ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :531

திருக்குறள் – சிறப்புரை :531
பொச்சாவாமை
(களிப்பு மிகுதியால் சோர்வு கொள்ளாதிருத்தல்)
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு . ---- ௫௩௧
வெற்றியால் பெற்ற அளவுகடந்த உவகைக்களிப்பால் தோன்றும் மறதி, அளவுகடந்த கடுஞ்சினத்தால் விளையும் தீமையைக் காட்டிலும் கொடியது.
“ அமிழ்துபொதி துவர்வாய் அசைநடை விறலியர்
பாடல் சான்று நீடினை உறைதலின்
வெள்வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என
உள்ளுவர் கொல்லோ நின் உணராதோரே” – பதிற்றுப்பத்து.

வேந்தே..! வெற்றிக்களிப்பில் அமிழ்தம் போன்ற உமிழ் நீரையுடைய சிவந்த வாயையும் தளர்ந்த நடையையும் உடைய விறலியர், பாட்டுக்களைப் பாட, பாடல் மிகுதலின் அவற்றைக்கேட்டு அங்கேயே வெகுநேரம் தங்கினாய், அதனால் வெள்ளிய வேலையுடைய சேரன் ஐம்புல இன்பங்களுக்கு வயப்படுபவன் போலும் என்று நின் இயல்பை முழுமையாக உணராதவர்கள் நினைப்பார்களோ?   

சனி, 29 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :530

திருக்குறள் – சிறப்புரை :530
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல். --- 0
வேந்தன்,  தன்னிடமிருந்து பிரிந்துவென்ற ஒருவன் மீண்டும் தன்னிடம் வந்து சேர்ந்தானாகில், அவன் பிரிந்து சென்றதற்குரிய காரணங்களைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்து அவனைச் சுற்றமாகக் கொள்ளல் வேண்டும்.
“ பிழைத்த பொறுத்தல் பெருமை, சிறுமை
 இழைத்த தீங்கு எண்ணி இருத்தல்.” சிறுபஞ்சமூலம்.

பிறர் செய்த தவறுகளைப் பொறுத்தல் பெருமை ; பிறர் செய்த தீமைகளை எண்ணிக் கொண்டிருத்தல் சிறுமை.

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :529

திருக்குறள் – சிறப்புரை :529
தமராகித் தற்துறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும். ----
  தமக்குச் சுற்றமாக இருந்தவர் தம்மைவிட்டு நீங்கிச் சென்றாராயினும் பின்னர் அவ்வருத்தம் நீங்கித் தாமேவந்து கூடிக்கொள்வர். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லையே.”
” பைஆர் அகல் அல்குல் பைந்தொடி எக்காலும்
 செய்யார் எனினும் தமர் செய்வர் பெய்யுமாம்
 பெய்யாது எனினும் மழை.” – பழமொழி.

பாம்பின் படம் ஒத்த அகன்ற அல்குலையும் பொன் வளையலையும் உடையாய்,  மழை பருவத்தில் பெய்யவில்லையானாலும் பிறகேனும் பெய்யும் அதுபோல, எப்பொழுதும் எதுவும் செய்யார் என்று எண்ணியிருந்தாலும் உற்ற நேரத்தில் உறவினரே உதவி செய்ய வல்லார்.

வியாழன், 27 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :528

திருக்குறள் – சிறப்புரை :528
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். ---
வேந்தன், எல்லோரையும் பொதுவாக நோக்காது  அவரவர் தகுதி அறிந்து சிறப்புச் செய்தால், அச்சிறப்பினை எதிர்நோக்கிச் சுற்றமாகச் சூழ்ந்து வாழும்  சான்றோர் பலராவர்.
“ பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே” – புறநானூறு.

வேந்தே (மலையமான் திருமுடிக்காரி) புலவர்தம் புலமைத்திறம் காணாது எல்லோரையும் பொதுவாக நோக்குதலைத் தவிர்ப்பாயாக. புலமைத்திறம் அறிந்து போற்றுக.

புதன், 26 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :527

திருக்குறள் – சிறப்புரை :527
காக்கை கரவா கரைந்துன்னும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள. ---
காகம், கிடைத்தவற்றை மறைத்துத் தான் மட்டும் உண்ணும் வழக்கம் உடையதன்று ;  தன் இனத்தைக் கூவி அழைத்து உண்ணும் பண்புடையது.  சுற்றம் சூழ வாழும் அத்தகைய பண்புடையோர்க்கே ஆக்கமும்  உளதாகும்.
“ பொற்றொடி மகளிர் புறங்கடை உகுத்த
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல்பட
அகல் அங்காடி அசைநிழல் குவித்த
பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை “ --- நற்றிணை.
வந்த விருந்தினரைப் போற்றுவதற்காகப் பொன்னாலாகிய தொடியுடைய மகளிர் உணவு சமைத்தனர், அவ்வுணவில் ஒரு கவளம் எடுத்து முற்றத்தில் பலியாக இட்டனர். கொக்கின் நகம் போன்ற சோற்றைப் பசிய கண்ணையுடைய காக்கை உண்ணும்.


செவ்வாய், 25 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :526

திருக்குறள் – சிறப்புரை :526
பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல். ---
ஒருவன் பெரும் கொடையாளியாகவும் சினம் கொள்வதை விரும்பாதவனாகவும் இருப்பானாகில் அவனைவிடச் சிறந்த சுற்றம் உடையவர், இவ்வுலகில் வேறு எவரும் இலர்.
“ ஈரநல் மொழி இரவலர்க்கு ஈந்த
 அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல் தொடித் தடக்கைக் காரி..—சிறுபாணாற்றுப்படை.

பரிசில் பெற வருவோரிடம் இனிமையாகப் பேசிக் கொடை வழங்கி, ஒளி பொருந்தியதும் பகைவர்க்கு அச்சத்தைத் தரக்கூடியதுமான வேலைத் தாங்கிய, கழல்தொடியணிந்த கையை உடையவன் காரி.

திங்கள், 24 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :525

திருக்குறள் – சிறப்புரை :525
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும். ----
 கொடுத்து மகிழ்தலோடு இன்சொல் வழங்கும் ஆற்றலும் உடைய ஒருவனை  வழி வழியாகச் சுற்றத்தினர் சூழ்ந்து நிற்பர்.
“ ஒன்றுபோல் உள்நெகிழ்ந்து ஈயின் சிறிது எனினும்
  குன்றுபோல் கூடும் பயன்:” --- சிறுபஞ்சமூலம்.
 இல்லார்க்கு மனம் இரங்கிக் கொடுக்கும் பொருள் சிறிதாயினும் அதனால் வரும் பயன் குன்றுபோல் மிகப் பெரிதாம்.


ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :524

திருக்குறள் – சிறப்புரை :524
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன். ----
உற்றார், உறவினர், நண்பராகிய சுற்றத்தினர் சூழ்ந்து கொள்ளுமாறு அன்போடு இன்புற்று வாழ்வதே, ஒருவன் செல்வத்தைப் பெற்றதால் பெற்ற பயனாகும்.
“ உப்பு இலிப் புற்கை உயிர்போல் கிளைஞர் மாட்டு
 எக்கலத்தானும் இனிது.: -- நாலடியார்.

 தன்னை உயிர்போல நேசிக்கின்ற உறவினர் இடும் உப்பில்லாத புல்லரிசிக் கூழ், எந்தப் பாத்திரத்தில் கிடைப்பதாயினும் அது இனிமை உடையதாம். 

சனி, 22 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :523

திருக்குறள் – சிறப்புரை :523
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. -----
சுற்றத்தினரோடு மகிழ்ச்சியுடன் கலந்து உரையாடி உறவாட வாய்ப்பில்லாதவன் வாழ்க்கை, கரையில்லாத குளத்தில் நீர் நிறைந்ததைப் போன்று -- பயனற்றதாம்.
“ கெட்டார்க்கு நட்டாரோ இல்” – பழமொழி.

வாழ்ந்து கெட்டவர்க்கு நட்புடையார் என்று ஒருவரும் இல்லை.

வெள்ளி, 21 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :522

திருக்குறள் – சிறப்புரை :522
விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும். ----- ௨௨
 அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்கு அமையுமானால் அவன் வாழ்வில் நன்மைகள் பலவும் வந்து சேரும்.
“ கட்டு இல்லா மூதூர் உறைவு இன்னா.” --  இன்னா நாற்பது.

சுற்றமாகிய கட்டு இல்லாத பழைய ஊரிலே வாழ்தல் துன்பம் தரும்.

வியாழன், 20 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :521

திருக்குறள் – சிறப்புரை :521
சுற்றம் தழால்
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. ---
 ஒருவன், வாழ்ந்து கெட்டு வறுமையுற்ற நிலையிலும் அவன் வளமாக வாழ்ந்த காலத்துக் கொண்ட பழைய உறவை மனதில் கொண்டு அவனைப் பாராட்டி மகிழும் பண்பு, சுற்றத்தாரிடம் உண்டு.
“ சுட்டு அறிப பொன்னின் நலம் காண்பார்
  கெட்டு அறிப கேளிரான் ஆய பயன். – நான்மணிக்கடிகை.
பொன்னின் தரம் அறிய, அதனை உருக்கி அறிவார்கள் ; உறவினரால் உண்டாகும் பயனைத் தம்முடைய செல்வம் எல்லாம் அழிந்து வறுமையுற்ற போதுதான் அறிவார்கள்.


புதன், 19 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :520

திருக்குறள் – சிறப்புரை :520
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு. ----  ௨0
அரசன் ஆணையைச் செயல்படுத்தும் வினைஞன் மனம் கோணாது செயல்படுவானாயின் மக்களும் கவலையின்றி வாழ்வர் ஆகையால் மன்னன் நாள்தோறும் அவன் செயல் முறைகளை ஆராய்ந்து அறிதல் வேண்டும்.
“ நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும். ----- குறள். 553
நாள்தோறும் தன் ஆட்சியில் விளையும் நன்மை தீமைகளை ஆராய்ந்து  முறை செய்யாத அரசன், நாள்தோறும் சிறிது சிறிதாக தன் நாட்டை இழந்து கெடுவான்.

.

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :519

திருக்குறள் – சிறப்புரை :519
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு. ----
தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு செயலைச் செய்து முடிக்க,  பெரும் முயற்சியுடன் கடுமையாக உழைக்கும் ஒருவனை,  வினை ஏவியவன் தவறாக நினப்பானாகில், அவன் தேடிய செல்வம் அவனை விட்டு நீங்கும்.
“ கேளிர்கள் நெஞ்சழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியேபோல் தமியவே தேயுமால்.” – கலித்தொகை.

உறவினர்கள் மனம் வருந்தும்படியாகத் தேடிக் குவித்த செல்வங்கள், பேணும் முயற்சி இல்லாத மன்னவனின் குடிகள்போலத் தாமாகவே தேய்ந்து அழியும்.

திங்கள், 17 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :518

திருக்குறள் – சிறப்புரை :518
வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல். ---
ஒரு செயலைத் திறம்படச் செய்தற்குரியவனைத் தேர்ந்தெடுத்த பின்னர் அவனைச் அச்செயலுக்குப் பொறுப்புடையவனாகச் செய்தல் வேண்டும்.
 அஃதாவது குறித்த வேலையைக் குறித்த காலத்தில் குறையின்றிச் செய்து முடித்தலாம்.
“ எளியர் இவர் என்று இகழ்ந்து உரையாராகி
 ஒளிபட வாழ்தல் இனிது. --- இனியவை நாற்பது.

ஏழை எளியவர்களை இகழ்ந்து பேசாது,  புகழ் உண்டாகும்படி வாழ்தல் இனிது.

ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :517

திருக்குறள் – சிறப்புரை :517
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். ----
இந்த வேலையை, இன்ன நுட்பத்தால், இவனே முடிக்க வல்லான் என்று ஆராய்ந்த  பிறகு அந்த வேலயை அவனிடத்து ஒப்படைக்க வேண்டும்.
எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்வொண்ணாது
 புண்ணியம் வந்து எய்து போது அல்லால் கண் இலான்
 மாங்காய் விழ எறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே

ஆம் காலம் ஆகும் அவர்க்கு, -- நல்வழி. 

சனி, 15 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :516

திருக்குறள் – சிறப்புரை :516
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல். ----
ஒரு செயலைச் செய்து முடிக்கும் திறமை யுடையவனைத் தேர்ந்து, செயலின் தன்மைய ஆராய்ந்து, அதனை நிறைவேற்றுதற்குரிய காலத்தையும் கணக்கிட்டு அச்செயலைச் செய்து முடிக்க வேண்டும்.
“ நன்றி விளைவும் தீதொடு வரும் … “ நற்றிணை.

 நன்மை கருதிச் செய்யும் செயல் தீமையாய் முடிவதும் உண்டு.

வெள்ளி, 14 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :515

திருக்குறள் – சிறப்புரை :515
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
 சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.. ---
ஒரு செயலின் தன்மையும் அதனைச் செய்து முடிப்பதற்குரிய வழி முறைகளையும் ஆராய்ந்து அறிந்து  செய்து முடிக்கும் வல்லமையுடையவனைத் தவிர வேறு ஒருவன் சிறந்தவன் என்று கருதி கட்டளையிடக் கூடாது.
“ சீர் உடை ஆண்மை செய்கையின் அறிப” -- முதுமொழிக் காஞ்சி.

முயற்சியின் வலிமை முடிக்கும் செயலால் அறியப்படும். 

வியாழன், 13 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :514

திருக்குறள் – சிறப்புரை :514
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர். ----
எல்லாவகையாலும் ஆராய்ந்து தெளிந்து இவரே இப்பணிக்கு உரியவர் என்று ஒருவரை முடிவு செய்தாலும் பணியாற்றும் வழிமுறைகளில் வேறுபடும் மாந்தர்பலரும் உலகில் உண்டு.
“ எய்திய செல்வத்தார் ஆயினும் கீழ்களைச்
  செய் தொழிலால் காணப்படும்.” – நாலடியார்.

எவ்வளவுதான் செல்வம் பெற்றவராயிருந்தாலும் செய்யும் தொழிலைக் கொண்டு அவர்கள் கீழ் மக்களே என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

புதன், 12 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :513

திருக்குறள் – சிறப்புரை :513
அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு. ----
அன்பு, அறிவு, துணிவு, ஆசையின்மை ஆகிய இந்நான்கு தூய குணங்களையும் ஒருங்கே வாய்க்கப் பெற்றவனையே செயலாற்ற வல்லவனாகத் தெளிய வேண்டும்.
“ கற்றாங்கு அறிந்து அடங்கி தீதுஒரீஇ நன்று ஆற்றி
பெற்றது கொண்டு மனம் திருத்தி பற்றுவதே
பற்றுவதே பற்றி பணியற நின்று ஒன்று உணர்ந்து
நிற்பாரே நீள்நெறிச் சென்றார். – நன்னெறி.


செவ்வாய், 11 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :512

திருக்குறள் – சிறப்புரை :512
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை. --- ௧௨
பொருள் உற்பத்திக்கான இடையூறுகளை ஆராய்ந்து  நீக்கி, நாட்டின்  பொருள் வருவாயைப் பெருக்க வல்லவனே வினை செய்தற்கு உரியவனாவான்.
“ செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு அப்பொருள்
இம்மையும் மறுமையும் பகையாவது அறியாயோ” --கலித்தொகை.

அறவழியிலிருந்து மாறுபட்டுப் பொருள் தேடுவார்க்கு அப்பொருள் இம்மையும் மறுமையும் பகையாகி அழிவைத்தரும் என்ற உண்மையை அறிய மாட்டாயா..?

திங்கள், 10 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :511

திருக்குறள் – சிறப்புரை :511
தெரிந்து வினையாடல்
நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். --- ௧௧
ஒரு செயலால் விளையும் நன்மை தீமைகளை நன்கு ஆராய்ந்து, அவற்றுள் நன்மை பயக்கும் வகையில் வினையாற்ற வல்லான் ஒருவனையே தேர்ந்து தெளிதல் வேண்டும்.
“ வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான்போல்
 நல்லார்கண் தோன்றும் அடக்கமும் உடையன்.” -------  கலித்தொகை.

சான்றோரை வழிபட்டு நின்று, மெய்ப்பொருளை அறிந்தவன் போலத் தோன்றுவான்; நல்லவர்களிடம் தோன்றும் மன அடக்கமும் உடையவன்.

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :510

திருக்குறள் – சிறப்புரை :510
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். --- ௧0
 ஒருவனை ஆராய்ந்து பார்க்காமல் தேர்ந்தெடுத்தலும் தேர்ந்தெடுத்தபின் அவன்மீது ஐயம் கொள்ளுதலும்  நீங்காத் துன்பத்தைத் தரும்.
:” ……………………….. பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே” --- நற்றிணை.

அறிவுடையோர், ஆராய்ந்து பார்த்தே நட்புக் கொள்வர் ; நட்புக்கொண்டபின்பு ஆராய்ந்து பாரார்.

சனி, 8 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :509

திருக்குறள் – சிறப்புரை :509
தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். --- 0
எந்த ஒரு வேலைக்கும் யாரையும் ஆராய்ந்து பார்க்காமல் தேர்ந்தெடுக்கக் கூடாது ; அவ்வாறு தேர்ந்தெடுத்தபின் அவர்தம் தகுதிக்குத் தக்கவாறு பணியையும் தேர்ந்து எடுத்துக் கொடுக்க வேண்டும்.
“ முயறலே வேண்டா முனிவரையானும்
 இயல்பு இன்னர் என்பது இனத்தான் அறிக.பழமொழி.
முயற்சியின்றியே, முனிவரேயானாலும் அவர் இத்தகையவர் என்பதை அவர் கூடி இருக்கும் இனத்தாலே அறிந்து கொள்ளலாம்.


வெள்ளி, 7 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :508

திருக்குறள் – சிறப்புரை :508
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். ---- 0

முன்பின் தெரியாத ஒருவனை ஆராய்ந்து பார்க்காமல் துணையாகத் தேர்ந்தெடுத்துக்கொள்வது அவனுக்கு மட்டுமின்றி அவன் பரம்பரைக்கும் நீங்காத துன்பத்தைத் தரும்.

வியாழன், 6 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :507

திருக்குறள் – சிறப்புரை :507
காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும். --- 0
அன்புடைமையை அடிப்படையாகக் கொண்டு, தாம் அறியவேண்டுவனவற்றை அறியாதவர்களைத் தேர்ந்தெடுத்தல் ஒருவனுக்கு எல்லா அறியாமையினையும் கொடுக்கும். அஃதாவது முதல் கோணல் முற்றும் கோணலாய் முடியும் என்பதாம்.
“ நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
  புல்லா விடுதல் இனிது” --- இனியவை நாற்பது.
 தெளிவில்லாத அறிவினை உடையாரையும் நன்னடத்தை இல்லாதாரையும் சேராது விலகி இருத்தல் இனிது.


புதன், 5 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :506

திருக்குறள் – சிறப்புரை :506
அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றுஅவர்
பற்றுஇலர் நாணார் பழி. --- 0
உற்றார் உறவு இல்லாதவரைத் தேர்ந்தெடுத்தலைத் தவிர்த்தல் வேண்டும் ஏனெனில் அவர்கள் மக்களிடத்து அன்புடன் பழகும் பண்பு இல்லாதவராகையால் பழிக்கு அஞ்சமாட்டார்கள்.
” நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
 இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர் -‘ –  புறநானூறு.

 நல்வினையால் வரும் நன்மையும் தீவினையால் வரும் தீமையும் இல்லை என்போர்க்கு நட்புடையவன் ஆகாமல் விளங்குக.

ஞாயிறு, 2 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :505

திருக்குறள் – சிறப்புரை :505
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். --- 0
ஒருவனுடைய பெருமைக்கும் சிறுமைக்கும்  உரைகல்லாக இருப்பது அவனுடைய செயல்களே.
“ ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்
மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க….” நன்னெறி.

சனி, 1 ஏப்ரல், 2017

திருக்குறள் – சிறப்புரை :504

திருக்குறள் – சிறப்புரை :504
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். ---- ௫0௪
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து ;; குற்றங்களையும் ஆராய்ந்து அவ்விரண்டையும் ஒப்புநோக்கி  அவற்றுள் மிக்கவற்றைக் கருத்தில் கொண்டு அவனை அறிந்துகொள்ள வேண்டும்.
“பெற்றது ஆறறிவு ஆயின் கற்றபடி
சிறுமை நயவாது ஒழுகு.  ----- நன்மொழி ஆயிரம்