சனி, 28 நவம்பர், 2020

தன்னேரிலாத தமிழ்-181.

 

தன்னேரிலாத தமிழ்-181.

அளிதோ தானே நாணே நம்மொடு

நனிநீடு உழந்தன்று மன்னே இனியே

வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை

தீம்புனல் நெரிதர வீந்து உக்காஅங்கு

தாங்கும் அளவைத் தாங்கி

காமம் நெரிதரக் கைந் நில்லாதே.” ---குறுந்தொகை, 149.

நாணம் இரங்கத்தக்கது, காமம் உற்ற நம்மொடு மிகநெடுங்காலம் உடனிருந்து வருந்தியது. இனி, அது வெள்ளிய பூவினை உடைய கரும்பினால் அமைக்கப்பட்ட , நீர் ஓங்குவதற்காக இட்ட மணலை உடைய சிறிய கரையானது, இனிய நீர் பெருகியவழி அழிந்து வீழ்ந்தாற்போல, நாணம், தடுக்கும் வலிமையுள்ளவரைத் தடுத்து நிறுத்தி, காமம் பெருகி உடைத்தபோது, ஒழுங்கிற்கு உட்பட்டு நில்லாது.

( காமம் பெருகியவழி, தனக்குக் காவலாக இருந்த நாணம் நீங்கியதோடு, தன்னுடைய பெண்மை ஒழுக்கமும் சாய்ந்தது என்றாள் தலைவி.) –தலைவி, தோழிக்குச் சொல்லியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக