செவ்வாய், 30 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…67.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…67.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை. )

”சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின்

தேன் தேர் குறவர் தேயம் நன்றே.”

அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்த பெரியோர்கள் இல்லாத இடத் தில் வாழ்வதைவிட ,  தேன் உண்ணும் குறவர் வாழும் இடமாகிய மலையில்  வாழ்தல் நன்று.

”ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்

சான்றோர் பலர் யான் வாழும் ஊரே “ –பிசிராந்தையார், புறநானூறு: 191.

கல்வி, கேள்வி, புலனடக்கம் யாவும் சிறந்து விளங்கும் சான்றோர் பலர் வாழும் ஊரே யான் வாழும் ஊர்.

 

 

வியாழன், 25 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…66.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…66.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை. )

”கொடுங்கோல் மன்னன் வாழும் நாட்டின்

கடும்புலி வாழுங் காடு நன்றே.”

தன் குடிமக்களை வாட்டி வதைத்து வரியாகப் பெரும்பொருள் ஈட்டும் கொடுங்கோல் மன்னன் ஆட்சி செய்யும் நாட்டில் வாழ்வதைவிடக் கொன்றுதின்று வாழும் கொடும்புலி வாழும் காட்டில் வாழ்வது நல்லதே.

 

 

‘ கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப்

படுங்கதிர் அமையம் பார்த்திருந்தோர்…” –இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்: 13.

கொடுங்கோல் அரசன் ஆட்சியின் கீழ் வாழும் குடிமக்கள் அவன் என்று செத்து ஒழிவான் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதைப்போல,  வெம்மையான கதிரவன் மறையும் பொழுதை அவர்கள் (கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள்)  ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர்.

 

 

செவ்வாய், 23 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…65.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…65.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை. )

1) ”இல்லோர் இரப்பதும் இயல்பே இயல்பே”

2) “இரந்தோர்க்கு ஈவதும் உடையோர் கடனே.”

உண்ணவும் உடுக்கவும், இருக்கவும் ஏதுமில்லா வறுமையுற்றோர் பொருள் உடையவர்களிடம் கையேந்தி  ‘ஏதாவது கொடுங்கள் ஐயா’ என்று கேட்பது இயற்கையே ஆகும்.

வறுமையுடையோர் துன்பத்தைக்கண்டு அவரிடம்  கருணை காட்டிப் பொருட்செல்வம் உடையோர் அவர்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து உதவுவது செல்வர்தம் கடமையாகும்.

“நடு ஊருள் வேதிகை சுற்றுக்கோள் புக்க

படுபனை அன்னர் பலர் நச்ச வாழ்வார்.” –சமண முனிவர்கள், நாலடியார்: 10; 6.

பலரும் விரும்பும்படி உதவி செய்து வாழ்கின்றவர்கள் ஊரின் நடுவே மேடை சூழ விளங்கும் பயன் தரும் பெண் பனை மரத்தைப் போன்றவர்கள்.

 

திங்கள், 22 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…64.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…64.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை. )

”உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா”

இயற்கையின் படைப்பாகிய இவ்வுலகில் மாறாதது என்று எதுவுமே இல்லை. எல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன ; மாற்றம் ஒன்றே வளர்ச்சி ஆகும். வாழ்க்கையில் செல்வம் சேர்தலும் ;வறுமை வருதலும் இயல்பான நிகழ்வுகளே.காலத்தின் கோலத்தில் செல்வம் சேர்த்தவன் வறியவன் ஆதலும்; வறுமையில் வாடியவன் செல்வச் செழிப்புடன் வாழ்தலும் கூடும்.எதுவுமே நிலையானதில்லை; இரவும் பகலும் மாறி மாறி வருதல் போல வாழ்க்கையில் நன்றும் தீதும் மாறி மாறி வரும்.

வைகல் தோறும் இன்பமும் இளமையும்

எய்கணை நிழலின் கழியும் இவ்வுலகத்து” – …………நற்றிணை:46.

வில்லினின்று எய்யப்படும் அம்பின் நிழல் எப்படி நொடிப்பொழுதில் மறையுமோ அப்படி இவ்வுலகத்தில் நாள்தோறும் இன்பமும் இளமையும் விரைந்து கழியும்.

 

ஞாயிறு, 21 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…63.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…63.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை. )

”நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை.”

அன்றாடம் உழைத்தால்தான் அடுத்தநாள் உணவு உண்டு என்னும் நிலைமையில் வறுமையால் வாடும் உழைப்பாளர்களுக்கு ‘ நாள் என் செய்யும் கோள் என் செய்யும்’, அஃதாவது நல்ல நாள் என்றோ கெட்ட நாள் என்றோ ; நல்ல நேரம் என்றோ, கெட்ட நேரம் என்றோ எதுவும் அவர்கள் பார்ப்பது கிடையாது. நாள்தோறும் வேலைக்குச் சென்றால்தான் மனைவி மக்கள் பசியாற முடியும். எனவே அவர்கள் தெய்வத்தை வேண்டிப் பெற விழைவதில்லை, சகுனம் பார்த்து வேலைக்குச் செல்வதில்லை, நாளும் கோளும் என்ன செய்யும் ? உழைத்தால்தான் உணவு என அவர்தம் வாழ்க்கைப் பயணம் தொடரும்.

 

வறுமையை வெல்லும் வாழ்க்கை.

“ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை…” – பாலை பாடிய பெருங்கடுங்கோ, கலித்தொகை : 18.

ஓர் ஆடையின் ஒரு பகுதியை ஆடையாக உடுப்பவராக வறுமையுற்று வாழ்ந்தாலும், கவலைப்படாது, அன்பினால் குடும்பத்தார் ஒன்றிக்கலந்து,  இல்லறத்தில் பிரியாது என்றும் இணைந்திருப்பவர்களுடைய வாழ்க்கையே வாழ்க்கை ஆகும்.

 

வெள்ளி, 19 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…62.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…62.

                அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை)


 “அச்சமும் நாணமும் அறிவிலோர்க்கு இல்லை.”

 

தன்மானம் தாழாது நடக்க விரும்புவனே நல்ல மனிதனாவான்.அறிவில்லாத முட்டாள்கள் தன்மானம் கெட்டு அழிய நடந்து கொள்வார்கள், அவர்கள் பிறர்க்குத் தீமை செய்வதற்கு அஞ்சாது அதனையே தொழிலாகக் கொண்டு திரிவர்;  நாணம் எனும் நற்குணம் உடைய நல்லோர் பழிக்கு அஞ்சி நடப்பார், ஆனால் அறிவில்லாத முட்டாள்கள் பிறர்க்குக் கேடு செய்தால் பிறரால் பழிக்கப்படுவோமே என்பதறியாது பழிக்கு அஞ்சாது, வெட்கப்படாது நடந்துகொள்வர் .


“கரப்புடை உள்ளம் கனற்றுபவரே

செருப்பிடைப் பட்ட பரல் ..”- முன்றுறை அரையனார், பழமொழி: 224.

 

பிறரை வருத்தும் வஞ்சக மனம் கொண்டோர் செருப்பில் அகப்பட்ட பருக்கைக்கல் ஒப்பர்.

 

வியாழன், 18 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…61.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…61.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

”அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்

கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி

எச்சமற்று ஏமாந்து இருக்கை நன்றே.”

 

பிள்ளகளாகப் பிறந்தவர்கள் பெற்றோர் கற்பிக்கும் ஒழுக்க நெறிகளைக் கேட்டு உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர்க்கு அடங்கி நடக்காத பிள்ளைகள் குடும்பத்திற்கு பெருங் கேடாகும்.

நல்ல அறிவும் ஆற்றலும் இல்லாத பிளைகளைப் பெறுவதைவிட  அக் குடும்பத்திற்கு பிள்ளைகளே இல்லாமல் போவது மிகவும் நல்லதாகும்.

 

“பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவுஅறிந்த

மக்கட் பேறு அல்ல பிற. “ –குறள்.61.

 

ஒருவன் பெறும் பேறுகளுள் சிறப்பானது அறிய வேண்டுவனவற்றை அறிதற்குரிய மக்களைப் பெறுதலே; பிற பேறுகளை யாம் போற்றுவது இல்லை.

செவ்வாய், 16 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…60.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…60.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

”எக்குடி பிறப்பினும் யாவரே ஆயினும்

அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்.”

 

மனித குலத்தை ஒரேகுலமாக்க் கருதாதாத சிலர் தாம் உயர்ந்த குலத்தில் பிறந்தவர் என்றும் ஏனையோர் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் என்றும் பிதற்றித்திரிவர். எந்தக் குலத்தில் பிறந்தாலும் யாராக இருந்தாலும் கற்றவரை உயர்வாக மதித்துப் போற்றுவர்.

 

“……………………………ஒருகுடியில்

கல்லாது மூத்தானைக் கைவிட்டுக் கற்றான்

இளமை பாராட்டும் உலகு.” –விளம்பி நாகனார், நான்மணிக்கடிகை:63.

 

ஒரு குடும்பத்தில் கல்வி கற்காதவன் மூத்தவனாயினும் அவனை எவரும் மதிக்கமாட்டார் ; கற்றவன் இளைஞனாயினும் அவனையே எல்லோரும் மதித்துப் போற்றுவர்.

திங்கள், 15 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…59.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…59.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

”கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே.”

பொன்னோ பொருளோ இல்லாதவன் கல்வி கற்க இயலாதவனாகிவிடக் கூடாது. உண்பதற்கு உணவு இல்லையென்றாலும் பிச்சை எடுத்தாவது உயிரைக்காத்துக் கொள்ள நினையாது கல்வி கற்று உயர்ந்தவனாதல் வேண்டும்.

 

“ பிறப்பு ஓர் அன்ன உடன் வயிற்றுள்ளும்

சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்.” – பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், புறநானூறு : 183.

ஒரு தாய் வயிற்றில் பிறந்தவருள்ளும் அவரவர் கல்விச் சிறப்பின் காரணமாகத் தாயும் அன்பு காட்டுவதில் மனம் வேறுபடுவாள். பெற்ற தாய் கல்வி கற்றவனையே போற்றிப் பாராட்டுவாள்.

ஞாயிறு, 14 ஜனவரி, 2024

இனிய பொங்கல் வாழ்த்து…!

 

இனிய பொங்கல் வாழ்த்து…!

“யாதும் ஊரே யாவரும் கேளிர்”

”ஓங்கல் இடைவந்து உயர்ந்தோர் தொழவிளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்து இருள் அகற்றும் – ஆங்கவற்றுள்

மின்னேர் தனியாழி வெங்கதிர் ஒன்று ஏனையது

தன்னேர் இலாத தமிழ்.”

செங்கதிரும் செந்தமிழும் இயற்கையோடியைந்து பிறந்தவை

ஒன்று படுவோம்

 வென்று விடுவோம்

தமிழனாய் எழுவோம்

தமிழராய்க் கூடுவோம்

தமிழோடு வாழ்வோம்

தழைக்கும் தலைமுறை

வாழ்த்தும் தமிழ் மறை

புத்தாண்டில் எழுச்சியுறும் தமிழ்

தமிழர் திருநாள் மகிழ்ச்சியூட்டும்

பொங்கும் மங்கலம் எங்கும் நிலவட்டும்.

உலகத் தமிழ் உள்ளங்களுக்கு

இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துகள்.

 

வெள்ளி, 12 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…58.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…58.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

”சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்

பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே.”

அறிவற்றவர்கள் செய்யும் சிறு தவறுகளை அறிவுடையோர் பொறுத்துக்கொண்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கி நல்வழியைக் காட்ட வேண்டும்.

“பிழைத்த பொறுத்தல் பெருமை சிறுமை

இழைத்த தீங்கு எண்ணி இருத்தல்.” –காரியாசான், சிறுபஞ்சமூலம் :14.

பிறர் செய்த தவறைப் பொறுத்தல் பெருமை ; பிறர் செய்த தீமையை எண்ணிக்கொண்டிருத்தல் சிறுமை.

 

புதன், 10 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…57.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…57.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

”பெருமையும் சிறுமையும் தான் தர வருமே.”

தான் செய்யும் நல்வினை தீவினைக்கேற்பவே ஒருவனுக்கு உயர்வும் தாழ்வும் உண்டாகுமே அன்றி,  எவ்வகையிலும் பிறர் காரணம் ஆகார்.

“யதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா

நோதலும் தணீதலும் அவற்றோ ரன்ன

சாதலும் புதுவதன்றே

…………………………… கணியன் பூங்குன்றனார், புறநானூறு;192.

எவ்வூரும் நம் ஊரே; மக்கள் அனைவரும் நம் உறவினரே

நன்மையும் தீமையும் நம்மால் விளவதே; பிறர் தர வருவதன்று

 இன்பமும் துன்பமும் கூடப் பிறர்தரவருவதில்லை ; நாம் தான் அதற்குக் காரணம்.

சாதல் கூட ப் புதியதன்று, அதுஇயற்கையின் இயல்பான நிகழ்வே; இறப்பு, உலக உயிர்களுக்குப் பொதுவானதே.

செவ்வாய், 9 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…56.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…56.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

”கலக்கினும் தண்கடல் சேறாகாது”.

 

கடலை எப்படிக் கலக்கினாலும் அது சேறாகாது; தெளிவாகவே இருக்கும். பால்;, பொன், சந்தனம், அகில், கடல் ஆகிய ஐந்தும் தம் இயல்பில் திரியுமோ?  காய்ச்சினாலும்பால் தன் சுவையில் குன்றாது , உருக்கி ஊற்றினாலும் பொன் தன் இயல்பில் மாறாது; அரைத்தாலும் சந்தனம் தன் மணம் மாறாது ; தீயிலிட்டுப் புகைத்தாலும் அகில் மணம் வீசும் தன்மையில் குறையாது ; குளிர்ச்சி பொருந்திய கடலை எப்படிக் கலக்கினாலும் தன் இயல்பில் மாறாது தெளிவாகவே இருக்கும். அவை போல அறிவிற் சிறந்த பெரியோர் தமக்கு மிகுந்த துன்பம் வந்த போதிலும் தம் உயர்ந்த குணங்களிலிருந்து ஒருபோதும் மாறுபட மாட்டார்கள்.

 

“தீமை கண்டோர் திறத்தும் பெரியோர்

தாம் அறிந்து உணர்க என்ப மாதோ.” – கந்தரத்தனார்,நற்றிணை; 116.

 

கொடிய தீமை செய்வோரைக் கண்டவிட்த்தும் அவர் உள்ளம் வருந்தி இனி அவ்வாறு தீமைகள் செய்யாதிருக்கு என்று பல முறை எடுத்துக்கூறிப் பொறுத்திருப்பர் பெரியோர்.

திங்கள், 8 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…55.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…55.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

”பெற்றோர் எல்லாம் பிள்ளைகள் அல்லர்.”

 

பிறந்த பிள்ளைகள் அனைவரும் (நல்ல) பிள்ளகள் இல்லை. குடும்பத்தின் நிலமை அறிந்து,  ”தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை ; தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை “ எனும் சான்றோர் அறிவுரையை மனத்தில் கொண்டு, நல்வழி நடந்து, கல்வி கேள்விகளில் சிறந்த விளங்கும் பிள்ளைகளே பிள்ளைகள் ஆவர்.

”மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என் நோற்றான்கொல் எனும் சொல்.” –குறள்: 70.

 

பெற்று, வளர்த்து கல்வியறிவு பெறப் பாடுபட்ட பெற்றோர்க்குப் பெருமை சேர்க்கும் வகையில் சிறந்து விளங்கும் மகன், தந்தைக்குச் செய்ய வேண்டிய நன்றியாவது, நல்ல அறிவும் பண்பும் உடைய மகனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ? என்று ஊரார் சொல்லும் சொல்லே மகன் நன்றிக் கடன் ஆற்றும் வழியாம்.

 

பிள்ளைகளே…! பெற்றோர்க்கு எது பெருமை தருமோ அதைச் செய்யுங்கள் அதை மட்டுமே செய்யுங்கள்.

 

சனி, 6 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…54.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…54.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

”சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.”

வயதால், உருவத்தால், வசதிவாய்ப்பால் குறைந்தவர்கள் எல்லோரும் சிறுமைக் குணம் உடையவர் அல்லர் ; பிறர் வாடும் துன்பங்கண்டு மனம் வாருந்தி உதவி செய்ய முன்வராதவர்களே சிறியர் ஆவர்.

 

“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந் தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து.” –குறள்,667.

 

உருவத்தைக் கண்டு எவரையும் ஏளனம் செய்ய  வேண்டாம். அழகுடைய  பெரிய தேர் ஓடும்போதும் அசைந்து வலம் வரும்பொழுதும் அது கவிழ்ந்துவிடாதபடி, அளவில் மிகச்சிறியதாக இருக்கும் கடயாணியைப் போலச் சிறியோரும் வருந்தி வீழ்வாரைக் காக்கும் வல்லமை உடையவர்களே.

 

வெள்ளி, 5 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…53.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…53.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

”தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை

தெண்ணீர்க் கயத்துச் சிறு மீன் சினையினும்

நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை

அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு

மன்னர்க்கு இருக்க நிலழலாகும்மே.” –

 

விரிந்து பரந்த ஆலமரத்தின் விதை  தெளிந்த நீர் நிறைந்த குளத்தில் வாழும் சிறிய மீனின் முட்டையைவிடச் சிறியதாயினும் அவ்விதையில் தோன்றிய  ஆலமரம்  மன்னரின் யானை குதிரை , வீரர்கள் , தேர் ஆகிய நால்வகைப் படையுடன் தங்குதற்குரிய நிழலைத் தரும். துரும்பு சிறிதேயனாலும் பல் குத்த உதவுமே. அதுபோல,  நாம் செய்யும் சிறிய செயல் கூடப் பிறர்க்குப் பேருதவி ஆகுமே.

 

“காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது. “ –குறள்.102.

 

ஒருவர் செய்த உதவி மிகச் சிறியதே என்றாலும், அவ்வுதவி கிடைக்கப் பெற்ற காலம்,  இடம், சூழல், ஆகியவற்றால் அவ்வுதவி பேருதவியாகி இவ்வுலகத்தைவிடப் பெரிதாகப் போற்றப்படும்.

 

வியாழன், 4 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…52.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…52.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

”தேம்படு பனையின் திரள் பழத்து ஒரு விதை

வானுற ஓங்கி வளம்பெற வளரினும்

ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே.”

 

தேன் போலும் இனிய சுவையுடைய பனம் பழத்தின் பெரிய விதையிலிருந்து மரம், நெடிது உயர்ந்து வளர்ந்தாலும் அதன் நிழல் நகர்ந்துகொண்டே செல்வதால் ஒருவர் இளைப்பாறவும் நிழலைத் தருவதில்லை. அதுபோல வருந்துவார்க்குப் பயன்படாத பெரிய செல்வமும் பயனற்றதாம்.

“செல்வம் பெரிது உடையார் ஆயினும் கீழ்களை

நள்ளார் அறிவுடையார்.” –சமணமுனிவர்கள், நாலடியார்:27.7.

கீழ் மக்கள் எவ்வளவு செல்வம் உடையவராயிருந்தாலும் அறிவுள்ளவர்கள் அவர்களுடன் நட்புக் கொள்ளமாட்டார்கள்.

புதன், 3 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…51.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…51.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

”வறிஞர்க்கு அழகு வறுமையில் செம்மை.”

வறுமையில் வருந்தி வாடிநிற்கும் நிலைமை வந்த  போதும் அவன் ஏழையாயினும்  தன்மானத்தைவிட்டு எவரிடத்தும் சென்று நின்று, கையேந்தி வாழாமையே அவனுக்குப் பெருமையாகும்.

 

“செய்யீரோ என்னானும் என்னும் சொற்கு இன்னாதே

பையத் தாம் செல்லும் நெறி.” – சமண முனிவர்கள், நாலடியார்: 31’9.

 

ஏதாவது உதவி செய்ய மாட்டீரோ ? என்று பிறரிடம் சென்று கெஞ்சிக் கேட்கின்ற சொல்லைக் காட்டிலும் வறுமையுடன் வாழ்வது அவ்வளவு துன்பம் உடையதாகுமோ.? ஆகாது என்பதாம்.

செவ்வாய், 2 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…50.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…50.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

“அறிஞர்க்கு அழகு கற்று உணர்ந்து அடங்கல்.”

பற்பல சிறந்த நூல்களைப் படித்துத் தெளிந்த அறிவுடைய சான்றோர்,  தாம் அனைத்தும் அறிந்தவர் என்னும் ஆணவமின்றி  அனைவரிடத்தும் பண்புடன் பழகுவதே சிறப்புடையதாம்.

“நில நலத்தால் நந்திய நெல்லே போல் தம்தம்

குல நலத்தால் ஆகுவர் சான்றோர்.” –சமணமுனிவர்கள், நாலடியார் ; 18  ; 9.

நிலத்தின் வளத்தினால் பெருகிய நெல்லைப் போலத் தம்முடைய இனத்தின் சிறப்பினால் ஒழுக்கமும் உயர்வும் பெற்றுச் சான்றோராகத் திகழ்வர்.

திங்கள், 1 ஜனவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…49.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…49.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)

”உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்”

வீட்டிற்கு வந்த விருந்தினரை முகமலர்ச்சியுடன் வரவேற்று அவருடன் கலந்து உரையாடி மகிழ்ந்து, உணவு உண்ணுதலே நல்ல குடும்பத்துக்கு நன்மை பயக்கும் செயலாகும்.

 

“உப்பு இலிப் புற்கை உயிர்போல் கிளைஞர் மாட்டு

எக் கலத்தானும் இனிது..” – சமணமுனிவர்கள்,  நாலடியார்; 21.6.

உப்பு இல்லாத கூழும் இனிது

தன்னை உயிர்போல் நேசிக்கின்ற உறவினர் இடும் உப்பில்லாத புல்லரிசிக் கூழ் எந்தப் பாத்திரத்தில் கிடைப்பதாயினும் அது இனிமை உடையதாம்.