சனி, 31 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 420

திருக்குறள் – சிறப்புரை : 420
செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். 420
கேள்வியறிவின் சுவை உணராது வாய்ச்சுவவையினை மட்டும் தேடி அலையும் மாக்கள்  இருந்தால் என்ன ; இறந்தால் என்ன…? (இரண்டுமே ஒன்றுதான்.)
” கற்றாங்கு அறிந்து அடங்கி தீதுஒரீஇ நன்று ஆற்றி
  பெற்றது கொண்டு மனம் திருத்தி பற்றுவதே
  பற்றுவதே பற்றி பணியற நின்று ஒன்று உணர்ந்து

  நிற்பாரே நீள்நெறிச் சென்றார்.” …..நீதிநெறி விளக்கம்.

வியாழன், 29 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 419

திருக்குறள் – சிறப்புரை : 419
நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது. 419
அரிய கருத்துகளைச் செவிமடுத்துக் கேட்டறிந்தவர்களைத் தவிர பிறர் பணிவான சொற்களைக் கூறும் வாயினை உடையராதல் அரிது.
“ கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
 அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண். …. வாக்குண்டாம்

புதன், 28 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 418

திருக்குறள் – சிறப்புரை : 418
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. 418
அறிவாற்றலை வளர்க்கும் சான்றோர் உரைகளால்  துளைக்கப்படாத செவிகள் நன்றாகக் கேட்கும் திறன் உடையவையேயாயினும் அவை செவிட்டுக் காதுகளேயாம் .
நல்லுரைகளை விரும்பிக் கேட்காத செவிகள் செவிகள் அல்லவே.
“ நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலம் மிக்க

 நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே…….. வாக்குண்டாம்.

செவ்வாய், 27 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 417

திருக்குறள் – சிறப்புரை : 417
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர். 417
நுணுகிநோக்கி நூல்பல கற்றுத் தேர்ந்ததோடு நிறைந்த கேள்வியறிவினை உடையவர்கள் சிலநேரம் பிறழ உணர்ந்தவழியும் தமக்குப் பேதைமை பயக்கும் சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.
“ முற்றும் உணர்ந்தவர் இல்லை முழுவதூஉம்

 கற்றனம் என்று களியற்க …….. “நீதிநெறி விளக்கம்.

திங்கள், 26 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 416

திருக்குறள் – சிறப்புரை : 416
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். 416
செவிமடுத்துக் கேட்பவை சிற்றுரையாயினும் நல்லனவற்றைக் கேட்க ; அஃது ஒருவனுக்கு நிறைந்த பெருமையைத் தரும்.
“ தம்மின் மெலியாரை நோக்கித் தமது உடைமை
 அம்மா பெரிது என்று அகம் மகிழ்க தம்மினும்
 கற்றாரை நோக்கிக் கருத்து அழிக கற்றது எல்லாம்

 எற்றே இவர்க்கு நாம் என்று.” ~ நீதிநெறி விளக்கம்.

ஞாயிறு, 25 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 415

திருக்குறள் – சிறப்புரை : 415
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல். 415
வழுக்கி விழும் நிலையில் காப்பாற்றும் ஊன்றுகோல் போல் வாழ்க்கையில் இன்னல் வந்துற்றபோது  மனத்தளர்வைப் போக்கும் மாமருந்தாகும் ஒழுக்கம் நிறைந்த உத்தமர்தம் வாய்ச்சொல்.
கற்றவராயினும் ஒழுக்கமில்லாதார் அறிவுரை கூறத் தகுதியற்றவர் என்பதறிக.
“கற்றுப் பிறர்க்கு உரைத்துத் தாம் நில்லார் வாய்ப்படூஉம்
வெற்றுரைக்கு உண்டு ஓர் வலி உடைமை ~ சொற்ற நீர்
 நில்லாதது என் என்று நாண் உறைப்ப நேர்ந்து ஒருவன்

சொல்லாமே சூழ்ந்து சொலல். ….. நீதிநெறி விளக்கம்.

சனி, 24 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 414

திருக்குறள் – சிறப்புரை : 414
கற்றில னாயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. 414
ஒருவன் முறையாகக் கல்வி கற்கவில்லை யென்றாலும் கற்றறிந்தார் ஆற்றும் உரைகளைச் செவிமடுத்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் ; அஃது அவனுக்குத் தாழ்வு வந்துற்றகாலை ஊன்றுகோல் போன்று துணை நிற்கும்.
“ நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான் கற்ற

 நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு…….  வாக்குண்டாம்.

வெள்ளி, 23 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 413

திருக்குறள் – சிறப்புரை : 413
செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து. 413
செவிக்கு உணவாகிய கேள்வி வேட்கை உடையவர்கள் நிலவுலகத்திலே வாழ்கின்றவராயினும் அவர்கள். அவி உணவினை உண்டு பேறு பலபெற்றுப் புகழ் பூத்து உயர்ந்த உலகத்தில்  வாழும் சான்றோர்களோடு ஒப்புநோக்கத் தக்கவராவர்.
“கண்ணில் சொலிச் செவியின் நோக்கும் இறைமாட்சி

 புண்ணியத்தின் பாலதே ………  நீதிநெறி விளக்கம்.

வியாழன், 22 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 412

திருக்குறள் – சிறப்புரை : 412
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். 412
செவிக்கு உணவாகிய கேள்வி வேட்கை இல்லாதபோது  உடலின் பசி வேட்கைக்கும் சிறிது உணவு கொடுக்க வேண்டும்.
பசி உணர்வு மறந்துபோகும் அளவுக்குக் கேள்வி யறிவைப் பெற நாட்டங் கொள்ளல் வேண்டும்.
“போக்கு அறு கல்வி புலம் மிக்கார்பால் அன்றி
மீக்கொள் நகையினார் வாய்ச்சேரா ……  நீதிநெறிவிளக்கம்

புதன், 21 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 411

திருக்குறள் – சிறப்புரை : 411
செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. 411
செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வம் செவியால் கேட்டுணரும் கேள்விச் செல்வமே ; அச்செல்வமே தேடிப் பெறும் செல்வங்களுள் முதன்மையானது.
“ கற்றார்க்குக் கல்வி நலனே கலன் அல்லால்
 மற்று ஓர் அணிகலம் வேண்டாவாம் முற்ற
 முழுமணிப் பூணுக்குப் பூண் வேண்டா யாரே

 அழகுக்கு அழகு செய்வார். ~~~ நீதிநெறி விளக்கம்

செவ்வாய், 20 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 410

திருக்குறள் – சிறப்புரை : 410
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். – 410
சிறந்த நூல்களைக் கற்று விளங்கிய அறிவோடு  திகழும் கற்றறிந்தாரோடு ஒப்புநோக்க கல்வியறிவினால் அறிவை விரிவு செய்யாதார் பகுத்தறிவற்ற விலங்கினத்திற்கு ஒப்பாவர்.  

“முனிவினும் நல்குவர் மூதறிஞர் உள்ளக்
 கனிவினும் நல்கார் கயவர் ~ நனிவிளைவு இல்
 காயினும் ஆகும் கதலிதான் எட்டி பழுத்து
 ஆயினும் ஆமோ அறை.” ~~ நன்னெறி


திங்கள், 19 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 409

திருக்குறள் – சிறப்புரை : 409
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. – 409
கல்லாதார் உயர்ந்த குடியில் பிறந்தவராயினும் அவர்கள்… தாழ்ந்த குடியில் பிறந்து கல்வியறிவில் மேம்பட்டார் எய்திய பெருமைகளைப்  பெற முடியாதவர்களே.
 ( “ உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும்~ உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.” ~~~ பரிமேலழகர்.)
“ நாற்பால் குலத்தின் மேற்பால் ஒருவன்
  கற்றிலன் ஆயின் கீழ் இருப்பவனே.”
“ எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
  அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்.” …வெற்றிவேற்கை.


ஞாயிறு, 18 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 408

திருக்குறள் – சிறப்புரை : 408
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. – 408
கற்றறிந்த சான்றோர்களிடத்துத் தோன்றிய வறுமை தரும் துன்பத்தைவிட மிகவும் கொடிய துன்பம் தருவது கல்வியறிவு இல்லாதவர் கையில் சேர்ந்த செல்வம்.
“ பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் கூடுவிட்டு இங்கு
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார்

பாவிகாள் அந்தப் பணம்.”………….. நல்வழி.

சனி, 17 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 407

திருக்குறள் – சிறப்புரை : 407
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.- 407
சான்றோர் செய்யுள் கருத்துக்களை ஆழ்ந்து ஆராயும் அறிவாகிய அக அழகு இல்லாதவனுடைய எழில் நலமாகிய புறத்தோற்றம் மண்ணால் புனையப்பட்ட பாவையின் அழகிய தோற்றம் போலதாம்.
(மண்ணால் புனையப்பட்ட பாவை வடிவானது அழகுடையது என்றாலும் அஃது உயிரற்றது காற்றாலும் மழையாலும் அழியும் தன்மையுடையது.)
“ கல்லா ஒருவன் குலநலம் பேசுதல்

 நெல்லினுள் பிறந்த பதர் ஆகும்மே.” …… வெற்றி வேற்கை.

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 406

திருக்குறள் – சிறப்புரை : 406
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர். – 406
கல்லாதவர்கள் உயிரோடு இருக்கிறார்களேயன்றி அவர்கள் மனிதர்களாக வாழ்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை ; அவர்கள் தமக்கும் பிறருக்கும்  பயன்படாமையால்  விளையாத களர் நிலம் போல்வர்.
“ எல்லாவிடத்தும் கொலை தீது மக்களைக்
 கல்லா வளரவிடல் தீது….  நான்மணிக்கடிகை.

எவ்வகையிலும் ஓர் உயிரைக் கொல்லுதல் தீது ; பிள்ளைகளுக்குக் கல்வி கொடுக்காமல் வளர்த்தல் தீது.

சனி, 10 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 405

திருக்குறள் – சிறப்புரை : 405
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். – 405
கல்வியறிவு இல்லாத ஒருவன் தனக்கு எல்லாம் தெரியும் என்று கொள்ளும் தன்மதிப்பு.. கற்றார் முன்னிலையில் உரையாடக் கெடும் என்பதாம்.
“ கைஞ் ஞானம்கொண்டு ஒழுகும் காரறிவாளர் முன்
  சொல் ஞானம் சோரவிடல்.” …..… நாலடியார்.

அற்ப அறிவோடு இருள் நிறைந்த மனத்தினராய் வாழ்பவர் முன்னே .. நல்லது சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுக. 

வெள்ளி, 9 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 404

திருக்குறள் – சிறப்புரை : 404
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். – 404
‘ கல்லாதவனது ஒண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும் ; அறிவுடையார் அதனை ஒண்மையாகக் கொள்ளார்.
(ஒண்மை : அறிவுடைமை. அது நன்றாகாது; ஆயிற்றாயினும் ஏரலெழுத்துப் போல்வதோர் விழுக்காடு ஆகலின். நிலைபெற்ற அறிவுடையார் அதனை மதியார் என்பதாம்.) …. பரிமேலழகர்.

ஏரல் எழுத்து : மணலில் நத்தை இடும் கோடுகள்.அழகாயிருப்பினும் அஃது எழுத்தாகாது.

வியாழன், 8 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 403

திருக்குறள் – சிறப்புரை : 403
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின். – 403
. கற்றறிந்தார் முன்,  ஒன்றும் பேசாது அமைதியாக இருந்தால் , கல்லாதவர்களும்  மிகவும் நல்லவர்களே.
“ இரைசுடும் இன்புறா யாக்கையுள் பட்டால்
 உரைசுடும் ஒண்மை இலாரை… - நான்மணிக்கடிகை

நோயுள்ள உடம்பில் சேரும் உணவு செரிக்காமல் துன்புறுத்தும் ; அறிவு இல்லாதவரை அவர்தம் வாய்மொழியே துன்புறுத்தும்.

புதன், 7 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 402

திருக்குறள் – சிறப்புரை : 402
கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று..- 402
கல்லாதவன், சான்றோர் அவையேறி உரையாற்றி அனைவரையும் ஈர்க்க முயல்வது, இரண்டு கொங்கைகளும் இல்லாத ஒருத்தி காம வயப்பட்டு ஆடவரை ஈர்க்க முனைவது போலாம்.
“ அவையஞ்சி மெய் விதிர்ப்பார் கல்வியும் கல்லார்
 அவையஞ்சா ஆகுலச் சொல்லும் நவையஞ்சி
 ஈத்துண்ணார் செல்வமும் நல்கூர்ந்தார் இன்னலமும்
 பூத்தலின் பூவாமை நன்று.” -  நீதிநெறி விளக்கம்

செவ்வாய், 6 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 401

திருக்குறள் – சிறப்புரை : 401
கல்லாமை
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.- 401
கற்க வேண்டிய நல்ல நூல்களைக் கற்காத ஒருவன் சான்றோர் அவை நின்று உரையாற்றி வெல்ல நினைப்பது,  ஆடுகளமின்றிக் காய்களை உருட்டுவது போன்றதாம்.
“ கற்றான் தளரின் எழுந்திருக்கும் கல்லாத
 பேதையான் வீழ்வானேல் கால் முரியும்.” – நான்மனிக்கடிகை.

கல்னியறிவு உடையோன் தளர்வானேல் எப்படியேனும் உய்வான் ; கல்லாத பேதை தளர்வானேல் முயற்சி கெட்டு அழிவான்.

திங்கள், 5 டிசம்பர், 2016

தலைவியும் தோழியும்………!

தலைவியும் தோழியும்………!
” யாமே பிரிவின்று இயைந்த துவரா நட்பின்
 இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே” –
 கபிலர், அகநானூறு , 12
யானும் தலைவியும் பிரிவின்றி, மனம் ஒன்றிய வெறுப்பில்லாத நட்பினால் இரு தலைகளை உடைய பறவையின் உடலில் இருக்கும் ஓர் உயிர் போல் ஆவேம்.
நெஞ்சம் நெகிழ்ந்து…
தமிழ் மக்களின் அன்புக்குரிய தலைவியாக விளங்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர், இன்று நம்மிடையே இல்லை… துயரத்தில் தோய்ந்து, மக்களோடு என் மனமும் கரைகிறது.
மாண்புமிகு முதல்வர் அவர்களின்  இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அந்த இழப்பை நம்மாலேயே தாங்கிக் கொள்ள முடியவில்லை….!
 நட்புக்கு இலக்கணமாக, உயிருக்கு உயிராக உள்ளம் ஒன்றிய அன்பினால் பல ஆண்டுக் காலம் உடனுறைந்த திருமதி சசிகலா அவர்களை முதல்வரின் உடலருகே காணும் பொழுது…  !
உள்ளம் உருகி… உடல் வதங்கி.. கண்ணீர்க் கடலில் மூழ்கித் தவிக்கும் திருமதி சசிகலாவின் அர்ப்பணிப்பு நட்புணர்வை என்னென்று சொல்வேன்…?
 ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மாண்புமிகு முதல்வரின் நிழலாக இரவும் பகலும் ஒரு தாயுள்ளத்தோடு துணையாக இருந்து… முதல்வருக்குப் பணிவிடை செய்வதைத்தவிர வேறு வேலை எதுவுமின்றித் தன்னலம் கருதாது, தற்சுகம் பேணாது முதல்வருக்குப் பணி செய்வதற்கே பிறப்பு எடுத்தது போல  முதல்வர் அருகில் இருந்து.. அவர், உண்ணவும் உறங்கவும் உடல் நலம் பேணவும் தன் வாழ்க்கயை அர்ப்பணித்தவர் திருமதி சசிகலா.
மருத்துவ மனையில் 75 நாட்கள் தன்னந்தனியாக நின்று போராடி முதல்வரைக் காப்பாற்ற என்ன பாடுபட்டாரோ..? இஃது என்னமோ பதவி, பணம், பலன்கருதி செய்யப்பட்டதாக நினைக்கத் தோன்றவில்லை ; அத்தகைய பலன்களைப் பெறுவதற்காக  எத்தகைய சூழ்ச்சியையும் , வஞ்சகத்தையும், கொடுமையும் அவர் இதுநாள்வரை சிந்தித்தார் என்றோ, செயல்பட்டார் என்றோ அறியமுடியவில்லையே..!
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்குத் தன் தூய்மையான அன்பு ஒன்றினாலே இறுதிவரை உறுதியுடன் துணை நின்றார் திருமதி சசிகலா.
“ கோட்டுப் பூப்போல மலர்ந்து பின் கூம்பாது
வேட்டதே வேட்டது ஆம் நட்பு ஆட்சி… - நாலடியார்.
 மலர்ந்து பின் கூம்பாது மலர்ந்தபடியே இருக்கும் மரத்தில் மலரும் மலரைப்போல, இறுதி வரையிலும் விருப்பத்துடன் தொடருவதே நட்பின் சிறப்பாகும்.
 மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
திருமதி சசிகலா அவர்களுக்கு ஆறுதலும் அமைதியும்
காலம் தருவதாகுக.

 இந்நாள் போன்று இனியொரு நாள் வேண்டாம்.

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 400

திருக்குறள் – சிறப்புரை : 400
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை. – 400
ஒருவனுக்குக் கேடு அடையாத நிலைத்த செல்வம் என்பது கல்வியே ;பொன் பொருள் முதலிய பிற செல்வங்கள் யாவும் நிற்பதுபோல் நின்று அழியும் தன்மையுடையன.
“ எச்சம் என ஒருவன் மக்கட்குச் செய்வன
    விச்சை மற்று அல்ல பிற..” – நாலடியார்.

ஒருவன் தன் மக்களுக்குச் சேர்த்துவைக்கும்  செல்வம் என்று சொல்லத் தகுந்தது கல்வி கற்றுக் கொடுத்தல் ஒன்றே ; வேறு செல்வம் எதுவும் இதற்கு இணையாகாது.

சனி, 3 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 399

திருக்குறள் – சிறப்புரை : 399
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.- 399
கற்க வேண்டியவற்றை முறையாகக் கற்ற அறிவிற்சிறந்த சான்றோர், கல்வியறிவால் உலகம் இன்புறுவதைக் கண்டு மேலும் தம்அறிவை விரிவு செய்ய விருப்பம் கொள்வர். .
” மாசில் பனுவல் புலவர் புகழ் புல
நாவில் புனைந்த நன் கவிதை.” – பரிபாடல்.

குற்றமில்லாத நூற் கேள்வியினை உடைய நல்லிசைப் புலவர்கள், புகழப்படும் அறிவினை உடைய தம் நாவாலே பாடிய நல்ல செய்யுள்கள்.

வெள்ளி, 2 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 398

திருக்குறள் – சிறப்புரை : 398
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. -398
ஒரு பிறவியில் ஒருவன் பெற்ற கல்வியறிவு, அவன் தோற்றும் தன் தலைமுறைக்கும் தொடர்ந்துவந்து பாதுகாவலாக அமையும்.
“ கற்றுத் துறைபோய காதலற்குக் கற்பினாள்
 பெற்றுக் கொடுத்த தலைமகன்போல் – முற்றத்
 துறந்தார்க்கு மெய் உணர்வில் தோன்றுவதே இன்பம்
 இறந்த எலாம் துன்பம் அலாது இல்.” – நீதிநெறி விளக்கம்.

(இறந்த எலாம் – ஏனையவை எல்லாம்.)

வியாழன், 1 டிசம்பர், 2016

திருக்குறள் – சிறப்புரை : 397

திருக்குறள் – சிறப்புரை : 397
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. – 397
கல்வி கற்று அறிவிற் சிறந்த ஒருவனுக்கு, எந்த நாடும் சொந்த நாடாகும்  எந்த ஊரும் சொந்த ஊராகவே காட்சியளிக்கும் இத்தகைய பெருமைகளைப் பெற விழையாமல் ஏன் ஒருவன் தான் இறக்கும்வரை கல்வியறிவு பெறாமல் வீணே காலத்தைக் கழிக்கிறான்..?
”கற்றோற்குச் சென்ற இடமெல்லம் சிறப்பு.” – வாக்குண்டாம்.
“ ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃது உடையார்
 நால்திசையும் செல்லாத நாடுஇல்லை அந்நாடு
 வேற்று நாடு ஆகா தமவே ஆம் …” – பழமொழி நானூறு.

 ஆன்ற கல்வியறிவு உடையார் சொல், செல்லாத நாடு நான்கு திசைகளிலும் இல்லை ; அந்நாடுகள் வேற்று நாடுகள் ஆகா ; அவருடைய நாடுகளேயாம்..