வியாழன், 30 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…20.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…20.

ஒளவையார் அருளிய மூதுரை

 

கல்லாதவன் காட்டுமரமாவான்

 

“கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் – சபை நடுவே

நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய

மாட்டாதவன் நன் மரம்.”

 

காட்டில் வளர்ந்து நிற்கும் மரங்களைக் காட்டிலும் படிப்பறிவு இல்லாதவனும் ஒருவருடைய குறிப்பை அறியாதவனும் நல்ல மரங்களாவர். காரணம் மனித மரங்கள் பார்க்கும் ; நடக்கும் ;பேசும்.”

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

 

இணைப்பு:

“கல்லாது முதிர்ந்தவன் கண் இலா நெஞ்சம் போல்

புல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை”

நல்லந்துவனார்; கலித்தொகை,130.

 

கல்வி கற்காது முதுமை எய்தியவனின் அகக்ண் இல்லாத நெஞ்சம் போலத் தனித்து வருந்துவதற்குக் காரணமான மாலைக்காலம் , நிறைந்த இருளைப் பரவச் செய்தது.

 

புதன், 29 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…19.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…19.

ஒளவையார் அருளிய மூதுரை

நல்லோரால் எல்லார்க்கும் நன்மை

 

“நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு

எல்லார்க்கும் பெய்யு மழை..”

 

 நெல்லுக்கு இறத்த நீரால் புல்லும் வளம் பெறும். அது போல நல்லோரைச் சார்ந்த எல்லோரும் பயனடைவர்.

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

 

இணைப்பு:

 

“நீரின்று அமையா உலகம் போலத்

தாமின்று அமையா நம் நயந்தருளி “ – கபிலர், நற்றிணை; 1.

 

தோழி, நீரின்றி அமையாது உலகியல் வாழ்வு என்பதைப் போல அவரின்றி

நம் வாழ்வு சிறக்காது என்பதை நன்கு அறிந்த  நல் உள்ளம் கொண்டவர் என் தலைவர், என்றாள் தலவி.

 

செவ்வாய், 28 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…18.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…18.

ஒளவையார் அருளிய மூதுரை.

 

நல்லார் தொடர்பால் வரும் நன்மை

“நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க

நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்

குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு

இணங்கி இருப்பதுவும் நன்று.”

 

 நல்லவரைக் காண்பதும் அவர் சொற்களைக் கேட்பதும் நன்மையாகும் ; அவருடைய நல்ல குணங்களைப் பேசுவதும் அவரோடு கூடியிருப்பதும் நல்லறிவும் நல்லொழுக்கமும் தரும்.”

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

 

இணைப்பு:

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல். குறள்;441.

 

அறத்தின் இயல்பை அறிந்து தன்னினும் மூத்த அறிவுடையாரது நட்பை ஆராய்ந்து அறிந்து பற்றிக் கொள்க,

 

சனி, 25 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…17.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…17.

ஒளவையார் அருளிய மூதுரை.

 

அறிவு, செல்வம், குணம் அமைதல்

 

“நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற

நூலளவே யாகுமாம் நுண்ணறிவு – மேலைத்

தவத்தளவே யாகுமாம் தான்பெற்ற செல்வம்

குலத்தளவே யாகும் குணம்.

 

 நீரினது உயரத்தின் அளவே அல்லிக்கொடி இருக்கும். அதுபோல ஒருவர்க்கு அவர் கற்ற நூலின் அளவே அறிவு அமையும். செய்த தவத்தின் அளவே செல்வம் அமையும்; பிறந்த குடியின் இயல்புக்கு ஏற்றவாறே குணம் அமையும்.

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

 

இணைப்பு:

”இனத்தினான் ஆகும்பழி புகழ் தம்தம்

மனத்தினான் ஆகும் மதி.” காரியாசான், சிறுபஞ்சமூலம், 79.

 

மக்களுக்குத் தத்தம் தீய சேர்க்கையால் பழியும் நற்சேர்க்கையால் புகழும் மனத்தின் இயல்புக்கு ஏற்ப அறிவும் உண்டாகும்.

வெள்ளி, 24 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…16.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…16.

ஒளவையார் அருளிய மூதுரை.

 

உயிரினும் மானம் பெரிது

 

“உற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்

பற்றலரைக் கண்டாற் பணிவரோ – கற்றூண்

பிளந்திறுவ தல்லாற் பெரும்பாரம் தாங்கின்

தளர்ந்து வலையுமோ தான்.”

 

கல்லால் ஆகிய தூண் பெரும் பாரம் தாங்க நேர்ந்தால் வளையாமல் பிளந்து முறியும். அதுபோல், மானம் உடையோர் மானக்கேடு வருமிடத்து உயிரைவிட்டு மானத்தைக் காப்பர்.

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

இணைப்பு:

“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.-குறள். 969.

 

பனிமலையில் வாழும் கவரிமா எனும் விலங்கு,,தன் உடம்பினின்றும் மயிர் நீங்கின் உயிர் வாழாது. அதுபோல், தன்மானம் உடையோர் தமக்கு மானக்கேடு வருமாயின் வாழ விரும்பாது உயிரை விட்டுவிடுவர்.

 

வியாழன், 23 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…15.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…15.

ஒளவையார் அருளிய மூதுரை.

மேன்மக்கள் இயல்பு

‘”அட்டாலும் பால்சுவையிற் குன்றா தளவளாய்

நட்டாலும் நண்பல்லார் – நண்பல்லர்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு

சுட்டாலும் வெண்மை தரும்.”

 

 பாலைத்தீயிலிட்டுக் காய்ச்சினாலும் சுவை குறையாது. சங்கினைச் சுட்டு நீறாக்கினாலும் தன் வெண்மை நிறத்தையே தரும். அவைபோல மேன் மக்கள் துன்பம் வந்தபோதும், தம் உயர் குணத்தினின்றும் மாறுபடார் ; கீழோர் கலந்து பழகினாலும் நண்பர் ஆகார்.”

 

”நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடையாளர் தொடர்பு,  -குறள்;783.

 

ஆன்றோர் அருளிய நூலின் நற்பொருளை கற்க,கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்று பழகப் பழக  நற்பண்பு உடையவரின் நட்பும் இன்பம் தரும்.

 

 

புதன், 22 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…14.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…14.

ஒளவையார் அருளிய மூதுரை.

 

இளமையில் வறுமை

“இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்

இன்னா அளவில் இனியவும் – இன்னாத

நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே

ஆளில்லா மங்கைக் கழகு.”

                   காலமல்லாத காலத்தில் பூத்த மலரும் கணவன் இல்லாத பெண்ணின் அழகும் பயன்படாவாம். அவைபோல, இளமையில் வறுமையும் முதுமையிற் செல்வமும் பயன்படாவாம் ; துன்பம் செய்யும்.”

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

 

இணைப்பு:

“திருடாதே பாப்பா திருடாதே

வறுமை நிலைக்குப் பயந்து விடாதே

திறமை இருக்கு மறந்துவிடாதே (திரு)

சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து – தவறு

சிறுசாய் இருக்கையில் திருத்திக்கோ

தெரிஞ்சும் தெரியாமே நடந்திருந்தா – அது

திரும்பவும் வராமே பாத்துக்கோ (திரு)

………………………………….. பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரம்: படம் – திருடாதே, 1961.

 

செவ்வாய், 21 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…13. ஒளவையார் அருளிய மூதுரை

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…13.

ஒளவையார் அருளிய மூதுரை

 

“ நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி

என்று தருங்கொல் எனவேண்டா – நின்று

தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்

தலையாலே தான்தருத லால்.”

 

தென்னைமரம் வேரால் உண்ட நீரை இனிய சுவையுடைய இளநீராக்கி முடியாலே தருகின்றது. அதுபோல, நாம் பிறர்க்குச் செய்யும் உதவி

 நமக்குத் தவறாமல் வந்து சேரும். ஆதலால் என்றும் நன்மையே செய்க.”

உரை: பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

இணைப்பு

“முன்னொன்றுதமக்கு ஆற்றி முயன்றவர் இறுதிக்கண்

பின்னொன்று பெயர்த்து ஆற்றும் பீடுடையாளர்…” –பாலைபாடிய பெருங்கடுங்கோ ; கலித்தொகை., 34.

முன்பு தனக்கு உதவி செய்தவர் வறுமையுற்ற பொழுது மறவாது அவர்க்கு அந்த உதவியைத் திருப்பிச் செய்யும் நல்லோர் பெருமை உடையவர் ஆவார்.

 

வெள்ளி, 17 நவம்பர், 2023

மகுளி – இழுகு பறை

 

மகுளிஇழுகு பறை

                                பறை முழக்கம் பல பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியது. தகவல் தொடர்பில் சிறப்பிடம் பெற்ற இக்கலை கைதேர்ந்த கலைஞர்களால் இசைக்கப்பட்டதாகும். பறை இசைக்கலைஞர்களைத் தொழில் பெயரால்  பறையர் என்றழைத்தனர்.  இக்கலை வெறும் தொழில் சார்ந்த நிலையில் பரவலாக்கப்பட்டு,இத்தொழில் செய்வோரை இழிந்த சாதியினர் என்றும் குறிக்கலாயினர்.பறையிசைக் கலஞர்களின் ஏழ்மைக்கு /  வறுமைக்கு வைத்தபெயர் பறையன். இசையோடு பிறந்த மனிதனுக்கு இசை மொழியாக பறை- தப்பு என்று ஒலிப்பெயர் பெற்று நிலைபெற்றது. தப்புதாளத்தோடு இயைந்த இசையகும்.  எல்லா முழக்கிசைக்கும் முதன்மையானது  சிறுபறை  (தப்பட்டை)

சங்க இலக்கியம் அகநானூறு 19 ஆம் பாடலில் பொருந்தில் இளங்கீரனார், உருள்துடி மகுளியின் பொருள்தெரிந்து இசைக்கும்

கடுங்குரல் குடிஞை……………….” என்று கூறுகின்றார்.

                                  கடிப்பினால் உராய்தலால் உண்டாகும் மகுளியின் ஓசை ஈண்டுக் குடிஞையின் ஓசைக்கு உவமையென்க. கேட்போர் தம்மியல்பிற்கேற்பப் பொருள் தெரியும்படி இசைக்கும் என்க. அஃதாவது ஆறலை கள்வர் கரந்துறையின் அந்நெறியில் பொருளொடும் போகும் வழிப்போக்கர்க்கு, ‘குத்திப்புதை’. ’சுட்டுக்குவிஎன்னும் பொருள்பட இசைத்தலும் வினைவயிற் செல்வோர்க்குத் தீநிமித்தமாகவாதல் நன்னிமித்தமாகவாதல் அவர் மேற்கொண்ட வினை முற்றுமென்றாதல் முற்றாதென்றாதல் எதிர்காலப் பொருள் தெரிய இசைத்தலும் பிறவுமாம். ஆறலை கள்வர்க்கஞ்சிப் போவார்தம் அச்சத்தை இக்குரல் மிகுவித்துக் கேள்விக்கின்னாதாதல் பற்றிக் கடுங்குரல் என்றார் .” உரையாசிரியர், பெருமழைப் புலவர்.

                         மகுளி, இதனை இழுகுபறை, ஒரு சிறு பறை எனலாம். பறையில் கோலினால் இழுத்து முழக்குவதால் அவ்வோசை அச்சம் தரத் தக்கதாயிர்று. காட்டுவழியில் செல்வோரைக் கவனப்படுத்துவதாகும். அஃதாவது ஓசையின் பொருள் தெரியும்படி ஒலிக்கும் என்பது அவ்வோசைக்குப் பொருள் உண்டு என்பதே! அவ்வோசை ஒரு கருத்தைப் புலப்படுத்தும்  தகவல் தொடர்பு கருவியாகும்.

                        இன்றைய பறை ஒலியில் கூட ஒரு பொருள் பொதிந்து கிடப்பதை உணர முடியும். பறை முழக்கத்தை நாட்டுப்புறத்தார் ’கொட்டு’ என்று கூறுவர். சாமிக்கொட்டு, கலியாணக்கொட்டு, சாவுக்கொட்டு, அறிவிப்புக்கொட்டு என்று பல கொட்டு முறைகள் உள்ளன. ஒரு செய்தியை/ஒரு நிகழ்ச்சியைக்   கொட்டு முறையைக் கேட்டுத் தொலைவில் உள்ளோரும் புரிந்து கொள்ளலாம்.

                          இழுகு பறையில் ஒலிக்கும் ஓசையின் பொருளைக் ‘குத்திப்புதை’, ‘சுட்டுக்குவி’ என்று தத்தம் மனவியல்புக்கேற்பப் புரிந்து கொள்வதைப் போலச் சாவுக்கொட்டில் ஒலிக்கும் பறை ஓசையை…

“சாவு செத்தா எனக்கென்ன

சம்பளத்தை மின்ன (முன்னே)கொடு

சாவு செத்தா எனக்கென்ன ; சம்பளத்தை மின்ன கொடு”

என்று ஓசைக்கு ஏற்றவாறு பொருள்  கொண்டு (நையாண்டியாக) நானும் என்னூரில் பாடியிருக்கிறேன்.

 

வியாழன், 16 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…12.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…12.

” நூல்பல கல் ”-ஒளவையார், ஆத்திசூடி

இளமை முதற்கொண்டே நல்ல நூல்கள் பலவற்றைக் கற்றுக்கொள்.

கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆவாய் என்று சிலர் கூறுவர். ஆனால் திருவள்ளுவரோ கற்க கசடறக் கற்பவை என்று கற்றறிந்தாரிடம் கேட்டு கற்க வேண்டிய நூல்களைப் பிழையின்றிக் கற்றுக்கொள் என்கிறார். வள்ளுவர் சொல் கேள்.

“தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்

\கற்றனைத்து ஊறும் அறிவு,” –(396)

மணலில் தோடும் அளவே நீர் ஊறும், அதுபோல் மக்கள்  கற்ற அளவே அறிவும் ஆற்றல் பெறும். அவ்வறினைப் பெருக்கிக் கொள்ள……………..

படித்துப் பழகு , அக இருள் நீக்கும் அறிவு , கற்கும் கல்வியால்தான் விளைகிறது.

மாமேதை வி.இ.லெனின் கூறுவார்: ஒரு நாடு முன்னேறுவதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன..அவையாவன….

முதலாவது வழி- படி

இரண்டாவது வழி- படி

மூன்றாவது வழியும் – படி என்றார்.

பாவேந்தரும்  --இளமையி கல் -;எழுந்து நில் என்கிறார்.

”நிற்கையில் நிமிர்ந்து நில்

நடப்பதில் மகிழ்ச்சி கொள்

சற்றே தினந்தோறும் விளையாடு

பற்பல பாட்டும் பாடிடப் பழகு

பணிவாகப் பேசுதல் உனக்கழகு

கற்பதில் முதன்மை கொள்

காண்பதைத் தெரிந்து கொள்

எப்பொழுதும் மெய்யுரைக்க அஞ்சாதே”

 

புதன், 15 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…11.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…11.

” மீதூண் விரும்பேல் ”-ஒளவையார், ஆத்திசூடி

அளவுக்கு மேல் உண்ண விரும்பாதே.

 

அளவுக்கு விஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு :

 கிடைத்தற்கரிய அமிழ்தமே கிடைத்தாலும் அளவுக்கு அதிகமாகத் தின்றால்  அவ்வமிழ்தமும் நஞ்சாகி உயிரைப் பறித்துவிடும் என்பதை வாழ்வில் எந்நாளும் மறக்காதே.

 

‘மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று.(941)

 

திருவள்ளுவர் வழி நின்று நூறாண்டு வாழலாம், நம் உடல்அமைப்பே  (நிலம், நீர், தீ, வளி, விசும்பு ) இவ்வைந்தும் கூடி அமைந்துள்ளது. இஃது இயற்கை அமைத்த விதியாகும்

 

 நம் உடலில் வாதம் , பித்தம் ஐயம் ஆகிய மூன்றும் உயிர் வாழ்தற்குரியவையாகும். இவற்றுள் எந்த ஒன்றும் கூடினாலோ / குறைந்தாலோ  உடலை நோய் வருத்தும். அதனால், நம் உடலுக்கு நலவாழ்வு அளிக்கும் எந்த ஒன்றும் அளவுடன்  இருந்தே ஆகவேண்டும்.

உடற்பயிற்சி செய்யலாமா..? கட்டாயம் செய்ய வேண்டும் உண்மைதான் அதிலும்  அளவுண்டு. உடற்பயிற்சி கடுமையாகச் செய்யக்கூடாது ; செய்யாமலும் இருக்கக் கூடாது ; உடல் தகுதிக்கேற்ப அளவோடு செய்தல் வேண்டும்.

 

இப்படி எந்த ஒன்றிலும் மிகாமலும் குறையாமலும் கவனமுடன் இருந்தால்

நூறாண்டு வாழலாம்.

 

செவ்வாய், 14 நவம்பர், 2023

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…10.

” சோம்பத் திரியேல் ”-ஒளவையார், ஆத்திசூடி

சோம்பேறியாகிக் கண்டபடி ஊர் சுற்றித் திரியாதே.

 

முன்னேற்றத்திற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருப்பது சோம்பித் திரிதலே. கல்வி பயிலும் காலத்தில் சேரக்கூடாதவர்களுடன் சேர்ந்து உன்னை நீயே கெடுத்துக்கொள்ளாதே.

 

“பற்பல நாளும் பழுதுஇன்றிப் பாங்குடைய

கற்றலின் காழ் இனியது இல்.” –பூதஞ்சேந்தனார், இனியவை நாற்பது;40.

ஒவ்வொரு நாளும் வீணே போக்காது, பயனுள்ள நூல்களைக் (பாடங்களை) கற்பதைப்போல் இனிமை உடைய செயல் வேறு எதுவும் இல்லை. என்ற சான்றோர் வாக்கினை மனத்தில் கொண்டு காலம், நேரம் பார்க்காமல் கல்வி கற்று முன்னேறுவாயாக.

 

திங்கள், 13 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…9.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…9.

” நன்றி மறவேல் ”-ஒளவையார், ஆத்திசூடி

பிறர் உனக்குச் செய்த நன்மைகளை ஒருபோதும் மறக்காதே.

“ முன்ஒன்று தமக்குஆற்றி முயன்றவர் இறுதிக்கண்

பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடுடையாளர்….”பாலை பாடிய பெருங்கடுங்கோ; கலித்தொகை-34.

முன்பு ஒருவர் தனக்கு உதவி செய்தவர் வறுமையுற்ற பொழுது மறவாது அவர்க்கு அந்த உதவியைத் திருப்பிச் செய்யும் நல்லோர் பெருமை உடையவர் ஆவார்.

 

”கன்றாமை வேண்டும் கடிய பிறர் செய்த

நன்றியை நன்றாகக் கொளல் வேண்டும்.”

பிள்ளைகளே…! பிறர் செய்த தீமைகளை மறத்தல் வேண்டும் ; பிறர் செய்த நன்மைகளை பெரிதும் நினைத்தல் வேண்டும்.

 

முன்னோர் அறிவுரை அமிழ்தம், எனவே வாழ்வில் எந்நாளும் மறவாது நல்லொழுக்கக் கருத்துக்களைப் போற்றிப் பின்பற்றுங்கள்.

 

வெள்ளி, 10 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…8.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…8.

” இணக்கம் அறிந்து இணங்கு ”-ஒளவையார், ஆத்திசூடி

நல்ல குணம் உடையவரோடு நட்புக் கொள்.

நண்பனாகப் பழகுவதற்கு நமக்குப் பலர் வந்து சேரலாம் ஆயினும் ஒரே ஒருவன் தான் நல்ல நண்பனாக இருப்பதற்குத் தகுதி உடையவன் ஆவான், அப்படிப்பட்ட ஒருவனை நண்பனாகத் தேர்ந்து தெளிய வேண்டும்.

நல்ல நண்பனை எப்படித் தேர்ந்தெடுப்பது….? வள்ளுவர் வழி நின்று தேர்ந்தெடு…!

 

“உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க

அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு- 798.

 

ஊக்கம் குறைவதற்குக் காரணமான செயல்களை எண்ணாமல் இருக்க வேண்டும் ; அதுபோல் நமக்குத் துன்பம் வந்தபோது கண்டும் காணாது ஒதுங்கிச் செல்பவர்தம் நட்பைக் கொள்ளாதிருக்க வேண்டும்.

 

“கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு.”-819.

 

சொல் ஒன்றும் செயல் வேறு ஒன்றுமாய் இருப்பவரின் நட்பு நனவில் மட்டுமின்றிக் கனவிலும் துன்பம் தருவாதாகும்.,  என்பதை உணர்ந்து நல்ல நண்பனைத் தேர்ந்தெடு, வாழ்க்கை இனிக்கும்.

 

வியாழன், 9 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…7.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…7.

” கேள்வி முயல் ”-ஒளவையார், ஆத்திசூடி

நல்ல கருத்துக்களை விரும்பிக் கேட்க முயல வேண்டும்.

கல்வி கற்கும் மாணவர்கள் ஆசிரியர் கற்பிக்கும் பாடங்களை விருப்பத்துடன் கேட்டு மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும்.திருவள்ளுவர் கூறுகிறாரே…”செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் …..!” என்று, 

நல்லோர் கூறும் கருத்துக்களைச் செல்வமாகப் போற்றத்தக்க செவிகள் வழி அறிந்துகொள்ள ஒருவன் முயல்வானாகில் அவன் கல்வியறிவு இல்லாதவனாயிருந்தாலும் கற்றவனாகவே கருதப்படுவான் என்கிறார் திருவள்ளுவர், ”கற்றிலனாயினும் கேட்க….” அப்படிக் கேட்டு நன்மை, தீமைகளை ஆராய்ந்து தெளிவு பெறவேண்டும் .

எப்படி எனில் ..

”எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்.

மெய்ப்பொருள் காண்பது அறிவு” 

எனும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க அன்னை,  தந்தை, ஆசிரியர், கற்றோர் முதலியோர் கூறும் நல்ல கருத்துக்களைக் காது கொடுத்துக் கேட்டுப் பயன் பெறலாமே…!

புதன், 8 நவம்பர், 2023

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…6.

தந்தை தாய்ப் பேண் : - தாய், தந்தையைப் போற்றிப் பாதுகாப்பாயாக.

பிள்ளைகளே..! பெற்றோர்க்கு எது பெருமை தருமோ அதைச் செய்யுங்கள் ; அதை மட்டுமே செய்யுங்கள்.

”ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய்.” குறள்.69.

 

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.” குறள்.67.

 

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என்நோற்றான் கொலெனும் சொல்”. குறள்.70.

மேற்சுட்டியுள்ள மூன்று குறட்பாக்களையும் என்றும் மறவாது நினைவில் கொள்ளுங்கள். வாழ்க்கை நலம், வளம் பெற்றுச் சிறக்கும்.

                                 நீ கல்வியறிவு பெற்றுப் பலரும் பாராட்டுபடி உயர்ந்த இடத்தை அடைந்தால் ,  உன் தாய், உன்னை ஈன்ற பொழுது  பெற்ற மகிழ்ச்சியைவிட பலமடங்கு மகிழ்வாள். அவ்வாறான மகிழ்ச்சியை தாய்க்கு நீ தருதல் வேண்டும்.

                         

                            தந்தையானவர் தன் கடமை தவறாது ,தன் பிள்ளையை முறையாகக் கல்வி,கேள்விகளில் சிறந்து விளங்கிச்  சான்றோர் அவையில் முன்னிலை பெறுமாறு  செய்வதே தந்தையின் கடமையாகும்.

 

                           தாய் தந்தை இருவரும் உன் வாழ்வு சிறக்க நாளும் பாடுபட்டதை எல்லாம் மனத்தில் கொண்டு  பேரும் புகழும் பெற்று உயரும் பொழுது பலரும் உன்னைப் பாராட்டி இப்படி ஒரு மகனைப் பெற இவன் தந்தை என்ன தவம் செய்தாரோ என்று வியக்கும் வண்ணம் மகனாக உன் கடமையைச் செய்வாயாக.

 

பெற்றோர்களே…பிள்ளைகளே../ வள்ளுவர் வழி நின்று  வாழ்வீர்களாக.

 

செவ்வாய், 7 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…5.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…5.

ஊக்கமது கைவிடேல் – வெற்றிக்கு வித்தாகும் ஊக்கத்தைக் கைவிடாதே. நினைத்ததை முடிக்க முயல வேண்டும்; இடையில் மனத்தளர்ச்சி ஏற்பட்டாலும் மனவலிமையுடன் விடாது முயன்று முன்னேற ஊக்கம் ஒன்றே துணையாகும்.

“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.” குறள்:619.

தெய்வத்தைத் தொழுது எண்ணிய செயலைச் செய்து முடிக்க இயலாது போயினும்  வருந்தி இராது, கடுமையாக உடலை வருத்தி ஊக்கமுடன் உழைத்தால், உடல் உழைப்புக்கு உண்டான பலனைப் பெறலாம்.

 

திங்கள், 6 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…4.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…4.

ஞயம்பட வுரை: அன்னை, தந்தை, சிறியோர், பெரியோர் என அனைவரிடத்தும் இனிமையாகப் பேசு.

”முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்

இன்சொல் இனிதே அறம்” – (93 )என்கிறார் திருவள்ளுவர். எவரையும் வெறுப்புடன் பார்க்காது  முகமலர்ச்சியுடன்  பார்த்துப் பின் மனமகிழ்ச்சியுடன் இனிய சொற்களைச் சொல்லுதலே நற்பண்பாகிய அறமாகும்

“இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம்

வன்சொலால் ஒன்றும் மகிழாதே – பொன்செய்

அதிர்வளையாய் பொங்காது அழல் கதிரால் தண்ணென்

 கதிர்வரவால் பொங்கும் கடல்” – சிவப்பிரகாசர், நன்னெறி.

                                ஒலிக்கின்ற வளையல் அணிந்த பெண்ணே…! குளிர்ச்சி பொருந்திய நிலவின் வரவால்தான் கடல் பொங்கும் ; சுடும் சூரியன் வரவால் கடல் பொங்காது. அது போல மக்கள் இனிய சொற்களைக் கேட்டு மகிழவர் ; கடுமையான சொற்களைக் கேட்டு ஒருபோதும் மகிழ மாட்டார்.

சனி, 4 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…3.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…3.

”எண்ணெழுத்து இகழேல்”-ஒளவையார், ஆத்திசூடி

கணக்கையும் இலக்கணத்தையும் பழித்து ஒதுக்காமல் ஆர்வமுடன் கற்றுக்கொள்.

கணக்கு ஆமணக்குப் போல் கசக்காது. கணக்கை விரும்பிப் படித்தால் அறிவு கூர்மையாகும்,ஏனைய பாடங்களையும் எளிதில் புரிந்துகொள்ளலாம்.

உடலுக்கு உயிர் போன்று மொழிக்கு இலக்கணம் விளங்குகிறது . நம் தாய் மொழியின் இலக்கணமும் கணக்கைப் போன்று ஓர் அறிவியல் பாடமாகும். தாய்மொழியில் அறிஞராக, கவிஞராக, பேச்சாளராகப் பலரும் பாராட்டும் வண்ணம் பெயர் எடுக்கலாம்.

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்றார் திருவள்ளுவர். 

வாழும் உயிர்க்கு அறிவு வளம் அளிக்கக் கூடியது எண், எழுத்து ஆகும் ; இவ்விரண்டும் நமதிரு கண்கள் போன்றனவாம்.

 

வெள்ளி, 3 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…2.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…2.

இளமையில் கல் -ஒளவையார், ஆத்திசூடி-2

 

இளமையிலேயே கல்வி கற்கத் தொடங்க வேண்டும். ஆறறிவு உள்ள மனிதன் ஐந்தறிவு உடைய விலங்கினின்றும் வேறுபட்டு மானமுள்ள மனிதனாக வாழ வழி வகுப்பது கல்வி ஒன்றே.

 அதனாலன்றோ “ கேடில் விழுச்செல்வம் கல்வி –என்றார் திருவள்ளுவர். அழியாத, பிறரால் அழிக்கமுடியாத  செல்வமாக விளங்குவது கல்வி ; அக்கல்வியினால் அறிவு பெற, “ உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் ; பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே” என்று முன்னோர் உரைத்த வழியைப் பின்பற்றி, நல்லாசிரியரைப் போற்றி வழிபட்டுச் செவி வாயாக, நெஞ்சு களனாக; கேட்டவை கேட்டவை  விடாது உளத்தமைத்து…. கல்வி கற்க வேண்டும்

 இளமையில், அன்னையே முதல் ஆசிரியர். அன்னையிடம் அமர்ந்து அகரம் கற்றுச் சிகரம் தொடுவாயாக.

 

வியாழன், 2 நவம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…1.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…1.

அறம் செய விரும்புஒளவையார்ஆத்திசூடி-1

எவ்வுயிர்க்கும் நன்மையானவற்றைச் செய்ய விரும்புவாயாக.


நீதி வழுவா நெறிமுறையின் இயங்குவது அறம்.  சாதி, மதம், மொழி, நிறம், மேலோர், கீழோர் என இன்னபிற வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களுக்கும் வகுத்தளித்த, பொதுவானதோர் ஒழுக்கக் கோட்பாடாகும்.

தர்மம் என்றது, அனைத்து மக்களுக்கும் பொதுவானதன்று, சாதி, மதம், குலம், மேலோர், கீழோர் என இன்னபிற வேறுபாடுகளைக் கொண்ட மக்கள், தங்கள் வாழ்க்கையில் பின்பற்றும் சாதி, மத கோட்பாடுகளுக்கு ஏற்ப வேறுபடுவதாகும்.

கம்பராமாயணத்தில் வாலி, சுக்ரீவன் மனைவியைக் கவர்ந்து கொண்டது “எங்கள் குல வழக்கமே,  இராமா..!  உன் குல வழக்கங்கள் எங்களுக்குத் தேவையில்லை “என்று கூறுவான்.

தமிழ் அறம்: எவராயினும்  ”பிறன் மனை நயத்தல்” பெருங் குற்றமே என்று பேசும்.