திங்கள், 31 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :607

திருக்குறள் – சிறப்புரை :607
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்று இலார். ---- ௬0௭
முயற்சியின் பெருமை அறியாது சோம்பலை விரும்பித் துய்ப்பவர் பிறரால் கண்டிக்கப்பட்டுப் (திருந்தாதவர்) பலரும் இகழ்ந்துபேசும் நிலையை அடைவர்.
” தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
 நிலையின் இழிந்தக் கடை. --- குறள். 964

நற்குடிப் பிறந்த மாந்தர் தம் உயர்ந்த நிலையைவிட்டுத் தாழ்ந்தவழி  தலையிலிருந்து வீழ்ந்த மயிரினைப் போன்றவர் ஆவர்.

ஞாயிறு, 30 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :606

திருக்குறள் – சிறப்புரை :606
படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது. ---- ௬0௬
நிலம் முழுதும் ஆளும் அளவுக்குச் செல்வம் முயற்சியின்றித் தானே வந்து சேர்ந்தாலும் சோம்பேறியானவன் அச்செல்வத்தைத் துய்த்தல் என்பது அரிதாம்.
“ உண்ணாது வைக்கும் பெரும்பொருள் வைப்பு இன்னா.” --இன்னாநாற்பது.

நுஜராது பதுக்கி வைக்கும் பெரும் பொருள் துன்பம் தரும்.

சனி, 29 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :605

திருக்குறள் – சிறப்புரை :605
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். ---- ௬0௫
காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளைக் கருத்தில் கொள்ளாமல் சோம்பி இருத்தல் காலம் நீட்டித்தல் மறத்தல் அளவுக்கு அதிகமான தூக்கம் ஆகிய இந்நான்கும் கெட்டு அழிவார் விரும்பிப் பயணிக்கும் மரக்கலமாகும்.
“வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்புஇலன் பற்றார்க்கு இனிது. --- குறள். 865

ஒருவன் நல்வழியை நோக்காமல் பொருத்தமானவற்றைச் செய்யாமல் பழியையும் பார்க்காமல்  நற்பண்பும் இல்லாமல் இருந்தால் அவன் பகைவர்க்கு எளியவன் ஆவான்.

வெள்ளி, 28 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :604

திருக்குறள் – சிறப்புரை :604
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றுஇ லவர்க்கு. ----- ௬0௪
சோம்பலில் சுகம் கண்டு உழைக்கும் முயற்சி   இல்லாதவரின் குடிப்பெருமை அழியும் குற்றமும் பெருகும்.
“பொய்யாற்று ஒழுக்கம் பொருள் எனக்கொண்டோர்
கையாற்று அவலம் கடந்ததும் உண்டோ..? – மணிமேகலை.

பொய்யான நெறியில் ஒழுகும் ஒழுக்கத்தையே நோக்கமாகக் கொண்டவர்கள் துன்பத்தினின்று நீங்கித் தப்பித்தார் என்பதும் உண்டோ… ? இல்லையே.

வியாழன், 27 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :603

திருக்குறள் – சிறப்புரை :603
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து. ---- ௬0௩
அழிக்கும் ஆற்றலுடைய  சோம்பலைத் தன் மடியிலேயே கட்டிக்கொண்டு வீணே பொழுதைக் கழிக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடி அவன் அழியுமுன்னே அழிந்துபோகும்.
“வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. – குறள். 439

ஒருவன். எக்காலத்தும் தன்னைத் தானே வியந்து போற்றிக் கொள்ளக்கூடாது ; நன்மை தராத செயலை விரும்பவும் கூடாது.

புதன், 26 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :602

திருக்குறள் – சிறப்புரை :602
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர். ---- ௬0௨
உழைப்பால் உயர்ந்த தம்குடியை மேலும் உயர்த்த நினைப்பவர் சோம்பலுக்கு அடிபணியாது சோம்பல் மடியுமாறு மேன்மேலும் முயன்று முன்னேற வேண்டும்.
”நலனும் இளமையும் நல்குரவின் கீழ்ச் சாம்
குலனும் குடிமையும் கல்லாமக் கீழ்ச் சாம்” – நான்மணிக்கடிகை.
அழகும் இளமையும் வறுமையால் கெடும் ; குலத்து உயர்வும் குடிப்பெருமையும் கல்லாமையால் கெடும்.


செவ்வாய், 25 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :601

திருக்குறள் – சிறப்புரை :601
மடி இன்மை
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும். ----- ௬0௧
நல்ல குடியில் பிறந்த ஒருவனின் குடிப்பெருமை என்னும் குன்றாது ஒளிவீசும் விளக்கானது அவனுடைய சோம்பல் என்னும் மாசு படிந்து ஒளிமங்கி அழியும்.
”செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு
உறுமிடத்து உவக்கும் உதவி ஆண்மையும்
இல் இருந்து அமைவோர்க்கு இல்…. “ – அகநானூறு.

தம் பகைவர் செறுக்கினை அழித்தலும் தம்மைச் சேர்ந்தோர்க்கு ஓர் ஊறு நேர்ந்தவிடத்து  உதவி செய்தலாகிய ஆண்மையும் வீட்டில் சோம்பி இருப்போர்க்கு இல்லை.

சனி, 22 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :600

திருக்குறள் – சிறப்புரை :600
உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு. ----- ௬00
ஒருவனுக்கு உரம் என்பது ஊக்கமே; நெஞ்சுரம் இல்லாதவர் மரம்; தோற்றத்தில் மரத்தினின்று வேறுபட்டு மக்கள் என்றாயினர்.
முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை ஒழிய
வாரேன் வாழிய நெஞ்சே.” -- பட்டினப்பாலை.

நெஞ்சே ! அரிய பெரிய சிறப்புவாய்ந்த காவிரிப்பூம் பட்டினத்தைப் பரிசாகப் பெறுவதாயிருந்தாலும் நீண்ட கரிய கூந்தலையும் ஒளி பொருந்திய அணிகலன்களையும் உடைய என் காதலியை விட்டுப்பிரிந்து பொருள்தேடச் செல்ல மாட்டேன் … நன்றே வாழிய என் நெஞ்சே..!

வெள்ளி, 21 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :599

திருக்குறள் – சிறப்புரை :599
பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.----- ௯௯
யானை. வலிமையான பருத்த உடலோடு கூர்மையான கொம்புகளுடன் இருப்பினும் உருவத்தைக் கண்டு அஞ்சாது ஊக்கமுடன் புலி தாக்கினால் யானையே அஞ்சும்.
“ யானை தாக்கினும் அரவு மேல் செலினும்
 நீல்நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும்
சூல் மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை.” பெரும்பாணாற்றுப்படை.
யானை தாக்கவந்தாலும் தன்மேல் பாம்பு ஊர்ந்து சென்றாலும் பெரிய இடி இடித்தாலும் கருவுற்ற பெண்கூட இவற்றுக்கெல்லாம் அஞ்சமாட்டாள் அத்தகைய இயல்பு உடையவர்கள் குறிஞ்சி நில மறக்குடியினர்.


வியாழன், 20 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :598
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு. ---- ௯௮
உள்ள உறுதியுடன் ஊக்கம் இல்லாதவர் உலகத்தாருள் தாமே வண்மை உடையேம் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் தகுதியை அடைய மாட்டார்கள்.
” உயர் குடியுள் பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும்
பேர் ஆண்மை இல்லாக் கடை.” --- நாலடியார்.

தன் பெயரைக் கல்லில் எழுதக்கூடிய வகையில் சிறந்த செயல்களைச் செய்து புகழ்பெற மாட்டாதவன் உயர்ந்த குடியிலே பிறந்ததால் மட்டும் என்ன பயன் உண்டாம்..? ஒரு பயனும் இல்லை என்பதாம்.

புதன், 19 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :597

திருக்குறள் – சிறப்புரை :597
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின்
பட்டுப்பா டூன்றும் களிறு.--- ௯௭
யானை தன் உடம்பில் அம்பு புதைந்தபோதும் தன்னிலையில் தாழாது தன் பெருமையை நிலை நிறுத்தும் அதுபோல் தாழ்வு வந்துற்றபோதும் ஊக்கம் உடையார் நிலை குலைய மாட்டார்கள்.
“ நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால் தங்கண்
துனி அஞ்சார் செய்வது உணர்வார்…..” பழமொழி.

செய்ய வேண்டியதைச் செய்துமுடிக்கும் துணிவுடையார் அஞ்சத்தக்க வினைகள் எது வந்தாலும் அஞ்சமாட்டார்கள்.

செவ்வாய், 18 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :596

திருக்குறள் – சிறப்புரை :596
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.----- ௯௬
மனத்துள் நினைப்பவையெல்லாம் உயர்ந்த எண்ணங்களாகவே இருத்தல் வேண்டும் ; உயர்ந்த எண்ணங்கள்  கைகூடாவிட்டாலும் அங்ஙனம் எண்ணுவது இகழ்ச்சிக்கு உரியதன்று.
“நன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப
இன்னே பெறுதி நீ முன்னிய வினையே.”  திருமுருகாற்றுப்படை.

நீ வீடுபேறு வாய்க்க வேண்டும் என்று விரும்பினாயானால் உன் மனத்தில் எழுந்த அவா கைகூடுவதோடு நல்வினைப் பயனால் நீ நினத்தவை எல்லாம் இப்பொழுதே அடையப் பெறுவாயாக.

திங்கள், 17 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :595

திருக்குறள் – சிறப்புரை :595
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. ---
நீர்நிலையின் அளவிற்கேற்ப நீர்ப்பூக்களின் தண்டுகள்  உயர்ந்து நிற்கும் ; மாந்தர்தம் உள்ள ஊக்கத்தின் அளவே அவர்தம் உயர்வும் அமையும்.
“ மனத்து அனையர் மக்கள் என்பார்.”--- நாலடியார்.

மக்கள் தங்கள் மனத்தின் இயல்புக்கேற்பவே இருப்பர்.

ஞாயிறு, 16 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :594

திருக்குறள் – சிறப்புரை :594
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை. – ௯௪
தளராத ஊக்கம் உடையவனிடத்தில் செல்வமானது தன் வழியைக் கேட்டுச் செல்லும்.
“ வருவாய் சிறிது எனினும் வைகலும் ஈண்டின்
 பெரு வாய்த்தா நிற்கும் பெரிதும்….. --- பழமொழி.

வருமானம் கொஞ்சமானாலும் நாள்தோறும் சிறிதளவே சேர்த்துவந்தால் செல்வம் பெருகும்.

சனி, 15 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :593

திருக்குறள் – சிறப்புரை :593
ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். --- ௯௩
 தேடிய செல்வத்தை எல்லாம் இழந்தபோதும் அழியாத செல்வமாகிய ஊக்கத்தைக் கைப்பொருளாகக் கொண்டவர்கள் ஒருபோதும் கலங்க மட்டார்கள்.
“இசையாது எனினும் இயற்றி ஓராற்றல்
அசையாது நிற்பதாம் ஆண்மை….----- நாலடியார்.
எடுத்துக்கொண்ட ஒரு செயல் தன்னால் நிறைவேற்ற இயலாததாயிருந்தாலும் அதனை முயன்று முடித்தலே ஆண்மைக்கு அழகாம்.


வெள்ளி, 14 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :592

திருக்குறள் – சிறப்புரை :592
உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும். ---- ௯௨
உள்ளம் நிறைந்த ஊக்கமே (அழிவில்லாத) நிலையான
செல்வமாகும்; பிற செல்வம் எல்லாம் நில்லாது நீங்கிவிடும்.
”உரனுடை உள்ளத்தைச் செய்பொருள் முற்றிய
வளமையான் ஆகும் பொருள் இது என்பாய்
இளமையும் காமமும் நின்பாணி நில்லா.” – கலித்தொகை.
தலைவ..! நீதான் வலிய மனத்தைக் கொண்டவன் தேடும் பொருளை ஈட்டிய பின்னர் அப்பொருளே இன்பம் என்று கொண்டாய். இளமையும் காமமும் நின்னிடத்தே நிலைபெற்று நில்லாமல் நாள்தோறும் கழியும்.


வியாழன், 13 ஜூலை, 2017

ஊக்கம் உடைமை – 60
திருக்குறள் – சிறப்புரை :591
  உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று. ----- ௯௧
உடைமை (செல்வம்) உடையவர் என்று போற்றப்படுபவர் ஊக்கம் உடையவரே ; ஊக்கம இல்லாதவர் வேறு செல்வ வளம் அனைத்தும் பெற்றிருந்தாலும் அவரை ஊக்கம் உடையவர் என்று சொல்லத் தகுதி உடையவரோ..?
“அறம் தலைப் பிரியாது ஒழுகலும் சிறந்த
கேளிர் கேடுபல ஊன்றலும் நாளும்
வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல்..” --- அகநானூறு.
அறநெறியினின்று நீங்காது இல்வாழ்க்கை நடத்துவதும் உவந்து ஏற்ற சுற்றத்தாரின் துன்பங்களைப் போக்குவதும் ஆகிய இச்சிறப்புகள் முயற்சியும் ஊக்கமும் இல்லா உள்ளம் உடையோர்க்கு இல்லையாகும்.


புதன், 12 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :590
சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தா னாகும் மறை.௯0
 ஒற்றனுக்குப் பலர் அறிய சிறப்புச் செய்தல் கூடாது  அங்ஙனம் செய்தால் அரசனே கமுக்கச் செய்திகளைப் பலரும் அறிய வெளிப்படுதியவனாவான்.
“சீர் உடை ஆண்மை செய்கையின் அறிப.”—முதுமொழிக்காஞ்சி.
முயற்சியின் வலிமை முடிக்கும் செயலால் அறியப்படும்.


செவ்வாய், 11 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :589
ஒற்றொற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொல்தொக்க தேறப் படும். --- ௮௯
ஒற்றறிய மூன்று ஒற்றர்கள் ஒருவரை ஒருவர் அறியாவண்ணம் ஒற்றறிதலில் ஈடுபடவேண்டும் அவ்வாறு ஒற்றரர்கள் அறிந்துவந்து சொல்லிய செய்திகள் ஒன்றுபோல் இருக்குமானால் அஃது உண்மை என்று தெளிய வேண்டும்.
“ நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா விடுதல் இனிது.” – இனியவை நாற்பது.

தெளிவில்லாத அறிவினை உடையாரையும் நன்னடத்தை இல்லாதாரையும் சேராது விலகி இருத்தல் இனிது.

திங்கள், 10 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :588
ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். --- ௮௮
ஓர் ஒற்றன் உளவறிந்து கொண்டுவந்த செய்தியை இன்னொரு ஒற்றன் கொண்டுவரும் செய்தியோடு ஒப்பிட்டு ஆராய்ந்து உண்மையை உறுதிசெய்து கொள்ளல் வேண்டும்.
‘” புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்
புலம் மிக்கவர்க்கே புலனாம் …..” –பழமொழி.
அறிவு மிக்கவரது அறிவினை ஆராய்ந்து அறிதல், அறிவு மிக்கவர்க்கே உளதாம்.


ஞாயிறு, 9 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :587
மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தை
ஐயப்பாடு இல்லதே ஒற்று. ---- ௮௭
மறைமுகமாகச் செய்யப்படும் குற்றச் செயல்களை வேவு பார்த்துத் தான் கேட்டறிந்த செய்திகளின் உண்மைத் தன்மையை ஐயத்திற்கு இடமின்றி உறுதிசெய்து கொள்ளும் வல்லமை உடையவனே ஒற்றன் ஆவான்.
“ வாய்மையின் வழாது மன்னுயிர் ஓம்புநர்க்கு
யாவதும் உண்டோ எய்தா அரும்பொருள்.” சிலப்பதிகாரம்.

வாய்மை தவறாமல் உயிர்கள் அனைத்தையும் காப்பவர்களுக்குக் கிட்டாத அரும்பொருள் என்று ஏதேனும் உண்டோ..? 

சனி, 8 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :586
துறந்தார் அடிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று. ----  ௮௬
துறவுக்கோலம் பூண்டு வேற்று நிலத்திற்குச் சென்று ஆண்டு நிகழ்பவற்றை ஆராய்ந்து அறிய முற்படும்பொழுது, பிறர் தன்னை ஐயுற்றுத் துன்புறுத்தி வினவ  நேர்ந்தாலும் அச்சமுற்றுத் தன்னை வெளிக்காட்டாதவனே ஒற்றன் ஆவான்.
ஒற்றன், இடத்திற்கேற்ப வேடம் புனைவதில் வல்லவனாகவும் இருத்தல் வேண்டும்.
” கூற்று வெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றலையே” – பதிற்றுப்பத்து.

கூற்றுவனே வெகுண்டு வந்தாலும் அவனையும் தோற்றோடச் செய்யும் ஆற்றல் மிக்கவன்,(இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்)

வியாழன், 6 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :585
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று. ---
பிறரால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வேடம் பூண்டு, யாரேனும் ஐயப்பட்டுத் தன்னைக் கண்காணித்தாலும் அஞ்சாது, எந்நிலையிலும் தான் உற்று நோக்கி ஆராய்ந்து அறிந்த செய்திகளை வெளிப்படுத்தாதவனே ஒற்றனாவான்.
“கற்றது ஒன்று இன்றிவிடினும் கருமத்தை
அற்றம் முடிப்பான் அறிவுடையான்.” பழமொழி.

சிறிதும் கல்வியறிவு இல்லாவிட்டாலும் செயல் திறனில் சிறந்து, தான் மேற்கொண்ட செயலைச் செய்து முடிப்பான் அறிவுடையவன்.

புதன், 5 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :584

திருக்குறள் – சிறப்புரை :584
வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று. ---௮௪
மன்னனுக்கு உற்றதுணையாக உடனிருந்து பணிசெய்வோரையும் ; தமக்குச் சுற்றமாகச் சூழ்ந்து இருப்பாரையும் ; வஞ்சகமாகத் தீங்கு செய்ய முயல்வாரையும் மேலும் வேண்டியவர் வேண்டாதார் என்ற வேறுபாடின்றி அனைவரையும் ஆராய்ந்து அறிதலே ஒற்றறிதலாகும்.
“ குடப்பால் சில் உறை போலப்
 படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே.” புறநானூறு.
குடம் நிறைந்த பாலின்கண் தெளித்த சிலவாகிய பிரை, பால் முழுவதையும் கெடுத்துவிடுவதைப் போல, பகைவரின் படைத்திரள் முற்றும் கெட்டு அழிய, அவன் ஒருவனே காரணமாயினன்.செவ்வாய், 4 ஜூலை, 2017

உலகிலேயே மிகவும் இனிமையான மொழி எது..?

 தாய்மொழி

திருக்குறள் – சிறப்புரை :583

திருக்குறள் – சிறப்புரை :583
ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றம் கொள்ளக்கிடந்தது இல். --- ௮௩
ஒற்றரால் நாட்டில் நடப்பதை அன்றாடம் அறிந்துகொள்ள முயலாத மன்னனுக்குப் பகைவென்று வெற்றி அடைவதற்கு வழி யாதும் இல்லை.
“ உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
 செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்.” – சிலப்பதிகாரம்.

வாழும் காலத்தை வறிதே கழிக்காமல், இறந்தபின் எய்தும் மறுமை உலகுக்கு உற்ற துணையாகிய அறவழியைத் தேடுங்கள்.

திங்கள், 3 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :582
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். ---- ௮௨
அன்றாடம் மக்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் எங்கெங்கு நிகழ்கின்றனவோ அவை  அனைத்தையும் ஒற்றர்வழி அறிந்துகொள்வது அரசன் கடமையாகும்.
“ அறிவுமடம் படுதலும் அறிவுநன்கு உடைமையும்
வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும்
பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்த..” – சிறுபாணாற்றுப்படை.

அறியாதார் கூறும் கூற்றை அறியாதான் போலக் கேட்டுக் கொள்ளலும் சொற்சுவை, பொருட்சுவை, கலை நுணுக்கம் ஆகியன அறியும் அறிவுடைமையும் புலவர், கலைஞர் ஆகியோர்தம் தகுதி அறிந்து சிறப்புச் செய்தலும் அரசனின் (நல்லியக்கோடன்) நற்பண்புகளாம்.

ஞாயிறு, 2 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :581
ஒற்றாடல்
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண். --- ௮௧
ஒற்றால் உள்ளவை அறிதலும் சான்றோர் உரைத்த அறநூல்களைக் கற்றறிதலும் ஆகிய இவை இரண்டு கடமைகளையும் மன்னன் தன்னுடைய இரு கண்களாகக் கொள்ளல் வேண்டும்.
”அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு
நுகர்தற்கு இனிதுநின் பெருங்கலி மகிழ்வே.” – பதிற்றுப்பத்து.
வேந்தே…! நின்னொடு மனம் பொருந்தி இயைந்திருக்கின்ற, அமைச்சர் முதலிய அரசியல் சுற்றத்தாரோடு காட்சியளிக்கும் நின் திருவோலக்கச் சிறப்பு, துய்த்தற்கு என்றும் இனியதாகும்..சனி, 1 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :580
பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். ---௮0
எல்லோரிடத்தும் இனிமையாகப் பழகும் பண்புடையார் நண்பர்கள் தமக்கு நஞ்சிடுவதைக் கண்டும் அவர்தம் மனம் வருந்தக் கூடாது என்பதற்காக அதனையும் உண்பர்.
“ முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்.” ---- நற்றிணை.

நட்பைப் போற்றும் நற்பண்பு உடையார், நண்பர்கள் நஞ்சைக் கொடுத்தாலும் தயங்காது உண்டு, நட்பைப் பேணுவர்.