வியாழன், 29 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…92.

 

  இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…92.

உலகநாதர் இயற்றிய உலகநீதி

”மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்

        மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்

தனந்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்

        தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்

சினந்தேடிஅல்லலையும் தேட வேண்டாம்

        சினத்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்

வனந்தேடும் குறவருடை வள்ளி பங்கன்

        மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே.”

 

அலைபாயும் மனம் நினைத்தபடியெல்லாம் நீ போகாதே.  பகைவனை உறவு என்று எண்ணி நம்பி விடாதே. பாடுபட்டு உழைத்துச் சேர்த்ததை உண்டு மகிழாமல் வீணே மண்ணில் புதைக்காதே. கையில் பொருள் இருக்கும் காலத்தே நாளும் தருமம் செய்யத் தவறாதே. சினங்கொண்டு செய்வதறியாது தடுமாறித் துன்பம் அடையாதே. உன்மீது கோபம் கொண்டிருப்பவர் வீட்டின் வழியே செல்லாதே.  காட்டில் விலங்குகளை வேட்டையாடும் குறவருடைய பெண்ணாகிய வள்ளியை மணம் புரிந்த முருகனை வாழ்த்தி வழிபடுவாயாக.

திங்கள், 26 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…91.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…91.

உலகநாதர் இயற்றிய உலகநீதி

 

”ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்

     ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்

      வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்

போகாத இடந்தனிலே போக வேண்டாம்

     போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்

 வாகாரும் குறவருடைய வள்ளி பங்கன்

     மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே.”   

 

காலை எழுந்தவுடன் படிப்பு என்பதை நினைவில் கொண்டு நாள்தோறும் படிக்காமல் இருக்க வேண்டாம்.

எவரிடத்தும் பிறரைப்பற்றிக் குறைகூறிப் பழித்துப் பேச வேண்டாம்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பதை மறக்காதே..! பெற்ற தாயைத் தெய்வமாக மதித்துப் போற்றாமல் இருக்க வேண்டாம்.

வஞ்சக எண்ணம் கொண்ட கீழ்மக்களுடன் நட்புக் கொள்ள வேண்டாம்.

கயவர்கள் கூடும் இடங்கள்  போகத் தகாத இடங்களாகும் அங்கெல்லாம்  போக வேண்டாம்.

 பழகிய ஒருவரை முன்னேவிட்டுப் பின்னே பேசும் இழி செயலைச் செய்ய வேண்டாம்.

 நெஞ்சே..!  தோள்வலிமை மிக்க குறவர் இனத்தைச் சேர்ந்த வள்ளியின் கணவனாகிய மயிலேறும் முருகப் பெருமானை வணங்குவாயாக.

சனி, 24 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…90.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…90.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

நல்லவர் நட்பு நன்மை தரும்.

“நல்லோர் செயும் கேண்மை நாடோறும் நன்றாகும்

அல்லார் செயும் கேண்மை ஆகாதே – நல்லாய்கேள்

காய் முற்றின் தந்தீங் கனியாம் இளந்தளிர்நாள்

போய் முற்றின் என்னாகிப் போம்.”

 

நற்குணம் உடைய பெண்ணே கேட்பாயாக….!  காய் முற்றினால் இனிய சுவை உடைய நல்ல பழம் கிடைக்கும்; இளந்தளிர் பல நாள்கள் கடந்து முற்றினால் பயன் இல்லையே ! அவைபோல,  நல்லோரிடம் கொள்ளும் நட்பு நாள்தோறும் இனிதாக வளர்ந்து நன்மை தரும் ; தீயோரிடம்  நட்புக் கொண்டால் நாள்தோறும் வளராது தீமையே செய்யும்.

 

“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு “ –குறள்: 783.

 

நூலின் நற்பொருளைக் கற்க கற்க மேன்மேலும் இன்பம் தருதல் போன்று, பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பும் இன்பம் தரும்.

வெள்ளி, 23 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…89.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…89.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

மேன்மக்கள் நற்பண்பு.

”முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளக்

கனிவினும் நல்கார் கயவர் – நனிவிளைவில்

காயினும் ஆகும் கதலிதான் எட்டி பழுத்து

ஆயினும் ஆமோ அறை.”

 

வாழை, காயாக இருக்கும் போதும் பயன்படும்; எட்டிக்காய் பழுத்திருந்தாலும் அது பயன் படாது. அவைபோல, அறிவிற் சிறந்த பெரியோர் சினம் கொண்ட போதிலும் இல்லாதவர்க்கு வேண்டியதைக் கொடுத்து உதவுவர். ஆனால் கயவர்கள் மனமகிழ்ச்சியுடன் இருக்கும் போதும் பிறர்க்கு எதுவும் கொடுத்து உதவமாட்டார்கள்.

 

”இரவலர் உண்மையும் காண் இனி இரவலர்க்கு

ஈவோர் உண்மையும் காண்..”- பெருஞ்சித்திரனார், புறநானூறு: 162.

 

இரப்போர் இருத்தலும் உண்மை ; இரப்போர்க்குக் கொடுப்போர் இருப்பதும் உண்மை.

வியாழன், 22 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…88.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…88.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

உருவத்தைக் கண்டு இகழாதே

”உடலின் சிறுமை கண்டு ஒண்புலவர் கல்விக்

கடலின் பெருமை கடவார் – மடவரால்

கண் அளவாய் நின்றதோ காணும் கதிர் ஒளிதான்

விண் அளவாயிற்றோ விளம்பு.”

 

”பெண்ணே….. கதிர் ஒளியின்வரவால் மிகப்பெரிய இயற்கை,செயற்கை எழிலைக் காட்டும் கருமணியின் உருவம் சிறிய கண்ணின் அளவாகத்தானே இருக்கும். ஆதலால், உருவத்தில் சிறியவர் என்று கருதி அவரிடம் கடல் அளவு உள்ள அறிவின் ஆற்றலை எவரும் இகழ்வாரோ..?

 

”உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து.-குறள்: 667.

 

ஊர்ந்துவரும் பெரிய தேர்ச் சக்கரத்திற்கு உதவும் அச்சில் பொருத்தப்பட்டுள்ள  சிறிய ஆணியைப்போலச் சான்றோர் பலரைக் கொண்டுள்ளது இவ்வுலகம் ஆதலால், உருவில் சிறியவர் என்று உடலின் சிறுமை கண்டு எவரையும் இகழந்துவிடக்  கூடாது.

 

புதன், 21 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…87.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…87.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

நற்குணம் இல்லாதவர்..!

”உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ்

கொண்டு புகல்வது அவர் குற்றமே – வண்டுமலர்ச்

சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பன்றோ

காக்கை விரும்பும் கனி.”

 

தேன் உண்ணும் வண்டுகள் அழகிய மலர்ச்சோலையுள் புகுந்து  சுவையான தேன் உண்டு மகிழும் ; ஆனால் சோலையில்  நல்ல சுவை மிகுந்த கனிகள் இருந்தாலும் காக்கை வேப்பம் பழத்தையே விரும்பி உண்ணும். அதுபோல,  ஒருவரிடம் விரும்பத்தகுந்த நற்குணங்கள்  இருப்பினும் அவற்றைப் போற்றி உரைக்கும் கல்வியறிவு இல்லாத கீழ்மக்கள் அவரிடம் தீய குணம் இருப்பதாகப் பலரிடம் சென்று இட்டுக்கட்டிப் பேசுவர்.  

”பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்

நன்றுஅறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால்.” –சமண முனிவர்கள், நாலடியார் : 26:7.

நன்மை இன்னதென்று அறியாத மூடர்களுக்கு அறநெறிகளைப்பற்றி உரைப்பது, பன்றிக்குக் கூழ் ஊற்றும் தொட்டியில் மாம்பழச் சாற்றை ஊற்றியது போல் ஆகும்.

 

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…86.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…86.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.

“ஆக்கும் அறிவால் அலது பிறப்பினால்

மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க – நீக்க

பவரார் அரவின் பருமணி கண்டுஎன்றுங்

கவரார்கடலின் கடு.”

 

கொடிய நஞ்சுடைய பாம்பின் தலையில் இருக்கும் பருத்த மாணிக்கத்தைக் கண்டு அதனை யாரும் நீக்கமாட்டார். நிறைந்த பாற்கடலாயினும் அதில் தோன்றிய நஞ்சினை  எவரும் விரும்பி ஏற்றுக் கொள்ள மாட்டார். அறிவின்மையால் கீழோர் எனக் கருதும்  அவர்களும்  பெற்ற அறிவினால் உயர்ந்தோராகவே ஏற்றுக்கொள்வர். பிறப்பினால் எவரையும் உயர்ந்தோராகவும் இழிந்தோராகவும் கொள்ளக் கூடாது.

 

“வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.” – பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், புறநானூறு:183.

கீழோர் மேலோர் என்ற வேறுபாடுள்ள மக்களுள், கீழ்க்குலத்துள் ஒருவன் கற்று வல்லவனாயின் அவனை மேற்குலத்தோரும் போற்றி வழிபடுவர். கல்வியால் கீழோரும் மேலோர் ஆவர்.

 

திங்கள், 19 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…85.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…85.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

இனியவை கூறல்.

“இன்சொலால் அன்றி இருநீர் வியன் உலகம்

வன்சொலால் என்றும் மகிழாதே – பொன்செய்

அதிர் வளையாய் பொங்காது அழல் கதிரால் தண்ணென்

கதிர் வரவால் பொங்கும் கடல்.”

ஒலிக்கின்ற அழகிய வளையல் அணிந்த  பெண்ணே….! குளிர்ச்சி தரும் நிலவின் ஒளிமுகம் கண்டே கடல் பொங்கும் ஆனால், கடும் வெப்பத்தை உமிழ்கின்ற சூரியன் வரவால் கடல் பொங்காது. அதுபோல,   நிறைந்த நீரால் சூழப்பட்ட இவ்வுலகில் வாழும்    மக்கள் மனம் குளிர இனிய சொற்களைக் கேட்டே மகிழ்ச்சி அடைவர்; கடுஞ் சொற்களைக்கேட்டு ஒருபோதும் மக்கள் மகிழ்ச்சி அடைய மாட்டார்.

“முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம்

இன்சொல் இனிதே அறம்.- குறள்:93.

முகமலர்ச்சியோடு இனிதாக ஒருவரைப் பார்த்து மனம் மகிழ்ந்து இனிய சொற்களைச் சொல்வதே அறம் எனப்படுவதாகும்.

 

 

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…84.

 


 

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…84.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

உயர்ந்தோர் என்றும் உயர்ந்தோரே..!

“தம்மையும் தங்கள் தலைமையும் பார்த்து உயர்ந்தோர்

தம்மை மதியார் தமை அடைந்தோர் – தம்மின்

இழியினும் செல்வர் இடர் தீர்ப்பர் அல்கு

கழியினும் செலாதோ கடல்.”

 

அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் கடல் அருகே இருக்கும் உப்பங்கழியிலும் சென்று பாயும், அதுபோல,அறிவிலும் உயர்ந்த ஒழுக்கங்களிலும் உயர்ந்த சான்றோர், தம்மைச் சார்ந்தவர் வறுமையில் உழலும் தாழ்ந்தவராயினும் அவர் இருக்கும் இடம் சென்று அவருடைய துன்பத்தை  நீக்குவர்.

“ இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது

வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்

எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே.” – பெருஞ்சித்திரனார், புறநானூறு: 163.

என் இனிய துணைவியே ….! குமணன் எமக்கு அளித்த செல்வத்தை இன்னார் இனியார் என்று பாராது , என்னையும் கேட்காது, நாம் மட்டுமே வளமுடன் வாழ வேண்டும் என்று பாதுகாத்து வைத்துக் கொள்ள நினையாது எல்லோர்க்கும் வழங்கி மகிழ்வாயாக.

 

 

சனி, 17 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…83.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…83.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்.

“இல்லானுக்கு அன்பு இங்கு இடம் பொருள் ஏவல் மற்று

எல்லாம் இருந்து அவனுக்கு என் செய்யும் – நல்லா

மொழி இலார்க்கு ஏது முது நூல் தெரியும்

விழி இலார்க்கு ஏது விளக்கு.”

நற்குணம் உடைய பெண்ணே ….!

 

வாய் பேச இயலாதவனிடம் சிறப்பு வாய்ந்த பழைய நூல் இருந்தும் பயனில்லை ; கண் பார்வை இல்லாதவன் முன்னே விளக்கு இருந்தும் பயனில்லை ;  அவ்வாறே, உயிர்களிடத்து அன்பு இல்லாதவனிடம் வசதியாக வாழ்வதற்குரிய இடமும், பொருளும் ,  கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர ஆள்களும்  இன்ன பிறவும் இருந்தாலும் பயனில்லை.

 

“அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை.” – நல்லந்துவனார், கலித்தொகை:133.

அன்பு எனப்படுவது தன் சுற்றத்தாரைச் சினவாதிருத்தல்.

 

 

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…82.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…82.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

செல்வச் செருக்கு

”தொலையாப் பெருஞ் செல்வத் தோற்றத்தோம் என்று

தலையாயவர் செருக்குச் சார்தல் – இல்லையால்

இரைக்கும் வண்டூது மலர் ஈர்ங்கோதய் மேரு

வரைக்கும் வந்தன்று வளைவு.”

 

பெண்ணே…! எவராலும் எந்தக் காலத்திலும் அசைக்க முடியாது இருந்த  மேரு மலையும் ஒரு காலத்தில் வளைவு வந்தது .  ஆதலால், பெரும் செல்வக்குடியில் பிறந்துள்ளோம் எக்காலத்தும் நமக்கு அழிவில்லை என்று, மேன்மை குணம் உடையோர் ஒருபோதும்  கர்வம் கொள்ள மாட்டார்.

மலையே நிலை குலையும் போது உருண்டோடிடும் பணம், காசு நிலைத்து நிற்குமோ…?

 

“பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளைத்

தழீஇம் தழீஇம் தண்ணம் படும்.” – சமண முனிவர்கள், நாலடியார் : 1:6.

நிறைந்த செல்வத்தைச் சேர்த்து வைத்திருக்கின்றவர்களே …! நல்வினையாற்ற உங்கள் பொருளைக் கொடுங்கள் ஏனெனில் நாளைத் தழீஇம் தழீஇம் என்ற ஓசையுடன் அடிக்கப்படும் சாவுப் பறை உங்களுக்கும் அடிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வியாழன், 15 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…81.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…81.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

“எருக்கமொடு சுருக்கம் பெற்ற பொருட்கு ஏற்ப

விருப்பமொடு கொடுப்பர் மேலோர்  - சுரக்கும்

மலை அளவு நின்றமுலை மாதே மதியின்

கலை அளவு நின்ற கதிர்.”

 சுரக்கும் மலை அளவு நின்ற முலை மாதே…!  ஒளிரும் கதிர்களைக் கொண்ட நிலவும், தன்னுடைய வளர்ச்சிக்கும் தேய்வுக்கும் தக்கவாறுதான் ஒளியைத் தரும். அதுபோல,  வாரி வழங்கும் வள்ளல் குணமுடைய மேன்மக்களும் தம்மிடத்துள்ள செல்வ வளத்திற்கும் , குறைவுக்கும் தக்கவாறே பிறர்க்குக் கொடுத்து உதவுவர்

.

“நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே

இல் என மறுக்கும் சிறுமையும் இலனே.” –மாடலன் மதுரைக் குமரனார், புறநானூறு : 180.

 

ஈர்ந்தூர் கிழான், நாள்தோறும் தொடர்ந்து கொடுக்கும் செல்வ வளம் உடையவன் அல்லன் ; ஆயினும் இரந்தோர்க்கு இல்லை என மறுக்கும் சிறுமை உடையவனும் அல்லன்.

 

 

புதன், 14 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…80.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…80.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

பிறத்தலும் இறத்தலும் இயற்கையே.

“வருந்தும் உயிர் ஒன்பால் வாயில் உடம்பில்

பொருந்துதல் தானே புதுமை – திருந்திழாய்

சீதநீர் பொள்ளற்  சிறுகுடத்து நில்லாது

வீதலோ நிற்றல் வியப்பு.”

 

பெண்ணே…! ஓட்டைக் குடத்தில் நிரப்பிய நீர்  நில்லாமல் ஒழுகிப் போதலே இயல்பு ;  அப்படி நீர் ஒழுகாமல் நின்றால் தானே வியப்பு. அதுபோல,  ஒன்பது ஓட்டைகளை உடைய உடம்பில்  உயிர் தங்காது  நீங்குதல் இயல்பு ;  உடம்பில் உயிர் நீங்காது நிற்குமோ ? அப்படி நீங்காது நின்றால்தானே வியப்பு.

“காடு முன்னினரே நாடு கொண்டோரும்

நினக்கும் வருதல் வைகல் அற்றே.” – காவிட்டனார், புறநானூறு : 359.

 

வெல்லமுடியாத பெரிய நாடுகளை வென்ற முடிமன்னர்களும் முடிவில் சுடுகாட்டுத் தீயில் சென்று அடைந்தனரே, அவ்வாறே உனக்கும் ஒருநாள் காடு அடையும் நாள் வரும்.

 

 

செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…79.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…79.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

சான்றோர் இயல்பு.

”தம்குறை தீர்வு உள்ளார் தளர்ந்து பிறர்க்கு உறும்

வெங்குறை தீர்க்கிற்பார் விழுமியோர் – திங்கள்

கறை இருளை நீக்கக் கருதாது உலகில்

நிறை இருளை நீக்குமேல் நின்று”-

 

 வெள்ளி நிலா தன்னிடத்தில் விளங்கும் களங்கமாகிய இருளை நீக்குதற்கு நினையாமல், உலகில் நிறைந்துள்ள இருளை அகற்றி உயிர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். அதுபோல, நற்குணங்கள் நிறைந்த உயர்ந்தோர் தமக்குத் துன்பம் தரும்  செயல்களை நீக்க நினையாமல் பிறர்க்கும் வரும் துன்பங்களைக் கண்டு மனம் உருகி  அவர்தம் துன்பங்களைத் தீர்த்து வைப்பர்.

 

”பிறர் நோயும் தம் நோய் போல்போற்றி அறனறிதல்

சான்றவர்க் கெல்லாம் கடன்….”- நல்லந்துவனார், கலித்தொகை: 139.

 

பிறருடைய துன்பத்தையும் தம் துன்பம் போல் போற்றி ஒழுகுதல் சான்றோர்க்கெல்லாம்  கடமையாகும்.

 

 

திங்கள், 12 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…78.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…78.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

”சினம் காக்க.

“உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினங்காத்துக்

கொள்ளும் குணமே குணம் என்க – வெள்ளம்

தடுத்தல் அரிதோ தடங்கரைதான் பேர்த்து

விடுத்தல் அரிதோ விளம்பு.”

வெள்ளம் புகுந்து ஊரை அழித்துவிடாமல் கரையை வலுவாகக் கட்டி காத்தல் அரிய  செயலாகும்; ஒரு சிலர் நலன் காக்கக் கரையை உடைத்தல் எளிய செயலாகும். அதுபோல,   எதற்கெடுத்தாலும் சினம் கொள்ளுதல் நல்ல குணம் அல்ல ; உயிரை மாய்க்கும் தன்மையுடைய  சினம் கொள்ளாமல்  அடக்கிக் கொள்ளும் குணமே  நற்குணமாகும்.

 

”வெல்வது வேண்டின் வெகுளாதான் நோன்பு இனிதே”- இனியவை நாற்பது: 24.

எடுத்த செயலில் வெற்றி பெற வேண்டின் எவரிடத்தும் சினம் கொள்ளாத உள்ள உறுதி மிக இனிதே,.

மனிதனாய் இரு, எந்நிலையிலும் சினம் கொள்ளாதே.

 

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…77.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…77.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

இல்லறமே நல்லறம்.

“காதல் மனையாளும் காதலனும் மாறின்றித்

தீதுஇல் ஒரு கருமம் செய்பவே – ஓதுகலை

எண்ணிரண்டும் ஒன்றுமதி என்முகத்தாய் நோக்கல்தான்

கண்ணிரண்டும் ஒன்றையே காண்.”

 

 நிலவு போன்ற முகத்தை உடையவளே..! கண்கள் இரண்டும்  தனித்தனியே இரண்டு காட்சிகளைக் காணாமல்  ஒரே பொருளைக் காண்பது போலக் இல்லறம் நடத்தும் கணவனும் மனைவியும் தம்முள் மாறுபாடு கொள்ளாமல் நல்லது கெட்டது எதுவாயினும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து  ஒத்து உணர்ந்து இல்லறக் கடமைகளைச் செய்தல் வேண்டும்.

 

“மனைக்கு விளக்கு ஆகிய வாணுதல் கணவன்

முனைக்கு வரம்பு ஆகிய வென்வேல் நெடுந்தகை.- ஐயூர் முடவனார், புறநானூறு: 314.

ஒளி பொருந்திய நெற்றியை உடைய அவளோ இல்லத்திற்கு விளக்காகத் திகழ்ந்து இல்லறத்தை நல்லறமாக்குபவள் , அவள் கணவனோ வெற்றியைத்தரும் வேல் ஏந்திப் பகைவர் படை எனும் வெள்ளத்தைக் கற்சிறை ( கல்லணை) போல் ஒருவனாய் நின்று தடுத்து நிறுத்தும் ஆற்றல் வாய்ந்தவன்.

 

சனி, 10 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…76.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…76.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி

நட்பின் சிறப்பு

“நீக்கம் அறும் இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்

நோக்கின் அவர் பெருமை நொய்தகும் – பூக்குழலாய்

நெல்லின் உமி சிறிது நீங்கிப் பழமைபோல்

புல்லினும் திண்மை நிலை போம்.”

 

பூ மணக்கும் கூந்தலை உடைய பெண்ணே…! நெல்லின் மேல் கூடி இருக்கும் உமி சிறிதளவு நீங்கிப் பிறகு கூடினாலும் அது, முளைத்தற்குரிய வலிமையை இழந்துவிடும். அதுபோல, ஒருவரை ஒருவர் பிரியாது நட்புடன் இருக்கும் நண்பர்கள் சூழ்நிலையால் சிறிது காலம் பிரிந்திருந்து பின் மீண்டும் கூடினாலும் அவ்விருவரின் நட்பு முன்பு போல் இல்லாது குறைந்தே காணப்படும்.

 

“கோட்டுப் பூப் போல மலர்ந்து பின் கூம்பாது

வேட்டதே வேட்டது ஆம் நட்பு ஆட்சி…”-சமண முனிவர்கள் : நாலடியார்; 22.5.

மலர்ந்து பின் கூம்பாது மலர்ந்தபடியே இருக்கும் மரத்தில் மலரும் மலரைப்போல, இறுதிவரையிலும் விருப்பத்துடன் தொடர்வதே நட்பின் சிறப்பாகும்.

 

வெள்ளி, 9 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…75.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…75.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி

” பிறர்க்கு உதவி செய்யார் பெருஞ் செல்வம் வேறு

பிறர்க்கு உதவி ஆக்குபவர் வேறாம் – பிறர்க்கு உதவி

செய்யாக் கருங்கடல் நீர் சென்று பெயல் முகந்து

பொய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.”

 

குடிநீராக உதவாத கடல் நீரைக் கருமேகங்கள் சூழ்ந்து முகந்து கொண்டு மேல் எழுந்து மழையாகப் பொழிந்து அனைத்து உயிர்களுக்கும் பயன் தரும். அதுபோல,  இல்லாதவர்களுக்கு உதவாத பெருஞ்செல்வம் பெற்றவர்தம் செவத்தை வேறு எவராவது எடுத்துக் கொடுப்பர்.

“பொருளானாம் எல்லமென்று ஈயாது இவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு. குறள்: 1002

 

இவ்வுலகில் பொருளால் எல்லாம் கைகூடும் என்று மயங்கிப் பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் செல்வத்தைப் பூட்டி வைத்திருக்கும் ஒருவன், மனிதப் பிறவியில் இழிந்த பிறவியாவான்.

 

வியாழன், 8 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…74.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…74.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை. )

”துணையோடு அல்லது நெடுவழி போகேல்”

துணை இல்லாமல் நெடுந்தூரம் பயணம் போகாதே.

வாழ்வில் நல்வழி நடக்க உறுதுணையாவது நம் தமிழ் மறையாகிய திருக்குறள் ஒன்றே.

இவைகாண் உலகிற்கு இயலாம் ஆறே”.

இந்நூலில் சொல்லப்பெற்ற வாழ்வியல் நெறிகள் யாவையும்  உலக மக்கள் அனைவரின் நல்வாழ்வுக்கு ஏற்ற வழிகளாம்.

அறநூல்கள் யாவும் திருக்குறளைஅடியொற்றியே எழுந்துள்ளன என்பதை மறவற்க.

புதன், 7 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…73.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…73.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை. )

”இருவர்தம் சொல்லையும் எழு தரம் கேட்டே

இருவரும் பொருந்த உரையா ராயின்

மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர் தாம்

மனம் உருகி நின்று அழுத கண்ணீர்

முறை உறத் தேவர் மூவர் காக்கினும்

வழிவழி ஈர்வதோர் வாளாகும்மே.”

 

நீதி வழங்கும் தீர்ப்பாளர் இரு கட்சிக்காரர்களின் முறையீட்டையும் ஒரு முறை, 

இருமுறை அல்ல பல முறை கேட்டு,  இரு கட்சியினரும் ஏற்றுக்கொள்ளும்படி நீதி 

நெறிமுறை வழுவாது தீர்ப்பு அளிக்க வேண்டும். அப்படிச் சொல்லாமல் ஒரு 

கட்சியினருக்கு ஆதரவாக முறையின்றித் தீர்ப்பு அளித்தால், வழக்கில் தோற்ற 

நேர்மையாளர் அழுத கண்ணீர் , தீர்ப்பு வழங்கிய நீதிபதியின் குடியை அவருடைய

தலைமுறையும் அழிந்துபோக அழிக்கும்  வாளாகிவிடும். அந்த நீதிபதியைக் 

கடவுளாலும் காப்பற்ற முடியாது.

 

“வாய்மையின் வழாது மன்னுயிர் ஓம்புநர்க்கு

யாவதும் உண்டோ எய்தா அரும் பொருள் .‘  -இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் : காதை;11.

 

வாய்மை தவறாமல் உயிர்கள் அனைத்தையும் காப்பவர்களுக்குக் கிட்டாத 

அரும்பொருள் என்று ஏதேனும் உண்டோ..? இல்லை என்பதாம்.

செவ்வாய், 6 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…72.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…72.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை. )

”மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையால்

பொய் போலும்மே பொய் போலும்மே”

சான்றோர் நிறைந்த  நீதிமன்றத்தின் முன்  உண்மையை உரத்துக்கூறும் சொல் வன்மை இல்லாமயால் , உண்மையும் பொய் போலத்  தோன்றக்கூடும். ஆயினும் உண்மை ஒரு போதும் சாவதில்லை; பொய்தான் விரைந்து அழியும்.

“ வாழ்தல் வேண்டிப்

பொய் கூறேன் மெய் கூறுவல்… “ – மருதனிள நாகனார், புறநானூறு: 139.

உயிர் வாழ வேண்டிப் பொய் சொல்ல மாட்டேன் ; உண்மையே பேசுவேன்.

 

திங்கள், 5 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…71.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…71.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை. )

”பொய்உடை ஒருவன் சொல் வன்மையினால்

மெய் போலும்மே மெய் போலும்மே.”

உண்மை என்ற ஒன்று இருப்பதை அறியாது,  பொய்யை உண்மை போல் பேச வல்ல பொய்யன் ஒருவன் சொல்லும் பொய்  மெய் போலத் தோன்றலாம் ஆயினும் அவனை நம்பக்கூடாது.

 

”பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்

பேதை வினைமேற் கொளின்.” –குறள்.836.

 

செய்யும் முறை அறியாத பேதையானவன், ஒரு செயலைச் செய்வானாயின் அச்செயல் கெடுவதோடு தானும் விலங்கிடப்படுவான்.

 

ஞாயிறு, 4 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…70.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…70.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை. )

”வாய்ப் பறை ஆகவும் நாக்கு அடிப்பாகவும்

சாற்றுவது ஒன்றைப் போற்றிக் கேண்மின்.”

முரசு அடித்து ஊரின் நடுவே நின்று ஒருவன் கூறும் செய்தியை உற்றுக் கேட்கும் ஊரினர் போல், தம்முடைய வாயை ஒலிக்கும் பறையாகவும், அப்பறையை அடித்து முழக்கும் கம்பாக தம் நாக்கையும் கொண்டு  சான்றோர் பலகாலும் உரக்கக் கூறும் செய்திகளைக் காது கொடுத்துக் கேட்பீர்களாக.

“மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்

நன்று அறி உள்ளத்துச் சான்றோர்…” – அரிசில் கிழார், பதிற்றுப் பத்து : 72.

மக்கள் அனைவரையும் காப்பதற்குரிய அறிவுரைகளைக் கூறும்  அறம் நிறைந்த உள்ளத்தை உடைய சான்றோர் மொழிகளைப் போற்றி வாழுங்கள்.