சனி, 30 ஏப்ரல், 2016

குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 3

குறிஞ்சிப்பாட்டு -  அரிய செய்தி  : 3
காதல் மணம் …?
மாதரும் மடனும் ஓராங்கு தணப்ப
நெடுந்தேர் எந்தை அருங்கடி நீவி
இருவேம் ஆய்ந்த மன்றல் இதுஎன
நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ
ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற
ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு என
மான் அமர் நோக்கம் கலங்கிக் கையற்று
ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும்
                                          கபிலர், குறிஞ்சிப் . 19 – 26

இரு முது குரவரும் தமக்கு இயைந்தவனுக்கு மணமுடித்துக் கொடுப்போம் என்று உள்ளத்தில் கொண்ட காதலும், எனது மடனும் ஒருங்கு நீங்குமாறு, நெடிய தேரினையுடைய என் தந்தையின் கடத்தற்கு அரிய காவலைக் கடந்து, தலைவனும் யானும் பெருமையும் உரனும் அச்சமும் நாணும் நுணுங்கிய நிலையால், பிறந்தது, இக் காதல் மணம் என்று நாம் நம்முடைய தாய்க்கு அறிவுறுத்தலால் நமக்குப் புகழேயன்றி, நம் செயலால் வருவதோர் பழியும் உண்டோ? ( அஃது இல்லை என்பதாம்.)
கொடுப்பாரும் அடுப்பாருமின்றித் தாமே எதிர்பட்டுப் புணரும் களவுப் புணர்ச்சி, ஈண்டு ‘இருவேம் ஆய்ந்த மன்றல்’ எனப்பட்டது.
( ஓராங்கு – ஒருசேர ; தணப்ப – நீங்க ; நீவி – கடந்து ; இருவேம் – தலைவனும் தலைவியும் ஆகிய யாம் இருவர் ; மன்றல் – திருமணம்.) 

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 2

குறிஞ்சிப்பாட்டு -  அரிய செய்தி  : 2
யார்க்கும் எளிதன்று……
முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை
நேர்வரும் குரைய கலம் கெடின் புணரும்
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
மாசுஅறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்
ஆசுஅறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய என்னார் தொல் மருங்கு அறிஞர்
                                             கபிலர், குறிஞ்சிப் .   13 – 18
சிறந்த இலக்கணங்களையுடைய முத்தானும் மானிக்கத்தானும் பொன்னாலும் பொருந்தியவாறு செய்யப்பெற்ற அணிகலன்கள் கேடு அடையினும் அவற்றைச் சீர் செய்து கொள்ள இயலும். அது போலன்றித் தத்தம் குணங்களின் அமைதியும் மேம்பாடும் ஒழுக்கமும் தம்முடைய பழைய இயல்பினின்றும்  கெட்டதாயின், அதனால் பிறந்த அழுக்கை நீங்கும்படிக் கழுவி, விளங்கும் புகழை முன்புபோல நிற்கும்படி நிலைநிறுத்துதல் குற்றமற்ற அறிவினையும் தெய்வத்தன்மையையும் உடைய முனிவர்கட்கும் எளிய செயலன்று எனப் பழைய நூலை அறிந்த அறிஞர் கூறுவர்.
( கலம் – அணிகலன்;  சால்பு – நிறைவு ; வியப்பு -  பெருமிதம் ; இயல்பு – ஒழுக்கம் . ) 

வியாழன், 28 ஏப்ரல், 2016

குறிஞ்சிப்பாட்டு - அரிய செய்தி : 1

குறிஞ்சிப்பாட்டு -  அரிய செய்தி  : 1
அறத்தொடு நிற்றல் - முகவுரை
அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒள்நுதல்
ஒலிமென் கூந்தல் என் தோழி மேனி
விறல் இழை நெகிழ்த்த வீவு அருங் கடுநோய்
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும்
பரவியும் தொழுதும் விரவுமலர் தூயும்
வேறு பல் உருவின் கடவுட் பேணி
நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று
எய்யா மையலை நீயும் வருந்துதி
நன்கவின் தொலையவும் நறுந்தோள் நெகிழவும்
புள் பிறர் அறியவும் புலம்புவந்து அலைப்பவும்
உள்கரந்து உறையும் உய்யா அரும்படர்
செப்பல் வன்மையின் செறித்து யான் கடவலின்
                              கபிலர், குறிஞ்சிப் . 1 – 12
தாயே ! வாழ்வாயாக…
தாயே ! யான் கூறுவதை விரும்பிக் கேட்பாயாக….!
                                   ஒளி பொருந்திய நெற்றியையும் தழைத்த மெல்லிய கூந்தலையும்,  பிறர் நிறத்தினை வெல்லும் வெற்றியுடைய நிறத்தினையும் உடைய என் தோழி, தன் மனத்திற்குள், தன் உயிரைத் தாங்கியிராமைக்குக் காரணமாகிய ஆற்றுதற்கரிய நினைவினை மறைத்தாள் ; அதனால் அவள் அணிந்திருந்த அணிகள் நெகிழப்பெற்றன. மருந்துகளால் நீக்குதற்கரிய கடிய இந்நோயை நினக்குச் சொல்லுதல் எளிதன்று, வலிமையுடத்து, ஆதலால் யான்  அதனை வெளிப்படுத்தாமல் என்னுள் அடக்கி வைத்தேன், அவளுடைய நல்ல அழகு கெட்டது, நறிய தோள்கள் மெலிந்தன,வளை கழன்றமையால் பிறர் அவள் நிலையை அறிந்தனர். தனிமைத் துயரம், அவளை மிகவும் வருத்தியது ; இந்நிலையை யான் , நினக்கு அறிவிக்காமல் மறைத்துக் காத்தனன்.
                                     நீயும் மனம் வருந்தி, அகன்ற இடத்தையுடைய இவ்வூரில் கட்டினானும் கழங்கினானும் எண்ணிக் கூறுவாரை அழைத்துத்  தலைவியின் துயரத்திற்கான காரணத்தை அறிய விரும்பினை, ; அவர்களும், தலைவியின் வருத்தம் தெய்வத்தால் வந்தது எனக் கூறினர். அதனைக் கேட்ட நீ, வேறுபட்ட வடிவங்களையுடைய பல தெய்வங்களுக்கு மணப் புகை , சந்தனம் முதலியன கொடுத்துப் பரவியும் வணங்கியும் பல நிறப் பூக்களைச் சிதறியும் வழிபட்டும் செய்த முயற்சிகளால், அந்நோய்க்கான காரணத்தை அறிய இயலாது மயங்கி வருந்துகிறாய்..!
(ஒலி – தழைத்த ; படர் – நினைவு ; புள் – வளை ; புலம்பு – தனிமை ;  வீவு அருங் கடுநோய் – போக்குதற்கரிய காம நோய் ; எய்யாமை – அறியாமை ; மயல் – மயக்கம் ; அகலுள் – அகன்ற இடம் ;  அறியுநர் – கட்டுவிச்சி / வேலன் ; நறை – மணப்புகை ; விரை – நறுஞ் சந்தனம்.) 

புதன், 27 ஏப்ரல், 2016

குறிஞ்சிப்பாட்டு

குறிஞ்சிப்பாட்டு
                     பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றாகிய இந்நூல், ‘பெருங்குறிஞ்சி’ என்னும் பெயர் பெறுவதாகும்.” கபிலர் பாடிய பெருங்குறிஞ்சியிலும் வந்தது” – பரிபாடல். 19, பரிமேலழகர் உரை.
                         “ கபிலர் பாடிய பெருங்குறிஞ்சியில் வரையின்றிப் பூக்கள் மயங்கியவாறு காண்க”. – தொல். அகத். 19, நச்சினார்க்கினியர் உரை.
                        261 அடிகளைக்கொண்டு, ஆசிரியப் பாவால் அமைந்த  இந்நூலை இயற்றியவர் கபிலர். காப்புக் கைம்மிக்குக் காமம் பெருகிய வழி, தலைவன் வரும் வழியின் ஏதங்களைக் கண்டஞ்சித் தலைவி, தோழிக்கு அறத்தொடு நிற்ப அவள், எளித்தல், ஏத்தல், வேட்கை உரைத்தல், ஏதீடு, தலைப்பாடு, உண்மை செப்பும் கிளவி ஆகிய ஆறும் செவிலித்தாய்க்குக் கூறி அறத்தொடு நின்றனள், என்பதே இப்பாட்டின் பாடுபொருளாம்.
  குறிஞ்சிப்பாட்டு என்னும் இந்நூல், ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குப் பாடப்பட்டதாகக் கூறப்பட்டுகின்றது. தமிழ் அறிவித்தல் -  தமிழ் மக்களின் புலனெறி வழக்கமாகக் கூறப்பட்ட ஐந்திணைக் காதல் வாழ்வின் சிறப்புக்களை அறிவித்தல் குறித்தது.
’குறிஞ்சிக்கபிலர்’  எனப் போற்றப்படும் கபிலர், சான்றோர் பலரால் போற்றப்பட்டவர். இவர் பாடிய  சங்க இலக்கியப் பாடல்கள் : நற்றிணை -20 ; குறுந்தொகை – 29 ; ஐங்குறுநூறு – 100 ; பதிற்றுப்பத்து – 10 ; கலித் தொகை,( குறிஞ்சிக்கலி) – 29 ; அகநானூறு – 17 ; புறநானூறு – 30 ; குறிஞ்சிப்பாட்டு – 1. எனும் இவையே.
 குறிஞ்சிப்பாட்டு என்னும் இந்நூல், ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குப் பாடப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழ் அறிவித்தல் -  தமிழ் மக்களின் புலன் நெறி வழக்கமாகக் கூறப்பட்ட ஐந்திணைக் காதல் வாழ்வின் சிறப்புக்களை அறிவித்தல்.
இந்நூல் பெருங்குறிஞ்சி என்றும் வழங்கப்பெறும், இயற்கைப் புணர்ச்சியும், அதன் பின்னர் நிகழும் புணர்ச்சிகளின் நிமித்தங்களும் கூறுவதால் இந்நூல் குறிஞ்சிப்பாட்டு எனப் பெயர்பெற்றது. 
சிறப்புச் செய்தி
நீதிக்கு – நன்றியுடன் தலைவணங்குவோம்
திரு எஸ். இராசரத்தினம் அவர்களுக்கு நன்றி பாராட்டுவோம்
“                          தமிழகத்தில் வரும் கல்வியாண்டுமுதல்  ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குத் திருக்குறளில் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் பிரிவுகளில் உள்ள அனைத்துக் குறட்பாக்களையும் முழுமையாகக் கற்பிக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.”
                        “ நீதிபதி ஆர். மகாதேவன் தனது தீர்ப்பில் “ கல்வி தொடர்பாக உலகின் பல்வேறு அறிஞர்கள் தெரிவித்த கருத்துக்களை ஒப்பிட்டு 2000 – ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவரால்  தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்ட குறள்கள் மட்டுமே சமுதாயத்தைச் சீர்படுத்த முடியும் எனத் தெரிவித்து 50 குறள்களை உதாரணம் காட்டியுள்ளார்.

                                      தமிழகத்தில் 1948, 1949 ஆகிய ஆண்டுகளில் திருக்குறளைக் கட்டாயப் பாடமாக்க அரசு உத்தரவிட்டது ஆனால், அந்த உத்தரவுகள் அரசியல் காரணங்களால் அமலுக்கு வராமல் போய்விட்டது என்று குறிப்பிட்ட நீதிபதி, திருக்குறள் போல் மனிதரின் வாழ்வை மேம்படுத்தும் சிறந்த படைப்பு வேறு ஒன்றும் இல்லை. திருக்குறள் 90 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது என,  அதன் பெருமையைத் தீர்ப்பில் பட்டியலிட்டுள்ளார்.” – தி இந்து 27/4/16

செவ்வாய், 26 ஏப்ரல், 2016

நெடுநல்வாடை அரிய செய்தி : 11

நெடுநல்வாடை அரிய செய்தி  : 11
நெடு – நல் – வாடை
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய  பாசறைத் தொழிலே
                            நக்கீரர், நெடுநல் .  7:186 – 188
அரசன்,  ’நள்’ என்னும் ஓசையையுடைய நடுயாமத்தும், உரங்காச் செல்லாமல், சில வீரர்களுடன் பாசறையில் புண்பட்டோரின் வருத்தத்தைப் போக்குவதற்காகத் திரிந்த வண்ணம் இருந்தான்.
சேரன், சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் என்ற எழுவருடன் மாறுபட்டுப் பாசறைக்கண் தங்கி, அரசன் செய்யும் போர்த் தொழிலில் அவனுக்கு வெற்றியைத் தந்து இப்பொழுதே முற்றுப் பெறுவதாக என்று செவிலித்தாய், கொற்றவையை வழிபட்டு வேண்டினாள்.
அரசமாதேவிக்குப் பிரிவாற்றாமையைத் தந்த நெடிய வாடை, அரசனுக்குப் பாசறைத் தொழிலில் ஊக்கத்தை மிகுவித்தலால் நல்ல வாடையாயிற்று.
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய,
நெடுநல்வாடை: முற்றும். 
                                           நாளை முதல் குறிஞ்சிப்பாட்டு ...! 

திங்கள், 25 ஏப்ரல், 2016

நெடுநல்வாடை அரிய செய்தி : 10

நெடுநல்வாடை அரிய செய்தி  : 10
வானியல்
புதுவது இயன்ற மெழுகு செய் படமிசை
திண் நிலை மருப்பின் ஆடு தலையாக
விண் ஊர்பு இழிதரும் வீங்கு செலல் மண்டிலத்து
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா
                                          நக்கீரர், நெடுநல் .  7: 159 - 163
கட்டில் கால்களின் அருகே நிற்குமாறு அமைத்த, மெழுகு பூசப்பட்ட மேற்கட்டியின் மேல் புதியதாக ஓவியம் தீட்டப்பட்டது.
கதிரவன் வானின்கண், வலிமை வாய்ந்த கொம்புகளைக்கொண்ட, ஆட்டின் பெயருடைய , மேட ராசி முதலாக ஏனை இராசிகளிலும் சென்று இயங்கும் விரைந்து செல்லும் இயக்கத்தைக் கொண்டவன், அவனுடன் மாறுபட்ட  இயக்கமுடையதும், தலைமையுடையதும் ஆகிய திங்கட் செல்வனை உரோகிணி என்னும் நாள்மீன் எஞ்ஞான்றும் விட்டு நீங்காத இயல்பினைக் கொண்டதாகும்.
அரசமாதேவி, உரோகிணியைப் போலத் தானும் தன் கணவனைப் பிரியாமல் வாழும் பேறு பெறவில்லையே என நினைந்து, மெழுகு செய் படத்தில் தீட்டப்பெற்ற  அக்காட்சியைக்கண்டு பெருமூச்செறிந்தனள்.
ஞாயிற்றின் இயக்கம், மெழுகு செய் படத்தில் எழுதப்பெறவில்லை, இத்தொடர் திங்களுக்கு அடையாக வந்துள்ளது.
திங்கள் மண்டிலம், விண்மீன்களின் இயக்கம் – ஆய்ந்து அறிக.

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

நெடுநல்வாடை அரிய செய்தி : 9

நெடுநல்வாடை அரிய செய்தி  : 9
தாலி
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துப்
பின் அமை நெடுவீழ் தாழ ….
                                            நக்கீரர், நெடுநல் .  7: 136 – 137
அரசமாதேவியின், முத்துக்கள் பதித்துச் செய்யப்பட்ட, கச்சுத் தாங்கிய பருத்த முலையைக் கொண்ட மார்பில், குத்தும் தன்மையைக் கொண்ட நீண்ட தாலி நாண் ஒன்று மட்டுமே தொங்கிக் கிடந்தது.
’பின் அமை நெடு வீழ் தாழ’ என்பதற்குப் பின்னுதலைக் கொண்ட கூந்தல் மார்பில் சரிந்து கிடக்க – எனவும் பொருள் கொள்வர்.
( ஆரம் – முத்துகள் கச்சு ; ஆகம் மார்பு ; பின் – பின்னுதல் / குத்துதல் ; வீழ் தாலி, மார்பில் தொங்குவதால் .) 

சனி, 23 ஏப்ரல், 2016

நெடுநல்வாடை அரிய செய்தி : 8

நெடுநல்வாடை அரிய செய்தி  : 8
அரசி படுத்திருக்கும் வட்டக்கட்டில்
தசநான்கு எய்திய பணைமருள் நோன்தாள்
இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரிநுதல்
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
கூர் உளிக் குயின்ற ஈரிலை இடையிடுபு
தூங்கு இயல் மகளிர் வீங்குமுலை கடுப்ப
புடை திரண்டிருந்த குடத்த இடை திரண்டு
உள்ளி நோன் முதல் பொருத்தி அடிஅமைத்து
பேர் அளவு எய்திய பெரும் பெயர்ப் பாண்டில்
                                             நக்கீரர், நெடுநல் .  7:  115 - 124
                               நாற்பது ஆண்டுகள் நிரம்பப்பெற்றதும், முரசு போன்ற வலிமை வாய்ந்த திரண்ட கால்களைக் கொண்டதும், போரில் தன்னுடைய ஆற்றலை மிகுத்துக் காட்டும் வலிமையுடையதும், சிறந்த அழகும், புள்ளிகளைக் கொண்ட நெற்றியும் உடையதும், போரில் இறந்துபட்டதும் ஆகிய யானையின் தானே வீழ்ந்த தந்தங்களை எடுத்து, அவற்றின் திரட்சியும் செழுமையும் விளங்குமாறு, இருபுறத்தையும், தச்சன் தன்னுடைய கூர்மை வாய்ந்த சிற்றுளியால் நுட்பமாகச் செதுக்கி வட்டக்கட்டில் உருவாக்கப்பட்டது, அக்கட்டில் பெரிய இலை வடிவம் இடையே விளங்குமாறு இயற்றப்பட்டது.
                          சூல் முற்றித் தளர்ந்த இயல்புடைய மகளிரின், பால் முற்றித் திரண்ட முலையைப் போல, பக்கம் உருண்டிருக்கும் குடத்தை உடையதாகக் கட்டிலின் கால் அமைந்திருக்கும்.
                             குடத்திற்கும் கட்டிலுக்கும் நடுவே உள்ள இடம் உள்ளியின் வேர்ப் பகுதி போல நீண்டு விளங்கக் கட்டிலின் கால்கள் வலியவாய் இயற்றப்பட்டன். அக்கட்டில் அகன்ற அளவுடன் உருவாக்கப்பட்டதாகும், பெரும் புகழ் உடையதாக இவ்வட்டக் கட்டில் விளங்குவதாகும்.
( தசநான்கு – நாற்பது ; பணை – முரசு ; நாகம் – யானை ; வல்லோன் -  சிறந்த தச்சன் ; பாண்டில் – வட்டக் கட்டில்) 

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

நெடுநல்வாடை அரிய செய்தி : 7

நெடுநல்வாடை அரிய செய்தி  : 7
தனிமைத் துயர்
பணைநிலை முனைஇய பல் உளைப் புரவி
புல் உணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
                                              நக்கீரர், நெடுநல் .  7: 93 -94
கத்திரிகையால் மட்டம் செய்யப்பெற்ற பிடரி மயிரைக்கொண்ட குதிரைகள், தாம் கட்டப்பட்டுள்ள கட்டுத்த்றிகளில் நிற்பதை வெறுக்கின்றன, அவை, புல்லாகிய உணவைத் தின்று, குதட்டும்போது ந்ந்ற்படும் ஒலி, கேட்போர்க்குத் தனிமைத் துயரை மிகுவிப்பதாய் இருக்கும். மன்னனைப் பிரிந்து தனிமையில் வாடும் அரசியின் வாடை வருத்தும்.
 காமக்கிளர்ச்சியின் குறியீடாகக் குதிரை இடம்பெறுவதை இன்றுங்
காணலாம்.
( பணை – பந்தி ; உளை – பிடரி ; புல் உணா- புல்லாகிய உணவு.) 

வியாழன், 21 ஏப்ரல், 2016

நெடுநல்வாடை அரிய செய்தி : 6

நெடுநல்வாடை அரிய செய்தி  : 6
மனை முகூர்த்தம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்
இருகோள் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒருதிறம் சாரா அரைநாள் அமையத்து
நூலறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து
                                             நக்கீரர், நெடுநல் .  7: 74 – 79
                               விரிந்த கதிர்களைப் பரப்பும் அகன்ற இடததையுடைய கதிரவன், மேற்குத் திசை நோக்கிச் செல்வதற்கு விண்ணில் எழுந்தது.
 வடக்கிலும் தெற்கிலுமாகிய இரண்டு இடங்களில், இரு கோல்கள் நடப்பட்டு, அவற்றின் இடையே இடப்பட்ட குச்சிகளின், கிழக்கு மேற்காகத் தரையாக ஓடும், ஞாயிற்றின் கதிர்ப்ட்டு உண்டாகும் நிழல், ஒரு பக்கத்தைச் சாராமல் நேர் ஒழுங்காக வீழும் அமையம் குறித்துக் கொள்ளப்படும், அந்நாளில், அவ்வமையத்தில் அரனுடைய அரண்மனை அமைப்பதற்காகத் ”திருமுளைச் சார்த்து” என்னும் சடங்கு செய்யப்பெறும்.
                                      சிற்ப நூலை அறிந்த தச்சர்கள், நுட்பமாக நூல் பிடித்துப் பார்த்துக் கட்டடங்கள் அமைக்கப்பெறும், அவர்கள், அரண்மனையின் ஒவ்வொரு பகுதியும் அமைய வேண்டிய திசைகளைக் கருத்தில் கொண்டு அத்திசைகளில் காவலாக நிற்கும் தெய்வங்களால் எக்குறையும் நேரா வண்ணம் அவற்றிற்கு வழிபாடுகளை நிகழ்த்துவர். பெரும் புகழுடைய மன்னர்களின் தகுதிக்கும் தேவைக்கும் ஏற்ப மனைகளும் மண்டபங்களும் வாயில்களும் பாகுபடுத்தப்பட்டு அமைக்கப்பெறும்.
கணிதம்
                             சித்திரைத் திங்களில் முதல் பத்து நாட்களும், இறுதிப் பத்து நாட்களும் நீக்கி நடுவில் நின்ற பத்து நாட்களில் யாதானும் ஒரு நாளில், பகற் பொழுது பதினைந்தாம் நாழிகையில், வடக்கு தெற்காக அமைந்த கோல்களிடையே இடப்பட்ட இரு கோல்களின் நிழலும் ஒன்றன்மேல் ஒன்றாய் நேர்க்கோட்டில் விழும்.
( மண்டிலம் – ஞாயிற்று மண்டிலம் ; அரைநாள் – நண்பகல் ; தேஎம் – தேயம், திசை ; நூல் அறி புலவர் – சிற்பிகள்.) 

புதன், 20 ஏப்ரல், 2016

நெடுநல்வாடை அரிய செய்தி : 5

நெடுநல்வாடை அரிய செய்தி  : 5
கணப்புச் சட்டி
கல்லென் துவலை தூவலின் யாவரும்
தொகுவாய்க் கன்னல் தண்ணீர் உண்ணார்
பகுவாய்த் தடவில் செந்நெருப்பு ஆர
                                 நக்கீரர், நெடுநல் .  7:  62 – 64
                               வாடைக்காற்று இப்பருவத்தில் ’கல்’ என்ற ஓசையுடன் எங்கும் மழைத் துளிகளைத் தூவிற்று, இளையரும் முதியரும் குவிந்த வாயினை உடைய நீருண் கலத்தில் இருக்கும் தண்ணீரை, நீர் வேட்கையின்மையால், பருக விரும்புவதில்லை, அவர்கள் உடல் குளிர்ச்சியைப் போக்க, பிளந்த வாயினை உடைய நெருப்புக்குண்டத்திலிருந்து ( கணப்புச் சட்டி) வெளிப்படும் தீயின் வெம்மையை நுகர்ந்தனர்.
(கன்னல் – கரகம், வட்டில்  ; தடவு ; குண்டம், தூபமூட்டி.) 

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

நெடுநல்வாடை அரிய செய்தி : 4

நெடுநல்வாடை அரிய செய்தி  : 4

மாலைக் கால வழிபாடு
செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து
அவ்விதழ் அவிழ்பதம் கமழ பொழுது அறிந்து
இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ
நெல்லும் மலரும் தூஉய் கை தொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர
                                             நக்கீரர், நெடுநல் .  7:  40 – 44
                              மகளிர், பசுமையான காம்புகளைக்கொண்ட செம்முல்லையின் அரும்புகளை, அழகிய பூந்தட்டுக்களில் இட்டு வைத்திருப்பர், அவை மலர்ந்து மணம் வீசுவதைக்கொண்டு, மாலைக்காலம் வந்தமையை அறிவர். இவ்வந்திப் பொழுதில் இரும்பினால் செய்யப்பட்ட விளக்கில், நெய் தோய்ந்த திரியைக் கொளுத்துவர், நெல்லையும் மலரையும் தூவிக் கைகூப்பி இல்லுறை தெய்வத்தை வழிபடுவர், வளம் நிறைந்த ஆவண வீதிகளில் மாலைக் காலம் இவ்வாறு கொண்டாடப்பட்டது.
( போது – அரும்பு,  மலர்ந்து பொழுதை அறிவிக்கும் ; பிடகை – பூந்தட்டு ;  பித்திகை – பிச்சி , செம்முல்லை ; ஆவணம் – அங்காடித் தெரு.) 

திங்கள், 18 ஏப்ரல், 2016

நெடுநல்வாடை அரிய செய்தி : 3

நெடுநல்வாடை அரிய செய்தி  : 3
முழுவலி மாக்கள் – ஊர்க்காவலர்

மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்
ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்
படலக் கண்ணி பருஏர் எறுழ் திணிதோள்
முடலை யாக்கை முழுவலி மாக்கள்
வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து
துவலைத் தண்துளி பேணார் பகல் இறந்து
இரு கோட்டு அறுவையர் வேண்டுவயின் திரிதர
                                            நக்கீரர், நெடுநல் .  7:  29 – 35
                            உயர்ந்த மாடங்களைக் கொண்ட வளம் நிறைந்த மூதூர்,  அதன் தெருக்கள், ஆறு கிடந்ததைப் போன்ற அழகுடன் அகன்றும் நீண்டும் இருந்தது.
                                மிலேச்சர்கள், தழை விரவிக் கட்டிய மாலையைத் தலையில் அணிந்திருந்தனர், அவர்கள் பருத்த அழகான வலிமைவாய்ந்த இறுகிய தோள்களை உடையவர், முறுக்கு ஏறிய உடம்பினை உடையவர், உடல் வலிமை அனைத்தும் நிரம்பப் பெற்றவர், அவர்கள் வண்டுகள் மொய்த்துக்கிடக்கும் கள்ளினை மிகுதியாக உண்டமையால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர், சிறு  துவலைகளாக வீசும் குளிர்ந்த மழைத்துளிகளை அவர்கள் பொருட்படுத்தவில்லை, தங்கள் தோளில், ஆடையை முன்னும் பின்னும் தொங்கவிட்டவாறு அணிந்திருந்தனர், அவ்வூரின் தெருக்களில், அம்மிலேச்சர்கள், தாம் விரும்பிய வண்ணம் விரும்பிய இடங்களில், பகற் பொழுது மட்டுமின்றிப் பிற காலங்களிலும் சுற்றித் திரிந்தனர்.
                   முழுவலி மாக்கள் என்றதற்கு – பயனின்றி வாளா சுற்றித்திரியும் ஆடவர் எனப் பொருள் கூறுதல் , பாண்டிய நட்டின் பெருமைக்குப் புகழ் சேர்ப்பதாகாது எனவே, இவர்களை ஊர்க்கவலர் எனக் கருதுதல் தக்கது.
( மல்லல் – வளமை ; படலை – தழை ; எறுழ் – வலிமை ; முடலை – முறுக்குண்ட ; யாக்கை – உடம்பு ; மூசு – மொய்த்தல் ; தேறல் – கள் / தெளிவு ; அறுவை – ஆடை . ) 

ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

நெடுநல்வாடை அரிய செய்தி : 2

நெடுநல்வாடை அரிய செய்தி  : 2
விளை வயல்
அங்கண் அகல்வயல் ஆர்பெயல் கலித்த
வந்தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க
                                        நக்கீரர், நெடுநல் .  7: 21 – 22
வயல்கள் அகன்ற இடமுடையவை. அழகான தோற்றம் உடையவை, அவற்றில் நீர் நிரம்பி இருந்தமையால், நெல்லின் தோகைகள் வளமாகக் காணப்பட்டன. நெற்பயிரிலிருந்து கதிர்கள் வெளிப்பட்டு மேல் எழுந்தன, நெல்மணிகள் முற்றியமையால் நெற்கதிர்கள் தலை சாய்ந்தன.
( தோடு – இலை / தோகை ;  வணங்க – வளைய .) 18/4/

சனி, 16 ஏப்ரல், 2016

நெடுநல்வாடை அரிய செய்தி : 1

7- நெடுநல்வாடை
நெடுநல்வாடை :  பத்துப்பாட்டு நூல்களில் ஏழாவதாக இடம் பெற்றுள்ள நெடுநல்வாடை 188 அடிகளைக்கொண்டு ஆசிரியப்பாவால் அமைந்ததாகும். இப்பாடலை இயற்றியவர், மதுரை கணக்காயனார் மகனார்
நக்கீரர் ஆவார்.
தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவிக்கு, ஒரு பொழுது ஓர் ஊழிக்காலம் போல நீண்டு தோன்றுவதால் வாடை , தலைவியைப் பொறுத்தவரை நெடிய வாடையாய் உள்ளது.

நெடுநல்வாடை அரிய செய்தி  : 1
புதுமழை பொழிய
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ
பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்தென.
நக்கீரர், நெடுநல் .  7: 1 – 2
பருவம் பொய்க்காமல் உரிய காலத்தில் மழையைத்தரும் மேகங்கள், தவழ்ந்து கிடந்த மலைப்பகுதியை வலமாகச் சூழ்ந்து மேலெழுந்தன, உலகமெல்லாம் குளிரும்படி, கார்காலத்தில் புதுமழையைத் தந்தன.
 நல்லாட்சி நடைபெறும் நாட்டில், மேகங்கள் உரிய பருவத்தில்  பொய்க்காமல் மழையைத்தரும் என்பது நம்பிக்கையாகும்.
 ( வையகம் – உலகம் ; பனித்தல் – நடுங்குதல் ; புதுப்பெயல் – கார்காலத்து முதல் மழை.) 

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 35

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 35
மன்னனை வாழ்த்துதல்
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை வாழ்த்தி..
பெரிய கற்று இசை விளக்கி
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பல்மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுர்றமொடு பொலிந்து இனிது விளங்கி
பொய்யா நல்லிசை நிறுத்த புனைதார்ப்
 பெரும் பெயர் மாறன் தலைவனாக
கடந்து அடு வாய்வாள் இளம்பல் கோசர்
இயல்நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப
பொலம்பூண் ஐவர் உட்படப் புகழ்ந்த
மறம்மிகு சிறப்பின் குறுநில மன்னர்
அவரும் பிறரும் துவன்றி
பொற்பு விளங்கு புகழ் அவை நிற்புகழ்ந்து ஏத்த
இலங்கு இழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்து இனிது உறைமதி பெரும
வரைந்து நீ பெற்ற நல் ஊழியை யே. 
             மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 767 – 780
நற்பொருள்களை விளங்கக்கூறிய நூல்களைக் கற்று, எவ்வுலகத்திலும் நின் புகழை நிற்குமாறு செய்து, கடல் நடுவில் தோன்றும் ஞாயிறு போலவும், பல விண்மீன்களுக்கு நடுவில் தோன்றும் நிறைமதியைப் போலவும், உன்னால் பொலிவு பெற்ற சுற்றத்தாருடன் நல்ல புகழை இவ்வுலகில் நிலைநிறுத்திய, புனைந்த மாலையையும், பெரிய புகழினையுமுடைய மாறன் முதலாக, பகைவரை  வென்று கொல்லும் தப்பாத வாளினையுடைய  இளைய பலராகிய கோசரும், எல்லோராலும் புகழப்பட்ட பொன்னால் செய்யப்பட்ட  பேரணிகலன்களை உடைய ஐம்பெருங்கேளிரும் உட்பட, மறம் மிக்க குறுநில மன்னர்களாகிய அவரும் இன்னபிறரும் நடக்கின்ற நெறிமுறையால், உன்னுடைய உண்மையான மொழியைக் கேட்டு அதன் வழி நடக்கவும், பொலிவு பெர்று விளங்கும் அறம் கூறு அவையத்தார் நெருங்கி நின்று, நின்னுடைய அறத்தின் தன்மையை புகழ்ந்து வாழ்த்தவும், விளங்கும் அணிகலன்களை உடைய மகளிர், பொன்னால் செய்த வட்டில்களில் ஏந்தி, மணம் கமழும் காம பானத்தைத் தர, அதனை உண்டு மகிழ்ச்சி எய்தி, மகளிர் தோள் புணர்ந்து, பெருமானே, நன்றாகிய ஊழிக்காலத்தை, இத்துணைக் காலம் இருத்தி எனப் பால்வரை தெய்வத்தால் வரையப்பட்டு, நீ அறுதியாகப் பெற்ற நாள்  முழுதும் இனிதாக இருப்பாயாக.
( தேறல் – கள்ளின் தெளிவு ; நாப்பண் – நடுவில் ; ஐவர் – ஐம்பெருங்குழு ; மாறன் – பாண்டியன்  - முன்னோன் ;ஊழ் – வரையறுத்த வாழ்நாள்.) 16/4/16

மதுரைக் காஞ்சி --- முற்றும்

வியாழன், 14 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 34

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 34
பாண்டியன் பெருங்கொடை
வரையா வாயின் செறாஅது இருந்து
பாணர் வருக பாட்டியர் வருக
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக என
இருங்கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி
                 மாங்குடி மருதனார், மதுரைக். 6 :  748 -752
மன்னன் அவைக்களத்து, வாயிலில் தடுத்து நிறுத்தாமல், இவர்களைப் போல் வரும் படையாளர் முதலியோரும் வருவாராக என்று கூறி, முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் எளிமையாய் இருந்து, கவிதையாகிய  புது வருவாயை உடைய புலவர்களுடன், பாணர் வருவாராக, பாடினியர் வருவாராக என அழைத்து, அவர்கள் சுற்றத்தாராய், அவர்களால் பாதுகாக்கப்படும் பெரிய இரவலர்க்கெல்லாம்’ நீவிர் யாவிர்’ என அவர்களைக் கேளாமல், அவர்கள் காட்டிய அளவினைக்கொண்டு, கொடுஞ்சி உடைய நெடிய தேர்களை யானைகளோடும் கொடுத்தனன்.
( யாணர் – புது வருவாய் ; பாட்டியர் – பாடினி ; கொடுஞ்சி – தேர்த்தட்டின் முன்னே கட்டப்பட்ட  தாமரைப் பூ  - குஞ்சம்.) 

புதன், 13 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 33

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 33
கஞ்சியூட்டிய ஆடை
சோறு அமைவுற்ற நீருடைக் கலிங்கம்
உடையணி பொலியக் குறைவின்று கவைஇ
                       மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 721 – 722
பாண்டியன் நெடுஞ்செழியன் – ஆடை அணிகலன் பொலிய…
சோறு ஆக்கிய நீராகிய கஞ்சி ஊட்டிய துகிலை அணிந்து , அதன் மேல்  அணிகலன்கள் பொலியப்பூட்டி அழகுற விளங்கினான்
ஆடைகளுக்குக் கஞ்சியூட்டி அணியும் வழக்கம் அக்காலத்தில் இருந்தமையை அறியலாம்.
( சோறு அமைவுற்ற நீர் – கஞ்சி ; கலிங்கம் – ஆடை) 

செவ்வாய், 12 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 32

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 32
கள்வர் – தோற்றப்பொலிவு
இரும்பிடி மேஎந் தோல் அன்ன இருள்சேர்பு
கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத்
தொடலைவாளர் தொடுதோல் அடியர்
குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடி
சிறந்த கருமை நுண்வினை நுணங்கு அறல்
நிறம் கவர்பு புனைந்த நீலக் கச்சினர்
மென் நூல் ஏணிப் பல்மாண் சுற்றினர்
நிலன் அகழ் உளியர் கலன் நசைஇக் கொட்கும்
                             மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 634 – 641
கள்வர்கள், கரிய பெண்யானையின் தோலைப்போன்ற கரு நிறத்தைத் தமக்கு  இயல்பாகக் கொண்டவர்கள்.
கல்லையும் மரத்தையும் அறுக்கும் நிலத்தை அகழும் கூர்மையான உளியை உடையவர் ;  உறையில் இட்ட வாளினை உடையவர் ;  செருப்பு அணிந்தவர் ;  மிக்க கருமையான மெல்லிய சேலையை உடம்பில் பொருந்துமாறு உடுத்தியவர் ; தொடையில்  வெளிப்புறம் தெரியாமல் கிடக்குமாறு கூரிய உடைவாளைச் செருகியவர் ;  பலநிறங்களைத் தன்னிடத்தே கொண்டதால் புனையப்பட்ட நீலநிறக் கச்சினைச் சேலையின் மேல் கட்டியவர் ;  மெல்லிய நூலால் செய்த ஏணியைத் தம் இடையில் சுற்றியிருப்பர் .  பேரணிகலன்களை விரும்பி அவற்றை எடுப்பதற்காக இடம் பார்த்துச் சுழன்று திரிபவர் ; விழித்த கண் இமைத்த அளவில்  மறைபவர்.
( நிலன் அகழ் உளி – கன்னக்கோல் ; துணிக்கும் – துண்டாக்கும் ; தொடலை – தூக்கு / உறை ; தொடுதோல் – செருப்பு ; குறும்பிடி – வளைந்த கத்தி / உடைவாள் ; ஒடுக்கம் – ஒடுங்கியுள்ள இடம்.) 

திங்கள், 11 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 31

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 31
பண்டைய இனிப்புப் பண்டங்கள்
இரண்டாம் சாமத்தில் மதுரை நகரம் – ---
நல்வரி இறாஅல் புரையும் மெல்லடை
அயிர் உருப்பு உற்ற ஆடமை விசயம்
கவவொடு பிடித்த வகையமை மோதகம்
தீஞ்சேற்றுக்  கூவியர் தூங்குவனர் உறங்க
                      மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 624 – 627
பாகில் சமைத்த நல்லவரிகளை உடைய தேனிறாலைப் போன்ற  மெல்லிய அடையினையும்,,,, பருப்பும் தேங்காயுமாக உள்ளீடு வைத்து, கண்டசருக்கரையும் சேர்த்துப் பிடித்த வெம்மையுடைய அப்பங்களையும், இனிய பாலோடு சேர்த்துக் கரைத்த மாவினையுடைய அப்பங்களையும் செய்யும் வணிகர்கள், தங்கள் பொருள்களுடன் அயர்ந்து தூங்கினர்.
( நொடை – விலை ;  விசயம் – சருக்கரைப் பாகு ; கூவியர் – அப்ப வணிகர் ; அயிர் – கண்டசருக்கரை ; மோதகம் – அப்பம் .)

ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 30

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 30
தெய்வத்திற்கு மடை கொடுத்தல்
திவவு மெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணி
குரல் புணர் நல்யாழ் முழவொடு ஒன்றி
நுண்நீர் ஆகுளி இரட்ட பலவுடன்
ஒண்சுடர் விளக்கம் முந்துற மடையொடு
நல்மா மயிலின் மென்மெல இயலி
 கடுஞ்சூல் மகளிர் பேணி கைதொழுது
பெருந்தோட் சாலினி மடுப்ப
                          மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 604 – 610
யாழ் முறுக்காணியின் நரம்பினை அதன் தண்டில் கட்டி, செவ்வழி என்னும் பண்ணை இசைப்பர், குரல் எனும் நரம்புடன் பொருந்திய யாழிசைக்கு ஏற்ப முழவும் பொருந்தி ஒலிக்கும், மெல்லிய தன்மையுடைய சிறுபறை ஒலிக்கும், ஒள்ளிய சுடர் விளக்கம் முற்பட்டுத் தோன்ற, பூசைக்கு வேண்டும் பொருள்கள் பலவற்றுடன் முதற் சூலினை உடைய மகளிர், பால்சோறு முதலிய படையல் பொருள்களை ஏந்தி, நன்றாகிய பெருமையுடைய, மயில் போல மெத்தென நடந்து சென்று கையால் தொழுது, பெரிய தோளினையுடைய தேவராட்டியோடு வழங்குவர்.
  முதற் கருவுற்ற மகளிர்வழிபாடு ;  மாலையில் செவ்வழிப்பண்ணும், காலையில் மருதப் பண்ணும் இசைக்க வேண்டும் என்பது இசைநூல் மரபு.
( கடுஞ்சூல் – முதற் சூல் ; திவவு – வார்க்கட்டு ; செவ்வழி – மாலைப் பண் ; ஆகுளி – சிறுபறை ; சாலினி –  தேவராட்டி (தெய்வம் ஏறி ஆடுபவள்) ; வெறியாட்டு – முருகப் பெருமானுக்கு உரிய வேலினை ஏந்தி வழிபடுபவன் வேலன், அவன் தெய்வம் ஏறி முருகனாகவே நின்று ஆடுதல் வெறியாட்டு எனப்படும்.) 

சனி, 9 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 29

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 29
மகளிர் குளத்து நீராடல்
கணவர் உவப்ப புதல்வர்ப் பயந்து
பணைத்து ஏந்து இளமுலை அமுதம் ஊற
புலவுப் புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வளமனை மகளிர் குளநீர் அயர
                        மாங்குடி மருதனார், மதுரைக். 6 :  600 – 603
 தம்முடைய கணவர் இம்மையிலும் மறுமையிலும் பெரும் பயனைப் பெற்றேம் என்று மகிழும்படி புதல்வர்களைப் பெற்றுப் பாலால் இடம்கொண்டு ஏந்திய இளமுலை, பாலைச் சுரக்கும்படி, புலால் வீசும் ஈன்றணிமை நீங்கி , எவ்வகையான இன்னலும் இல்லாமல் நீங்கிக் குளத்து நீரில் குளிப்பர்,
முதல் சூல் கொண்ட மகளிர், இவ்வாறே இடுக்கண் இல்லாமல் புதல்வரைப் பெறல் வேண்டும் என்று தெவத்தைப் பரவிக் குறை நீங்கப் பெறுவர்.
கருவுயிர்த்த மகளிர், குளத்து நீரில் நீராடி, வாலாமை நீங்கப் பெறுவர்.
( கடுஞ்சூல் – முதற்சூல் ; அமுதம் – பால் ; புனிறு -  ஈன்றணிமை.) 

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 28

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 28
ஓணம் பண்டிகை
கணம்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நல்நாள்
கோணம் தின்ற வடுஆழ் முகத்த
சாணம் தின்ற கயம் தாங்கு தடக்கை
மறம்கொள் சேரி மாறுபொரு செருவில்
மாறாது உற்ற வடுப்படு நெற்றி
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும்புகல் மறவர்
             மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 590 – 596
 திரட்சிகொண்ட அவுணரை வென்ற பொன்னால் செய்த மாலையை உடைய, கருநிறம் உடைய திருமால் பிறந்த ஓணமாகிய நன்னாளில் ஊரில் உள்ளார் விழா எடுப்பர்.
இற்றை நாள் போர் செய்வோம் என்று கருதி மறத்தைக் கொண்டிருக்கும் தெருக்களில், தம்மில் தாம் மாறுபட்டுப் போர் செய்யும் போரில், மாறாமல் தம்மீதுபட்ட அடியால் வடுவழுந்திய நெற்றியையும், சுரும்புகள் மொய்க்கும் போர்ப் பூவினையும், பெரிய விருப்பத்தினையும் உடைய மறவர்.
 திருமாலுக்கு மதுரையில் ஓணநாள் விழா நிகழ்த்தப் பெற்றது. அவ்விழாவில் மறவர்கள் சேரிப்போர் நிகழ்த்துதல் வழக்கமாகும்.
( காழகம் – நீல நிறமுடைய ஆடை ; கோணம் – தோட்டி (அங்குசம்) ; சாணம் – தழும்பு ; சமம் – போர்.) 

வியாழன், 7 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 27

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 27
மாலை மலரும் இந்நோய்
காதல் இன்துணை புணர்மார் ஆயிதழ்த்
தண் நறுங் கழுநீர் துணைப்ப இழைபுனையூஉ
நல்நெடுங் கூந்தல் நறுவிரைகுடைய
நரந்தம் அரைப்ப நறுஞ்சாந்து மறுக
மென் நூற் கலிங்கம் கமழ்புகை மடுப்ப
பெண் மகிழ்வுற்ற பிணைநோக்கு மகளிர்
               மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 550 – 555
கணவர் தம்மைப் பிரிதலால், அவருடன் கூட்டத்தை விரும்பியிருந்த மகளிர், தம் மேல்  காதலையுடைய தமக்கு இனிய கணவரைக் கூடுதற்கு விரும்பினர். அவர்கள், ஆராய்ந்த இதழ்களையுடைய குளிர்ந்த மணம் கமழும் செங்கழுநீர் மலர்களை மாலையாகக் கட்டினர். அணிகலன்களை அணிந்து கொண்டனர், நன்றாகிய நெடிய மயிரில் பூசிய மணம் வீசும் மயிர்ச் சந்தனத்தை நீராடி நீக்கினர் – கத்தூரி, நறிய சந்தனம் ஆகியவற்றை அரைத்தனர், மெல்லிய நூலால் செய்த ஆடைகளுக்கு மணம் கமழும் அகிற்புகையை ஊட்டினர். குணச்சிறப்பால், உலகத்துப் பெண்ணினத்தாரும் விருப்பமுறும் மான் பிணை போன்ற நோக்கினையுடைய மகளிர்.
( துணைப்ப – கட்டும்படியாக ; நறுவிரை – மயிர்ச் சந்தனம் ; நரந்தம் – கத்தூரி ; கலிங்கம் – ஆடை .) 

புதன், 6 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 26

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 26
மதுரை மாநகர் - உணவு வகைகள்
……. …….. ……..  …….பலவுடன்
சேறும் நாற்றமும் பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய தேம் மாங்கனியும்
பல்வேறு உருவின் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்பக் கொடிவிடு கவினி
மென்பிணி அவிழ்ந்த குறுமுறி அடகும்
அமிர்து இயன்றன்ன தீம்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேர் ஊன் சோறும்
கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர் பல்வயின் நுகர
                        மாங்குடி மருதனார், மதுரைக். 6 : 527 – 536
இன்னும் பலவுடன், தேனும், மணமும் உடைய பலாப்பழத்தின் சுளையும், வடிவு வேறுபட்ட, அழகுடைய இனிய மாவின் பழங்களும், பலவாய் வேறுபட்ட வடிவினையுடைய வாழைக்காய், வழுதுணங்காய் முதலிய காய்களும் ; வாழைபழம் முந்திரிகைப் பழம் முதலிய பழங்களும் ; மழை, உரிய பருவத்தில் பெய்து வளர்க்கையால் கொடிகள் விட்டு, அழகு பெற்று, மெல்லிய சுருள் விரிந்த சிறிய இலைகளையுடைய இலைக்கறிகளும் ; இனிய பாகினால் கட்டிய அமுதம் திரண்டாற் போன்ற        இனிய சாற்றினைக் கொண்ட கண்ட சருக்கரையும் ; புகழ்ச்சியுண்டாகச் சமைத்த பெரிய இறைச்சிசி சோறும் ஆகியவற்றை நிலத்தின் கீழ் விளைந்த கிழங்குகளுடன் பல இடங்களிலும் நுகர இனிய பாற்சோறு, பால் முதலியவற்றைக் கொண்டுவந்து இடுவோர் எழுப்பும் பேரொலியும் சோறிடும் சாலைகளில் நிறைய…
( சேறு – தேன் (பலாப்பழத்தின் இனிய நீர்) ; அடகு – இலை ; கடிகை – கண்ட சருக்கரை ;  பண்ணிய – சமைத்த ; இன்சோறு – பாற்சோறு.) 

திங்கள், 4 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 25

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 25

கோசர்
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான் மொழிக் கோசர் தோன்றியன்ன 
                               மாங்குடி மருதனார், மதுரைக். 6 :   508 – 509
 மோகூர் பழையன் என்னும் குறுநில மன்னன் – இவ்வூரின் தலைவன் – இவ்வூரில் உள்ள நன்மக்கள் கூட்டத்தில் விளங்கும்படி அறியக்கூறிய நான்குவகையான கோசர்கள் – தங்கள் வஞ்சின மொழியால் விளங்கினாற் போல….
கோசர் – வஞ்சினம் பிறழாதவர் – வாய்மொழி உரைப்பவர் – கூலிப்படையினர்.” மெய்ம்மலி பெரும்பூண் செம்மல் கோசர் –குறுந்.73.”
 “வாய்மொழிக் கோசர் –அகநா. 196” – ”இளம்பல் கோசர்”, புறநா. 169, 283, 396, 12.
“ இந்தியாவின் பாரம்பரிய வீடுகளில் பிரசித்திப்பெற்றது பந்த் சமூகத்தினரின் குத்தூ வீடுகள். பந்த் சமூகத்தினரின் தாய்மொழி துளு, இம்மொழியில் பந்த் என்றால் வீரன் என்று பொருள். இதிலிருந்து பந்த் சமூகம் சத்திரிய குலமாக இருந்திருக்கிறது எனத் தெரிந்து கொள்ளலாம். இவர்கள் கர்நாடக மாநிலத்தின் தென் கனரா மாவட்டத்தில் அதிகமான அளவில் வாழ்கிறார்கள் இந்தப் பகுதி முற்காலத்தில் துளு நாடு என அழைக்கப்பட்டது.
துளு நாட்டு அரச வம்சம் கி.மு. 3 ஆம் நுற்றாண்டிலிருந்து கி.பி. 4ஆம் நூற்றாண்டுவரை ஆட்சிப்பொறுப்பில் இருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. அரசர்கள் கோசர்கள் என அழைக்கப்பட்டனர். துளுநாடு இன்றைய கேரளத்தின் சில பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதியாக இருந்திருக்கிறது.” (ஜெய், தி இந்துதமிழ், 13/2/16) 

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 24

மதுரைக்காஞ்சி – அரியசெய்தி : 24
பண்டங்கள் பகர்நர்
அறநெறி பிழையாது ஆற்றின் ஒழுகி
குறும்பல் குழுவின் குன்று கண்டன்ன
பருந்து இருந்து உகக்கும் பல்மாண் நல் இல்
பல்வேறு பண்டமோடு ஊண்மலிந்து கவனி
மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்
பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு
சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்
                              மாங்குடி மருதனார், மதுரைக். 6 :   500 – 506
இல்லற நெறியில் பிறழாது இல்வாழ்க்கை நடத்துபவர். அவர்கள், அண்மையில் அமைந்துள்ள பல திரட்சியுடைய மலையைக் காண்பது போல் -  பருந்து இளைப்பாறி இருந்து பின் உயரப்பறக்கும் பல தொழிலால் மாட்சிமைப்பட்ட நல்ல இல்லில் – பலவாய வேறுபட்ட பண்டங்களையும் பல உணவுகளையும் – நிலத்திடத்தும் நீரிடத்தும் பிறவிடத்தும் கிடைக்கும் பொருள்களையும் – பலவாய வேறுபட்ட அழகிய  மணிகள் முத்துக்கள் பொன் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டு விற்பனை செய்வர்.
( பண்ணியம் – பண்டம் ; ஊண் – உணவு ;  உகக்கும் – உயரப் பறக்கும் – தேஎத்து – நாட்டிடத்து.)