புதன், 31 ஜனவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 780

திருக்குறள்- சிறப்புரை : 780
புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.--- ௭௮0
உண்மையான போர்வீரனாகத் தன்னைப் போற்றிப் பாதுகாத்து வளர்த்த அரசன் கண்களில் நீர்மல்கப் போரில் வீரமரணம் பெற்றால், அத்தகைய சாக்காட்டினை உளமுருக வேண்டியேனும் பெற்றுக்கொள்ளத்தக்க பெருமை உடையது.
“ புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வானவூர்தி
எய்துப என்ப தம் செய்வினை முடித்து…” –புறநானூறு.
புலவரால் பாடப்பெறும் புகழுடையோர், தாம் செய்யும் நல்ல செயல்களைச் செய்து முடித்தபின், வலவனால் இயக்கப்படாது இயங்கும் வானவூர்தியில் மேலுலகம் அடைவார்கள்.


செவ்வாய், 30 ஜனவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 779

திருக்குறள்- சிறப்புரை : 779
இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர். --- ௭௭௯
பகையை வெல்வேன் என்று சூளுரைத்துப் போர் உடற்றி உயிர் துறக்கும் வீரரை, அவர் கூறியது தப்பியது என்று இகழ்ந்துரைப்பார் யார் உளர்?.
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக என் நிலவரை.” –புறநானூறு.

பகையை அழித்து, என் மக்களை நான் காக்காவிட்டால், சிறந்த தலைமையும் மேம்பட்ட புலமையும் உடைய மாங்குடி மருதன் தலைவனாக, உலகத்தில் வாழும் சான்றாண்மை மிக்க சிறப்பினை உடைய புலவர்கள் எவரும் என் நிலத்தைப் பாடாது நீங்கும் நிலையை அடைவேனாக. –தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். 

திங்கள், 29 ஜனவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 778

திருக்குறள்- சிறப்புரை : 778
உறினுயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர்.--- ௭௭௮
(உறினுயிர் – உறின் உயிர்.)
உயிருக்கு அஞ்சாது போரினை விரும்பி ஏற்கும் மறவர்கள்  தம் அரசன் சிலபோது சினந்துகொண்டாலும் அவர்கள் தம் வீரத்தில் ஒருபோதும் குறைதல் கொள்ளார்.
“ செல்லும் தேஎத்துப் பெயர் மருங்கு அறிமார்
க;ல் எறிந்து எழுதிய நல்அரை மராஅத்த
கடவுள் ஓங்கிய காடு…” ---மலைபடுகடாம்.

கூத்தர்களே..! நீங்கள் போகும் நாட்டில் போரிட்டு இறந்தவன் இவன் என்பதை அறிந்து கொள்வதற்கு ஏற்பப் பெயர் எழுதிய கல், நல்ல அடிமரத்தையுடைய மரா மரங்களின் நிழலில் நடப்பட்டிருக்கும் அத்தகைய நடுகல்லாகிய கடவுள் நிறைந்த காடு. 

ஞாயிறு, 28 ஜனவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 777

திருக்குறள்- சிறப்புரை : 777
சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்காப்புக் காரிகை நீர்த்து.--- ௭௭௭
தலைமுறை தோறும் நின்றுநிலவும் நிலைத்த புகழை விரும்பி உயிரை வேண்டாது விட்டுவிடவும் அஞ்சாத வீரர்கள்தம் கால்களில் வீரக்கழல் அணிந்து கொள்வது பெருமை உடையது.
“ புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே.”—புறநானூறு.

புலி தங்கியிருந்து, பின் இடம் பெயர்ந்துசென்ற கற்குகை போல. அவனைப் பெற்ற வயிறோ இதுவே, அவனோ, போர்க்களத்திலே காணத்தக்கவன்.

சனி, 27 ஜனவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 776

திருக்குறள்- சிறப்புரை : 776
விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.---- ௭௭௬
தன் வாழ்நாளில் போர்புரிந்து வீரக்குறியாகிய விழுப்புண் படாது கழிந்த நாட்களை எல்லாம் வாழ்வில் பயன்படாத நாட்களாக எண்ணி வைப்பான்.
“ குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
 ஆளன்று என்று வாளில் தப்பார்.” –புறநானூறு.

குழந்தை, இறந்து பிறந்தாலும் தசைப்பிண்டமாகப் பிறந்தாலும் ஆள் அன்று என்று கருதி விட்டுவிடாமல், அக்குழந்தையையும் வாளால் வடுப்படுத்தி அடக்கம் செய்யும் முறைமையில் தவறார்

வெள்ளி, 26 ஜனவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 775

திருக்குறள்- சிறப்புரை : 775
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.--- ௭௭௫
(வேல் கொண்டு எறிய ; அழித்து இமைப்பின்; ஒட்டு அன்றோ ; வன்கணவர்க்கு.)
பகைவர் வேல் கொண்டு எறியும் போது, பகைவரைச் சினந்து நோக்கியகண் மூடி இமைக்குமாயின் அதுவும் அச்சமற்ற வீரர்க்கும் தோல்வியன்றோ?
“ யானை தாக்கினும் அரவு மேல் செலினும்
நீல்நிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும்
சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை.” –பெரும்பாணாற்றுப்படை.
யானை தாக்க வரினும் தன் மேல் பாம்பு ஊர்ந்து சென்றாலும் பெரிய இடி இடித்தாலும் கருவுற்ற பெண் கூட இவற்றுக்கெல்லாம் அஞ்சமாட்டாள்; அத்தகைய இயல்புடையது குறிஞ்சி நில மறக்குடியினர் வாழ்க்கை.


வியாழன், 25 ஜனவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 774

திருக்குறள்- சிறப்புரை : 774
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். --- ௭௭௪
போர்க்களத்தில் தன் கையிலிருந்த வேலை எதிர்த்த யானை மீது எறிந்து அதனக் கொன்று, கைவேலை   யானையொடு போக்கியவன், தன் மார்பில் தைத்திருந்த வேலைப் பறித்து இன்னொரு யானை மீது எறிந்து மகிழ்வான் .
“பார்முதிர் பனிக்கடல் கலங்க உள்புக்குச்
சூர்முதல் தடிந்த சுடர்இலை நெடுவேல்.—திருமுருகாற்றுப்படை.
நிலம் முற்றுப்பெற்ற குளிர்ந்த கடலே கலங்கும்படி உள்ளே சென்று, சூரபன்மாவாகிய தலைவனைக் கொன்ற, சுடர்விடும் இலை வடிவாகிய நெடுவேல்.

புதன், 24 ஜனவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 773

திருக்குறள்- சிறப்புரை : 773
பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.---- ௭௭௩
பகைவரோடு அஞ்சாது எதிர்நின்று போராடுவதைப் பேராண்மை என்று கூறுவர் ; பகைவர்க்கு ஏதேனும் துன்பம் நேரின் அதற்காக இரக்கம் கொண்டு, அப்பகைவர்க்குத் தீங்கு செய்யாமல் உதவி புரியும், அந்தப் பேராண்மை மிக்க வலிமை உடையது என்று கூறுவர் சான்றோர்.
“நீர்த்தகவு இல்லார் நிரம்பாமைத் தம்நலியின்
கூர்த்து அவரைத் தாம்நலிதல் கோள் அன்றால் சான்றவர்க்கு.”---பழமொழி.
நற்குணமும் நல்லறிவும் இல்லார், தம்மை வருத்தினராயின் அங்ஙனமே தாமும் அவரை வருத்துதல் சான்றோர் கொள்கை இல்லை.


செவ்வாய், 23 ஜனவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 772

திருக்குறள்- சிறப்புரை : 772
கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.--- ௭௭௨
காட்டில் ஓடித்திரியும் முயலை வேட்டையாடக் குறிதப்பாது எய்திய அம்பை விட, யானையை வீழ்த்த எய்திய  குறி தப்பிய அம்பினை ஏந்துவது பெருமை உடையதாகும்.
“ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
 களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.” –புறநானூறு.

ஒளிவீசும் வாள் படையை உடைய அரிய போரில். பகைவர்களைத் தோற்றோடச் செய்து, அவர்களுடைய யானையை வெட்டி வீழ்த்தி, வென்றுவரல் காளை போன்ற வீரனுக்குக் கடமையாகும்.

திங்கள், 22 ஜனவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 771

78. படைச் செருக்கு
திருக்குறள்- சிறப்புரை : 771
என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று  கல்நின் றவர்.—௭௭௧
பகைவர்களே..! என் தலைவனை எதிர்நின்று போர்புரிய நிற்காதீர்கள்; இதற்கு முன்பு என் தலைவனை எதிர்த்து உயிரிழந்து நடுகல்லாய் நிற்பவர் பலராவர்.
“ வார்முகில் முழக்கின் மழகளிறு மிகீஇதன்
கால்முளை மூங்கில் கவர் கிளை போல
உய்தல் யாவது நின் உடற்றியோரே.” –பதிற்றுப்பத்து.

நீண்ட மேகத்தின் முழக்கத்தைப்போல, இளைய ஆண் யானை வலிமை பெருகித் தன் காலால் அகப்படுத்தப்பட்ட முளைத்த மூங்கிலினது கிளையைப்போல, உன் (குடக்கோ இளஞ்சேரலிரும்பொறை) பகைவர் அழிந்து போவார்களே அன்றித் தப்பித்துக்கொள்ள இயலாது,

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

திருக்குறள்- சிறப்புரை : 770

திருக்குறள்- சிறப்புரை : 770
நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.-- ௭௭0
ஒரு படை, திறமையும் வீரமும் பொருந்திக் களத்தில் நிலைத்து நிற்கும் ஆற்றல் பெற்றிருந்தாலும்  தகுதிவாய்ந்த நல்ல படைத்தலைவர்  இல்லாதுபோனால் படை, பயனற்றதாகிவிடும்.
” வடபுல இமயத்து வாங்குவிற் பொறித்த
எழு உறழ் திணிதோள் இயல்தேர்க் குட்டுவன்.” – சிறுபாணாற்றுப்படை.

சேரநாட்டு அரசர் குடியில் பிறந்தவனும் கணைய மரத்தை ஒத்த வலிய தோளை உடையவனும் வட இமயத்தில் தன் வில் இலச்சினையைப் பொறித்தவனுமான குட்டுவன்.

சனி, 20 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 769

திருக்குறள் – சிறப்புரை : 769
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை. --- ௭௬௯
படை, இகழகத்தக்க குணங்கள்கொண்ட வீரர்களையும் படைத்தலைவரிடம் நீங்காத வெறுப்புணர்ச்சியும் படைக்குரிய தேவைகள் பற்றாக்குறையும் ஆகிய இவை இல்லாதிருக்குமாயின், படை வெற்றி பெறும்.
“உயர்நிலை உலகத்து உயர்ந்தோர் பரவ
அரசியல் பிழையாது செருமேன் தோன்றி
நோய் இலை ஆகியர் நீயே…” –பதிற்றுப்பத்து.
உயர்ந்த உலகத்தில் உள்ளோர் நின்னைப் (குடக்கோ சேரலிரும்பொறை) புகழ அறநெறி தவறாமல் போரிலே மேம்பட்டுத் தோன்றி, நோயின்றி வாழ்வாயாக.


வியாழன், 18 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 768

திருக்குறள் – சிறப்புரை : 768
அடற்றகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.--- ௭௬௮
போர் உடற்றும் சிறந்த வீரமும் பகைவரை எதிர்க்கும் வலிமையும் பெறவில்லையென்றாலும் தனது படைத் தொகுப்பின் தோற்றப் பொலிவாலே பெருமை பெறும்.
“ வியல் இரும் பரப்பின் மாநிலம் கடந்து
புலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇ.” –பதிற்றுப்பத்து.

பரந்த நிலப்பரப்பினை உடைய பகைவர் நாட்டை வஞ்சியாது எதிர் நின்று வென்று, புலவர்கள் புகழ்ந்து பாடுமாறு புகழை நிலை நிறுத்தினாய்,(இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.)

புதன், 17 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 767

திருக்குறள் – சிறப்புரை : 767
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து. --- ௭௬௭
பகைவரால் தொடுக்கப்பட்ட போரின் வலிமையையும் சூழ்ச்சிகளையும் அறிந்துகொண்டு அதற்கேற்றார்போல் போர்மேற்செல்லும் வழிமுறைகளை வகுத்துக்கொண்டு பகைவர் படையை எதிர்கொள்ள முனைவதே சிறந்த படையாகும்.
”நசைதர வந்தோர் நசை பிறக்கு ஒழிய
வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்..” --புறநானூறு.
 வேந்தே..! ஆவலால் வெற்றிபெற விரும்பிவந்த பகைவர்,நின்னை எதிர்த்து வெற்றிபெற முடியாமல் இகழச்சியுடன் வாழ்வாராயினர்; அவ்வாறு வாழ்பவர் பலரே.


செவ்வாய், 16 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 766

திருக்குறள் – சிறப்புரை : 766
மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.--- ௭௬௬
வீரம், மானம், செல்லும் வழியில் படை வீரர்களின் நன்னடத்தை,படைத்தலைவரின் திட்டமிடலில் தெளிவான அறிவு ஆகிய இந்நான்குமே  வெற்றிக்குரிய படைக்கு அரண்களாகும்.
“நல் அமர் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறந்கு நிலை நடுகல்.”—அகநானூறு.
பசுக்கூட்டங்களை மீட்கப் போரிட்டு வென்று, வீர மரணம் அடைந்த மானம் மிகுந்த மறவர்களுடைய பெயரினையும் சிறப்பினையும் பொறித்து,  வழிதோறும் மயில் தோகை சூட்டி நடப்பட்ட நடுகல்.


திங்கள், 15 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 765

திருக்குறள் – சிறப்புரை : 765
கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.--- ௭௬௫
இயமனே வெகுண்டு எதிர்த்து நின்றாலும் வெற்றி என்ற குறிக்கோளுடன் ஒன்றாகக் கூடி அஞ்சாமல் எதிர்க்கும் ஆற்றல் உடையதே படையாகும்.
“ கூற்று வெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றலையே” –பதிற்றுப்பத்து.

கூற்றுவனே வெகுண்டு வந்தாலும் அவனையும் தோற்கச் செய்யும் ஆற்றல் மிக்கவன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். 

ஞாயிறு, 14 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 764

திருக்குறள் – சிறப்புரை : 764
அழிவின்று அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை.--- ௭௬௪
போர்க்களத்தில் அழிவின்றி,பகைவரின் சூழ்ச்சிக்கு இரையாகாது, தொன்றுதொட்டுவந்த வீரம்செறிந்த வலிமை உடையதே சிறந்த படையாகும்.
“உருஎழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆடக்
குருதிச் செம்புனல் ஒழுகச்
செருப் பல செய்குவை வாழ்க நின் வளனே.” –பதிற்றுப்பத்து.

போர்க்களத்தில் நின்னால்(களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்) வீழ்த்தப்பட்டுக் கிடக்கும் பிணங்களைப் பேய்கள் உண்டு மகிழ்ந்து ஆட, குருதி செந்நீராய் ஓடப் பல போர்களைச் செய்வாயாக, நின் செல்வம் நிலைத்து வாழ்வதாக.

சனி, 13 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 763

திருக்குறள் – சிறப்புரை : 763
ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும். --- ௭௬௩
எலிப்படை கடல்போல் திரண்டு எதிர்நின்று ஒலித்தாலும் நாகம் அஞ்சி ஓடிவிடுமா? அந்த நாகம் சீறி மூச்சுவிட்டவுடனே எலிப்படை சிதறி ஓடிவிடும்.
“இகல்வினை மேவலை ஆகலின் பகைவரும்
தாங்காது புகழ்ந்த தூங்குகொளை முழவின்
தொலையாக் கற்ப….” –பதிற்றுப்பத்து.

போர்த் தொழிலை விரும்பிச் செய்கின்றவன் நீ,(கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்) அதனால் பகைவர்களும் மனம் அடங்காமல், நின்னைப் புகழலாயினர், அழியாத கல்வியை உடையோய் வாழ்க நின் கொற்றம்.

வெள்ளி, 12 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 762

திருக்குறள் – சிறப்புரை : 762
உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது.--- ௭௬௨
படை, வலிமை குறைந்திருந்தபோதும் தம்  படைக்கு அழிவு நேரின்,  மன உறுதியுடன், அஞ்சாது எதிர்த்துப் போர்புரியும் ஆற்றல்., தொன்றுதொட்டுவரும் படை மறவர்க்கு அல்லாத பிறர்க்கு அரிதாம்.
“வருவிசைப் புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமை..” ---தொல்காப்பியம்.

காட்டாற்று வெள்ளம்போல் வந்த பகைவரைக் கல்லணை போல் ஒருவனே எதிர்த்து நின்று வென்ற பெருமை உடையவன்.
உலகத் தமிழர்களுக்கு, இனிய இணைய நண்பர்களுக்கு, நட்பும் சுற்றமும் நாளும் பெருக;நலமும் வளமும் நாளும் சிறக்க ; இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகளை உளம்நிறைந்த மகிழ்வுடன் படைக்கிறேன்.


வியாழன், 11 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 761

77. படை மாட்சி
திருக்குறள் – சிறப்புரை : 761
உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையு ளெல்லாம் தலை. --- ௭௬௧
ஆற்றல்மிக்க படைக்குரிய உறுப்புகள் எல்லாம் ஒருங்கே அமையப்பெற்று, போர்க்களத்தில் ஏற்படும் இடையூறுகளுக்கு அஞ்சாது, பகையை வெல்வதாகிய படையே வேந்தனின் செல்வங்களுள் எல்லாம் சிறந்த செல்வமாகும்.
“ ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென்அம் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே.” –பதிற்றுப்பத்து.

ஆரியர் உறையும் அமைதி நிறைந்த இமயமலைக்கும் தென் திசையில் விளங்கும் அழகிய குமரிக்கும் இடைப்பட்ட நிலத்தே ஆளும் மன்னர்களுள் செருக்கித்திரிவோரைப் போரிட்டு அழித்து வென்றவனே இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.

புதன், 10 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 760

திருக்குறள் – சிறப்புரை : 760
ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு. ---- ௭௬0
அறம், பொருள், இன்பம் என்ற உறுதிப்பொருள் மூன்றனுள் சிறந்ததாகிய பொருளை வேண்டுமளவு ஈட்டியவர்க்கு, அறம், இன்பம் என்ற ஏனைய இரண்டும் ஒருசேர எளிதில் கைகூடும்.
“சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம்…” –புறநானூறு.

சிறப்பினை உடைய பொருளும் இன்பமும் அறவழிப்பட்டுச் சிறப்புறும்.

செவ்வாய், 9 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 759

திருக்குறள் – சிறப்புரை : 759
செய்கபொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரியது இல். --- ௭௫௯
முயன்று, முயன்று  மேலும் முயன்று பொருளை ஈட்ட வேண்டும். பொருளே பகைவரின் அகந்தையை அறுக்கும் கூரிய வாள்; அதனைவிட கூர்மையானது வேறு ஒன்றும் இல்லை.
“ இசைபட வாழ்பவர் செல்வம் போலக்
காந்தொறும் பொலியும் கதழ்வாய் வேழம்.” –நற்றிணை.
புகழ் மிகும்பட வாழ்பவரின் செல்வம் பொலிவுறுதல் போலக் காணும்தோறும் பொலிந்து தோன்றுகின்ற ஆண் யானை.  




திங்கள், 8 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 758

திருக்குறள் – சிறப்புரை : 758
குன்றேறி யானைப்போர் கடற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.--- ௭௫௮
பொருளின் பொருளாவது, ஒருவன் தன் கையிருப்பைக் கொண்டு ஒரு செயலைச் செய்வது, குன்றின் மீது ஏறி நின்று யானைப் போரைக்கண்டு மகிழ்வதைப் போன்றதாகும்.
“ வருவாய் அறிந்து வழங்கல் இனிதே.” –இனியவை நாற்பது.
தமக்கு வருகின்ற வருவாய் அளவினை அறிந்து, பிறர்க்கு ஈதல் இனிதே.

பூதஞ்சேந்தனார் , வழங்கல் என்னும் சொல்லை மிகப்பொருத்தமாக ஆண்டுள்ளார்; அச்சொல்லுக்கு மாற்றாக ‘வாழ்தல்’ என்னும் சொல்லைக் கொண்டு, வருவாய் அறிந்து வாழ்தல் இனிதே என்றும் படித்து, வாழ்க்கையை வளமாக்குங்கள். 

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 757

திருக்குறள் – சிறப்புரை : 757
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு. --- ௭௫௭
அன்பு ஈன்ற அருள் என்னும் குழந்தை, பொருள் என்னும் செவிலித்தாயால் வளர்ந்து வாழும்.
”அருளில் பிறக்கும் அறநெறி எல்லாம்
பொருளில் பிறந்துவிடும்.” –நான்மணிக்கடிகை.

அருளினால் பிறக்கும் அறத்தொடு பொருந்திய இன்பம் எல்லாம் செல்வ வளத்தால் உண்டாகும்.

வெள்ளி, 5 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 756

திருக்குறள் – சிறப்புரை : 756
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள். --- ௭௫௬
அரசுடைமையால் வரும் பொருளும் சுங்கவரி வருவாயும் அரசனுக்கு அடிபணிந்தோர் செலுத்தும் திறைப் பொருளும் வேந்தனுக்கு உரிய பொருள்களாகும்.
“அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே
கோடி யாத்து நாடு பெரிது நந்தும்” –புறநானூறு.

அறிவுடைய அரசன் தாம் கொள்ளும் பொருளை மக்களின் நிலை அறிந்து கொள்ள வேண்டும்; அவ்வாறு செய்தால் அவன் நாடு கோடிப் பொருளினை ஈட்டிக்கொடுத்துச் செழிப்படையும்.

வியாழன், 4 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 755

 திருக்குறள் – சிறப்புரை : 755
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல். ௭௫௫
நாட்டை ஆளும் அரசன் தன் குடிமக்களிடத்து அருளொடும் ; குடிமக்கள் அரசன்பால் அன்பொடும் பொருந்தி வாராத பொருளாக்கத்தை அரசன் தன்னைச் சேரவிடாது நீக்கிவிட வேண்டும்.
“பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம் போலத்
தானும் உண்ணான் உலகமும் கெடுமே.” –புறநானூறு.
அரசன், குடிமக்களை வருத்தி மிகுதியான வரி வாங்குவானாயின் யானை புகுந்த நிலம்போல, நாடு அழிய, அரசனும் அழிவான்.



புதன், 3 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 754

திருக்குறள் – சிறப்புரை : 754
அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள். --- ௭௫௪
பிறருக்குத் தீதின்றி அறவழி அறிந்து ஈட்டிய  பொருள் ஒருவனுக்கு ஒழுக்கத்தின் மேன்மையையும் அதனால் விளையும் இன்பத்தையும் என்றும் நல்கும்.
“…….. அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்
ஆற்றும் பெரும நின் செல்வம்
ஆற்றாமையே நிற் போற்றாமையே” –புறநானூறு.
வேந்தே…! நீ வழங்கும் செல்வம் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் ஆற்றுதற்கு உதவும்; அவற்றை ஆற்ற இயலாதார் நின்னைப் போற்றாதாரே.

செவ்வாய், 2 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 753

திருக்குறள் – சிறப்புரை : 753
பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. – ௭௫௩
பொருள் என்று எல்லாராலும் சிறப்பித்துப் போற்றப்படும் மெய்யாகிய அணையாவிளக்கு, தன்னைத் தேடியவர்க்கு அவர் நினைத்த தேயத்திற்கெல்லாம் பரவிப் பகை என்னும் இருளை நீக்கும்.
“இருள்படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்
அருள்நன்கு உடையர் ஆயினும் ஈதல்
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல்
யானும் அறிவென் மன்னே…..”--- அகநானூறு.
நெஞ்சே..! வறுமையால் துன்புறுவோரின் வருத்தத்தைப் போக்குகின்ற அருள் உடையராயினும் கைப்பொருள் இல்லார்க்கு, ஈதலாகிய சிறப்பு இல்லையாதலை நானும் நன்கறிவேன்”-தலைவன்.


திங்கள், 1 ஜனவரி, 2018

திருக்குறள் – சிறப்புரை : 752

திருக்குறள் – சிறப்புரை : 752
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.—௭௫௨
நல்லவரேயாயினும் பொருள்(செல்வம்) இல்லாதவரை எல்லாரும் இகழ்வர்; தீயவரேயாயினும் பொருள் உடையவரை எல்லாரும் புகழ்வர். இஃது உலக இயல்பன்றோ..!
“ஒத்தகுடிப் பிறந்தக் கண்ணும் ஒன்று இல்லாதார்
செத்த பிணத்தின் கடை.” ---நாலடியார்.

அறநூல்களுக்கு ஒத்த ஒழுக்கமுள்ள உயர்ந்த குடியிலே பிறந்திருந்த போதிலும் ஒரு பொருளும் இல்லாதவர் செத்த பிணத்தைக் காட்டிலும் இழிவாக எண்ணப்படுவார்.