ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 56 -58

நற்றிணை – அரிய செய்தி – 56 -58
கணந்துள் பறவை
பார்வை வேட்டுவன் படுவலை வெரீஇ
நெடுங்கால் கணந்துள் அம் புலம்புகொள் தெள்விளி
சுரம்செல் கோடியர் கதுமென இசைக்கும்
நரம்பொடு கொள்ளும் ……………..
குடவாயிற் கீரத்தனார் . நற். 212 : 1: 4
வேடன் வலை விரித்தனன். அந்த வலையைக் கண்ட நெடிய காலை உடைய கணந்துள் பறவை அச்சமுற்றுக் கத்தும் ; தனித்துக் குரலெழுப்பும் பறவையின் தெளிந்த ஓசை பாலை நில வழியில் செல்லும் கூத்தர் - வழிச்செல்லும் வருத்தம் நீங்கத் திடீரென இசைக்கும் யாழிசையுடன் சேர்ந்து ஒத்து இசைக்கும். ( கணந்துள் – ஆள் வருகையைஅறிவிக்கும் ஆட்காட்டிப் பறவை என்பர்.) மேலும் காண்க : குறுந். 350.
நற்றிணை – அரிய செய்தி – 57
சோம்பி இருக்காதே
இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்
அசையுநர் இருந்தோர்க்கு  அரும்புணர்வு ஈன்ம்….
கருவூர்க் கோசனார். நற். 214 : 1 – 2
தம் இல்லத்தில் செயலற்றுச் சோம்பி இருப்போர்க்கு இம்மைக்குரிய புகழும் இன்பமும் கொடையும் ஆகிய மூன்றும் அரிதாகவும் கைகூடுவதில்லை.
 நற்றிணை – அரிய செய்தி – 58
உதய சூரியன்
குணகடல் இவர்ந்து குரூஉக் கதிர்பரப்பி
பகல்கெழு செல்வன் குடமலை மறைய
மதுரைக் கள்ளம் போதனார். நற் 215 : 1 -2

கதிரவன் – கீழ்த் திசைக் கடலினின்று எழுந்து நல்ல நிறம் பொருந்திய கதிர்களைப் பரப்பி பகற்பொழுதைச் செய்து; மேற்குத் திசை மலைக்கண் மறைந்தனன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக