திங்கள், 30 நவம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-183.

 

தன்னேரிலாத தமிழ்-183.

நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்

வாய்மொழிப் புலவீர் கேண்மின் சிறந்தது

காதல் காமம் காமத்துச் சிறந்தது

விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி

புலத்தலின் சிறந்தது கற்பே…” ---பரிபாடல், 9.

வடமொழியில் அமைந்த நான்கு வேதங்களையும் விரிவாகப்பாடி அவற்றின் பொருளை விளக்குகின்ற வாய்மொழியாகிய வேதத்தில் வல்ல புலவர்களே..!  நாங்கள் சொல்கின்ற சிறந்த பொருளைக் கேட்பீராக..! காம ஒழுக்கத்தில் சிறப்புடையது காதலை (களவு) உடைய காமமேயாகும். காதலை உடைய காமம் என்பது முன்னர் உடம்பினால் எந்த உறவும் இல்லாத ஒருவர், தம்முள் எழுந்த அன்பு ஒன்றினாலேயே உள்ளம் ஒத்து, ஊழ் கூட்டுவிக்கத் தாமே தம்முள் கண்டு காதல்கொண்டு புணர்தலாகிய மெய்யுறு புணர்ச்சியாகும். கற்பொழுக்கம் ஊடுதலால் சிறப்புடையதாகும்.

(காமங்களுள் சிறந்தது காதல் காமம்; காதல் இல்லாத காமமாவன ; கைக்கிளையும் பெருந்திணையும் பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கமும் முதலியன என்க , இவற்றைக் காமக் காமம் என்பர்.)

 

ஞாயிறு, 29 நவம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-182.

 

தன்னேரிலாத தமிழ்-182.

இன்று இவ்வூர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின்

நின்றதன் எவ்வநோய் என்னையும் மறைத்தாள்மன்

வென்ற வேல்நுதி ஏய்க்கும் விறல்நலன் இழந்து இனி

நின்றுநீர் உகக் கலுழும் நெடுபெருங் கண் அல்லாக்கால்.”

-கலித்தொகை, 124.

 இன்று இவ்வூர் அலர் தூற்றுகின்றது ; இவள் துன்பத்தை அறியாதவனாக இருக்கின்றாய் ! நீ, இவளைத் துறந்தமையின், தன்னிடத்தே நிலைபெற்றிருந்த வருத்தத்தை உடைய காமநோயை, என்னிடமும்  மறைத்தாள் ; வெற்றிகொண்ட வேலினது முனையைப் போன்று, தன் ஆற்றலையும் அழகையும் இனி இழந்து, நீர் நின்று உகும்படியாக, நெடிய பெரிய கண்கள் கலங்குகின்றனவே, இதனை மறைத்தாள் அல்லவே…! கண்கள் புலப்படுத்தி விட்டனவே…! –தோழி கூற்று.

சனி, 28 நவம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-181.

 

தன்னேரிலாத தமிழ்-181.

அளிதோ தானே நாணே நம்மொடு

நனிநீடு உழந்தன்று மன்னே இனியே

வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை

தீம்புனல் நெரிதர வீந்து உக்காஅங்கு

தாங்கும் அளவைத் தாங்கி

காமம் நெரிதரக் கைந் நில்லாதே.” ---குறுந்தொகை, 149.

நாணம் இரங்கத்தக்கது, காமம் உற்ற நம்மொடு மிகநெடுங்காலம் உடனிருந்து வருந்தியது. இனி, அது வெள்ளிய பூவினை உடைய கரும்பினால் அமைக்கப்பட்ட , நீர் ஓங்குவதற்காக இட்ட மணலை உடைய சிறிய கரையானது, இனிய நீர் பெருகியவழி அழிந்து வீழ்ந்தாற்போல, நாணம், தடுக்கும் வலிமையுள்ளவரைத் தடுத்து நிறுத்தி, காமம் பெருகி உடைத்தபோது, ஒழுங்கிற்கு உட்பட்டு நில்லாது.

( காமம் பெருகியவழி, தனக்குக் காவலாக இருந்த நாணம் நீங்கியதோடு, தன்னுடைய பெண்மை ஒழுக்கமும் சாய்ந்தது என்றாள் தலைவி.) –தலைவி, தோழிக்குச் சொல்லியது.

வெள்ளி, 27 நவம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-180.

 

தன்னேரிலாத தமிழ்-180.

 மகிழ்ந்ததன் தலையும் நற உண்டாங்கு

விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை

அருங்கரை நின்ற உப்புஒய் சகடம்

பெரு பெயல் தலைய வீந்தாங்கு இவள்

இரும்பல் கூந்தல் இயலணி கண்டே. “குறுந்தொகை, 165.

 நெஞ்சே…! ஏறுதற்கரிய கரையில் நின்ற உப்பு வண்டியில் பெரிய மழை பொழிந்ததனால்  உப்பு அழிந்ததைப்போல, இவளது கரிய கூந்தலின்  இயற்கை அழகைக்கண்டு, மறுக்கப்பட்டோமென்று, அன்பு ஒழியாக் காமத்தால் நாண் அழிந்து, கள்ளுண்டு களித்ததன் மேலும்  கள்ளை விரும்பி உண்டாற்போல,  நீ அவளை ஒருமுறை விரும்பியதன்  பின்னும், மேலும் விருப்பத்தை அடைந்தாய்.  தலைவன் கூற்று.  

வியாழன், 26 நவம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-179.

 

தன்னேரிலாத தமிழ்-179.

மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய

சிறு தீ விளக்கில் துஞ்சும் நறுமலர்ப்

புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை

தானறிந்து அன்றோ இலளே பானாள்

சேரியம் பெண்டிர் சிறு சொல் நம்பிச்

சுடுவாள் போல நோக்கும்      

அடுபால் அன்ன என் பசலை மெய்யே.” ---நற்றிணை, 175.

மீன் கொழுப்பாலாகிய நெய் வார்த்துக் கிளிஞ்சிலில் ஏற்றிய விளக்கின் ஒளியிலே துயிலுகின்ற, புன்னை சூழ்ந்த துறைவனோடு நாம் களவிலே  புணர்ந்ததை, நம் அன்னை முன்னரே அறியவும் இல்லை. நடு யாமத்தில்  நம் சேரியில் உள்ள அயலுறை மாதர்  கூறும் அலராகிய  இழிந்த சில சொற்களை விரும்பிக்கேட்டு, கொதிக்கின்ற பால் (பாலாடை) போன்ற பசலை பரந்த என் மேனியைச் சுடுவதுபோல் நோக்கினாள்.-தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.


புதன், 25 நவம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-178.

 

தன்னேரிலாத தமிழ்-178.

1145

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்

வெளிப்படுந் தோறும் இனிது.

கள் குடிப்பவர்களுக்குக் களிப்பு மேலிடும்போதெல்லாம் மேலும் குடித்தல் இனிதாவதைப்போல, எம்முடைய காமம் அலரால் வெளிப்படும் போதெல்லாம் இனிமையுடையதாகின்றது.

 மகிழ்ந்ததன் தலையும் நற உண்டாங்கு

விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை

அருங்கரை நின்ற உப்புஒய் சகடம்

பெரு பெயல் தலைய வீந்தாங்கு இவள்

இரும்பல் கூந்தல் இயலணி கண்டே. “குறுந்தொகை, 165.

 நெஞ்சே…! ஏறுதற்கரிய கரையில் நின்ற உப்பு வண்டியில் பெரிய மழை பொழிந்ததனால்  உப்பு அழிந்ததைப்போல, இவளது கரிய கூந்தலின்  இயற்கை அழகைக்கண்டு, மறுக்கப்பட்டோமென்று, அன்பு ஒழியாக் காமத்தால் நாண் அழிந்து, கள்ளுண்டு களித்ததன் மேலும்  கள்ளை விரும்பி உண்டாற்போல,  நீ அவளை ஒருமுறை விரும்பியதன்  பின்னும், மேலும் விருப்பத்தை அடைந்தாய்.  தலைவன் கூற்று.  

செவ்வாய், 24 நவம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-177.

 

தன்னேரிலாத தமிழ்-177.

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின்மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ளபடி.” ---நல்வழி, 2.

மனத்தால் ஆராய்ந்து சொல்கின்றபோது கடல் சூழ்ந்த இப்பூவுலகில் இரண்டு சாதிகளே உள்ளன. எக்காலத்தும் நடுநிலையான மனத்தோடு வாழ்ந்து நல்ல நெறிவழியாகப் பொருளீட்டி வறியவர்களையும் ஆதரவற்றவர்களையும் காக்கும் தன்மை உடையவர் உயர் சாதியினர் ; தன்னிடம் பொருள் இருந்தும் உதவும் தன்மையற்று இருப்பவர்கள் தாழ்ந்த சாதியினர் என்று  அறநூல்கள் கூறும். 

திங்கள், 23 நவம்பர், 2020

தன்னேரிலாத தமிழ் - 176

 

தன்னேரிலாத தமிழ் - 176


யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால் உயர்ந்த வேட்ட த்து உயர்ந்திசினோர்க்குச்

செய்வினை மருங்கின் எய்தல் உண்டு ….”புறநானூறு, 214.


யானையை வேட்டையாடச் சென்றவன் எளிதாக அதனைப் பெறவும் கூடும் ; குறும்பூழ்ப் பறவையை வேட்டையாடச் சென்றவன் வெறுங்கையோடு வருதலும் உண்டு ;  அதனால் உயர்ந்த குறிக்கோளுடன் நல்வினை ஆற்றியோர் உயர்ந்த உலகில் இன்பம் அடைதல் கூடும்.