ஞாயிறு, 4 அக்டோபர், 2015

ஐங்குறுநூறு – அரிய செய்தி – 8 - 9

முல்லைத் திணை - பேயனார்
ஐங்குறுநூறு – அரிய செய்தி – 8 - 9
காட்டின் வளம் காண்க
புள்ளும் மாவும் புணர்ந்து இனிது உகள
கோட்டவும் கொடியவும் பூப் பல பழுனி
மெல் இயல் அரிவை கண்டிகும்
 மல்லல் ஆகிய மணம் கமழ் புறவே.
பேயனார். ஐங். 414
  மெல்லிய இயல்பை உடைய அரிவையே ! பறவையினமும் விலங்கினமும் தத்தம் துணையோடு கூடி மகிழ்ந்து துள்ளித் திரியவும் ; கிளைகளிலும் கொடிகளிலும் பல்வகைப் பழங்களும் நிறைந்து தோன்றவும் அவற்றால் வளமுற்று மணம் நாறும் முல்லைக் காட்டை நாம் இப்பொழுது கண்டோம்.
 விலங்கு பறவை முதலான உயிர்க் கூட்டத்தின் மகிழ்ச்சியான வாழ்வும் மரம் செடி கொடிகளின் செழிப்புமே காட்டின் வளத்திற்குக் காரணம் – ஆதலின் ”மல்லலாகிய” என்று புறவிற்கு அடை கொடுத்தார்.
ஐங்குறுநூறு – அரிய செய்தி – 9
வானம்பாடி
வானம்பாடி வறம் களைந்து ஆனாது
அழிதுளி தலைஇய புறவில்……
பேயனார். ஐங். 418 : 1 – 2
 மழைத்துளிகளை உணவாகக் கொள்ளும்  வானம் வாழ்த்திப் புள்ளின் வறுமையை அறவே ஒழித்து; மேலும் இடைவிடாது பெய்த மழையை எய்திய முல்லை காட்டின் அழகை மிகுமாறு செய்தது.( வானம் பாடியை – வானம் வாழ்த்தி என்றும் கூறுவர்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக