ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

நற்றிணை – அரிய செய்தி – 92 - 93

நற்றிணை – அரிய செய்தி – 92 - 93
அன்னை என்று பெயர் பெற்றாள்
  ……………………….. நேரிழை
கடும்புடைக் கடுஞ்சூல் நம் குடிக்கு உதவி
நெய்யொடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோள் குறுகி
புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து அவ்வரித்
திதலை அல்குல் முதுபெண்டு ஆகி                   
துஞ்சிதியோ ………………………
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார். நற். 370 : 1 – 7
   என் தலைவி - நேரிய அணிகலன்களை உடையாள்; எனது சுற்றத்தார் சுற்றி நின்று பாதுகாக்க – நம் குடிப் பெருமை விளங்க அழகிய மகவை ஈன்றனள். நெய்யுடன் கலந்து ஒளிருகின்ற சிறுவெண் கடுகாகிய திரண்ட விதைகளை மனையெங்கும் பூசி அயர்ந்து படுக்கையில் படுத்திருந்தாள் ; அவளை நெருங்கி அழகிய கூந்தலை உடையவளே  - நீ பெறற்கரிய புதல்வனைப் பெற்றதனால் தாயென்ற வேறு பெயரைப் பெற்று; ( இது காறும் இளமை வாய்ந்த காதலியாய்த் திகழ்ந்தவள் ) அழகிய வரிகளும் தேமலும் உடைய அல்குலையும் முதிய பெண்ணாகிய தன்மையும் பெற்று உறங்குகின்றாயே ……………….! ( மேலும் காண்க : புதல்வனைப் பெற்ற தாயின் கூற்று நற். 380 )
நற்றிணை – அரிய செய்தி – 93
 மண நாள்
 1 ) கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை..
கபிலர். நற்.373 : 6
 கரிய நிறத்தைக் கொண்ட அரும்புகள் மலர்ந்த  கணிவனைப் போலக் காலம் கூறும் வேங்கை. ( திருமணம் செய்வதற்கு ஏற்ற காலமாக வேங்கை பூக்கும் பருவத்தைக் கொள்வர்.)
மண நாள்
2 )   ……..  நாணும் நன்னுதல் உவப்ப
வருவை ஆயினோ நன்றே பெருங் கடல்
இரவுத் தலை மண்டிலம் பெயர்ந்தென உரவுத் திரை
எறிவன போல வரூஉம்
உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே.
பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி. நற். 375 :5 – 9
 தலைவனே ! வரைவு குரித்துப் பேசுதற்கு வெட்கமுறுகின்ற நல்ல நெற்றியை உடைய  தலைவி மகிழுமாறு செய்ய  வேண்டுவது ஒன்றுண்டு. அது – பெரிய கடலிடத்தே இரவுப் பொழுதில் நிலா மண்டிலம் தோன்றிற்றாக – கடல் பொங்கி  வலிமை மிக்க அலைகள் எழுந்துநிற்கும்;  மணல் மேடுகள் உயர்ந்த கொல்லைகள் உடைய எம் உறைவிடமாகிய ஊரிடத்து நீ மணம் செய்து கொள்ளுமாறு வருவதேயாம் -  என மணநாள் குறித்துத் தலைவனை வற்புறுத்துவாள் தோழி. ( நிறை நிலாக் காலம் மணம் கொள்வதற்கு ஏற்றதெனக் கூறுவாள். ”தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின் மணந்தனள் ” – குறுந். 193.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக