சனி, 30 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-227.

 

தன்னேரிலாத தமிழ்-227.

“ ……………………………………….முன்னாள்

கையுள்ளது போல் காட்டி வழிநாள்

பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்

நாணாய் ஆயினும் நாணக்கூறி என்

நுணங்கு செந்நா அணங்க ஏத்தி

பாடப் பாடப் பாடுபுகழ் கொண்ட நின்

ஆடுகொள் வியன் மார்பு தொழுதெனன் பழிச்சிச்

 செல்வல் அத்தை யானே ………..” ----புறநானூறு, 211.

முன்னை நாள் நீ, (குடக்கோச் சேரலிரும்பொறை) தரும் பரிசில் என் கையிலே வந்தடைந்தது என்ற உணர்வை உண்டாக்கிவிட்டுப் பின்பு பொய்யொடு பொருந்திப் பரிசில் வழங்காத தன்மைக்கு வருந்தி, நீ வெட்கப்படாவிட்டாலும் வெட்கப்படுமாறு கூறி, நான் செல்வேன். அவ்வாறு செல்லுங்கால், எனது நுண்ணிய புலமை மிக்க செவ்விய நாக்கு வருந்துமாறு புகழ்ந்து நாள்தோறும், பாடப்பாடப் பின்னரும் பாடப்  புகழை ஏற்றுக் கொண்ட,  உனது வெற்றிமிக்க அகன்ற மார்பை வணங்கி, வாழ்த்திப் போவேன் யான்.

வெள்ளி, 29 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-226.

 

தன்னேரிலாத தமிழ்-226.

வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன்

தீஞ்சுவை யாதும் திரியாதாம் ஆங்கே

இனம் தீது எனினும் இயல்புடையார் கேண்மை

மனம் தீதாம் பக்கம் அரிது.” –நாலடியார், 244.

வேம்பின் இலைக்குள் பொதித்து வைக்கப் பெற்றுப் பழுத்தாலும் வாழைப்பழம் தன் இனிய சுவையில் சிறிதும் மாறாது அமையும் . அதுபோல் தான் சேர்ந்து பழகும் இனம் தீயதாக இருந்தால்கூட, நல்லியல்பு உடையார் உறவு, மனம் தீயதாக மாறும் வகை அரிதாம்.

வியாழன், 28 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-225.

 

தன்னேரிலாத தமிழ்-225.

நிலத்துக்கு அணி என்ப நெல்லும் கரும்பும்

குளத்துக்கு அணி என்ப தாமரை பெண்மை

நலத்துக்கு அணி என்ப நாணம் தனக்கு அணியாம்

தான் செல் உலகத்து அறம்.-நான்மணிக்கடிகை, 9.

 நெல்லும் கரும்பும் நீர்வளமிக்க நன்செய் நிலத்துக்கு அழகாகும் ; வளமான நீர் நிறைந்த குளத்திற்குத் தாமரை அழகாகும் ; நற்பெண்ணின் அழகுக்கு நாணம்  அழகாகும் ; ஒருவன் செய்யும் அறம் அவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் அழகாம்.

திங்கள், 25 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-224.

 

தன்னேரிலாத தமிழ்-224.

பொன்னிறச் செந்நெல் பொதியொடு பீள்வாட

மின்னொளிர் வானம் கடல் உள்ளும் கான்று உகுக்கும்

வெண்மை உடையார் விழுச்செல்வம் எய்தியக்கால்

வண்மையும் அன்ன தகைத்து.” ----நாலடியார், 269.

பொன்னிறம் உடைய நல்ல நெல்மணிகள் பொதிந்திருக்கும் பயிர்களின் கருவானது வாடிக்கொண்டிருக்க, மின்னி ஒளிர்கின்ற வானம் விளைவயலில் பெய்யாமல் கடலில் பொழிந்து செல்வதைப்  போன்றதே ,அறிவில்லாதவர்கள் பெற்ற பெருஞ்செல்வமும் அவர்தம் கொடையும்.

ஞாயிறு, 24 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-223.

 

தன்னேரிலாத தமிழ்-223.

நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும்

நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே

தம்மைப் பிழைத்தோர் பொறுக்கும் செம்மல்

இக்குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும் என

காண்தகு மொய்ம்ப காட்டினை…….”புறநானூறு, 43.

வேந்தே..! ( சோழன் மாவளத்தான்) உன் மீது நான் பழி கூறிப் பிழை செய்ய ; நீயோ, என்னைவிடப் பிழை செய்தவன் போல் மிகவும் நாணமடைந்தாய் ; இவ்வாறு தமக்குப் பிழை செய்தோரைப் பொறுத்தருளும் தலைமை, இக்குலத்தில் பிறந்தவர்க்கு எளிமையாகக் காணப்படும் பண்பாகும் ; இப்பண்பினை இன்று  யான் காணுமாறு வெளிப்படுத்தினை.

 

சனி, 23 ஜனவரி, 2021

தன்னேரிலாத தமிழ்-222.

 

தன்னேரிலாத தமிழ்-222.

கருங்கால் வேங்கை மலரின் நாளும்

பொன் அன்ன வீ  சுமந்து

மணி அன்ன நீர் கடற் படரும்

செவ்வரைப் படப்பை நாஞ்சில் பொருந

சிறு வெள் அருவிப் பெருங்கல் நாடனை

நீ வாழியர் நின் தந்தை

தாய் வாழியர் நிற் பயந்திசினோரே -----புறநானூறு, 137.

கரிய தாள் பொருந்திய வேங்கை மலரின் பொன்போன்ற பூவைச் சுமந்து , பளிங்கு மணி போன்ற நீர் நாள்தோறும் கடலில் சென்று கலக்கும் . அத்தகைய வளம் பொருந்திய சிறு வெள்ளிய  அருவியுடைய மலை நாடனே..! நீ  ( நாஞ்சில் வள்ளுவன்) வாழ்வாயாக ; நின்னைப் பெற்றோராகிய நின் தந்தையும் தாயும் வாழ்க.