வியாழன், 30 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :503

திருக்குறள் – சிறப்புரை :503
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. --- ௫௰௩
கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும் நுண்ணிதாக ஆராயுமிடத்து வெண்மை
இல்லாமை அரிது. (வெண்மை – அறியாமை…) --பரிமேலழகர்.
:” கல்வி கரையில கற்பவர் நாள் சில.” -- நாலடியார்.
கல்வி எல்லையற்றது ; கற்பவர்களின் நாட்கள் சிலவே.


புதன், 29 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :502

திருக்குறள் – சிறப்புரை :502
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் கட்டே தெளிவு. --- ௫௰௨
ஒருவனைத் தெரிந்து தெளிவதாவது அவன் நற்குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழிக்கு அஞ்சும் பண்புடையவனாக இருத்தல் வேண்டும். இத்தகைய பண்புடையவன் ஒருவனையே தேர்ந்து தெளிதல் வேண்டும்.
“ ஆன்றோர் செல்நெறி வழாஅச்
  சான்றோன் ….. “ —நற்றிணை.
ஆன்றோர் போற்றிய நெறிகளைத் தவறாது பின்பற்றும் சான்றோன்.


செவ்வாய், 28 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :501

திருக்குறள் – சிறப்புரை :501
தெரிந்து தெளிதல்
அறன்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.  ---- ௫௰௧
அரசன் தனக்கு ஒருவனை உறுதுணையாகக் கொள்ள அவன் மனத்துள அறம் பொருள்  இன்பம் உயிருறும் துன்பம் ஆகியவற்றின் திறங்களை ஆராய்ந்து அறிந்த பின்னரே  அவனை வினையாற்ற உரியவனாகத் தேர்ந்து கொள்ள வேண்டும்.
“ இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
  அதனை அவன்கண் விடல்.” –குறள். 517.

இந்த வேலையை இந்த நுட்பத்தால் இவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு அவ்வேலையை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.

திங்கள், 27 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :500

திருக்குறள் – சிறப்புரை :500
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு. --- ௫௰௰
பாகனுக்கும் அடங்காமல் வேல் ஏந்திய வீரர்களைக் கோத்து எடுத்த தந்தங்களை உடைய வலிமை மிக்க யானை. சேற்றில் சிக்கிக் கொண்டால் அதனை சிறிய நரிகூடக் கொன்றுவிடும்.
“ மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல்
துன்பம் அல்லது தொழுதகவு இல் …” சிலப்பதிகாரம்.

மக்களைக் காக்கும் மன்னர் குடியிலே பிறத்தல் துன்பமே அல்லாது போற்றத்தக்கதன்று.

ஞாயிறு, 26 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :499

திருக்குறள் – சிறப்புரை :499
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தொடு ஒட்டல் அரிது.௪௯௯
பகைவர். அரண் வலிமையும் பிற சிறப்புகளும் இல்லாதிருப்பினும் அவர்கள் வாழும் இடத்திலேயே சென்று போர் செய்து வென்றுவிடல் என்பது அரிய செயலாகும்.
“ புலி சேர்ந்து போகிய கல் அளைபோல
 ஈன்ற வயிறோ இதுவே
 தோன்றுவன் மாதோ போர்க் களத்தானே.” – புறநானூறு.

புலி தங்கியிருந்து பின் இடம் பெயர்ந்து சென்ற கற்குகை போல. அவனைப் பெற்ற வயிறு இதுவே. அவனோ போர்க் களத்தில் காணத்தக்கவன்.

சனி, 25 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :498

திருக்குறள் – சிறப்புரை :498
சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும். ---- ௪௯
சிறிய படை உடைய அரசனும் போரில் வெல்வதற்குரிய சரியான இடத்தைத் தேர்ந்தெடுப்பானாகில் பெரும் படை உடைய  அரசன் பொருந்தா இடத்தில் நின்று ஊக்கம் இழக்கவும்  படையும்  அழிந்து கெடும்.
“ குடப்பால் சிலுறை போலப்
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே.” – புறநானூறு.

குடம் நிறைந்த பாலின்கண் தெளிந்த சிலவாகிய பிரை. பால் முழுவதையும் கெடுத்துவிடுவதைப் போல. பகைவரின் படைத்திரள் முற்றும் கெட்டு அழிய. அவன் ஒருவனே காரணமாயினன்.

வெள்ளி, 24 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :497

திருக்குறள் – சிறப்புரை :497
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தாற் செயின். ------- ௪௯
செய்யவேண்டியவற்றை முறையாகச் சிந்தித்து நிகழ்த்தும் இடத்தோடு பொருத்திச் செய்பவருக்கு அஞ்சாமையைத் தவிர வேறு எந்தத் துணைவலிமையும் தேவையில்லை.
” நசைதர வந்தோர் நசை பிறக்கு ஒழிய
 வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்… புறநானூறு.
வேந்தே! ஆவலால் வெற்றிபெற விரும்பிவந்த பகைவர் .நின்னை எதிர்த்து வெற்றிபெற முடியாமல் இகழ்ச்சியுடன் வாழ்வாராயினர்; அவ்வாறு வாழ்பவர் பலரே.
வியாழன், 23 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :496

திருக்குறள் – சிறப்புரை :496
கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து. ----- ௪௯
வலிய சக்கரங்களை உடைய நெடிய தேர் கடலில் ஓடாது ; கடலில் ஓடும் கப்பல் நிலத்தில் ஓடாது.
 எந்த ஒன்றின் இருப்பும் இயக்கமும் அதனதன் இடத்திலேதான் பெருமைபெறும் ; இஃது இயற்கையின் நியதி. இடம் மாறினால் தடம் மாறும்.


செவ்வாய், 21 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :494

திருக்குறள் – சிறப்புரை :494
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின். -------- ௪௯௪
தக்க இடத்தைத் தேர்ந்து பகவரை எதிர்கொண்டால்  பகையை வென்றுவிடலாம் என்று எண்ணி வந்த பகைவர் தம் எண்ணம் பொய்த்துப்போனது குறித்து வருந்துவர்.
“வினைசெய்வான் நேர்மை விளக்கும் வினை

வேண்டும் வினையின்கண் தெளிவு. நன்மொழி ஆயிரம்.

திங்கள், 20 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :493

திருக்குறள் – சிறப்புரை :493
ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். --- ௪௯௩
போர் புரிதற்குத் தக்க இடத்தைத் தேர்ந்து படைகளைக் காத்துப் போர்புரிய வல்லவராயின் படை வலிமை இல்லாதவர்களும்  பகைவரை  வெல்வர்.
குற்றமின்றிக் குறை களைந்து வெறுப்பின்றிப்

பொறுப் பாற்றல் தலைமை. நன்மொழி ஆயிரம்..

ஞாயிறு, 19 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :492

திருக்குறள் – சிறப்புரை :492
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்துஆம்
ஆக்கம் பலவும் தரும். --- ௪௯
போரிடுவதில் வல்லமை உடையவர்க்கும் அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பல பயன்களைத் தரும்.
“ வருவிசைப் புனலைக் கற்சிறை போல
ஒருவன் தாங்கிய பெருமை ….. தொல்காப்பியம்.

காட்டாற்று வெள்ளம்போல் வந்த பகைவரைக் கல்லணை போல் ஒருவனே எதிர்த்து நின்று வென்ற பெருமை உடையவன்.

சனி, 18 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :491

திருக்குறள் – சிறப்புரை :491
இடன் அறிதல்
தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது. ------- ௪௯௧
பகைவரை நேருக்குநேர் எதிர்க்க ஏற்ற இடத்தைத் தேர்வு செய்தபின் அல்லது; பகைவர் மீது யாதொரு நடவடிக்கையும் மேற்கொள்ளாது இருக்கவும் அவரைச் சிறியர் என்று இகழவும் வேண்டாம்.
“அறிதலூக்கமே ஆய்வின் திறவுகோல்

தேர்ந்து தெளிதல் நன்று. நன்மொழி ஆயிரம்.

வெள்ளி, 17 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :490

திருக்குறள் – சிறப்புரை :490
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து. ----- ௪௯௰
அசைவற்று உறு மீன் வருமளவும் காத்திருக்கும் கொக்கைப் போலக் காலம் கனியும்வரை காத்திருந்து ; உறு மீனைக் கொத்தி எடுக்கும் கொக்கினைப் போலத் தக்க நேரத்தில் பகையை அழிக்க வேண்டும்.
“கருதியது முடிக்க உறுதிகொள் காலம்

கைவிடாது காக்கும் நன்றே.”  நன்மொழி ஆயிரம்.

வியாழன், 16 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :489

திருக்குறள் – சிறப்புரை :489
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல். --- ௪௮௯
ஒரு செயலைச் செய்வதற்குரிய அரிய காலம் வந்து கூடிய பொழுது அக்காலம் கழிவதற்குள் செய்தற்கு அரிய செயல்களைச் செய்துவிட வேண்டும்.
காலம் உயிர்போன்றது போயின் வாராது

காலம் கடத்தல் தவிர். நன்மொழி ஆயிரம்.

புதன், 15 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :488

திருக்குறள் – சிறப்புரை :488
செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை. --- ௪௮௮
பகைவரை வெல்லக் கருதினால் காலம் கனியும்வரை பொறுத்திருக்க ; அழியும் காலம் வரும்போது நிலைமை தலைகீழாக மாறும்,  வெல்லக் கருதிய காலமும் அதுவேயாம்..
“காலத்தில் ஆற்றாக் கடன் பயனில

பருவத்தே செய்யாப் பயிர். நன்மொழி ஆயிரம்.

செவ்வாய், 14 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :487

திருக்குறள் – சிறப்புரை :487
பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.. ---- ௪௮௭
அறிவுடையோர், தமக்குத் தீமை செய்தாரிடத்து உடனே தம் பகைமையை பலர் அறிய வெளிப்படுத்தாமற், தக்க காலம் வரும்வரை காத்திருப்பர்.
“ வெல்வது வேண்டி வெகுளாதான் நோன்பு இனிதே.” இனியவை நாற்பது.

வெற்றிபெற வேண்டின் எவரிடத்தும் சினம் கொள்ளாத உறுதி மிகவும் இனிது.

திங்கள், 13 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :486

திருக்குறள் – சிறப்புரை :486
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து. --- ௪௮௬
ஊக்கம் உடையவன் காலம் கருதி அடங்கி இருப்பது  தாக்கத்துணிந்த ஆட்டுக்கிடா பின்புறமாக நகருவதைப் போன்றது ஆகும்.
“ காலத்தின் மேன்மை கற்றான் தெளிந்து

 பகுத்தனன் பொழுது என்று.” நன்மொழி ஆயிரம்.

ஞாயிறு, 12 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :485

திருக்குறள் – சிறப்புரை :485
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர். -----  ௪௮௫
உலகைத் தன்வயப்படுத்த நினைப்பவர் அதற்குரிய காலத்தை எதிர்நோக்கிப் பொறுமையுடன் காத்திருப்பர்.
“ அடக்கம் உடையார் அறிவுஇலர் என்று எண்ணிக்
 கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில்
ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும்

வாடி இருக்குமாம் கொக்கு. வாக்குண்டாம்.

சனி, 11 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :484

திருக்குறள் – சிறப்புரை :484
ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின். ---- ௪௮௪
  ஒருவன் ஒரு செயலைச் செய்ய வேண்டின் தக்க காலத்தைக் கருத்தில் கொண்டு தகுந்த இடத்தையும் தேர்வு செய்வானாயின் உலகத்தையே ஆள நினைத்தாலும் வெற்றி பெறுவான்.
“ செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
  இயற்கை அறிந்து செயல். குறள். 637

கல்வி அறிவால் ஒரு செயலைச் செய்யும் வகைகளை அறிந்திருந்த போதிலும் உலகத்தின் இயற்கை அறிந்து, அதனோடு பொருந்துமாறு செய்தல் வேண்டும்.

வெள்ளி, 10 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :483

திருக்குறள் – சிறப்புரை :483
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின். –-- ௪௮௩
காலம் அறிந்து, துணையாகும் ஏற்ற கருவி அறிந்து செயலாற்றினால், செய்வதற்கு அரிது என்று எண்ணத்தக்க செயல் ஒன்று உண்டோ..? இல்லை என்பதாம்.
.காலம் கண் போன்றது கழிவதைக் கண்டு

போற்றல் புரிதல் வேண்டும். – நன்மொழி ஆயிரம்.

வியாழன், 9 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :482

திருக்குறள் – சிறப்புரை :482
 பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
 தீராமை ஆர்க்கும் கயிறு. --- ௪௮௨
 ஒரு செயலைச் செய்யத்தக்க காலம் அறிந்து  அக்காலத்தில் அச்செயலைச் செய்தல் வேண்டும்  அப்படிச் செய்வதனால்  காலமே தன்னிடத்து உள்ள செல்வத்தைச் சிதையாமல் கட்டிக் காக்கும் கயிறு ஆகும்.
“ அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்
 பருவத்தால் அன்றிப் பழா. – வாக்குண்டாம்.

.

புதன், 8 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :481

திருக்குறள் – சிறப்புரை :481
காலம் அறிதல்
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. --- ௪௮௧
இரவில் வேட்டையாடும் வலிமையுள்ள கோட்டானைப் பகல் பொழுதில் காக்கை வென்றுவிடும் அதுபோல, பகையை வெல்லக் கருதும் வேந்தன் காலம் அறிந்து களத்தில் இறங்க வேண்டும்.
“ காலம்அறிந்து ஆங்குஇடம் அறிந்துசெய் வினையின்
மூலம்அறிந்து விளைவுஅறிந்து மேலும் தாம்
சூழ்வன சூழ்ந்து துணைமை வலிதெரிந்து
ஆள்வினை ஆளப் படும். --- நீதிநெறிவிளக்கம்.


செவ்வாய், 7 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :480

திருக்குறள் – சிறப்புரை :480
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும். ----- ௪௮௰
தன்னிடமுள்ள பொருளின் அளவினை ஆராய்ந்தறியாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினாலும் செல்வவளம் விரைந்து தேய்ந்து அழியும்.
“ தன் அறி அளவையின் தரத்தர யானும்
 என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு
 இன்மை தீர வந்தனென் ” --- பொருநராற்றுப்படை.

கரிகாலன் , தன் தகுதி அறிந்து தரத்தர, யானும் என் தகுதியின் அளவு அறிந்து விரும்பியவற்றை யெல்லாம் வாரிக்கொண்டு, இனி எக்காலமும் எனக்கு வறுமை இல்லையாகும்படி வந்தேனாக.

திங்கள், 6 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :479

திருக்குறள் – சிறப்புரை :479
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். --- ௪௭௯
வருவாயின் அளவு அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் வாழ வழி தெரியாதவன் வாழ்க்கை,  எல்லாம் இருப்பதுபோன்ற மாயத் தோற்றத்தைத் தந்து உள்ளவை எல்லாம் இல்லாதாகி அழியும்.
“ பரபரப்பினோடே பல பல செய்து ஆங்கு
இரவு பகல் பாழுக்கு இறைப்ப ஒருவாற்றான்
நல்லாற்றின் ஊக்கின் பதறிக் குலைகுலைப

எவ்வாற்றான் உய்வார் இவர்.நீதிநெறிவிளக்கம்.

ஞாயிறு, 5 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :478

திருக்குறள் – சிறப்புரை :478
ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடுஇல்லை
போகாறு அகலாக் கடை.௪௭௮
வருவாய் வரும் வழி சிறியதாயினும் பொருட் செலவுஆகும் வழி அகலமாக இல்லாதிருந்தால் கேடு ஒன்றும் ஏற்படாது. கொள்வழி அகன்றும் செல்வழி சிறுத்தும் இருத்தல் நன்று.
“ ஆனமுதலில் அதிகம் செலவானால்
 மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை
 எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
 நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.” --- நல்வழி.


சனி, 4 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :477

திருக்குறள் – சிறப்புரை :477
ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி. --- ௪௭௭
 வருவாய் வரும் வழியின் அளவினை அறிந்து அதற்கேற்றாற் போல் ஈகை செய்தல் வேண்டும்.; அப்படிச் செய்வதே உழைத்துச் சேர்த்த பொருளைப் போற்றி வாழும் நெறியாகும்..

“ ஆற்றில் போட்டாலும் அளந்து போடு “ – பழமொழியை ஒப்பு நோக்குக.

வெள்ளி, 3 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :476

திருக்குறள் – சிறப்புரை :476
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி ஆகி விடும்.௪௭௬
 ஒரு மரத்தின்கிளை நுனிக்கு ஏறிய பின்னும்  ஊக்கம் கொண்டு மேலும் மேலேற முயற்சித்தால் அவ்வூக்கம் உயிருக்கு இறுதியைத்தான் கொடுக்கும்.
வலிமை அறியாமல் கொள்ளும் ஊக்கம் கேடு விளைவிக்கும்.
“ சிறுமுயற்சி செய்து ஆங்கு உறுபயன் கொள்ளப்

 பெறும் எனில் தாழ்வரோ தாழார்…..  நீதிநெறிவிளக்கம்.

வியாழன், 2 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :475

திருக்குறள் – சிறப்புரை :475
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.௪௭௫
மயில் இறகுதானே,  எடை குறைவு என்று கருதி வண்டியில்  அளவுக்கு அதிகமாக ஏற்றினால் எடைகூடிச் சுமைதாங்காது வண்டியின் அச்சு முறிந்து விடும்.
வலிமைக்கும் எல்லையுண்டு என்பதறிக.
“ சீர் உடை ஆண்மை செய்கையின் அறிப.”  முதுமொழிக்காஞ்சி.
முயற்சியின் வலிமை, முடிக்கும் செயலால் அறியப்படும்

புதன், 1 மார்ச், 2017

திருக்குறள் – சிறப்புரை :474

திருக்குறள் – சிறப்புரை :474
அமைந்தாங்கு ழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும். ---- ௪௭௪
 ஒருவன், தக்கவரோடு இணக்கம் கொள்ளாமல், செய்யக் கருதிய செயலின் தன்மையையும் தன் வலிமையையும் அறியாமல், தன்னையே வியந்து பாராட்டிக்கொண்டும் இருப்பானாகில்,  அவன் விரைந்து கெடுவான்.
“வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. –குறள். 439

ஒருவன், எக்காலத்தும் தன்னைத்தானே வியந்து போற்றிக் கொள்ளக்கூடாது ; நன்மைதராத செயலை விரும்பவும் கூடாது.