ஞாயிறு, 31 மே, 2020

தன்னேரிலாத தமிழ் - 78


தன்னேரிலாத தமிழ் - 78

மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது
அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு
நும்மனோரும் மற்று இனையர் ஆயின்
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ.” --- புறநானூறு.

வேந்தே..! மக்களைக் காக்கும் பெரும் பொறுப்பினை உணராது, அன்பின்றி அறமற்ற முறையில் நீயும் நும்மை ஒத்தாரும் ஆட்சி செய்வார்களானால், எம்மைப் போன்றோர் இவ்வுலகில் பிறவாதிருத்தலே நன்று.

சனி, 30 மே, 2020

தன்னேரிலாத தமிழ் - 77


தன்னேரிலாத தமிழ் - 77

தன்னையும் தன்னில் பொருளையும் பட்டாங்கில்
பன்னி அறம் உரைக்க வல்லாரை மன்னிய
சிட்டர் என்ன சிட்டர் என்று ஏத்துவர் அல்லாரைச்
சிட்டர் என்று ஏத்தல் சிதைவு.”--அறநெறிச்சாரம்.

தன்னைப்பற்றியும் தன்னால் அறியத்தகும் பொருள்களைப் பற்றியும் உண்மையாகக் கூறி, சீரிய அறம் உரைக்க வல்லாரை, ‘நிலைபெற்ற கல்வியறிவு நிரம்பிய சான்றோர், மிக உயர்ந்த பெரியோர்என்று உலகத்தார் பாராட்டுவர். அத்தகைமை இல்லாதவர்களைச் சான்றோர் என்று போற்றுவது கேடு பயப்பதாகும்.

வெள்ளி, 29 மே, 2020

தன்னேரிலாத தமிழ் - 76


தன்னேரிலாத தமிழ் - 76

பகை சேரும் எண்ணான்கு பல் கொண்ட நல்நா
வகைசேர் சுவை அருந்துமா போல் தொகை சேர்
பகைவரிடம் மெய்யன்பு பாவித்து அவரால்
சுகம் உறுதல் நல்லோர் தொழில்.” ---நீதிவெண்பா.

தன்னைச் சில நேரங்களில் கடித்துத் துன்பம் தரும் பற்களைக் கொண்டு சுவைபெறும் நாக்கைப் போல், தங்கள் பகைவரிடத்தும் உண்மையான அன்பிருப்பதை வெளிப்படுத்தி, அவர்களால் வேண்டிய பயன்களை அடைதல் பண்புடையோரின் செயலாகும்.

வியாழன், 28 மே, 2020

தன்னேரிலாத தமிழ் - 75


தன்னேரிலாத தமிழ் - 75

கருமம் சிதையாமே கல்வி கெடாமே
 தருமமும் தாழ்வு படாமே பெரிதும் தம்
இல்நலமும் குன்றாமே ஏரிளங் கொம்பு அன்னார்
நல்நலம் துய்த்தல் நலம். ---- நீதிநெறிவிளக்கம்.

தாம் மேற்கொண்ட செயல்கள் இடையில் சிதைந்து போகாமலும் மேன்மேலும் நுணுகிக் கற்க வேண்டிய கல்வி கெட்டுப்போகாமலும் செய்து முடிக்க வேண்டிய அறச் செயல்களுக்குக் குறைவு வராமலும் ஒழுகி,  தம்முடைய இல்லற இன்பமும் குறைவுபடாமல் அழகுமிக்க இளம் கொம்பு போலும் மனைவியுடன் இன்பத்தை நுகர்தல் எல்லார்க்கும் நன்றாம்.


புதன், 27 மே, 2020


தன்னேரிலாத தமிழ் - 74

அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்
வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என
உள்ளுவர் கொல்லோ நின் உணராதோரேபதிற்றுப்பத்து.

வேந்தே..! வெற்றிக்களிப்பில் அமிழ்தம் போன்ற உமிழ் நீரையுடைய சிவந்த வாயையும் தளர்ந்த நடையையும் உடைய விறலியர், பாட்டுக்களைப் பாட, பாடல் மிகுதலின் அவற்றைக்கேட்டு அங்கேயே வெகுநேரம் தங்கினாய், அதனால் வெள்ளிய வேலையுடைய சேரன் ஐம்புல இன்பங்களுக்கு வயப்படுபவன் போலும் என்று நின் இயல்பை முழுமையாக உணராதவர்கள் நினைப்பார்களோ?

செவ்வாய், 26 மே, 2020

தன்னேரிலாத தமிழ் - 73


தன்னேரிலாத தமிழ் - 73

பெண் விழைவார்க்கு இல்லை பெருந் தூய்மை பேணாது ஊன்
உண் விழைவார்க்கு இல்லை உயிர் ஓம்பல் எப்பொழுதும்
மண் விழைவார்க்கு இல்லை மறம் இன்மை மாணாது
தம் விழைவார்க்கு இல்லை தவம்.” ---அறநெறிச்சாரம்.

உரிமை இல்லாத பிற மகளிரை விரும்புவோரிடத்து மன மாசின்மையும் ;கருணை இல்லாமல் உயிர்க் கொலை புரிந்து புலால் உண்போரிடத்து உயிர்களைக் காக்கும் இயல்பும் ; எப்பொழுதும் மண்ணாசை பிடித்து அலையும் வேந்தர்களிடத்துப் போர்க்குணம் இன்மையும்; பெருமை தராத செயல்களைச் செய்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புவோரிடத்துத் தவ ஒழுக்கமும் இல்லை என்பதாம். 


திங்கள், 25 மே, 2020

தன்னேரிலாத தமிழ் - 72


தன்னேரிலாத தமிழ் - 72

அன்னம் அனையாய் குயிலுக்கு ஆன அழகு இன்னிசையே
கன்னல் மொழியார்க்கு அழகு கற்பாமே மன்னு கலை
கற்றோர்க்கு அழகு கருணையே ஆசை மயக்கு
அற்றோர்க்கு அழகு பொறையாம்.” –நீதிவெண்பா.

குயிலுக்கு அழகு அதன் இனிய குரலோசை ; இனிக்கும் மொழியுடைய பெண்களுக்கு அழகு கற்பு ; கற்றோர்க்கு அழகு கண்ணோட்டம் ; ஆசையை வென்றவர்களுக்கு அழகு பொறுமையாம்.