சனி, 31 அக்டோபர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 3 - 4

பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 3 - 4
விருந்து – உணவு
 தொல் பசி உழந்த பழங்கண் வீழ
எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங்குறை
மையூன்  பெய்த வெண்ணெல் வெண்சோறு
 நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி
குமட்டூர்க் கண்ணனார். பதிற்.12 :  15 – 18
  சுற்றத்தார் நீண்ட நாட்களாகப் பசியால் வருந்திய துன்பம் உடையர்  - அவ்வருத்தம் தொலையுமாறு நின் ( இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்) அரண்மனையில் அரிவாளால் பிளந்து அறுத்த வெள்ளிய நிணத்தோடு கூடிய கொழுவிய துண்டாகிய ஆட்டின் இறைச்சி கலந்து சமைக்கப்பட்ட வெண்ணெல் அரிசியால் ஆன வெண் சோற்றினைப் பூக்களின் அரும்புகளினால் அமைந்த தெளிந்த கள்ளோடு சேர்த்து உண்டனர். ( நனையமை கள் என்றது  தென்னை – பனை – ஈந்து முதலியவற்றின் அரும்பு விரியாத செவ்விப் பாளையில் அமைக்கப்படும் கள்.)
பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 4
மழைக் கோள்
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது
மழை வேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசி இகந்து ஒரீஇ
பூத்தன்று பெரும நீ காத்த நாடே
 குமட்டூர்க் கண்ணனார். பதிற்.13  :  25 – 28
செவ்வாய்க் கோள் சென்ற வழியில் சுக்கிரன் கோள் செல்லாமல் – மழை தேவையான இடங்களிலெல்லாம் நின் நாட்டில் மழை பெய்கிறது. நோயும் பசியும் நின் குடிகளுக்கு இல்லாமல் நீ காத்து வரும் நாடுகள் பொலிவு பெற்று விளங்குகின்றன.( மழைக் கோளாகிய வெள்ளி – செவ்வாயுடன் சேர்ந்தால் மழை இலதாகும் என்பது வானியல்  அறிவியலா – ஆய்க.) 

வெள்ளி, 30 அக்டோபர், 2015

பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 1 -2

பதிற்றுப்பத்து – அரிய செய்தி
உரையாசிரியர் முனைவர் அ. ஆலிஸ்
இரண்டாம் பத்து – குமட்டூர்க் கண்ணனார்

பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 1 -2
முருகனின் ஊர்தி – யானை
சூருடை  முழுமுதல் தடிந்த பேர் இசை
கடுஞ்சின விறல் வேள் களிறு ஊர்ந்தாங்கு
குமட்டூர்க் கண்ணனார். பதிற்.11: 5-6
 சூரபதுமனாதன் தன்னையை உடைய மாமரத்தின் அடியினை வெட்டிய பெரும் புகழையும் மிகுந்த சினத்தினையும் வெற்றியினையும் கொண்ட முருகப் பெருமான் தனக்குரிய ஊர்தியாகிய யானையின் மீதேறி அதனைச் செலுத்தினது போல ….
பதிற்றுப்பத்து – அரிய செய்தி - 2
வட இமயம் தென் குமரி
 ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்
தென் அம் குமரியொடு ஆயிடை
மன்மீக் கூறுநர் மறம் தபக் கடந்தே.
   குமட்டூர்க் கண்ணனார். பதிற்.11:  23 - 25


அமைதி நிறைந்ததும் முனிவர்கள் நிறைந்து விளங்கும்  பெரும் புகழ் உடையதுமான இமய மலைக்கும் – தென் திசையில் விளங்கும் அழகிய குமரிக்கும் இடைப்பட்ட நிலத்தே ஆளும் மன்னர்களுள் – செருக்கால் தம்மை உயர்த்திக் கூறிக் கொள்பவர்களுடைய வீரம் அழியுமாறு அவர்களோடு எதிர்நின்று பொருது வென்றாய். பண்டைய தமிழ்நாட்டின் எல்லை அறிக.

வியாழன், 29 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 44

கலித்தொகை – அரிய செய்தி – 44
தேய்ந்து அழியும் செல்வம்
கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான் விச்சைக்கண்
தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால்
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன்
எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண்.
 நல்லந்துவனார். கலித் . 149 : 4 –7

தன்னிடமிருந்து ஒன்றும் பெறாமல் தனக்குக் கற்பித்த ஆசான் மனம் வருந்திய காலை  - தன்கைப் பொருளைக்பகிர்ந்துண்டு உண்ணாதவன் செல்வம்; தான் கற்ற வித்தையைத் தவறாகப் பயன்படுத்துபவனுடைய செல்வம் ; தனக்கு ஒரு வருத்தம் உற்ற இடத்து உதவினவர்கட்கு – வருத்தம் ஏற்பட்ட காலை உதவாதவனுடைய செல்வம் ; ஆகிய இவையெல்லாம் தாமகவே தேய்ந்து அழியும். அதுமட்டுமன்றி அவனுடைய செய்ந்நன்றிக் கேடு உடம்பினை ஒழித்து உயிர் போன இடத்தும் அது நுகராமற் செல்லாது காண்.
கலித்தொகை – அரிய செய்தி
முற்றிற்று
பதிற்றுப்பத்து – அரிய செய்தி … தொடரும்… 

புதன், 28 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 42 - 43

கலித்தொகை – அரிய செய்தி – 42 - 43
அசுணமா
மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது
அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச
பறை அறைந்தாங்கு …………………
 நல்லந்துவனார். கலித் . 143  : 10 – 12

 வஞ்சனையால் தான் மீட்டிய யாழ் இசையைக் கேட்டு மகிழ்ந்த அசுணமாவை அவ்வின்பத்தைத் துய்க்கவிடாது ( வேட்டையாட )அதன் அரிய உயிர் போகும்படி  பறையை முழக்கினார் போல…. ( இவ்வரிய உயிரினத்தின் இயல்புகளைச் சங்கப் பாடல்களில் காணமுடிகிறது  அரிய வகை அசுணம் விலங்கு / பறவை  - அறிவியல் நோக்கில் ஆராய்ந்து அறிதல் வேண்டும். மேலும் காண்க – பெருங்.47)
 கலித்தொகை – அரிய செய்தி – 43
சான்றோர் அவை
அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனைத்
தன் திறன் இலார் எடுத்த தீ மொழி எல்லாம்
நல் அவையுள் படக் கெட்டாங்கு
நல்லந்துவனார். கலித் . 144  : 70 –72
 அறனறிந்து நடக்கும் கண்ணோட்டம் உடையவனை – அத்திறமில்லாதோர்  உண்டாக்கிச் சொன்ன  தீய மொழிகள் எல்லாம் நன்மக்கள் இருக்கின்ற அவைக்குள்ளே ஆராய்ச்சி நிகழ – தீய மொழிகள் எல்லாம் மறைந்து போகும்.  ( நன்று தீது ஆராயும் அவை இருந்தமையும் – அந்த அவை மக்கள் தொடர்புடையவற்றை ஆராய்ந்தமையும் இப்பாடலால் புலனாகின்றன.) 

செவ்வாய், 27 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 40 - 41

கலித்தொகை – அரிய செய்தி – 40 - 41
சங்கப் பாடல்களுள் சிறப்பிடம் பெறும் பாடல்
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் 
(ஆற்றுதல் - வறுமை உற்றவர்க்கு உதவுதல்)

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
(-  போற்றுதல் – இனிது கூடினாரைப் பிரியாதிருத்தல்)

பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்
( பண்பு -  இயல்பறிந்து பழகுதல்)

அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை
(அன்பு -  சுற்றத்தாரைச் சினவாதிருத்தல்)

 அறிவு எனப்படுவது  பேதையர் சொல் நோன்றல்
 (அறிவு -  அறியாதார் சொல்வதைப் பொறுத்துக்கொள்ளுதல்)

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை
 ( செறிவு – சொன்ன சொல்லை மறவாதிருத்தல்- காப்பாற்றுதல்)

நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை
 (நிறை –  மறைவான(கமுக்கம் – இரகசிய்ம்) ஒன்றைப் பிறர் அறியாது காத்தல்)

முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வெளவல்
 ( முறை – உற்றாராயினும் ஒருபால் கோடாது (குற்றம் கண்டு) உயிரையும் எடுத்தல்)

பொறை எனப்படுவது  போற்றாரைப் பொறுத்தல்
( பொறை – போற்றாரையும் பகையாதிருத்தல்)
நல்லந்துவனார். கலித் . 133  : 6 – 14
கலித்தொகை – அரிய செய்தி – 41
கூடலிழைத்தல்
கோடு வாய் கூடாப் பிறையை பிறிது ஒன்று
நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ….
நல்லந்துவனார். கலித் . 142  : 24 – 25

 தலைவி – என்னுடைய சிறிய இல்லத்தினுள்ளே அவனைக் காணப்பெறுவேனோ என்று கூடலிழைத்தேன். அக்கூடலை முற்றிலும் இழைக்கும் முன் வளைவு முழுவதும் வாய் கூடாத இளம் பிறை வடிவாகத் தோன்றியது.  (பிரிவினால் வாடும் தலைவி தலைவன் வருவானோ என்று கூடலிழைத்துக் காண்பாள் – கண்களை மூடிக்கொண்டு தரையில் விரலால் சுழன்று சுழன்று வட்டம் இடுதல் வேண்டும் – இரண்டு முனைகளும் சரியாக இணைந்தால் தலைவன் வருவான்; சேராவிட்டால் வாரான் என்று கொள்வது மரபு.) 

திங்கள், 26 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 38 - 39

கலித்தொகை – அரிய செய்தி – 38 - 39
 உயிர்களைப் படைத்தவன்
தொல் ஊழி தடுமாறி தொகல் வேண்டும் பருவத்தால்
 பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் ….
     நல்லந்துவனார். கலித் . 129 : 1 - 2
 பல உலகங்களிலும் உள்ள உயிர்களை எல்லாம்  (அயனாய்) படைத்த முதல்வன் – தொல் ஊழிக் காலத்தே அவ்வுயிர்கள் எல்லாம் (அரனாய) தன்னிடத்தே தொகையாக வந்து ஒடுங்குதலைச் செய்வன்.
கலித்தொகை – அரிய செய்தி – 39
நெய்தல் – ஊஞ்சல்
இன மீன் இகல் மாற வென்ற சினமீன்
 எறிசுறா வான் மருப்புக் கோத்து நெறிசெய்த
 நெய்தல் நெடுநார்ப் பிணித்து யாத்து கை உளர்வின்
யாழ் இசை கொண்ட இனவண்டு இமிர்ந்த ஆர்ப்பி
தாழாது உறைக்கும் தடமலர்த் தண் தாழை
வீழ் ஊசல் தூங்கப் பெறின்
நல்லந்துவனார். கலித் . 131  : 6 - 11


தன் இனமான மீன்களுள் தன்னை எதிர்த்த அனைத்தையும் மாற்பாடு கெடத் தாக்கி – வென்ற சினத்தை உடையது எறிசுறாமீன். அச்சுறாவினது மருப்பாற் செய்த பலகையைக் கோத்து அமைத்த ஊசற் பலகை – புறவிதழ் நெய்தற் பூவின் நெடிய நாரினால் கயிறு தொடுத்து அழகுற கட்டினேன்.கை மீட்டும் யாழினது ஓசையைத் தம்மிடத்துக் கொண்ட வண்டினங்கள் ஆர்ப்பரவம் செய்தன. நெய்தல் மலர்களை நாரால் கட்டி அழகு செய்து தாழையின் விழுதால் திரித்த ஊசற் கயிறு அமைத்து ஊஞ்சலைக் கட்டியுள்ளேன் – அவ்வூஞ்சலில்  நீ அமர்ந்து ஆடுவாய். ( ஊசலில் ஆடுங்கால் இசையுடன் பாடும் மரபு காணப்படுகின்றது)

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 36 - 37

நெய்தற்கலி – நல்லந்துவனார்
 கலித்தொகை – அரிய செய்தி – 36 - 37
பசலை – தோல் நோய்
காரிகை பெற்ற தன்கவின் வாடக் கலுழ்பு ஆங்கே
 பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் …..
நல்லந்துவனார். கலித் . 124 : 7 -8
 தலைவி தான் பெற்ற பேரழகு கெடும்படி மனம் கலங்குவதால் பீர்க்கம் பூவை அடுக்கி வைத்தாற் போன்று பிறை போன்ற நெற்றியில் பசலை படர்ந்து பரவி உள்ளதே….
( மருத்துவ அறிவியல் படி  மனம் கலங்குதல் – கவலை – இதனால் தோலில் தோன்றி மறையும் தேமல் தோன்றும் .  கவலையே நோய்களுக்குக் காரணம் – உளவியல் -. மேலும் ஆய்க.)
கலித்தொகை – அரிய செய்தி – 37
மனசாட்சி
கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்
 தங்காத தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள்
நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின்
     நல்லந்துவனார். கலித் . 125 : 1 - 4

 உலகத்துள் தாம் செய்யும் காரியங்களுள் தாமே உணர்ந்து செய்யக் கூடாதது இது என்று விலக்க வேண்டும் – தடுப்பவர் இன்றியே தீயது இது என  ஒதுக்க வேண்டும் ; அப்படி இன்றி – கண்டவர் யாரும் இல்லையே என்று தாம் நெஞ்சு அறியவே செய்த கொடிய தீய வினைகளைப் பிறர் அறியாமல் மறைத்தலும் செய்வர்;  ஆயினும் அவர்தம் நெஞ்சத்துக்கு எதையும் மறைக்க முடியாது – நெஞ்சத்தைக் காட்டிலும்  கண்கண்ட சாட்சி வேறில்லை  -- அதை நான் சொல்லவும் வேண்டுமோ ? 

சனி, 24 அக்டோபர், 2015

நெய் கடை பால்

நெய் கடை பால்
 நெய்கடை பாலின் பயன் யாதும் இன்றாகி
                                சோழன் நல்லுருத்திரன். கலித்.110 :  17
நெய் கடைந்து எடுத்துவிட்ட பால் போல் யாதும் பயன் இல்லாதாகி விட்டது;
( காய்ச்சப்படாத பாலிலிருந்து வெண்ணெய் எடுத்தல் – உரை உண்மையாமோ …? )
தொய்யில் எழுதுதல்
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலைமேல்
தொய்யில் எழுதுகோ மற்று என்றான் ………
சோழன் நல்லுருத்திரன். கலித்.110 : 16 – 17
 தலைவன் – வியக்கத்தக்க சிதறின தேமல் உடைய மெல்லிய முலைமேல் தொய்யில் எழுதுவேனோ என்றான். ( சங்க காலத்தே மகளிர் மார்பு தோள் முதலிய இடங்களில் சந்தனக் குழம்பு கொண்டு வரிக்கோலம் செய்வர். இதனைத் தொய்யில் எழுதுதல் என்பர்.)


     

கலித்தொகை – அரிய செய்தி – 34 - 35

கலித்தொகை – அரிய செய்தி – 34 - 35
பெண்ணிற்கு அழகாவன
இகல் வேந்தன் சேனை இறுத்த வாய்போல
அகல் அல்குல் தோள் கண் என மூவழிப் பெருகி
நுதல் அடி நுசுப்பு என மூவழிச் சிறுகி
கவலையால் காமனும் படைவிடு வனப்பினோடு
சோழன் நல்லுருத்திரன். கலித்.108 :  1 - 4

ஏடீ !  அல்குல்- தோள்- கண் என மூன்றிடமும் பெருத்து – நெற்றி- அடி -இடை என மூன்றிடமும் சிறுத்து – மன்மதனும் தனக்குத் தொழில் இல்லை எனக் கவலையால் தன் படைக்கலன்களைக் கைவிடுதற்குக் காரணமான அழகோடு வருபவளே ….
கலித்தொகை – அரிய செய்தி – 35

இருமணம்
விரிநீர் உடுக்கை உலகம் பெறினும்
அரு நெறி ஆயர் மகளிர்க்கு
இருமணம் கூடுதல் இல் இயல்பு அன்றே
சோழன் நல்லுருத்திரன். கலித்.114 :  19 – 21
விரிந்த திரை சூழ்ந்த கடலை ஆடையாக உடைய உலகத்தைப் பெற்றாலும்  - அற நெறியில் செல்லும் ஆயமகளிர்க்கு இருமணம் என்பது  குடிப்பிறப்பிற்கு இயல்பன்று.
( சிறந்த குடியில் பிறந்த மகளிர் விரும்பியவனையன்றி வேறொருவனைத் திருமணம் செய்து கொள்ளார் என்பதாம். ) இப்பாடலில் – திருமணத்தின்போது வீட்டில் புதுமண் பரப்பி – செம்மண் பூசி அழகுபடுத்துதலும் – பெண் எருமையின் கொம்பை வீட்டினுள் நட்டு வழிபட்டமையும்  சுட்டப்படுகின்றன.   

வெள்ளி, 23 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 32 - 33

கலித்தொகை – அரிய செய்தி – 32 - 33
கடல் கொண்ட தென்னாடு
மலிதிரை ஊர்ந்து தன் மண் கடக் வெளவலின்
 பொலிவு இன்றி மேல்சென்று மேவார் நாடு இடம்பட
 புலியொடு வில் நீக்கி புகழ்பொறித்த கிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்
தொல் இசை நட்ட …………………….
 சோழன் நல்லுருத்திரன். கலித்.104 :  1 - 5

 ஒரு காலத்தில் கடல் அலைகள் திரண்டெழுந்து பாண்டிய நாட்டின் மண்ணைக் கைக் கொண்டதால்  - அப்பகுதி மூழ்கிற்று – மனம் தளரா பாண்டிய மன்னன்  - தன் நாட்டை விரிவாக்கும் பொருட்டு – பகைவரைத் தன் வலிமையால் தாழ்க்க வேண்டி அவர் மேல் படை எடுத்தான் – சோழர் சேரர் தம் படைகளை வென்று  - அவர்தம் புலி .வில் கொடிகளை நீக்கித் தன் மீனக் கொடியைக் கைப்பற்றிய பகுதிகளில் நாட்டி – ஆற்றலால் மேம்பட்டு நின்றனன் கெடாத தலைமைப் பண்பினை உடைய தென்னவன் . 24/10/15.
கலித்தொகை – அரிய செய்தி – 33
கொன்றைத் தீங்குழல்
 ஒழுகிய கொன்றைத் தீம் குழல் முரற்சியர்
முல்லை நிலத்து ஆயர் – நீள வளர்ந்த கொன்றைக் காயைக் கொண்டு உருவாக்கிய குழலில் இனிய இசையை இசைத்தனர்.

சோழன் நல்லுருத்திரன். கலித்.106 :  3

வியாழன், 22 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 30 - 31

கலித்தொகை – அரிய செய்தி – 30 - 31
கள் உண்ணல்
நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து
அறவினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
 திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது
  மருதன் இளநாகனார். கலித். 99 : 1- 3
கள்ளை உண்ணுதல் ஆகாது என்று நீக்கின தேவர்க்கும்  - அதனை உண்ணுதலை நீக்காத அசுரர்க்கும் நீக்குதலும் நீங்காமையும் ஆகிய அவ்விரண்டினையும் கைக் கொண்டு அறத்தொழிலாக இன்பமுறுத்துபவர் அந்தணராகிய வியாழ குருவும் வெள்ளி குருவும். இவ்விருவரும் வெவ்வேறு வகையினவாகச் செய்துள்ள அரசியலைக் கூறும் நீதிகள் கூறும் வழியைத் தப்பாமல் ஆட்சிபுரிபவன் நீ. ( அந்தணர் இருவர் என்றது தேவருக்குக் குருவாகிய வியாழனும் அசுரர்க்குக் குருவாகிய வெள்ளியும் ஆவர். வியாழன் இயற்றிய நூல் பாருகற்பத்தியம். வெள்ளி இயற்றிய நூல் சுக்கிர நீதி. வியாழன் கள் உண்ணக்கூடாது என்றும் ; வெள்ளி கள் உண்ணலாம் என்றும் தம் நூலுள் கூறியுள்ளனர்.)
 முல்லைக் கலி -- சோழன் நல்லுருத்திரன்
கலித்தொகை – அரிய செய்தி – 31
ஏறு தழுவுதல்
 கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்
  புல்லாளே ஆயமகள்.
சோழன் நல்லுருத்திரன். கலித்.103:  63 - 64

 கொல்லேற்றின் கொம்புக்கு அஞ்சுகின்றவனை மறுபிறப்பினும் தழுவ மாட்டாள் ஆயமகள். (ஏறுதழுவுதல்  முல்லை நிலத்தின் வீர விளையாட்டு; தொல்காப்பியத்தில் இடம் பெறாத ஒன்று.ஏறு தழுவிய பின்னர்க் குரவைக் கூத்து நிகழும்; தெய்வ வாழ்த்தும் இடம் பெறும். )

புதன், 21 அக்டோபர், 2015

சிங்கப்பூரில் சில நாள்கள்…

வணக்கம்
Welcome – Pl. visit – kalappal.blogspot.com
A Blogger for Ancient Tamil
தமிழ் - ஆர்வலர்களுக்கும் ; ஆய்வாளர்களுக்கும்

சிங்கப்பூரில் சில நாள்கள்….
                         சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களுக்கு வணக்கமும் வாழ்த்தும். 2001 ஆம் ஆண்டுமுதல் சிங்கப்பூரின்  வியத்தகு விரைவு வளர்ச்சியைக் கண்டு களிப்பவன். இவ்வார இறுதியில் தாயகம் திரும்பவுள்ளேன்.
சிறப்புயர் சிங்கப்பூர்
                           ஒரு சிறிய நாட்டில் மக்களுக்கென ஒரு மாபெரும் குடியரசை உருவாக்கிய மாமனிதர் திரு லீ குவான் யூ அவர்கள் – சிங்கப்பூரைச் செதுக்கிய சிற்பி – அன்னாரின் புகழ் ஓங்குக ! அவர் -  தன் குழந்தையை நேசித்து வளர்த்ததைப் போல்  தன் நாட்டையும் நேசித்து வளர்த்தவர் என்பதை மக்கள் அறிவர். சாதி சமய இன மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் அனைவரும் ஒருநிலை என்னும் ”மக்கள் கொள்கை ”ஒன்றினை முன்னெடுத்துச் செல்லும் சிங்கப்பூர் அரசினை எவ்வளவு பாராட்டினும் தகும்.
                                     மறைந்த மாமனிதர் திரு லீ குவான் யூ அவர்கள் சிங்கப்பூர் வாழ் தமிழ் மக்களை மட்டுமல்ல உலகத்தமிழர்களையும் தமிழையும் போற்றியவர் ; அதனாலன்றோ தமிழீழப் போராளிகள் வென்றெடுக்க விரும்பிய தமிழீழத்தை ஆதரித்துக் குரல் கொடுத்தார்; அக்குரலை மண்ணும் மனித உறவுகளும் மறந்திடக் கூடுமோ..அது காலத்தால் அழியாத கனவுக்குரல் – ஒருநாள் மெய்ப்படும். அன்னாருக்குத் தமிழும் தமிழ் மக்களும் நன்றிக்கடன் பட்டவராவோம்.
                       சிங்கப்பூர் அரசு – மக்களுக்கான அரசு; மக்களின் நாடித் துடிப்பை – எதிர்பார்ப்புகளை அளந்தறிந்து செயலாற்றும் அரசு. மக்களின் நலவாழ்வும் – நல்வாழ்வும் சிங்கப்பூரின் அடையாளங்கள். உலகத் தமிழ்மக்களுக்கு வேறெங்கும் கிடைக்காத உண்டி- உடை- உறையுள் ஆகிய இம்மூன்றும் காத்தளித்த  உலக நாயகர் திரு லீ குவான் யூ அவர்களின் கனவை நனவாக்கிய தமிழ் உள்ளங்கள் தொடர்ந்து நற்பணியாற்றிச் சிங்கப்பூரின் செழுமைக்குப் பங்களிக்க வேண்டும். சிறுபான்மையினராகிய தமிழர்களின் தாய்மொழியை ஆட்சிமொழியாக்கிய மாமனிதர் திரு லீ குவான் யூ அவர்கள் தமிழன்னையின்  தவப்புதல்வர்; தமிழ் நிலந்தோறும் அவர்தம் புகழ் நிலைத்து நிற்கும். அன்னார்தம் ஆன்ம ஒளியில் தழைதிருக்கும் தமிழ் மக்களுக்குச் சிங்கப்பூர் புகுந்த வீடு ! தமிழ்ப் பண்பாட்டைப் போற்றிக் காப்பாற்றவும் பிறந்த வீட்டின் பெருமை விளங்கவும் வாழ்ந்து காட்டுங்கள்.
அன்புள்ள தமிழா…
                            வாழ்வது ஒரு முறை – வாழ்த்தட்டும் தலைமுறை ; வாழவந்த வீட்டில் வீழ்த்தும் அடாவடித்தனங்களை விட்டொழியுங்கள். நமது நாடு நமது வீடு  என்று பெருமை கொள்ளுங்கள்.  “ சுற்றித் திரியாதீர்” – ”போத்தலில் பீர் விற்பனைக்குத் தடை ” போன்ற அறிவிப்புகள் பெரிதும் வருத்தமடையச் செய்கின்றன.
   உலகின் தலைசிறந்த கல்விக்கூடங்கள் சிங்கப்பூரில் உள்ளன. கல்வியறிவால் மேம்பட்ட நாட்டில் வாழ்கிறோம் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். தமிழ்நாட்டின் கூத்தாடி அரசியலை இங்கு கொண்டாடி மகிழ வேண்டாம். சிங்கப்பூரின் சட்ட திட்டங்களை மதித்துப் போற்றி வாழ முற்படுங்கள். அரசின் முன்னேற்றத் திட்டங்களோடு இணைந்து உழைத்து முன்னேறுங்கள். வீடு வாசல் உற்றார் உறவினர் என எல்லாவற்றையும் உதறிவிட்டு உழைத்துப் பிழைக்கவந்த நாட்டின் அருமை பெருமைகளை அறிந்து உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தை நல்ல காலமாக்கிக் கொள்ளுங்கள். நல்வாழ்த்துக்கள்.
 
                             நன்றியுடன்

  இரெ. குமரன்.

கலித்தொகை – அரிய செய்தி – 28 - 29

கலித்தொகை – அரிய செய்தி – 28 - 29

ஆதி  - சொற்பொருள்
ஆதிக் கொளீஇ அசையினை ஆகுவை           
 மருதன் இளநாகனார். கலித். 96 : 20
ஆதி என்னும் நெடுஞ் செலவினை அதற்குத் தந்து…. ஆதி – ஒருவகை வேகம் என்பர்.
( சூரியன் செலவினையும் இவ்வாறு குறிப்பதுண்டு ஆதி பகவன் – எனத் தொடங்கும் முதல் குறளில் ஆதி பகலன் என்று இருப்பின் பொருள் பொருந்துமா ? ஆய்க.)
கலித்தொகை – அரிய செய்தி – 29

பெருமணம் – (மருதத் திணை)
 மிகநன்று இனி அறிந்தேன் இன்று நீ ஊர்ந்த குதிரை
பெருமணம் பண்ணி அறத்தினில் கொண்ட
 பருமக் குதிரையோ அன்று பெரும ……..
 மருதன் இளநாகனார். கலித். 96 : 32- 34


 மிகவும் நன்று – நீ ஏறிய குதிரையை நான் அறிந்துகொண்டேன் ; அதுதான் அறநூல் கூறிய வழியால் நீ பெருமணம் செய்து கொண்ட  காமக்கிழத்தியாகிய குதிரையும் அன்று – பெருமானே. என்றாள் தலைவி. ( தலைவன் – தலைவியை மணப்பது ஐந்திணைப் பாற்பட்ட மணம். காமக்கிழத்தியையும் தலைவன் மணந்து கொண்டது இப்பாடலுள் இடம் பெற்றுள்ளது. இப்பெருமணம் அறநூல் வழிப்பட்டது என்று கூறுகின்றார். மேலும் காண்க : -  முல்லைத் திணைப் பெருமணம்-114 .)

செவ்வாய், 20 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 26 - 27

கலித்தொகை – அரிய செய்தி – 26 - 27
தாய்ப்பால்
 பாலோடு அலர்ந்த முலை மறந்து முற்றத்துக்
 கால் வன் தேர் கையின் இயக்கி நடை பயிற்ற
 மருதன் இளநாகனார். கலித். 81 : 8 - 9
பாலோடு விம்மின முலையிலே பால் பருகவும் மறந்து ; முற்றத்திலே தேரை உருட்டி விளையாடுகின்ற கையாலே தள்ளியவாறு நடை பயின்றனன்.
எம் முலை பாலொடு வீங்க – 82
தீம்பால் பெருகும் – 83
மென்முலை பால் பழுதாக – 84
மேற்சுட்டியுள்ள கலித்தொகைப் பாடல்களில் தாய்ப்பால் பருகும் புதல்வன் - மழலைப் பருவத்தினன் என்று எண்ணி விடக்கூடாது. புதல்வன் புத்தேளிர் கோட்டம் வலம் செய்தும் – விளையாடியும் – கடவுட் கடிநகர் வலம் கொண்டுவரும் வயதினன் என்பதை அறிதல் வேண்டும்.  அக்காலத்தே ஆண் குழந்தைகள் நான்கு / ஐந்து வயது வரை தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
கலித்தொகை – அரிய செய்தி – 27
குறும்பூழ்ப் போர்
செறிந்து ஒளிர் வெண்பல்லாய் யாம் வேறு இயைந்த
குறும்பூழ்ப் போர் கண்டேம் ……….
  மருதன் இளநாகனார். கலித். 95 : 5- 6

செறிந்து விளங்குகின்ற வெள்ளிய பல்லினை உடையாய் – யாம் புதிய குரும்பூழ் வந்து பொருந்தின குறும்பூழ்ப் போர் கண்டேம். ( சங்க கால மக்கள் பொழுதுபோக்காகப் பல விளையாடுக்களைக் கண்டு மகிழ்ந்தனர் ; குறும்பூழ்ப் போரும் அவற்றுள் ஒன்று. ) இவ்விளையாட்டு இன்றும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வருவதை இணையவழியில் அறியலாம். குறும்பூழ் – காடை / சிவல்.

திங்கள், 19 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 24 - 25

கலித்தொகை – அரிய செய்தி – 24 - 25
தமிழீழம்
பண்புடை நல்நாட்டுப் பகை தலை வந்தென
அது கை விட்டு அகன்று ஒரீஇ காக்கிற்பான் குடை நீழற்
 பதி படர்ந்து இறை கொள்ளும் குடி …………..
 மருதன் இளநாகனார். கலித். 78 : 4 – 6

 நற்பண்புகள் வாய்ந்த நல்ல நாட்டிலே பகை வந்து சேர்ந்ததாக – அந்நாட்டைக் கைவிட்டுச் சென்ற மக்கள் – தம்மைக் காக்கும் தகுதி உடையவனின் குடை நிழலில் மற்றோர் பதியில் தங்கி வாழ்வர்.
கலித்தொகை – அரிய செய்தி – 25
சிவபெருமான் மகன் முருகன்
 ஆல் அமர் செல்வன் அணிசால் பெரு விறல்
 போல வரும் என் உயிர்
ஆலமர் செல்வனின் அழகிற் சிறந்த  முருகனைப் போல வரும் மகனாகிய என் உயிர்.
மருதன் இளநாகனார். கலித். 81 :  9 - 10
ஆல் அமர் செல்வன் அணிசால் மகன் விழாக்
 கால்கோள் என்று ஊக்கி ……………………….
மருதன் இளநாகனார். கலித். 83 : 14 - 15



மிக்க புகழை உடைய ஆலமர் செல்வனின் மகனாகிய குமரப் பெருமானின் விழா தொடங்கிற்று போலும் என்று எண்ணினர். ( ஆலமர் செல்வன் மகன் – என்பதற்கு இறைவனுடைய மகனாகிய பிள்ளையார் என்றார் உரையாசிரியர் நச்சினார்க்கினியர். சங்க காலத்தில் விநாயகர் வழிபாடு இல்லை என்று குறிக்கின்றார் பெருமழைப் புலவர். ஆனால் பிள்ளையார் என்று நச்சினார்க்கினியர் சுட்டியிருப்பது முருகவேளை என்று சான்று காட்டுவார் இ.வை. அனந்தராமையர். )

ஞாயிறு, 18 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 22 - 23

கலித்தொகை – அரிய செய்தி – 22 - 23
நெடுநாள் பிரிவு -  கூடுதல்
 ………………. நீ வருநாள் போல் அமைகுவம் யாம் புக்கீமோ
 மாரிக்கு அவாவுற்றுப் பீள்வாடும் நெல்லிற்கு ஆங்கு
 ஆராத் துவலை அளித்தது போலும் நீ
ஓர் பாட்டு ஒரு கால் வரவு.
 மருதன் இளநாகனார். கலித். 71 : 23 – 26
தலைவ ! ஓர் ஆண்டுக்கு ஒரு முறை வருகின்ற நின் வரவு பெருமழைக்கு விரும்பி வாடிய நெற்பயிருக்குச் சிறு தூறல்கள் என்ன பயனைத் தரும். வெப்பத்தைக் கிளப்பி விட்டு அதிக துயரத்தைத் தானே தரும் ; நின் வரவும் அதிக வருத்தத்தைத் தருவதாகும் ஆதலான் நீ முழுதும் மனந்திருந்தி வரும்வரையும் யாம் ஆற்றியிருப்பபேம் – என்றாள் காமக்கிழத்தி.
கலித்தொகை – அரிய செய்தி – 23
மெல்லணை
இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள்
 துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ
மருதன் இளநாகனார். கலித். 72 : 1 – 2

 இரட்டையாகச் சேர்ந்து – உயர்ந்த நீலப் பட்டாலாய மெல்லிய படுக்கை – அதனிடத்து ; துணையோடு கூடின அன்னத்தின் தூவியாற் செய்த மெல்லிய தலயணை. (  சேவலும் பெடையுமாகிய அன்னங்கள் புணரும் பொழுது  அவ்வின்ப உணர்ச்சி காரணமாக அவற்றின் உடலினின்று தாமே உதிர்கின்ற மெல்லிய தூவிகளே பஞ்சாகக் கொண்டு மெத்தைகளை உருவாக்கினர். ) காம உணர்ச்சி அதிகம் உடையவர்களுக்குத் தலை முடி கொட்டி வழுக்கை விழுமாமே – ஆய்க. 

சனி, 17 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 20 -21

கலித்தொகை – அரிய செய்தி – 20 -21
பிறர்க்கு இன்னா
தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா
 செய்வது நன்று ஆகுமோ
 கபிலர். கலித். 60 :  7- 8
 தமக்கு இனிதாய் இருக்கின்றது என்று கருதிப் பிறருக்கு இன்னாதவற்றை வலிதிற் செய்து இன்பத்தைத் தருமோ ?.
மருதக் கலி - மருதன் இளநாகனார்
கலித்தொகை – அரிய செய்தி – 21
தீ வலம் வருதல்
 காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய
மாதர் கொள் மட நோக்கின் மடந்தைதன் துணையாக
ஓதுடை அந்தணன் எரிவலம் செய்வான் ……
மருதன் இளநாகனார். கலித். 69 : 3 - 5
 காதல் கொள்கின்ற திருமண நாளிலே  - மேலாடைக்குள் ஒடுங்கி  நோக்குகின்ற – மருண்ட மான் போலும் நோக்கினை உடைய மடந்தை – தனக்கு இம்மைக்கும் மறுமைக்கும் துணையாக உடன் வந்து நிற்க -  வேதம் ஓதும் அந்தணன் எரி வலம் வருதலைச் செய்வான்.  ( சங்க இலக்கியங்களில் திருமணம் பற்றிய செய்திகள் அரிதாகவே காணப்படுகின்றன . காண்க . அகம். 86. 136. அகநானூற்றுப் பாடல்களிலும் தீவலம் வருதல் சுட்டப் பெறவில்லை.  கலித் தொகையில் இந்த ஒரு பாடலில் மட்டுமே தீ வலம் வருதல்  சுட்டப்படுகின்றது .) 

வெள்ளி, 16 அக்டோபர், 2015

)கலித்தொகை – அரிய செய்தி – 18 - 19

கலித்தொகை – அரிய செய்தி – 18 - 19
இவ்வழகியைப் புறம் விடுத்தனரே….!
 நீயும் தவறிலை நின்னைப் புறங்கடைப்
போதரவிட்ட நுமரும் தவறு இலர்
 நிறையழி கொல்யானை நீர்க்கு விட்டாங்கு
 பறை அறைந்தல்லது செல்லற்க என்னா
 இறையே தவறு உடையான்
 கபிலர். கலித். 56 : 30 – 34
கண்டவர் மயங்கும் பேரழகு படைத்தவளே !  நீயும் குற்றமற்றவள் ; நின்னை வெளியே வரவிட்ட நின் சுற்றத்தாரும் குற்றம் உடையவர் அல்லர்; மதங் கொண்ட யானைய நீர்த் துறைக்கு இட்டால் பறைசாற்றிச் சொல்வார்கள் அதுபோல் நீ வருகிறாய் என்று பறை சாற்றியே சொல்லியிருக்க வேண்டும் ; அப்படிச் செய்யாத மன்னனே தவறு உடையவன் ஆவான்.
கலித்தொகை – அரிய செய்தி – 19
 தைந்நீராடல்
தையில் நீராடிய தவம் தலைப்படுவாயோ
 கபிலர். கலித். 59 : 13

தலைவன் : தலைவி…. நீ தைத் திங்களில் நீராடிய தவத்தின் பயனைப் பெறுவாயோ ?
( தைந் நீராடல் இளம்பெண்களால் நிகழ்த்தப் பெறும் ஒரு நிகழ்ச்சி . சங்க இலக்கியங்களில் சுட்டப்பெறும் இது – பண்டைத் தமிழர் தம் பண்பாட்டுத் தொடர்புடையது – மணமாகாத பெண்கள் மார்கழி முழுமதி நாள் தொடங்கித் தை முழுமதி நாள் வரை நாட்காலையில் நீராடி நோன்பிருப்பர். திருப்பாவை. திருவெம்பாவை இலக்கியங்கள் தோன்றுவதற்கும் தைந்நீராடல் அடிப்படையாய் அமைந்தது.)

வியாழன், 15 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 16 - 17

கலித்தொகை – அரிய செய்தி – 16 - 17
சிறந்த சிறுகதை
சுடர்த் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும்
…………………………………………………
கடைக் கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக் கூட்டம்
செய்தான் அக்கள்வன் மகன்.
   கபிலர். கலித். 51 

 இப்பாடல் இன்றைய சிறுகதை இலக்கணங்களுக்குப் பொருந்தி அமைவதைக் காணலாம். நடந்த நிகழ்ச்சிகளை ஒரு கதை போலச் சுவைபடக் கூறுகிறாள் தலைவி.
 சுடர்த் தொடீஇ கேளாய்                           எனத் தோழியை விளித்து
 அவன் மேலோர் நாள்                     முன் நிகழ்வுத் தொடக்கம்
 இல்லின்கண்                                  சூழல்
 நீர் கேட்டல்                                               நிகழ்ச்சி
 முன்கை பற்றல்  - அலறியது                   உச்சகட்டம்
மழுப்பியது                                                 வீழ்ச்சி
கடைக் கண்ணால் நோக்கியது                முடிவு        
கலித்தொகை – அரிய செய்தி – 17
இனச் சேர்க்கை – போர்
விறன்மலை வியல் அறை வீழ்பிடி உழையதா
மறம்மிகு வேழம் தன்மாறு கொள் மைந்தினான்
 புகர் நுதல் புண் செய்த புய்கோடு…….
கபிலர். கலித். 53 : 2 - 4
 அகன்ற பாறையிடத்தே வாழும் களிறு தான் விரும்பிய பெண் யானையைத் தன்னிடத்தே கொண்டிருந்தது.  வீரம் மிக்க அந்தக் களிறு தனக்கு மாறாகிய மற்றொரு யானையைத் தனது ஆற்றலால் புள்ளியுடைய அதன் நுதலைக் கொம்பினால் குத்திப் புண்ணாக்கி விரட்டியது.         ( விலங்கினம் தன் இனத்தில் பெண் துணையைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் போர்புரிந்து தன்  வலிமையைக் காட்டும் – அறிவியல் உண்மை ) 

புதன், 14 அக்டோபர், 2015

கலித்தொகை – அரிய செய்தி – 14 - 15

கலித்தொகை – அரிய செய்தி – 14 - 15
ஐயப்படாத அகவாழ்க்கை
 …………………….. குறவர் மடமகளிர்
தாம் பிழையார் கேள்வர்த் தொழுது எழலால் தம் ஐயரும்
தாம் பிழையார் தாம் தொடுத்த கோல்
கபிலர். கலித். 39  :  10 - 12
 குறிஞ்சி நில குறவர் மடமகளிர் என்றும் பிழை செய்யார்; தாம் தம் கணவரைப் போற்றி த் தெய்வமென்று தொழுது எழுவர்; இதனால் அவர்தம் கணவன்மாரும் குறி தப்பாது கணை தொடுக்கும் ஆற்றல் உடையர் ஆயினர். ( ஈண்டு - இல்லறவியல் கோட்பாடு ஆராயத் தக்கது)
கலித்தொகை – அரிய செய்தி – 15
சந்தனமர உரல்
தகை கொண்ட ஏனலுள் தாழ்குரல் உரீஇ
முகைவளர் சாந்து உரல் முத்து ஆர் மருப்பின்
 வகைசால் உலக்கை வயின் வயின் ஓச்சி
கபிலர். கலித். 40  :  3- 5

 முற்றித் தலை சாய்ந்த தினைக் கதிரை உருவி – வளர்ந்த சந்தன மரத்தால் ஆன உரலில் இட்டு – முத்து நிறைந்த யானைத் தந்தத்தால் ஆன உலக்கையைக் கொண்டு மாறி மாறி உயர்த்திக் குற்றுவாம். ( யானைத் தந்தத்தில் முத்து விளையும் என்று பல பாடல்களில் வந்துள்ளன – இஃது உண்மையோ ? ஆய்க)