புதன், 21 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…87.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…87.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

நற்குணம் இல்லாதவர்..!

”உண்டு குணம் இங்கு ஒருவர்க்கு எனினும் கீழ்

கொண்டு புகல்வது அவர் குற்றமே – வண்டுமலர்ச்

சேக்கை விரும்பும் செழும் பொழில்வாய் வேம்பன்றோ

காக்கை விரும்பும் கனி.”

 

தேன் உண்ணும் வண்டுகள் அழகிய மலர்ச்சோலையுள் புகுந்து  சுவையான தேன் உண்டு மகிழும் ; ஆனால் சோலையில்  நல்ல சுவை மிகுந்த கனிகள் இருந்தாலும் காக்கை வேப்பம் பழத்தையே விரும்பி உண்ணும். அதுபோல,  ஒருவரிடம் விரும்பத்தகுந்த நற்குணங்கள்  இருப்பினும் அவற்றைப் போற்றி உரைக்கும் கல்வியறிவு இல்லாத கீழ்மக்கள் அவரிடம் தீய குணம் இருப்பதாகப் பலரிடம் சென்று இட்டுக்கட்டிப் பேசுவர்.  

”பன்றிக்கூழ்ப் பத்தரில் தேமா வடித்தற்றால்

நன்றுஅறியா மாந்தர்க்கு அறத்தாறு உரைக்குங்கால்.” –சமண முனிவர்கள், நாலடியார் : 26:7.

நன்மை இன்னதென்று அறியாத மூடர்களுக்கு அறநெறிகளைப்பற்றி உரைப்பது, பன்றிக்குக் கூழ் ஊற்றும் தொட்டியில் மாம்பழச் சாற்றை ஊற்றியது போல் ஆகும்.

 

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…86.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…86.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.

“ஆக்கும் அறிவால் அலது பிறப்பினால்

மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க – நீக்க

பவரார் அரவின் பருமணி கண்டுஎன்றுங்

கவரார்கடலின் கடு.”

 

கொடிய நஞ்சுடைய பாம்பின் தலையில் இருக்கும் பருத்த மாணிக்கத்தைக் கண்டு அதனை யாரும் நீக்கமாட்டார். நிறைந்த பாற்கடலாயினும் அதில் தோன்றிய நஞ்சினை  எவரும் விரும்பி ஏற்றுக் கொள்ள மாட்டார். அறிவின்மையால் கீழோர் எனக் கருதும்  அவர்களும்  பெற்ற அறிவினால் உயர்ந்தோராகவே ஏற்றுக்கொள்வர். பிறப்பினால் எவரையும் உயர்ந்தோராகவும் இழிந்தோராகவும் கொள்ளக் கூடாது.

 

“வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்

கீழ்ப்பால் ஒருவன் கற்பின்

மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.” – பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், புறநானூறு:183.

கீழோர் மேலோர் என்ற வேறுபாடுள்ள மக்களுள், கீழ்க்குலத்துள் ஒருவன் கற்று வல்லவனாயின் அவனை மேற்குலத்தோரும் போற்றி வழிபடுவர். கல்வியால் கீழோரும் மேலோர் ஆவர்.

 

திங்கள், 19 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…85.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…85.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

இனியவை கூறல்.

“இன்சொலால் அன்றி இருநீர் வியன் உலகம்

வன்சொலால் என்றும் மகிழாதே – பொன்செய்

அதிர் வளையாய் பொங்காது அழல் கதிரால் தண்ணென்

கதிர் வரவால் பொங்கும் கடல்.”

ஒலிக்கின்ற அழகிய வளையல் அணிந்த  பெண்ணே….! குளிர்ச்சி தரும் நிலவின் ஒளிமுகம் கண்டே கடல் பொங்கும் ஆனால், கடும் வெப்பத்தை உமிழ்கின்ற சூரியன் வரவால் கடல் பொங்காது. அதுபோல,   நிறைந்த நீரால் சூழப்பட்ட இவ்வுலகில் வாழும்    மக்கள் மனம் குளிர இனிய சொற்களைக் கேட்டே மகிழ்ச்சி அடைவர்; கடுஞ் சொற்களைக்கேட்டு ஒருபோதும் மக்கள் மகிழ்ச்சி அடைய மாட்டார்.

“முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம்

இன்சொல் இனிதே அறம்.- குறள்:93.

முகமலர்ச்சியோடு இனிதாக ஒருவரைப் பார்த்து மனம் மகிழ்ந்து இனிய சொற்களைச் சொல்வதே அறம் எனப்படுவதாகும்.

 

 

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…84.

 


 

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…84.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

உயர்ந்தோர் என்றும் உயர்ந்தோரே..!

“தம்மையும் தங்கள் தலைமையும் பார்த்து உயர்ந்தோர்

தம்மை மதியார் தமை அடைந்தோர் – தம்மின்

இழியினும் செல்வர் இடர் தீர்ப்பர் அல்கு

கழியினும் செலாதோ கடல்.”

 

அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் கடல் அருகே இருக்கும் உப்பங்கழியிலும் சென்று பாயும், அதுபோல,அறிவிலும் உயர்ந்த ஒழுக்கங்களிலும் உயர்ந்த சான்றோர், தம்மைச் சார்ந்தவர் வறுமையில் உழலும் தாழ்ந்தவராயினும் அவர் இருக்கும் இடம் சென்று அவருடைய துன்பத்தை  நீக்குவர்.

“ இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது

வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்

எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே.” – பெருஞ்சித்திரனார், புறநானூறு: 163.

என் இனிய துணைவியே ….! குமணன் எமக்கு அளித்த செல்வத்தை இன்னார் இனியார் என்று பாராது , என்னையும் கேட்காது, நாம் மட்டுமே வளமுடன் வாழ வேண்டும் என்று பாதுகாத்து வைத்துக் கொள்ள நினையாது எல்லோர்க்கும் வழங்கி மகிழ்வாயாக.

 

 

சனி, 17 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…83.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…83.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்.

“இல்லானுக்கு அன்பு இங்கு இடம் பொருள் ஏவல் மற்று

எல்லாம் இருந்து அவனுக்கு என் செய்யும் – நல்லா

மொழி இலார்க்கு ஏது முது நூல் தெரியும்

விழி இலார்க்கு ஏது விளக்கு.”

நற்குணம் உடைய பெண்ணே ….!

 

வாய் பேச இயலாதவனிடம் சிறப்பு வாய்ந்த பழைய நூல் இருந்தும் பயனில்லை ; கண் பார்வை இல்லாதவன் முன்னே விளக்கு இருந்தும் பயனில்லை ;  அவ்வாறே, உயிர்களிடத்து அன்பு இல்லாதவனிடம் வசதியாக வாழ்வதற்குரிய இடமும், பொருளும் ,  கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர ஆள்களும்  இன்ன பிறவும் இருந்தாலும் பயனில்லை.

 

“அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை.” – நல்லந்துவனார், கலித்தொகை:133.

அன்பு எனப்படுவது தன் சுற்றத்தாரைச் சினவாதிருத்தல்.

 

 

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…82.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…82.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

செல்வச் செருக்கு

”தொலையாப் பெருஞ் செல்வத் தோற்றத்தோம் என்று

தலையாயவர் செருக்குச் சார்தல் – இல்லையால்

இரைக்கும் வண்டூது மலர் ஈர்ங்கோதய் மேரு

வரைக்கும் வந்தன்று வளைவு.”

 

பெண்ணே…! எவராலும் எந்தக் காலத்திலும் அசைக்க முடியாது இருந்த  மேரு மலையும் ஒரு காலத்தில் வளைவு வந்தது .  ஆதலால், பெரும் செல்வக்குடியில் பிறந்துள்ளோம் எக்காலத்தும் நமக்கு அழிவில்லை என்று, மேன்மை குணம் உடையோர் ஒருபோதும்  கர்வம் கொள்ள மாட்டார்.

மலையே நிலை குலையும் போது உருண்டோடிடும் பணம், காசு நிலைத்து நிற்குமோ…?

 

“பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளைத்

தழீஇம் தழீஇம் தண்ணம் படும்.” – சமண முனிவர்கள், நாலடியார் : 1:6.

நிறைந்த செல்வத்தைச் சேர்த்து வைத்திருக்கின்றவர்களே …! நல்வினையாற்ற உங்கள் பொருளைக் கொடுங்கள் ஏனெனில் நாளைத் தழீஇம் தழீஇம் என்ற ஓசையுடன் அடிக்கப்படும் சாவுப் பறை உங்களுக்கும் அடிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வியாழன், 15 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…81.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…81.

சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

“எருக்கமொடு சுருக்கம் பெற்ற பொருட்கு ஏற்ப

விருப்பமொடு கொடுப்பர் மேலோர்  - சுரக்கும்

மலை அளவு நின்றமுலை மாதே மதியின்

கலை அளவு நின்ற கதிர்.”

 சுரக்கும் மலை அளவு நின்ற முலை மாதே…!  ஒளிரும் கதிர்களைக் கொண்ட நிலவும், தன்னுடைய வளர்ச்சிக்கும் தேய்வுக்கும் தக்கவாறுதான் ஒளியைத் தரும். அதுபோல,  வாரி வழங்கும் வள்ளல் குணமுடைய மேன்மக்களும் தம்மிடத்துள்ள செல்வ வளத்திற்கும் , குறைவுக்கும் தக்கவாறே பிறர்க்குக் கொடுத்து உதவுவர்

.

“நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே

இல் என மறுக்கும் சிறுமையும் இலனே.” –மாடலன் மதுரைக் குமரனார், புறநானூறு : 180.

 

ஈர்ந்தூர் கிழான், நாள்தோறும் தொடர்ந்து கொடுக்கும் செல்வ வளம் உடையவன் அல்லன் ; ஆயினும் இரந்தோர்க்கு இல்லை என மறுக்கும் சிறுமை உடையவனும் அல்லன்.