறள்;969.

பனி மலையில் வாழும் கவரிமா என்னும் விலங்கு,செழித்து வளர்ந்துள்ள முடியைப் போர்வைபோல் கொண்டிருக்கும். அம்மயிர்ப் போர்வை அதன் உடலைவிட்டு நீங்கிவிட்டால் அவ்விலங்கால் உயிர் வாழ இயலாது இறந்துபடும். அதுபோல் மானம் உடையோர்  தன்மானம் இழக்க நேரிட்டால் தாம் மானம் இழந்து வாழ விரும்பாமல் தம் இனிய உயிரையே விட்டுவிடுவர்.

” பிச்சைக்கு மூத்த குடிவாழ்க்கை பேசுங்கால்

இச்சைபல சொல்லி  இடித்துஉண்கை – சிச்சீ

வயிறு வளர்க்கைக்கு மானம் அழியாது

உயிர்விடுகை சால உறும்.”

 

 தான் உயிர் வாழப் பிச்சை எடுத்து உண்பதினும் இழிவானது பிறரிடத்தில் நல்லவன் போல் நடித்து,  அவர்தம் மனத்தை இளகுமாறு பேசி தன்மானம் இழந்து கையேந்தி வாங்கி உண்ணுதலாம்.  இப்படி மானம் இழந்து உயிர் வாழ்வதைவிட உயிரைவிட்டு  மானத்தோடு வாழ்தல் நன்றாம்.

வியாழன், 14 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…33.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…33.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

”ஆற்றங் கரையின் மரமும் அரசறிய

வீற்றிருந்த வாழ்வும் விழுமன்னே – ஏற்றம்

உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்

பழுதுண்டு வேறுஓர் பணிக்கு.”

 

ஆற்றங்கரை ஓரத்தில் நிற்கும் மரமும் என்றாவது ஒரு நாள் மண் அரிக்க வீழும். அரசாட்சி போன்ற பிற உயர்ந்த பணிகளும் குற்றம் உடையதாகி அவையும் ஒரு நாள் வீழும் ; இவை எல்லாம் போற்றுதற்குரியன ஆகா. ஆனால் என்றும் பெருமைக்கும் போற்றுதலுக்கும் ஒப்பில்லாத  உயர்ந்த வாழ்வாவது உழுதுண்டு வாழும் வாழ்க்கையே.

 

புதன், 13 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…32.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…32.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

 

“ஒருநாள் உணவை ஒழிஎன்றால் ஒழியாய்

இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய் – ஒருநாளும்

என்நோவு அறியாய் இடும்பைகூர் என்வயிறே

உன்னோடு வாழ்தல் அரிது.”

 

வயிறே ..! என்னை ஏன் கொடுமைப்படுத்துகிறாய்..? ஒரு நாளக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் இன்று உணவை விட்டுவிடு என்று சொன்னால் விடமாட்டாய் ;  உணவு வேண்டுமளவு கிடைத்த போது இரண்டு நாளைக்குச் சேர்த்து எடுத்துக்கொள் என்றால் ஏற்றுக்கொள்ள மாட்டாய் ; உணவுக்காக நான் படும் துன்பங்களைச் சிறிதும் நீ அறிய மாட்டாய் ; ஐயோ…! உன்னோடு வாழ்தல் மிகவும் கொடுமையாக இருக்கிறதே, நான் என்ன செய்வேன்…?

செவ்வாய், 12 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…31.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…31.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

 

”ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்

மாண்டார் வருவரோ மாநித்தீர் – வேண்டா

நமக்கும் அதுவழியே நாம் போமளவும்

எமக்குஎன்  என்று இட்டுண்டு இரும்.”

 

 அவர் இறந்துவிட்டார் என்று வருந்தி எத்தனை ஆண்டுகள் அழுது புரண்டாலும் இறந்தவர் மீண்டு எழுந்து வரமாட்டார்; நாமும் என்றாவது ஒருநாள் இறப்பது உறுதி. ஆதலால் நம் வாழ்நாள் முடிவதற்குள் நாமும் நன்றாக உண்டு,  கவலையற்று அறவழி நின்று பிறர்க்கு உதவி செய்து வாழ்தலே பெருமைக்கு உரியதாகும்.

 

 

திங்கள், 11 டிசம்பர், 2023

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…30.

ஒளவையார் இயற்றிய நல்வழி.

”ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்வாறு

ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு

நல்ல குடிப்பிறந்தார் நல் கூர்ந்தார் ஆனாலும்

இல்லை என மாட்டார் இசைந்து.”

 

 ஆறு,   நீரற்று வற்றிக் கிடக்கும் காலத்தும், கோடை   வெயிலால் உயிர்கள் பருகுவதற்கு நீரின்றி வருந்தித் துன்புறும்போது ஆற்றில் தோன்றும் ஊற்று நீர் உலக உயிர்களை வாழவைக்கும். அதுபோல, நல்ல குடியில் பிறந்தவர்கள் எல்லாவற்றையும் இழந்து வறுமையுற்ற போதும் தம்மிடம் உதவி வேண்டி வருகின்றவர்களுக்கு,  இல்லை என மறுத்துக் கூறாது தம்மால் இயன்ற அளவு உதவி செய்வர்.

 

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…29

ஒளவையார் இயற்றிய நல்வழி.

உயிரை விட உயர்ந்தது ஒழுக்கம்

ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்தவாயினும் ஊழ்

கூட்டும் படயன்றிக் கூடாவாம் – தேட்டம்

மரியதை காணும் மகிதலத்தீர் கேண்மின்

தரியாது காணும் தனம்.”

 பல் வேறு வழிகளில் பொருளைத் தேடிச் சேர்த்துவைத்தாலும்  நமக்கு எவ்வளவு கிடைக்குமோ அவ்வளவுதான் கிடைக்கும்,  மனமே…! தேடிய பொருள் அனைத்தும் நிலையற்றது. இன்று உனக்கு ; நாளை இன்னொருவனுக்கு என்பதை மறவாதே. ஆதலால் என்றும் நிலையாக நின்று நல்ல பெயரைப் பெற்றுத்தருவது நல்லொழுக்கம் ஒன்றே. எனவே ஒழுக்கத்தை உயிரெனப் போற்றுவாயாக.

 

சனி, 9 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…28.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…28.

ஒளவையார் இயற்றிய  -  நல்வழி.

உயர் குலம் இழி குலம்

“சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதிவழுவா நெறிமுறையின் – மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி.”

“ துன்பப்படுவோர்க்கு கொடுத்து உதவுபவர் உயர் குலத்தார் ஆவர். அங்ஙனம் கொடாதவர் தாழ்ந்த குலத்தவர் ஆவர்.

உண்மை நூலில் சொல்லப்பட்ட கருத்தும் இதுவேயாகும்.  ஆதலால் பிறவியினால் உயர்வு தாழ்வு இல்லை.

 

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

இணைப்பு:

 

“ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்

ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று..” –கழைதின்யானையார், புறநானூறு.204.

  

எனக்கு ஏதேனும் உதவி செய் என்று இரப்பது இழிவானது; அப்படி இரப்பவர்க்கு ஒன்றும் கொடுக்காது இல்லை எனக் கூறுவது அதைவிட இழிவானது.

 

 

வெள்ளி, 8 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…27.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…27.

ஒளவையார் அருளிய மூதுரை

துன்பம் செய்வார்க்கும் இன்பம் செய்தல்.


“சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாமவரை

ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் – மாந்தர்

குறைக்குந் தனையுங் குளிர்நிழலைத் தந்து

மறைக்குமாம் கண்டீர் மரம்.”

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

 

ஒருவன் தன்னை வெட்டும் போதும் அவனுக்கு நிழல் தந்து வெயிலை மறைக்கும் மரம். அதுபோல் அறிவுடையோர் தமக்குத் தீங்கு செய்பவர்க்கும் தம்மாலான உதவியைச் செய்வர்.

 

இணைப்பு:

”இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்

என்ன பயத்ததோ சால்பு.” குறள்; 987.

 தமக்குத் தீங்கு இழைத்தவர்க்கும் இனியவை செய்து உதவாவிட்டால் சான்றோரின் மேன்மைப் பண்பு  வேறு என்ன பயனை உடையது.?

 

 

 

வியாழன், 7 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…26.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…26.

ஒளவையார் அருளிய மூதுரை

நால்வகை எமன்கள்

“கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொற்கூற்றம்

அல்லாத மாந்தர்க்குக் அறங்கூற்றம் – மெல்லிய

வாழைக்குத் தானீன்ற காய் கூற்றம் கூற்றமே

இல்லிற் கிசைந்தொழுகாப் பெண்.”

 

படியாதவர்க்கு படித்தவரின் உறுதி மொழிகளும், அறநெறியில் நில்லாதவர்க்கு அறமும். வாழை மரத்திற்கு அது ஈன்ற காயும், கணவனுக்கு இல் வாழ்க்கையில் ஒத்து நடவாத மனைவியும் எமன்களாகும்.

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

 

இணைப்பு:

”அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம் கூற்றமே

இல் இருந்து தீங்கு ஒழுகுவாள்.” –விளம்பிநாகனார், நான்மணிக்கடிகை;82.

 

தீமைகள் செய்வார்க்கு அறக்கடவுளே எமன்; வீட்டில் இருந்து கொண்டே கள்ள உறவு கொள்பவள் கணவனுக்கு எமன் ஆவாள்.

 

புதன், 6 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…25.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…25.

ஒளவையார் அருளிய மூதுரை

”மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்

தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச்

சென்ற இடமெல்லாம் சிறப்பு.”

 

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

அரசனுக்கு அவன் நாட்டில் மட்டும் சிறப்பு உண்டு. கற்றோர்க்கு அவ்ர் செல்லும் எல்லா நாடுகளிலும் சிறப்பு உண்டு. ஆதலால் மன்னனினும் கற்றவர்க்கே சிறப்பு மிகுதி.

 

இணைப்பு:

“ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃது உடையார்

நால் திசையும் செல்லாத நாடு இல்லை அந்நாடு

வேற்று நாடு ஆகா தமவே ஆம்…” – முன்றுறை அரையனார், பழமொழி,55.

 

 ஆன்ற கல்வி அறிவுடையார் தம் சொல் செல்லாத நாடு நான்கு திசைகளிலும் இல்லை; அந்நாடுகள் வேற்று நாடுகள் ஆகா  அவையும் அவருடைய நாடுகளேயாம்.