புதன், 31 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 343

திருக்குறள் – சிறப்புரை : 343
ஐந்தடக்கல்
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
 வேண்டிய எல்லாம் ஒருங்கு. – 343
துன்பங்கள் ஒழிய துறவறம் நாடின் ஐம்புலன்கள் வழி நுகரப்படும் சுவைகளை  (சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம்) வெறுத்து ஒதுக்கவேண்டும் ;  இவ்வுலக வாழ்க்கைக்கு வேண்டுவன அனைத்தையும்  ஒருசேர விட்டொழிக்க வேண்டும்.
பற்றற்ற நிலை எய்த…. பற்றிய எல்லாவற்றையும் முற்றாக விட்டொழி. 

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 342

திருக்குறள் – சிறப்புரை : 342
வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல. – 342
முற்றாகப் பற்றற்ற நிலையில் இவ்வுலக வாழ்க்கையில்  அஃதாவது இம்மையில் கிடைக்கும் இன்பங்கள் பலவாம் ; அந்நிலை அடைய வேண்டின் ஆசைகளைத் துறந்துவிடுக.
இல்லறக் கடமைகளை இளைஞர்களுக்குக் கொடுத்துவிட்டு – முதுமையில் மன அமைதியாகிய இன்பம் அடைக. 

திங்கள், 29 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 341

திருக்குறள் – சிறப்புரை : 341
35. துறவு
அரிச்சுவடி
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். – 341
ஒருவன் யாதொன்றின் மீது பற்றின்றி விலகியிருக்கிறானோ அவனுக்கு அஃதொன்றால் துன்பம் விளைவதில்லை. பற்றினால் துன்பம் பற்றும்.
துறவுக்கு முதற்பகை ஆசையே.         

சனி, 27 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 340

திருக்குறள் – சிறப்புரை : 340
நிலையில்லா உடம்பு
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. – 340
 நிலையில்லாத உடம்பைத் தனக்கு ஒதுக்கிடமாகக்கொண்டு உறைந்து செல்லும் உயிர்க்கு  நிலையாகத் தங்குவதற்குரிய ஒரு வீடு அமையவில்லை போலும். ஒருபொழுது இருந்த உயிர் மறுபொழுது இல்லையே.
“ காடு முன்னினரே நாடு கொண்டோரும்

  நினக்கும் வருதல் வைகல் அற்றே” – (புறநானூறு)

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 339

திருக்குறள் – சிறப்புரை : 339
பிறப்பும் இறப்பும்
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. – 339
உயிர்கள் பிறத்தலும் இறத்தலும் இயற்கைநிகழ்வே ; உறங்குவதும் விழிப்பதும் அவ்வாறே. உறங்குவதுபோலும் சாக்காடு ; உறங்கி விழிப்பதுபோலும் பிறப்பு மாறிமாறி நிகழ்தல் இயல்பாதலின் நிலையாமை  உணர்த்தினாரென்க.
“  பிறந்தார் மூத்தார் பிணி நோய் உற்றார்

   இறந்தார் என்கை இயல்பே” – (மணிமேகலை)

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 338

திருக்குறள் – சிறப்புரை : 338
 உறவாடும் நட்பு
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. – 338
உடம்புக்கும் உயிருக்குமான நட்பு  -- கூட்டுக்குள் உண்டு உறங்கி உறைந்த பறவை காலம் வந்துற்றபோது கூட்டைவிட்டுப் பறந்தோடுவதைப் போன்று உடம்பைவிட்டு உயிர் பிரிந்தோடும்.
“ இது என வரைந்து வாழ்நாள் உணர்ந்தோர்

  முதுநீர் உலகின் முழுவதும் இல்லை “ – (சிலம்பு.)

புதன், 24 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 337

திருக்குறள் – சிறப்புரை : 337
வாழ்வது அறியார்
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பிற. – 337
எப்படிச் செம்மையா வாழவேண்டும் என்பதைப்பற்றி ஒருபொழுதும் சிறிதும் சிந்திக்கத் தெரியாத மூடர்கள் ஒருகோடியல்ல பல கோடி எண்ணங்களோடு கற்பனையில் காலம் கழித்து அழிவர்.
வாழ்க்கைக்கான கல்வியைத் தாய் மொழியில் கற்காது வயிற்றுக்கான கல்வியை அயல் மொழியில் படித்து வாழ்க்கையைத் தொலைத்தோர் பலரே.
“ கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு
    அகறல் ஓம்புமின் அறிவுடையீர் ---- நற்றிணை . 243.


செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 336

திருக்குறள் – சிறப்புரை : 336
பெருமை
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு. – 336
நேற்று இருந்தவன் இன்று இல்லை ; உடலைவிட்டு உயிர் பிரியும் காலத்தை யார் அறிவார்..? நிலைத்திருப்பது  என்று எதுவுமில்லை  என்னும் பெருமையைக் கொண்டுள்ளது இவ்வுலகு .
மாற்றம் – இயற்கையின் இடையறாத பணி.
“ முக் காலைக் கொட்டினுள் மூடித் தீக் கொண்டு எழுவர்
செத்தாரைச் சாவார் சுமந்து. ”  - (நாலடியார்.) 

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 335

திருக்குறள் – சிறப்புரை : 335
வாழ்நாள்
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். – 335
வாழ்நாள் முடியுங்காலத்து நாக்கு உள்ளிழித்து ஒன்று, இரண்டு, மூன்று என விக்குள் மேலும் வராமுன்னர் விரைந்துசென்று  நல்லன செய்தல் வேண்டும்.
“ பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் நாளைத்
 தழீஇம் தழீஇம் தண்ணம் படும்.. (நாலடியார்) 

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 334

திருக்குறள் – சிறப்புரை : 334
நாள் - வாள்
நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும்
வாளது உணர்வார்ப் பெறின். – 334
நிலையாமையின் மெய்ப்பொருளை உணர்ந்து, நாள் என்பது நேற்று போல் இன்று ; இன்றுபோல் நாளை எனக் காட்டினாலும், அஃது உண்மையில்  உயிரை அறுத்துக்கொண்டிருக்கும் வாள் என்பதை உணர்தல் வேண்டும்.
“ வைகல் தோறும் இன்பமும் இளமையும்

  எய்கணை நிழலின் கழியும் இவ்வுலகத்து” – (நற்றிணை, 46.)

சனி, 20 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 333

திருக்குறள் – சிறப்புரை : 333
சிறுமை பயக்கும்
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். – 333
ஓரிடத்து நிலைத்து நிற்கும் இயல்பில்லாதது செல்வம், அவ்வியல்புடைய செல்வத்தைப் பெற்றால்,  அப்பொழுதே தம் பெயர் விளங்க,  நிலைத்து நிற்கும் நற்செயல்களைச் செய்தல் வேண்டும்.
“ செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே” ( புறநானூறு, 189.)


வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 332

திருக்குறள் – சிறப்புரை : 332
உருண்டோடிடும்…..
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று. – 332
கூத்தாடும் அரங்கிற்கு வரும்  மக்கள்கூட்டம் தொடக்கத்தில் சிறிதாகப் பின்னர்ப் பெருகிப் பெருங்கூட்டமாகிக் கூத்து முடிந்த பின் ஒரு நொடிப்பொழுதில் கூட்டம் கலைந்து சென்று விடுதலைப்போலத் தீவினையால் வந்த செல்வமும் கொஞ்சம் கொஞ்சமாகப்பெருகி மறைந்தொழியும்.
  “ நின்றன நின்றன நில்லா என உணர்ந்து
      ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க  (நாலடியார்)  

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

34. நிலையாமை

34. நிலையாமை
மாற்றம் ஒன்றே…!
நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. – 331
உலகில் நிலைத்து நில்லாதவற்றை நிலைத்து நிற்பன என்று அறிவு பிறழ உணரும் சிற்றறிவே இழிவானதாகும்.
 நிலையாமை என்ற சொல் ஒன்றே நிலைத்து நிற்பது. “ நில்லாமையே நிலையிற்று….. (குறுந்தொகை. 143.)                     

புதன், 17 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 330

திருக்குறள் – சிறப்புரை : 330
கொலை கொடிது
உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிருடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர். – 330
  உடலை வருத்தும் நோயுடன் எக்காலமும் போராடிக் கொண்டிருப்பவர்கள் முற்காலத்தில் உடம்பிலிருந்து உயிரைப் பறிக்கும் கொலைத் தொழிலைச்  செய்தவர்கள் ஆவர் என்பர்.

” பெற்றோர்கள் செய்யும் கொடுமை (பாவம்) பிள்ளைகள் தலையில் விடியும்.”

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 329

திருக்குறள் – சிறப்புரை : 329
இழிதொழில்
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவார் அகத்து. – 329
கொலையின் கொடுமையை அறிந்த அறிவுடையர், கொலையைத் தொழிலாகச் செய்யும் மாக்களை,  மனித இனத்தில் இழிவுடையோராகவே கருதுவர்.
இழிதொழிலால் இழிநிலை அடைவர்.

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 328

திருக்குறள் – சிறப்புரை : 328
இழிவான ஆக்கம்
நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை. – 328
 உயிர்க் கொலை புரிவதால் செல்வ வளம் பெருகி, நன்மை கிடைக்கும் என்றாலும்  தன்னுயிர்போல் பிற உயிர்களையும் போற்றும் மனம் உடைய மனிதர்கள், அக்கொலைத்தொழிலால்  பெருகிய செல்வத்தை இழிவாகவே கருதுவார்கள்.

குருதிக் கறை படிந்த செல்வம் தலைமுறையையும் தவிக்கவிடும்.

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2016

விடுதலை வேண்டும் - 2

விடுதலை வேண்டும் - 2
வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க.. அந்த
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே ---- பட்டுக்கோடையார்.

வீரம் செறிந்த இளஞர்களைக் கசையடித்து,  காவல் தெய்வங்களாகிய காளைகளைச் சிறையில் தள்ளிய நீதிமன்றங்கள் – சத்தியபீடமல்ல – அவை உளறுவாயர்களின் உறைவிடம்..

Bull fighting

The first illustration is the bull leaping scene from Knossos, Crete. The second illustration is a Indus seal depiction. The fundamental theme is the same in both seals. It is likely that the basic idea has emerged some where between these two regions Greece and Indian Sub-continent. Over a period both these diverged forms got evolved into slightly variable forms. Now , analyzing the purpose of this picture is important. It is a kind of symbolism, which had been ritualized, so that the next generation will remember. Unfortunately we remember and carry out the ritual without understanding the meaning behind that. 

The real purpose behind this art is only calendar purpose, that is remembering monthly season. (Or beginning of year) The bull indicates the Taurus constellation and remaining human beings are simply the surrounding constellations of Bull constellation. Most probably the man holding the horns of bull is Orion constellation. 

In olden days the appearance of Taurus constellation in heliacal risingposition could have indicated the beginning of rainy season  and making preparations for crop cultivation like tilling the land, removing weeds and other preparations. The importance is that you should do preparations for farming and not war. Only after harvest, you should get ready for next activities like courtships and marriage. If time and resource permits you can get ready for war and plunder of other communities. Because during this hot summer season, really there will be no other work other than settling scores with enemies.
“Jallikattu,” which is bull-baiting or bull fighting, is an ancient Dravidian tradition that was practised about 4,000 years ago during the Indus Valley civilization. A well-preserved seal found at Mohenjodaro in the 1930s attests to this, according to Iravatham Mahadevan, a specialist in Indus and Brahmi scripts.
                     This seal realistically brings alive a vigorous scene of bull-fighting. It portrays a ferocious bull in action, several men or a single man (according to two different interpretations), thrown in the air by it as they try to control it. Clearly, the bull is the victor. This seal, made of stone, is on display in the National Museum, New Delhi. It can be dated to 2,000 B.C.

                 The seal found at Mohenjodaro, now in Pakistan, shows a single bull with curved horns in the “action” of goring a single man or several men. Its horns are shown in the middle to depict the speed and fluency of its action: the angry bull has suddenly turned its neck sideways to toss the daring men and then its neck has come to its original position. Bull-baiting figures in the Mahabharatha, which describes Krishna controlling a ferocious bull in the forecourt of Kamsa’s palace.
Jeyakumar.Indus Civilization

Updated Jul 17, 2016, 1:46 AM
New theory on Indus civilization

திருக்குறள் – சிறப்புரை : 327

திருக்குறள் – சிறப்புரை : 327
செய்யற்க…
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. – 327
தன் இன்னுயிர் நீங்கும் காலம் வந்துற்றபோதும் அதனைக் காத்துக் கொள்வதற்காகக்கூடப் பிற ஓர் இனிய உயிரைக் கொல்லுதலைச் செய்யாதே.
இன்னுயிர் என்றது தன்னுடன் இனிது இயைந்து வாழும் உயிரினங்களை. 

சனி, 13 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 327

திருக்குறள் – சிறப்புரை : 327
கூற்றுவன் நெருங்கான்
கொல்லாமையாகிய அறத்தை மேற்கொண்டொழுகுவானுக்கு , வரையப்பட்ட வாழ்நாள்வரை, அவன் உயிரைக் கவர்ந்துண்ணும் கூற்றுவன் நெருங்கான்.
நல்வினை ஆற்றுவானுக்கு நல்ல சாக்காடு . 

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 325

திருக்குறள் – சிறப்புரை : 325
பேரறம்
நிலையஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை. – 325
நில்லா வாழ்க்கையின் நிலை அஞ்சிப் பிறவித்துன்பம் நீங்கவேண்டித் துறவு மேற்கொண்டவர்களைக் காட்டிலும் -  கொலைத் தொழிலுக்கு அஞ்சி, கொல்லாமையாகிய பேரறத்தினைப் போற்றுபவர்களே யாவரினும் சிறந்தவர் ஆவார்.
உயிர்கள் மீது இரக்கம் காட்டு ; உயர்ந்தோர் உலகம் ஈட்டு. 

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 324

திருக்குறள் – சிறப்புரை : 324
நல்வழி நட…
நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி. – 324
நன்னெறி எனப்படுவது யாதெனின், எந்த உயிரையும் கொல்லக்கூடாது என்னும் உறுதியைக் கொள்கையாகக் கொண்டொழுகுதலே. ஓர் உயிரைக் கொன்று உண்ணல் – அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை. 

புதன், 10 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 323

திருக்குறள் – சிறப்புரை : 323
அறமுதல்…
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. -323
அறங்களுள் தலைமைத் தகுதி என்னும் சிறப்புக்குரிய அறம் கொல்லாமையே,இதற்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணத்தக்க சிறப்புடைய அறம் பொய்யாமையே.
அறங்களுள் முதலிடம் கொல்லாமை ; இரண்டாமிடம் பொய்யாமை.

பொய்மையும் வாய்மை இடத்து நிற்கும் … கொலைத் தொழில்..?

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 322

திருக்குறள் – சிறப்புரை : 322
பகுத்துண்டு வாழ்….
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. – 322
சான்றோர் அறமென்று தொகுத்துச் சொல்லிய எல்லாவற்றுள்ளும்  தலைசிறந்து விளங்குவது,  இருப்பவற்றை  அஃறிணை உயர்திணை எனப்பாராது பலஉயிர்களோடும் பகுத்துண்டு வாழ்வதாகிய அறமே. உயர்நிலை உயிராகிய மானுடம்,   உறவுகளாகிய பிற  உயிர்களையும் பேணிப் பாதுகாப்பது கடனாம் 

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

33 . கொல்லாமை

33 . கொல்லாமை
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும். – 321
அறச் செயல் யாதெனின் ஓர் உயிரையும் கொல்லாதிருத்தலே ; உயிர்க் கொலை, பிறழ்வினைகள் (தீவினைகள் ) அனைத்தையும் கொடுக்கும்.
கொலையில் கொடியாரை அறமே தண்டிக்கும். 

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 320

திருக்குறள் – சிறப்புரை : 320
செய்த வினை
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். – 320
பிறருக்குச் செய்யும் துன்பங்கள் யாவும்  செய்தவருக்கே வந்து சேரும், அதனால் தம் உயிருக்குத் துன்பம்வந்து சேரக்கூடாது என்று வேண்டுபவர், பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் வேண்டும்.

செய்தார்க்குச் செய்த வினை.

திருக்குறள் – சிறப்புரை : 319

திருக்குறள் – சிறப்புரை : 319
முற்பகல் செய்யின்…
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும். – 319
பிறருக்குத் துன்பம் தரும் செயலை முற்பகல் ஒருவன் செய்தானாகில் அவனுக்கு அக்கேடு செய்ததற்குரிய பலன்  (துன்பம்) பிற்பகலே எவரும் ஏவாமல் தானே வந்துசேரும்.

துன்பத் தீ, மூட்டியவனையே சூழ்ந்து அழிக்கும். 7/8

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 318

திருக்குறள் – சிறப்புரை : 318
மன்னுயிர் போற்று
தன்னுயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல். – 318
தன் உயிருக்குப் பிறர் துன்பம் செய்தபோது அத்துன்பத்தை உணர்ந்து வருந்தும் அறிவுடைய ஒருவன் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்வது யாது கருதியோ  ..?

எல்லா உயிர்க்கும் இன்பமும் துன்பமும் ஒன்றேயன்றோ..!

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 317

திருக்குறள் – சிறப்புரை : 317
புலம்பவிடலும் தீது
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
 மாணாசெய் யாமை தலை. – 317
எள்முனை அளவுகூட, எவ்விடத்தும் எக்காலத்தும் யார்க்கும் மனத்தினாலும் துன்பம் தரும் செயல்களைச் செய்யாதிருப்பது மனம் உடைய மனிதருக்கு அழகாம். 

புதன், 3 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 316

திருக்குறள் – சிறப்புரை : 316
வாழு… வாழவிடு
இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். – 316
ஒருவன், இது தனக்குத் தீமைதரும் என்று அறிந்த ஒன்றைத் தான்,  பிறருக்குச் செய்யத் துணியாது தவிர்க்க வேண்டும்.
”உன்னிடம் பிறர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீ எதிர்பார்க்கின்றாயோ, அப்படியே நீயும் பிறரிடம் நடந்துகொள்ள வேண்டும்.” தந்தை பெரியார். 

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 315

திருக்குறள் – சிறப்புரை : 315
அறிவின் அடையாளம்
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தன்நோய்போல் போற்றாக் கடை. – 315
பிற உயிர்கள் படும் துன்பத்தை, தனக்கு நேர்ந்த துன்பமாகக்  கருதி அவ்வுயிர்களைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லையானால்  ஆறறிவு பெற்றதன் பயன்தான் என்ன..?
”எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி….” – வாழ்க. 

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

திருக்குறள் – சிறப்புரை : 314

திருக்குறள் – சிறப்புரை : 314
நாணுடைமை
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல். – 314
தமக்குத் துன்பம் செய்த ஒருவரைத் தண்டிக்க நினைத்தால் முதற்படியாக, அவர் வெட்கித் தலை குனியும்படி ஒரு  நன்மை செய்வதோடு , அவர் செய்த துன்பத்தையும் மறந்துவிடுக.
நல்லோர் மட்டுமே துன்பம் செய்தார்க்கும் நன்மைசெய்வர்.