செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :473

திருக்குறள் – சிறப்புரை :473
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர். --- ௪௭௩
தம் வலிமை அறியாது வெற்றிபெற வேண்டும் என்ற வேட்கையால் உந்தப்பட்டு இடையிலேயே தோல்வியைத் தழுவியோர் பலராவர்.
“செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
 எய்யாமையோடு இளிவு தலைத் தரும்… --- நற்றிணை.

தொடங்கிய செயலைச் செய்து முடிக்காது, இடையில் நிறுத்திவிடுவது,இழிவைத் தருவதோடு, அறியாமையையும் வெளிப்படுத்தும்.

திங்கள், 27 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :472

திருக்குறள் – சிறப்புரை :472
ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல். – ௪௭௨
தன் ஆற்றலுக்கு ஏற்ற செயலையும் அதனைச் செய்து முடிப்பதற்கு உரிய வலிமையினையும் அறிந்து, அச்செயலில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்க்கு முடியாத செயல் என்று எதுவும் இல்லை.
“ அல்லன செய்யினும் ஆகுலம் கூழாக் கொண்டு
 ஒல்லாதார் வாய்விட்டு உலம்புப வல்லார்
பிறர் பிறர் செய்பபோல் செய்தக்க செய்து ஆங்கு
அறிமடம் பூண்டு நிற்பார்” --- நீதிநெறிவிளக்கம்.
ஆகுலம் – மனக்கலக்கம் ; ஒல்லாதார் – பகைவர் ;
உலம்புப – ஆரவாரம்.


ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :471

திருக்குறள் – சிறப்புரை :471
வலியறிதல்
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். --- ௪௭௧
ஒருவன், தான் செய்யக்கருதும் செயலின் தன்மையையும் தன்முயற்சியின் வலிமையையும் எதிர்ப்போர் வலிமையையும் இருவர்க்கும் துணையாக நிற்போர் வலிமையையும் ஆராய்ந்து அறிந்து செயல்பட வேண்டும்.
“நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால் தங்கள்
துனிஅஞ்சார் செய்வது உணர்வார்…..” – பழமொழி.

செய்யத்தக்கதைச் செய்யும் துணிவு உடையார்  அஞ்சத்தக்க வினைகள் எதுவந்தாலும் அஞ்சார்.

சனி, 25 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :470

திருக்குறள் – சிறப்புரை :470
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு. ---- ௪௭௰
தம் செயல் திறனுக்குப் பொருந்தாத எந்த ஒரு செயலையும் செய்வாராயின் உலகம் இகழ்ந்துரைக்கும் ; ஆதலால் பிறரால் இகழ்ந்துரைக்க இடம் தராது சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
மறுமைக்கு வித்து மயல் இன்றிச் செய்து
சிறுமைப் படாதே நீர் வாழ்மின் அறிஞராய் “ – நாலடியார்.

 மறுமையிலும் இன்பம் பெறுவதற்கான செயல்களை, மயக்கமில்லாமல் தெளிவுடன் செய்து, துன்பமின்றி அறிவுள்ளவராய் வாழ முற்படுங்கள்.

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :469

திருக்குறள் – சிறப்புரை :469
நன்றாற்றல் உள்ளும் தவறுண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை. ----- ௪௬௯
பிறர்க்கு நன்மை பயக்கும் செயல்களையும் அவரவர் இயல்பு அறிந்து செய்யாமற் போனால் நன்மையும் தீமையாகும் தவறு  உண்டாகிவிடும்.
“ நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
 கல்மேல் எழுத்துப்போல் காணுமே அல்லாத
 ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
 நீர்மேல் எழுத்திற்கு நேர். ---- வாக்குண்டாம்.


வியாழன், 23 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :468



 திருக்குறள் – சிறப்புரை :468
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும். ---- ௪௬௮
ஆராய்ந்து வழிவகுத்துத் தொடங்கப்படாத எந்த ஒரு செயலும் நிறைவேறாது, பலர் முன்னின்று ஊக்கினும் அச்செயல் அரைகுறையாகவே நின்றுபோகும்
“ இசையாது எனினும் இயற்றி ஓர் ஆற்றால்
  அசையாது நிற்பதாம் ஆண்மை…. :” நாலடியார்.
எடுத்துக்கொண்ட ஒரு செயல் தன்னால் நிறைவேற்ற இயலாததாயிருந்தாலும் அதனை முயன்று முடித்தலே ஆண்மைக்கு அழகாம். 

செவ்வியல் பொன்மொழிகள் … 56

செவ்வியல் பொன்மொழிகள் … 56                                                                                              
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே
                      பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன், புறநா. 183 : 8 – 10

 கீழோர் மேலோர் என்ற வேறுபாடுள்ள மக்களுள் கீழ்க்குலத் துள் ஒருவன் கற்று வல்லவனாயின் அவனை மேற்குலத்தோரும் போற்றி வழிபடுவர். கல்வி என்றும்  சிறப்புடையது.

புதன், 22 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :467

திருக்குறள் – சிறப்புரை :467
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. --- ௪௬௭
ஒரு செயலைத் செய்யத் தொடங்குமுன் அச்செயலை எவ்வாறெல்லாம் நிறைவேற்றலாம் என்று நன்றாக அலசி ஆராய்ந்து களத்தில் இறங்க வேண்டும், களத்தில் இறங்கிவிட்டு ஐயங்கொண்டு ஆராயமுற்படுவது குற்றமாகும்.
“ நனி அஞ்சத் தக்கவை வந்தக்கால் தங்கண்
 துனி அஞ்சார் செய்வது உணர்வார்….” --- பழமொழி.
செய்யத்தக்கதைச்செய்யும் துணிவு உடையார் அஞ்சத்தக்க வினைகள் எதுவந்தாலும் அஞ்சார்.


செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :466

திருக்குறள் – சிறப்புரை :466
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும். ---- ௪௬௬
ஒருவன் செய்யத் தகாதனவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டுவனவற்றைச் செய்யாமல் போனாலும் கெட்டு அழிவான்.
‘நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
 புல்லா விடுதல் இனிது.” ---- இனியவை நாற்பது.

தெளிவில்லாத அறிவினை உடையாரையும் நன்னடத்தை இல்லாதாரையும் சேராது விலகி இருத்தல் நல்லது.

திங்கள், 20 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :465

திருக்குறள் – சிறப்புரை :465
வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
 பாத்திப் படுப்பதோர் ஆறு. ௪௬௫
போர்முகம் புகுமுன் அதனால் விளையும் நன்மை தீமைகளை முற்று முழுதாக ஆராயாமல் செயலில் இறங்குவது பகைவரை அவர்தம் நிலத்திலேயே நிலைபெறச்செய்த வழியாம்.
“முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.” –குறள். 676

ஒரு செயலை முடிக்கும் வகையும் வரக்கூடிய இடையூறும் முடிக்கும்போது கிடைக்கும் பெரும் பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செயல் புரிய வேண்டும்.

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :464

திருக்குறள் – சிறப்புரை :464
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர் ----- ௪௬௪
இழிவு என்னும் கேடு அடைய விரும்பாத அறிவுடையார் தன் அறிவுக்குத் தெளிவுதராத எந்த ஒரு செயலையும் செய்ய மாட்டார்.
“ விதையாமை நாறுவ வித்து உள மேதைக்கு
  உரையாமை செல்லும் உணர்வு”.” ---சிறுபஞ்சமூலம்.
பாத்தி கட்டி விதைக்காமலே முளைக்கிற விதை போலப் பிறர் அறிவிக்காமலே அறிவுடையார்க்கு அறிவு தோன்றும்.


சனி, 18 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :463

திருக்குறள் – சிறப்புரை :463
ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.----- ௪௬௩
மேலும் மேலும் செல்வம் சேர்க்க வேண்டும் என்று கருதிப் போட்ட முதல் அழியத்தக்க செயல்களைச் செய்வாரை அறிவுடையார் எவரும் ஊக்கப்படுத்த மாட்டார்கள்.
“ அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்
  பிறிதினால் மாண்டது எவனாம்…” – பழமொழி.
அறிவினால் பெருமை பெறாத ஒருவன் பிற செல்வம் குலம் முதலானவற்றால் பெருமை பெறுதல் இல்லை.


வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :462

திருக்குறள் – சிறப்புரை :462
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்லை. ---- ௪௬௨
செய்யக் கருதிய செயலைஅறிவிற் சிறந்த சுற்றத்துடன் கலந்தாய்வு செய்வதோடு தானும் நன்கு ஆராய்ந்து செயல்படுவார்க்கு செய்வதற்கு அரிய செயல் என்று எதுவும் இல்லை.
” கற்றது ஒன்று இன்றிவிடினும் கருமத்தை
  அற்றம் முடிப்பான் அறிவுடையான்.” – பழமொழி

சிறிதும் கல்வியறிவு இல்லாவிட்டாலும் செயல் திறனில் சிறந்து. தான் மேற்கொண்ட செயலைச் செய்து முடிப்பான் அறிவு உடையவன்.

வியாழன், 16 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :461

திருக்குறள் – சிறப்புரை :461
தெரிந்து செயல்வகை
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். – ௪௬௧
ஒரு செயலைச் செய்வதற்குமுன் அச்செயலைச் செய்வதால் விளையும் அழிவையும் ஆக்கத்தையும் கருத்தில் கொள்வதோடு செயலுக்குரிய ஊதியத்தையும் எண்ணிப்பார்த்து. அச்செயல் செய்யத்தக்கதாயின் செய்க.

”செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத் தரும்…. --- நற்றிணை
தொடங்கிய செயலைச் செய்து முடிக்காது இடையில் நிறுத்திவிடுவது இழிவைத் தருவதோடு அறியாமையையும் வெளிப்படுத்தும்.



புதன், 15 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :460

திருக்குறள் – சிறப்புரை :460
நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல். --- ௪௬௰
நல்லினம் கண்டு நட்புக் கொள்வதைவிடச் சிறந்த துணை வேறு ஒன்றும் இல்லை ; தீய இனத்தின் நட்பைவிடப் பெருந்துன்பம் தருவது வேறு ஒன்றும் இல்லை.
“உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்
 பொய் சேண் நீங்கிய வாய் நட்பினை.” …….. மதுரைக் காஞ்சி.

ஒரு பொய் கூறுவதால் உயர்ந்த உலகம் அமிழ்தொடு கிடைத்தாலும் அதனை விட்டொழித்து வாய்மையுடன் நட்புச் செய்தலை உடையவன்… நெடுஞ்செழியன்.

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :459

திருக்குறள் – சிறப்புரை :459
மனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து. --- ௪௫௯
மனநலம் நன்கு உடையர் இறந்தபின்னும் புகழ்பெற்று மறுமை இன்பத்தை அடைவர் ; அவ்வின்பமும் நல்லின நட்பால் நிலைபேறு பெரும்.
“ஈண்டுச்செய் நல்வினை ஆண்டுச் சென்று உணீஇயர்
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன். ‘’ ……. புறநானூறு.
.

மலையமான்…….. இவ்வுலகத்தில் செய்த நல்வினையின் பயனை உயர்ந்தோர் உலகத்துச் சென்று நுகரும் பொருட்டுப் போயினன்.

திங்கள், 13 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :458

திருக்குறள் – சிறப்புரை :458
மனநலம் நன்குடையர் ஆயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து. --- ௪௫௮
மனநலம் நன்கு உடைய சான்றோராயினும் அவர்க்கும் நல்ல இனத்தாரின் நட்பு சிறந்த பாதுகாப்பாக அமையும்.
“………… பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டிய திறத்தே.” …… நற்றிணை.

அறிவுடையோர் ஆராய்ந்து பார்த்தே நட்பு கொள்வர் ; நட்பு கொண்டபின்பு ஆராய்ந்து பாரார்.

சனி, 11 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :457

திருக்குறள் – சிறப்புரை :457
மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும். --- ௪௫௭
 மனநலமே உயிருக்கு ஆக்கம் தரும் அரிய செல்வமாகும் ; சேரத்தகுதி உடையவரோடு சேரும் இனநலம்,  எல்லாவகையான பெருமைகளையும், நில்லா உலகில் நிலைத்த புகழையும் தரும்.
“ இவண் இசை உடையோர்க்கு அல்லது அவணது
 உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை “ ----புறநானூறு.
இந்த அகன்ற உலகத்தில் புகழுடையார்க்கு அல்லாது பிறர்க்கு உயர்நிலை உலகை அடைதல் இயலாது.


வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :456

திருக்குறள் – சிறப்புரை :456
மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும் இனம்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை. -- ௪௫௬
மனத்தின்கண் தூய்மை உடையவருக்கு மனைவி, மக்களாகிய வழித் தோன்றல்கள்  சிறப்பாக அமைவர் ; அவருக்கு நல்லவர்தம்  தூய நட்பு கிடைக்குமாயின் நன்மைதராத செயல் என்று எதுவுமே இல்லை.
“ ஒருவர் பொறை இருவர் நட்பு” --- பழமொழி
 ஒருவர் பொறுமை இருவர்க்கும் நட்பாம்.


வியாழன், 9 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :455

திருக்குறள் – சிறப்புரை :455
மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும். ---- ௪௫௫
மனத்தூய்மையும் செய்யும் தொழில் தூய்மையும் ஆகிய இவ்விரண்டும்  தான் சேர்ந்த இனத்தின் தூய்மையைத் துணையாகக் கொண்டு வெளிவரும்.
”இனத்தினான் ஆகும் பழி புகழ் தம் தம்
மனத்தினான் ஆகும் மதி.” ----சிறுபஞ்ச மூலம்.
மக்களுக்குத் தத்தம் தீய சேர்க்கையால் பழியும் , நற்சேர்க்கையால் புகழும்  மனத்தின் இயல்புக்கேற்ப அறிவும் உண்டாகும்.


புதன், 8 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :454

திருக்குறள் – சிறப்புரை :454
மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்து உளதாகும் அறிவு. – ௪௫௪
 ஒருவனுடைய அறிவு அவன் மனத்தினின்று வெளிப்பட்டது போலத் தோன்றி அவனை அறியாமலேயே அவன் சேர்ந்த இனத்தின் தன்மைக்கேற்ப அமைந்துவிடும்.
“ எனைத் துணையவேணும் இலம்பட்டார் கல்வி

  தினைத் துணையும் சீர்ப்பாடு இலவாம் ..”  - நீதிநெறிவிளக்கம்.

செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :453

திருக்குறள் – சிறப்புரை :453
 மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தானாம்
 இன்னான் எனப்படும் சொல். --- ௪௫௩
அறியும் மனத்தளவு ஆவது  அறிவு ; சேரும் இனத்தளவு ஆவது இவன் இத்தகையவன்  என்று ஊரார் சொல்லும் சொல்.
” அச்சம் உள் அடக்கி அறிவு அகத்து இல்லாக்
 கொச்சை மக்களைப் பெறுதலின் அக்குடி
 எச்சம் அற்று ஏமாந்திருக்கை நன்றே.” --  வெற்றிவேற்கை

திங்கள், 6 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :452

திருக்குறள் – சிறப்புரை :452
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு. --- ௪௫௨
நீர் எவ்வகையான நிலத்தில் வந்து சேர்கிறதோ அந்நிலத்தின் தன்மைக்கேற்ப நீர் வேறுபட்டுத் தோன்றும். அதுபோல் மக்களும் தாம் சேர்ந்த இனத்தின் இயல்புக்கேற்ற அறிவையே பெறுவர்.
“ ஆக்கும் அறிவான் அலது பிறப்பினால்
 மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க…..” – நன்னெறி

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை :451

திருக்குறள் – சிறப்புரை :451
அதிகாரம் : 46 – சிற்றினம் சேராமை
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். --- ௪௫௧
பெருமை உடையவர்கள் சிறுமைக்குணம் கொண்டவர்களோடு சேராது விலகியே இருப்பார்கள் ; அற்பர்களோ அவர்களையே தமது சுற்றமாகக்கொள்வார்கள்.
“ பொய்ப் புலன்கள் ஐந்தும் நோய் புல்லியர்பால் அன்றியே
 மெய்ப் புலவர்தம்பால் விளையாவாம் – துப்பின்
 சுழற்றுங்கொல் கல் தூணைச் சூறாவளி போய்ச்

  சுழற்றும் சிறு புள் துரும்பு.” --- நன்னெறி.

சனி, 4 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 450

திருக்குறள் – சிறப்புரை : 450
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். ---- ௪௫௰
பலரையும் பகைத்துக்கொள்வதைக் காட்டிலும் பத்துமடங்கு தீமைதருவது பெரியோர்தம் துணையைக் கை நழுவ விட்டுவிடுவது.
“ நல்லார் எனத் தாம் விரும்பிக் கொண்டாரை
 அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்.:” – நாலடியார்,
நல்லவர் என்று கருதி நாம் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒருவர், நல்லவர் அல்லர் எனக் கண்டபோதிலும் குற்றங் குறைகளைப் பெரிது படுத்தாமல் அவரை நண்பராகவே வைத்துக் கொள்ள வேண்டும்.


வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 449

திருக்குறள் – சிறப்புரை : 449
முதலிலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
 சார்பிலார்க்கு இல்லை நிலை. --- ௪௪௯
உழைப்பு என்னும் முதல் இல்லாதவர்களுக்கு ஊதியமில்லை ; அதுபோல் தமக்குத் துணையாக, வழிகாட்டியாக இருந்து காப்பாற்றுவாரைச் சார்ந்திராதவர்களுக்கும் நிலையான வாழ்க்கை இல்லை.
“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலம் மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு

 இணங்கி இருப்பதுவும் நன்று. --- வாக்குண்டாம்.

வியாழன், 2 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 448

திருக்குறள் – சிறப்புரை : 448
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும். – ௪௪௮
மன்னன், தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்யுமிடத்து அவனை இடித்துரைத்து அறவழியில் ஆற்றுப்படுத்தும் சான்றோர் இல்லையெனில் அவனை அழிப்பதற்குப் பகைவர்கள் இல்லை என்றாலும் தானே அழிவான்.
“ மாசற்ற  நெஞ்சுடையார் வன்சொல் இனிது ஏனையவர்

பேசுற்ற இன்சொல் பிறிது என்க…….:” நன்னெறி.

புதன், 1 பிப்ரவரி, 2017

திருக்குறள் – சிறப்புரை : 447

திருக்குறள் – சிறப்புரை : 447
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர். --- ௪௪௭
இடித்துரைத்க்கும் ஆற்றல் வாய்ந்த சான்றோரைத் தமக்குத் துணையாகக் கொள்வாரைக் கெடுக்கும் ஆற்றல் உடையவர் யாவர் உளர்..? ஒருவரும் இல்லை என்பதாம்.
“ ஆற்றப் பெரியார் பகை வேண்டிக் கொள்ளற்க.” – பழமொழி.
வலிமையால் தருக்கி, சான்றோரைப் பகைத்துக் கொள்ள விரும்பாமல் இருப்பாயாக.