புதன், 30 செப்டம்பர், 2015

ஐங்குறுநூறு – அரிய செய்தி – 1 - 2

ஐங்குறுநூறு
உரையாசிரியர்- பேராசிரியர் அ. தட்சிணாமூர்த்தி
மருதத் திணை - ஓரம்போகியார்
ஐங்குறுநூறு – அரிய செய்தி – 1 - 2
இந்திர விழா
இந்திர விழவிற் பூவின் அன்ன
ஓரம்போகியார். ஐங். 62 : 1
 இவ்வூரில் வாழும் பரத்தை மகளிர் பலரையும் இந்திர விழாவில் ஆடல் பாடல்களை நிகழ்த்துதற்குக் கூட்டுவது போல …..
 இந்திர விழாவின் போது ஊர்த் தலைவர் பரத்தையரைத் தொகுத்துக் கொணர்ந்து ஆடல் பாடல் நிகழ்த்தச் செய்த பண்டை வழக்கத்தினை சுட்டுகிறது போலும். (  “ இந்திர விழவிற் பூ “ என்பதனை மகளிர்க்கு அடையாக்கி இந்திர விழாவிற்குப் பூக்களைத் தருவித்துத் தொகுத்தாற் போல ) என்றும் உரை வகுப்பர்.
 இந்திர விழாவின் பல்வேறு கூறுகளையும் மிக விரிவாக முதலில் கூறிய நூல் சிலப்பதிகாரமே. அவ்விழாப் பற்றிய முதல் சங்க நூல் சான்று இச்செய்யுளே.  
ஐங்குறுநூறு – அரிய செய்தி – 2

தைந் நீராடல்
நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்
தைஇத் திங்கள் தண்கயம் …
  ஓரம்போகியார். ஐங். 84 : 3 – 4
நறுமணம் கொண்ட மலர்களை அணிந்து ஐந்துவகையாகக் கோலம் செய்யத்தக்க கூந்தலை உடைய இளமகளிர் தைத் திங்களில் தவத்துக்குரிய நீராடுவதற்கு இடமான குளிர்ந்த குளம்…..
  ஐம்பால் என்பதற்குக் கூந்தல் எனப் பொருள் கூற இடமிருப்பினும் ஐந்து வகையாக ஒப்பனை செய்தல் என்னும் பொருள் சிறப்புடையது. ஐவகை ஒப்பனையாவன முடி. சுருள். பனிச்சை. குழல். கொண்டை ஆகியனவாம். தைத் திங்கள் பனி மிகுந்திருத்ததாலின் நீர் நிலைகள் தண்ணெனக் குளிர்ந்திருத்தல் இயல்பு. இத்திங்கள் கன்னிப் பெண்கள் நீராடி நோன்பு மேற்கொள்ளற்குரியதாகும்.

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 96 -97

நற்றிணை – அரிய செய்தி – 96 -97   

பட்டினம் பெறினும் வாரேன்
பொன்படு கொண்கான நன்னன் நல்நாட்டு
ஏழிற் குன்றம் பெறினும் பொருள்வயின்
யாரே பிரிகிற்பவரே…..
பாலை பாடிய பெருங்கடுங்கோ. நற். 391 : 6 -8
 தலைவி அழாதே ! தலைவன் நின்னைப் பிரியான். கொண்கானத்தில் உள்ள நன்னனது ஏழில் மலையைத் தாம் பெறுவதாயினும் நின்னை விட்டுப் பிரிபவர் யாரோ?
ஒப்பு நோக்குக:-
 முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே…..
கடியலூர் உருத்திரங் கண்ணனார். பட்டினப் பாலை : 218 - 220
நற்றிணை – அரிய செய்தி – 97
காதல் – சாதல் அஞ்சேன்
சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின்
 பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்
மறக்குவேன்கொல் என் காதலன் எனவே.
அம்மூவனார்.நற். 397 :  7 – 9
 தலைவன் பிரிவால் வாடும் தலைவி -  இவ்வுலகில் இறப்புக்கு அஞ்சேன்; இறந்து போனால் நேரும் மறுபிறப்பில் வேறுபட்டுப் போனால் என் காதலனை மறந்துவிட நேருமோ என்றே அஞ்சுகிறேன்.
நற்றிணை – அரிய செய்தி
முற்றிற்று

ஐங்குறுநூறு – அரிய செய்தி … தொடரும்… 

திங்கள், 28 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 94 - 95

நற்றிணை – அரிய செய்தி – 94 - 95
பொய்யோ – புதிரோ
  அகல் இரு விசும்பின் அரவும் குறைபடுத்த
 பசுங் கதிர் மதியத்து அகல் நிலாப் போல
மடல் பாடிய மாதங்கீரனார். நற்.377 : 6 – 7
 அகன்ற கரிய வானத்தில் அரவு விழுங்குதலால் குறைவுபட்ட பசிய கதிரை உடைய திங்களின் பலவாகிய ஒளியைப் போல…..
மேலும் காண்க: அகம். 313; கலித். 15.
( இப்புராணச் செய்தியைப் பலரும் பாடியுள்ளனர். திங்களைப்  பாம்பு விழுங்கும் என்பதைத் தமிழ்ப் புலமையோர் கூறுவரோ ? – அரவு என்ற சொல்லுக்கு வருத்து என்ற பொருளும் உண்டு ; ஒளியை இருள் கவ்வுதல் அஃதாவது நிறைந்த குளிர்ச்சியான ஒளியை ( நிலவை)  இருள் கொஞ்சம் கொஞ்சமாகப் பாம்பு இரையை விழுங்குவதைப் போலத் தீண்டி வருத்துகிறது .)
நற்றிணை – அரிய செய்தி – 95
பொன் விளையும்…
1)  ………………………. சேவலொடு
   சிலம்பின் போகிய சிதர்கால் வாரனம்
   முதைச் சுவல் கிளத்த பூழி மிகப்பல
   நன் பொன் இமைக்கும் ……………….
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார். நற். 389 : 7 – 10
 மலையிடத்தே சென்று கோழி தன் சேவலுடனே  பழங் கொல்லையின் மேற்புறத்தைக் கிளறும் புழுதியிடத்தே மிகப் பலவாய் நல்ல பொன் ஒளி வீசித் தோன்றும்.
மணி விளையும்
  2) வாழைஅம் சிலம்பில் கேழல் கெண்டிய
      நிலவரை நிவந்த பலவுறு திருமணி
     ஒளி திகழ் விளக்கத்து ………………..
தொல்கபிலர் . நற். 399 : 4 – 6
வாழை மரங்கள் நிறைந்த மலையிடத்தே காட்டுப் பன்றித் தோண்டுதலால் நிலத்திலிருந்து வெளியே வீழ்ந்த பலவாகிய மணிகள் ஒளிவிட்டு விளங்கும்.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 92 - 93

நற்றிணை – அரிய செய்தி – 92 - 93
அன்னை என்று பெயர் பெற்றாள்
  ……………………….. நேரிழை
கடும்புடைக் கடுஞ்சூல் நம் குடிக்கு உதவி
நெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோள் குறுகி
புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து அவ்வரித்
திதலை அல்குல் முதுபெண்டு ஆகி                   
துஞ்சிதியோ ………………………
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார். நற். 370 : 1 – 7
   என் தலைவி - நேரிய அணிகலன்களை உடையாள்; எனது சுற்றத்தார் சுற்றி நின்று பாதுகாக்க – நம் குடிப் பெருமை விளங்க அழகிய மகவை ஈன்றனள். நெய்யுடன் கலந்து ஒளிருகின்ற சிறுவெண் கடுகாகிய திரண்ட விதைகளை மனையெங்கும் பூசி அயர்ந்து படுக்கையில் படுத்திருந்தாள் ; அவளை நெருங்கி அழகிய கூந்தலை உடையவளே  - நீ பெறற்கரிய புதல்வனைப் பெற்றதனால் தாயென்ற வேறு பெயரைப் பெற்று; ( இது காறும் இளமை வாய்ந்த காதலியாய்த் திகழ்ந்தவள் ) அழகிய வரிகளும் தேமலும் உடைய அல்குலையும் முதிய பெண்ணாகிய தன்மையும் பெற்று உறங்குகின்றாயே ……………….! ( மேலும் காண்க : புதல்வனைப் பெற்ற தாயின் கூற்று நற். 380 )
நற்றிணை – அரிய செய்தி – 93
 மண நாள்
 1 ) கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை..
கபிலர். நற்.373 : 6
 கரிய நிறத்தைக் கொண்ட அரும்புகள் மலர்ந்த  கணிவனைப் போலக் காலம் கூறும் வேங்கை. ( திருமணம் செய்வதற்கு ஏற்ற காலமாக வேங்கை பூக்கும் பருவத்தைக் கொள்வர்.)
மண நாள்
2 )   ……..  நாணும் நன்னுதல் உவப்ப
வருவை ஆயினோ நன்றே பெருங் கடல்
இரவுத் தலை மண்டிலம் பெயர்ந்தென உரவுத் திரை
எறிவன போல வரூஉம்
உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே.
பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி. நற். 375 :5 – 9
 தலைவனே ! வரைவு குரித்துப் பேசுதற்கு வெட்கமுறுகின்ற நல்ல நெற்றியை உடைய  தலைவி மகிழுமாறு செய்ய  வேண்டுவது ஒன்றுண்டு. அது – பெரிய கடலிடத்தே இரவுப் பொழுதில் நிலா மண்டிலம் தோன்றிற்றாக – கடல் பொங்கி  வலிமை மிக்க அலைகள் எழுந்துநிற்கும்;  மணல் மேடுகள் உயர்ந்த கொல்லைகள் உடைய எம் உறைவிடமாகிய ஊரிடத்து நீ மணம் செய்து கொள்ளுமாறு வருவதேயாம் -  என மணநாள் குறித்துத் தலைவனை வற்புறுத்துவாள் தோழி. ( நிறை நிலாக் காலம் மணம் கொள்வதற்கு ஏற்றதெனக் கூறுவாள். ”தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின் மணந்தனள் ” – குறுந். 193.) 

சனி, 26 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 90 -91

நற்றிணை – அரிய செய்தி – 90 -91
அன்னப் பறவை
நிலம்தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த
விலங்கு மென் தூவிச் செங்கால் அன்னம்
பொன்படு நெடுங் கோட்டு இமயத்து உச்சி
வான் அரமகளிர்க்கு மேவல் ஆகும்
வளராப் பார்ப்பிற்கு அலகு இரை ஒய்யும்
பரணர். நற். 356 : 1 – 5
நிலம் தாழ்ந்த இடத்தை உடைய தெளிவான கடல் அருகில் அழகிய சிறகையும் சிவந்த காலினையும் உடைய அன்னப் பறவை இரை தேடியது.இமயமலையின் உச்சியில் இருக்கும் வானர மகளிர் மகிழ்ந்து விளையாடுவதற்குரிய -  வளராத இளம் குஞ்சுகளுக்கு அன்னம் தான் வாயில் சேமித்த இரைகளைக் கொண்டு சென்று கொடுக்கும்.
நற்றிணை – அரிய செய்தி – 91
யானைக்குச் சினம்
பல்லோர் பழித்தல் நாணி வல்லே
காழின் குத்திக் கசிந்தவர் அலைப்ப
கையிடை வைத்து மெய்யிடைத் திமிரும்
முனியுடைக் கவளம் …………………..
ஓரம்போகியார்.நற். 360 : 6 – 9

பலரும் இகழ்ந்து கூறியதால் வருந்திய பாகன் – இருப்பு முனையாலே யானையைத் துன்புறுத்தினான். அதனால் சினம் கொண்ட யானை தனக்கிட்ட கவளத்தைத் துதிக்கையால் உடம்பில் வாரி இறைத்துக் கொண்டது.

வியாழன், 24 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 88 - 89

நற்றிணை – அரிய செய்தி – 88 - 89
நெருங்காதே விலகிச் செல்
தேர்வண் விரர்அன் இருப்பை அன்ன என்
தொல்கவின் தொலையினும் தொலைக சார
விடேஎன் விடுக்குவென் ஆயின் கடைஇக்
கவவுக்கை தாங்கும் மதுகைய குவவுமுலை
சாடிய சாந்தினை வாடிய கோதையை
ஆக இல் கலம் தழீஇயற்று
வாரல் வாழிய கவைஇ நின்றாளே
பரணர்.நற். 350 :  4 – 10
தம்மை நாடிவரும் இரவலர்களுக்குத் தேரைக் கொடுக்கும் வள்ளன்மை மிக்க விரான் என்பவனுடைய இருப்பையூர் போன்ற எனது பழைய அழகெல்லாம் நீங்குவதாயினும் நீங்கட்டும்; நீ என்னருகில் நெருங்க அனுமதியேன் ; விடுவேன் ஆயின் என் சொற்கள் உன்னை விலக்கினாலும் என்னோடு பொருந்திய கைகள் தாமே வந்து உன்னைத் தழுவும் ; நீயும் வலிமைமிக்க பரத்தையின் குவிந்த மார்பகத்தால் மோதப்பட்ட சந்தனத்தைக் கொண்டுள்ளாய் ; அவளாலே தழுவப்பட்டமையால் துவண்ட மாலையையும் அணிந்துள்ளாய் ;  ஆகவே உன்னைத் தொடுதல்  பயன்படாது கழிந்த கலத்தைப் பயன்படக் கொள்ளுதல் போலாகும்; இனி நீ இங்கு வரவேண்டா !
நற்றிணை – அரிய செய்தி – 89
நஞ்சும் உண்பர்
 முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
 நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்
…………………….. நற். 355 : 6 – 7
 நட்புடைய நல்ல கண்ணோட்டம் உடையவர்முன் நஞ்சைக் கலந்து உண்ணக் கொடுத்தாலும் அவர்கள் அதனை உண்டு நல்ல கண்ணோட்டம் உடையர் என்பதை மெய்ப்பிப்பர்.
ஒப்புநோக்குக –
 பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
 நாகரிகம் வேண்டு பவர் – குறள்.580             

புதன், 23 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 85 - 87

நற்றிணை – அரிய செய்தி – 85 - 87
கள் – களியாட்டம்
வங்கா வரிப் பறைச் சிறுபாடு முணையின்
செம்பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன்னகை அழுங்கா பால் மடுத்து
அலையா உலவை ஓச்சி சில கிளையாக்
குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும்
துணை நன்கு உடையள் மடந்தை யாமே
மதுரை மருதளினநாகனார். நற். 341 : 1 – 6
 குறமகள் – வங்கா என்னும் பறவை தன் இனத்துடன் நிரைபடப் பறந்து செல்வதைப் பார்த்து மகிழ்ந்து -  சிவந்த புள்ளிகளை உடைய அரக்கினாற் செய்யப்பட்ட வட்டுச் சாடியின் நாவிலிருந்து ஊற்றப் பெறும்  - மகிழ்ச்சியுடன் ஆடற்கேற்ற இனிய கள்ளை அருந்துவாள்; பின் அங்குமிங்குமாக அலைந்து மரக்கிளையை கொண்டு ஓச்சி ; சிற்சில சொற்களைக் கூறும்; குன்றத்திடத்தே  இருக்கும் தன் காதலனோடு கையால் சிறு நொடி பயிற்றிக் காட்டும் – இவ்வாறு செய்யும் அவளுக்குத் துணை நன்கு அமைந்துள்ளது – ஆனால் எமக்கோ… ( தலைவி பிரிவால்  தலைவன் வருந்துவான்)
நற்றிணை – அரிய செய்தி – 86
போற்றுவர் இன்றி வாழ்வேது
அரிய பெரிய கேண்மை நும் போல்
 சால்பு எதிர்கொண்ட செம்மையோரும்
 தேறா நெஞ்சம் கையறுபு வாட
நீடின்று விரும்பார் ஆயின்
வாழ்தல் மற்று எவனோ………
நம்பிகுட்டுவனார் . நற்.345 : 6 – 10
துறைவ ! உம்மைப் போன்ற சான்றாண்மையை எதிரேற்றுப் போற்றும் செம்மையான கொள்கையாரும்; தம்மை அடைந்தாரைப் பாதுகாவாதும் தெளியாத உள்ளத்துடன் செயலழிந்து வாடுமாறும் நெடுநாள் விரும்பாதும் கை விட்டனராயின் அவரை அடைந்தார் உயிர் வாழ்தல் யாங்ஙனம் ?
நற்றிணை – அரிய செய்தி – 87
வேனில் தேரை
வேனில் தேரையின் அளிய
காண வீடுமோ தோழி என் நலனே.
பெருங்குன்றூர் கிழார். நற். 347 : 10 – 11

தலைவன் தலைவியை வரையாது காலம் தாழ்த்தினான் – தலைவி வருத்தமுற்றாள். கோடைக் காலத்தில் தவளை மணலுள் புகுந்து கிடப்பது போல் என் உடலில் பசலை மறைத்த  அழகு நலன்கள் என்னை உயிருடன் விடுமோ ?

செவ்வாய், 22 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 83 -84

நற்றிணை – அரிய செய்தி – 83 -84
பன்றிக் கறி விருந்து
பிணர்ச் சுவற் பன்றி தோல்முலைப் பிணவொடு
கணைக்கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின்
கல் அதர் அரும்புழை அல்கி கானவன்
வில்லின் தந்த வெண்கோட்டு ஏற்றை
புனை இருங் கதுப்பின் மனையோள் கெண்டி
குடிமுறை பகுக்கும் …………………………
கபிலர். நற். 336 : 1 – 6
 சொரசொரப்பான பிடரியை உடைய ஆண் பன்றி  தோலாய் வற்றிவிட்ட முலையை உடைய பெண் பன்றியுடன் சென்று திரண்ட  அடிப்பகுதியைக் கொண்ட தினைக்கதிரைஅளவிறந்து தின்னும்; அதனையறிந்த கானவன் கல் நெருங்கிய அரிய வழியிடையே தங்கிப் பதுங்கி வில்லினால் அம்பு எய்து; வெண்மையான தந்தத்தையுடைய ஆண் பன்றியைக் கொல்வான் : தான் கொன்ற பன்றியை அழகூட்டிய கரிய கூந்தலையுடைய மனைவியிடம் கொடுத்தான். அவளும் அப்பன்றியை அறுத்துத் தன் குடியினர் யாவர்க்கும் முறையுடன் பகுத்துத் தருவாள்.

நற்றிணை – அரிய செய்தி – 84
பொருள் வயிற் பிரிவு
உலகம் படைத்த காலை தலைவ
மறந்தனர் கொல்லோ சிறந்திசினோரே
…………………………………………
அரும்பெறல் பெரும் பயம் கொள்ளாது
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே
பாலை பாடிய பெருங்கடுங்கோ . நற். 337 : 1-2 ; 9 – 10

தலைவியால் பெறும் பெரிய பயனைக் கொள்ளாது ; பிரிந்துறைகின்ற மரபினவாய்ப் பொருளீட்டும் வழிகளை நாடிப் பொருளீட்டுவார் இவ்வுலகு தோன்றிய காலம் முதலாகத் தம்மை அடைந்தாரைக் காக்கின்ற மரபை மறந்தனரோ ; அங்ஙனமாயின் (இகழ்ச்சியாக ) சிறந்தவரே.

திங்கள், 21 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 80 -82

நற்றிணை – அரிய செய்தி – 80 -82
கறையான் புற்று
கவிதலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை
இரைதேர் வேட்கையின் இரவில் பொகி
நீடுசெயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த
அரவாழ் புற்றம் ஒழிய ஒய்யென
முரவாய் வள் உகிர் இடப்ப வாங்கும்
மதுரைக் காருலவியங் கூத்தனார். நற். 325 : 1 – 5
 சுரவழியில் – கறையான்களின் தொகுதி முயன்று புற்றுகள் சமைத்திருக்கும் . அப்புற்றுகளில் பாம்புகள் வாழும்; கவிந்த தலையையும் பருத்த மயிரையும் உடைய ஆண் கரடி தான் இரைதேடி உண்ணும் விருப்பத்தில் இரவின்கண்  அங்கு வாழும் கறையான்கள் முழுவதும் ஒழியுமாறு அப்புற்றுகளைத் தன் வளைந்த முனையை உடைய பெரிய நகங்களால் பறித்து புற்றின் உள்ளமைந்த புற்றாஞ்சோற்றை உறிஞ்சி இழுக்கும்.
நற்றிணை – அரிய செய்தி – 81
சாதலும் இனிதே
நாடல் சான்றோர் நம்புதல் பழிஎனின்
பாடில கலுழும் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே காதல் அம் தோழி
அந்நிலை அல்ல ஆயினும்…….
அம்மூவனார்.நற். 327 : 1 – 4
 காதல் மிக்க என் தோழி !நம்மை நாடி ஒழுகும் பெரும் பண்புகள் அமைந்த நம் தலைவரை நாம் நம்பிக்கொள்வது பழி என்றால்  -  துயிலாது அழுகுன்ற கண்களோடு வருந்திச் சாதலும் இனியதாகும். அவ்வாறு இறத்தல் இயற்கைக்கு ஒத்தது அன்று ஆயினும் …..! ( அவன் சான்றோன் என எண்ணி ஆற்றியிருப்பாள்)
நற்றிணை – அரிய செய்தி – 82
மழை – அறிவியல்
இரு விசும்பு அதிர மின்னி
கருவி மாமழை கடல் முகந்தனவே
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார். நற். 329 : 11 – 12

 கருமை மிக்க வானம் ஒலியுண்டாகுமாறு இடித்து மின்னி மழைக்குரிய மேகக் கூட்டத்தோடு கடலில் சென்று நீர் முகந்து எழுந்த கார்காலம் வந்துற்றது.

ஞாயிறு, 20 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 77 - 79

நற்றிணை – அரிய செய்தி – 77 - 79
அச்சம் தரும் பேய்
மணல்மலி மூதூர் அகல் நெடுந் தெருவில்
ஆரிருஞ் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும்
அணங்கு கால் கிளரும் மயங்கு இருள் நடுநாள்
வினைத் தொழிற் சோகீரனார்.நற். 319 : 3 -5
 மணல் மிகுந்து கிடக்கும் இப்பழைய ஊரிலுள்ள அகன்ற நீண்ட தெருவில் கோட்டான் சேவல் தன் பெண் பறவையோடு – மக்கள் புழக்கம் இல்லாத பெரிய நாற்சந்தி கூடுமிடத்தில் அனைவருக்கும் அச்சமுண்டாகும்படி அலறும் ; பேய்களும் வெளியில் வந்து நடமாடும்.
நற்றிணை – அரிய செய்தி – 78
கணவரைக் காத்த குலமகளிர்
காவல் செறிய மாட்டி ஆய்தொடி
 எழில்மா மேனி மகளிர்
விழுமாந்தனர் தம் கொழுநரைக் காத்தே
கபிலர்.நற். 320 : 8 – 10

அழகிய மாந்தளிர் போன்ற மேனியை உடைய குலமகளிர் அனைவரும் தத்தம் கணவரைக் கைப்பற்றிக் கொண்டு சென்று தம் காவலில் வைத்துப் பரத்தையிடமிருந்து பாதுகாத்து நன்மை அடைந்தனர்.
நற்றிணை – அரிய செய்தி – 79
பார்ப்பன மகளிர்
 கான முல்லைக் கயவாய் அணி
பார்ப்பன மகளிர் சாரர் புறத்து அணிய
மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார். நற் 321 : 3 – 4

  காட்டிடத்தே உள்ள முல்லையின் விரிந்த வாயை உடைய மலரை – மலைச் சாரலின் புறத்தே உள்ள பார்ப்பன மகளிர்  பறித்துச் சூடுவர்.

சனி, 19 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 74 - 76

நற்றிணை – அரிய செய்தி – 74 - 76
புணர்ச்சி அழகூட்டும்
…………………….. நன்மலை நாடன்
புணரின் புணருமார் எழிலே பிரியின்
மணிமிடை பொன்னின் மாமை சாய என்
அணிநலம் சிதைக்குமார் பசலை ……..
மாறோக்கத்து நப்பசலையார். நற். 304 : 4 – 7
  தோழி ! தலைவன் வந்து புணர்ந்த பொழுதெல்லாம் எனக்கு நல்ல அழகு உண்டாகியது; அவன் என்னைப் பிரிந்த பொழுது நீலமனி இடையே இருக்கும் பொன்னைப் போல மாந்தளிர் நிறம் போன்ற என் மேனியின் அழகு அனைத்தும் கெடுமாறு பசலை நோய் படர்ந்தது.
நற்றிணை – அரிய செய்தி – 75
பொறி அழி பாவை
 …………………………. நல்வினைப்
 பொறி அழி பாவையின் கலங்கி நெடிது நினைத்து
ஆகம் அடைந்தோளே …………..
எயினந்தை மகன் இளங்கீரனார் . நற். 308 : 6 – 8
 அவள் சிறந்த சித்திரத் தொழில் அமைந்த பாவையொன்று இயந்திரம் அற்று விழுந்தாற் போலக் கலங்கி நெடும்பொழுது நினைந்து நின்று என் மார்பின் மீது சாய்ந்து விழுந்தாள். ( இயந்திரம் அமைக்கப்பெற்ற (பொம்மை) பாவையா?
நற்றிணை – அரிய செய்தி – 76
இளமை திரும்புமா..?
 முதியோர் இளமை அழிந்தும் எய்தார்
வாழ்நாள் வகை அளவு அறிஞரும் இல்லை
முப்பேர் நாகனார். நற். 314 : 1 – 2

 ஒரு காலத்தே முதுமையை அடைந்தவர் மறுபடியும் அழிந்த இள்மையை எய்துவது என்பது இல்லை ; அதைப்போலத் தம் வாழ்நாள் கால அளவு இன்னதென்பதையும் வரையறுத்துக் கூறுவார் இல்லை.

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 71 - 73

நற்றிணை – அரிய செய்தி – 71 - 73
ஆண்மகன் அல்லன்
நீயே பெரு நலத்தையே அவனே
நெடுநீர்ப் பொய்கை நடுநாள் எய்தி
தண்கமழ் புது மலர் ஊதும்
வண்டு என மொழிப மகன் என்னாரே.
மதுரை மருதனிள நாகனார். நற். 290 : 6 _ 9
  தலைவி ! நீயோ சிறந்த நலமான பண்புகளை உடையவள் ; அவனோ நெடிய நீரை உடைய பொய்கையில் நள்ளிரவின்கண் சென்று அங்கு குளிர்ந்ததாய் மணம் கமழும் புதிய மலரில் தேனை உண்ணுகின்ற வண்டு போன்றவன் எனக் கூறுவர் ; அவனை நல்ல ஆண்மகன் என்று யாரும் கூறமாட்டார்கள். ஆதலின் அவனோடு நீ ஊடுதல் வேண்டா.
நற்றிணை – அரிய செய்தி – 72
பன்னாட்டு வாணிகம்
வேறு பல் நாட்டுக் கால்தர வந்த
பல வினை நாவாய் தோன்றும் பெருந்துறை
ஒளவையார். நற். 295 : 5 – 6
 பல்வேறு நாடுகளிலிருந்தும் காற்றுச் செலுத்தலால் வந்து சேர்ந்த பல்வகைத் தொழில்களையும் மேற்கொள்ளுதற்கு இயைந்த கலங்கள் விளங்கித் தோன்றும் பெரிய துறைமுகம்.
நற்றிணை – அரிய செய்தி – 73
நிறம் மாறும் பூ
 வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல்
 நறை நிறம் படுத்த நல் இணர்த்  தெறுழ் வீ
   மதுரை மருதனிள நாகனார். நற். 302 : 4 -5

 பெரிதாகப் பெய்கின்ற மழையை நோக்கிப் பூத்திருக்கின்ற எறுழ மலர்கள் நீலமணி போன்ற நிறம் கொண்டவை. அடர்ந்த புதர்களில் உள்ள நல்ல பூங்கொத்துக்களை உடைய இவை மழைக்காலம் நீங்கியதால் தம் இயல்பான நீல நிறத்தினின்று மாறி வெண்மை நிறமாக மாறியிருக்கின்றன. தெறுழ்வீ –( எறுழ மலர்)

வியாழன், 17 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 68 - 70

நற்றிணை – அரிய செய்தி – 68 - 70
பொறி -  இயந்திரம்
உருள் பொறி போல எம்முனை வருதல்
பரணர்.நற்.270 : 4
அவள் நிலத்து உருளும் எந்திரம் போலச் செயலற்று எம்முன் வருவள்.
( இவ்வியந்திரத்தின் தன்மை அறிய - ஆய்க. )
நற்றிணை – அரிய செய்தி – 69
நறவு – கள் வகையுள் ஒன்று
…………………………….. பெருமலை
வாங்கு அமைப் பழுநிய நறவு உண்டு
வேங்கை முன்றில் குரவையும் கண்டே
தொல்கபிலர். நற். 276 :  8 – 10
 தலைவ ! எம்மூரில் தங்குக – பெரிய மலையில் விளைந்த – வளைந்த மூங்கிலில் முற்றிய நறவாகிய கள் உண்க ; வேங்கை மரமமைந்த முன்றிலிலே குரவை அயர்தலையும் காண்பாயாக. ( மூங்கில் குழாயில் நறுந்தேன் இட்டு மண்ணில் புதைத்துப் பின் எடுத்துப் பருகுதல் – நாட்படு தேறல் என்பர்.)
நற்றிணை – அரிய செய்தி – 70
கோவேறு கழுதை பூட்டிய தேர்
கழிசேறாடிய கணைக் கால் அத்திரி
குளம்பினும் சேயிறா ஒடுங்கின
கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே
உலோச்சனார். நற். 278 : 7  -9

 கடற்கரைக்குத் தலைவன் கோவேறு கழுதை பூட்டிய தேரிலேறி வந்தனன். அவனது தேரின் சக்கரங்களில் கழிக்கரையின்கண் உள்ள சேறு பட்டது. தேரை இழுக்கும் கோவேறு கழுதையின் குளம்புகளில் எங்கும் சிவந்த இறாமீன்கள் சிக்கி அழிந்தன.அவன் அணிந்திருந்த மாலையிலும் மற்று எல்லாவற்றிலும் காற்றால் தூற்றப்படும் வெள்ளிய மணல் செறிந்தது.

புதன், 16 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 65 - 67

  நற்றிணை – அரிய செய்தி – 65 - 67
காற்றடைத்த பந்து
  பரியுடை வயங்கு தாள் பந்தின் தாவ…
உலோச்சனார். நற். 249 : 7
  பலமுறை இழுத்து  நிறுத்தவும் நில்லாததாய் விரைவாக இயங்கும் குதிரையின் கால்கள் பந்தினைப் போலத் தாவின.
( அக்காலத்திலேயே காற்றடைத்த பந்து உண்டோ – ஆய்க.)
நற்றிணை – அரிய செய்தி – 66
நாகமணி
உயர்வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப்
பெயல் கால்மயங்கிய பொழுது கழிபாணாள்
திருமணி அரவுத் தேர்ந்து உழல
ஆலம்பேரி சாத்தனார். நற். 255 : 8 – 10
ஓங்கிய மலையின் சாரலில் ஒளியோடு விளங்கி மின்னி மழை பெய்து – இடத்தொடு இடம் மயங்கி நிற்கின்ற பொழுது; நடுயாமத்தில் இடி முழங்கி மோதுவதால் பாம்பு தன் நாகமணியைக் கக்கி வருந்தி உழலும். ( நாகம் மணி உமிழுமா .. இல்லையெனில் இதன் கருத்து யாது ? ஆய்க)
நற்றிணை – அரிய செய்தி – 67
காக்கைக்குச் சோறு இடல்
பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல்பட
அகல் அங்காடி அசைநிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை
நக்கீரர். நற். 258 : 5  - 8

வந்த விருந்தினரைப் போற்றுவதற்காகப் பொன்னாலாகிய தொடியுடைய மகளிர் உணவு சமைத்தனர். அவ்வுணவில் ஒரு கவளம் எடுத்து முற்றத்தில் பலியாக இட்டனர். கொக்கின் நகம் போன்ற சோற்றைப் பசிய கண்ணையுடைய காக்கை உண்ணும்.

செவ்வாய், 15 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 62 - 64

நற்றிணை – அரிய செய்தி – 62 - 64
நில்லா வாழ்க்கை
 கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு
அகறல் ஓம்புமின் அறிவுடையீர் …….
காமக்கணிப் பசலையார். நற். 243 : 5-6
  அறிவுடையீர் ! சூதாடு கருவி பெயர்ந்து விழுவது போன்று நிலையில்லாதது பொருள் ‘ இப்பொருளை ஈட்டுதலே வாழ்க்கையெனக் கொண்டு நும் காதலியரைப் பிரிகின்ற செயல் புரியாது சேர்ந்திருங்கள்.
நற்றிணை – அரிய செய்தி – 63
அசுணம்  பறவையா.. விலங்கா ?
விழுந்த மாரிப் பெருந்தண் சாரல்
கூதிர் கூதளத்து அலரி நாறும்
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல்
மணம்நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்
கூற்றங்குமரனார். நற். 244 : 1 – 4
 மழைபெய்த பெரிய குளிர்ச்சியான சாரலில் கூதிர்க்காலத்தில் கூதளம் மலரும். அதில் தேன் உண்டு மணம் வீசும் அழகிய வண்டு இசை எழுப்பும் ;கேட்டற்கு விருப்பம் தரும் அதன் இசையை யாழோசை என்றுகருதி – மணம் வீசும் பலைப்பிளவில் தங்கியிருக்கும் அசுணப் பறவை செவி கொடுத்துக் கேட்கும்.         ( இனிய இசையைக் கேட்டு மகிழும் இப்பறவை கொடூர இசையைக் கேட்டால் அவ்விடத்திலேயே உயிர்விடும் என்பர். சங்க இலக்கியங்களில் இடம்பெறும் இப்பறவை அசுணம் என்றும் அசுணமா என்றும் குறிக்கப்படுகிறது – விலங்கியல் வழி ஆய்க)
நற்றிணை – அரிய செய்தி – 64
பசலை – தோல் நோய்
…………………….. நல் நுதல்
விருந்து இறைகூடிய பசலைக்கு
மருந்து பிறிது இன்மை நற்கு அறிந்தனை சென்மே.
பரணர். நற். 247: 8- 9

தலைவியின் நல்ல நெற்றியில் பசலை நோய்  புதிதாகத் தோன்றித் தங்கியது. அந்நோய்க்கு நீயே மருந்து – வேறு மருந்தும் இல்லை என்பதுணர்ந்து  அவளைப் பிரிந்து செல்வாயாக. ( மருந்தின்றிக் குணமாகும் இந்நோய் குறித்து ஆய்க )

திங்கள், 14 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 59 - 61

நற்றிணை – அரிய செய்தி – 59 - 61
திருமாவுண்ணி – கண்ணகி
ஏதிலாளன் கவலை கவற்ற
ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி
மதுரை மருதனிளநாகனார். நற். 216 : 8-9
 ஏதிலாளன் செய்த செயலால் தோன்றிய கவலை வருத்திட ; மார்பகம் ஒன்றனை அறுத்த திருமாவுண்ணி நின்றிருந்தாள். ( திருமாவுண்ணி என்று குறிக்கப் பெறும் பெண் கண்ணகி என்பர்.)
நற்றிணை – அரிய செய்தி – 60
பெற்ற கடன் தீர
……………………. தோழி மின்னு வசிபு
 அதிர்குரல் எழிலி முதிர்கடன் தீர
 கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள்
முடத்திருமாறனார். நற். 228 : 1  3
  மின்னல் இருளைப் பிளக்கும் ஒளியுடையதும் முழக்கத்தைச் செய்யும் குரலையுடையதுமான மேகம் நீர் நிறைந்த சூல் முதிர்ந்து விளங்கும்; அது பூமியிலிருந்து பெற்ற கடன் தீருமாறு மழையைப் பொழியும்’; அம்மழை கண்ணொளி மறையுமாறு செறிந்த இருளுயுடைய நடுயாமத்தில் பரவலாகப் பொழியும்.
நற்றிணை – அரிய செய்தி – 61
யானைப் புணர்ச்சி
சிறுகண் யானைப் பெருங்கை ஈரினம்
குளவித் தண்கயம் குழையத் தீண்டி
முதுவெங் கண்ணனார்.நற்.232: 1- 2
சிரிய கண்ணையும் பெரிய கையையும் உடைய  யானையின் ஆண் – பெண்ணாகிய இரு இனமும் மலைப் பச்சைச் சூழ்ந்த குளிர்ந்த குளத்தில் மெய் தளருமாறு புணர்ந்து மகிழும். ( விலங்கியல் வல்லுநர் வழி ஆய்க .)


ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 56 -58

நற்றிணை – அரிய செய்தி – 56 -58
கணந்துள் பறவை
பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ
நெடுங்கால் கணந்துள் அம் புலம்புகொள் தெள்விளி
சுரம்செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளும் ……………..
குடவாயிற் கீரத்தனார் . நற். 212 : 1: 4
வேடன் வலை விரித்தனன். அந்த வலையைக் கண்ட நெடிய காலை உடைய கணந்துள் பறவை அச்சமுற்றுக் கத்தும் ; தனித்துக் குரலெழுப்பும் பறவையின் தெளிந்த ஓசை பாலை நில வழியில் செல்லும் கூத்தர் - வழிச்செல்லும் வருத்தம் நீங்கத் திடீரென இசைக்கும் யாழிசையுடன் சேர்ந்து ஒத்து இசைக்கும். ( கணந்துள் – ஆள் வருகையைஅறிவிக்கும் ஆட்காட்டிப் பறவை என்பர்.) மேலும் காண்க : குறுந். 350.
நற்றிணை – அரிய செய்தி – 57
சோம்பி இருக்காதே
இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு  அரும்புணர்வு ஈன்ம்….
கருவூர்க் கோசனார். நற். 214 : 1 – 2
தம் இல்லத்தில் செயலற்றுச் சோம்பி இருப்போர்க்கு இம்மைக்குரிய புகழும் இன்பமும் கொடையும் ஆகிய மூன்றும் அரிதாகவும் கைகூடுவதில்லை.
 நற்றிணை – அரிய செய்தி – 58
உதய சூரியன்
குணகடல் இவர்ந்து குரூஉக் கதிர்பரப்பி
பகல்கெழு செல்வன் குடமலை மறைய
மதுரைக் கள்ளம் போதனார். நற் 215 : 1 -2

கதிரவன் – கீழ்த் திசைக் கடலினின்று எழுந்து நல்ல நிறம் பொருந்திய கதிர்களைப் பரப்பி பகற்பொழுதைச் செய்து; மேற்குத் திசை மலைக்கண் மறைந்தனன்.

சனி, 12 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 52 -55

நற்றிணை – அரிய செய்தி – 52 -55          
நீர் நாய்
…………………… இருங்கழிக்
குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி
தில்லைஅம் பொதும்பில் பள்ளி கொள்ளும்
………………… நற். 195 : 1 – 3
கருமை பொருந்திய உப்பங்கழியில் உள்ள நீர் நாயின் இளங்குட்டி கொழுமையான மீன்களை  நிரம்பத் தின்று; தில்லை மரப்பொந்துகளில் படுத்துக்கிடக்கும். ( விலங்குகளின் வாழிடம் )
நற்றிணை – அரிய செய்தி – 53           
நிலவு அறிவியல்
 நிற்கரந்து உறையும் உலகம் இன்மையின்
எற்கரந்து உறைவோர்  உள்வழி காட்டாய்
வெள்ளைக்குடி நாகனார். நற். 196 : 5 -‘6
நிலவே ! உனக்குத் தெரியாத உலகம் ஒன்று இல்லையாகலானும் எனக்குத் தெரியாது மறைந்து ஒழுகும் என் காதலர் இருக்கும் இடத்தை எனக்குக் காட்டுவாய். ( ஒரே நிலவு உலகம் முழுதும்)
நற்றிணை – அரிய செய்தி – 54           
தந்தத்தில் முத்து
புலிபொரச் சிவந்த புலால் அம் செங்கோட்டு
ஒலிபல் முத்தம் ஆர்ப்ப -------
பாலை பாடிய பெருங் கடுங்கோ. நற். 202 : 1 -2

இளமகளே ! நீ வாழ்க யானை புலியுடன் போர் புரிந்ததால் இரத்தம் தோய்ந்து சிவந்ததும்  - புலால் நாற்றம் வீசுவதுமான செவ்விய தந்தத்தின் அடியில் முத்துக்கள் திரண்டிருக்கும் . ( விலங்கியல் வழி ஆய்க)