திங்கள், 29 நவம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –368 : குறள் கூறும் ”பொருள்” பெறுக. 61

 

தன்னேரிலாத தமிழ் –368 : குறள் கூறும்பொருள்பெறு.


61

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற.


யாம் அறிந்தவரையில் ஒருவன் தான் அடைய வேண்டுமென்று விரும்புகிற செல்வங்களுள் மிகச் சிறந்த செல்வம் என்பது நல்லறிவு உடைய குழந்தைகளைப் பெறுவதுதான்; இதைவிடச் சிறந்த செல்வம் வேறொன்று இருப்பதாக யாம் அறியவில்லை.


ஒடுங்கு ஈரோதி ஒண்ணுதல் கருவில்

எண் இயல் முற்றி ஈரறிவு புரிந்து

சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்

காவற்கு அமைந்த அரசு துறை போகிய

வீறுசால் புதல்வற் பெற்றனை…” --- பதிற்றுப்பத்து, 74.


வேந்தே..! நின் மனைவியின் கருவில் பத்துத் திங்களும் நிரம்பி, பேரறிவை விரும்பி, அன்பும் நாணும் ஒப்புரவும் கண்ணோட்டமும் வாய்மையும் நடுநிலைமையும் உளப்படப் பிற குணங்களும் குடிகளைக் காத்தற்குப் பொருந்திய அரசின் துறைகளை முற்றக் கற்றுணர்ந்த சிறப்புகளையும் உடைய நீ,  புதல்வனைப் பெற்றனை.

ஞாயிறு, 28 நவம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –367 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –367 : குறள் கூறும்பொருள்பெறு.

60

மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்

நன்கலம் நன்மக்கட் பேறு.


நற்குண, நற்செய்கைகளால் பெருமைபெற்ற மனையாள், வீட்டிற்கு விளக்காவாள். அவ்விளக்கும் சுடர்விட்டு ஒளிர்வதும் நன்மக்களைப் பெறுவதால்தான் என்பர்.

மனையாளின் பெருமைக்கு அணியாவது தாய்மையே என்க.


கடவுட் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய

புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்

நன்னராட்டி …. “ ------ அகநானூறு, 184.


 தெய்வத்தன்மை பொருந்திய கற்புடன் குடிக்குச் சிறப்பினைத் தரும் மகனைப் பெற்ற. நற்குணங்கள் நிரம்பிய இல்லத்தரசி.

சனி, 27 நவம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –366 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –366 : குறள் கூறும்பொருள்பெறு.


49

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்பது இல்லாயின் நன்று .


     அறம் என்று சொல்லப்படுவது  இல்லறத்தையே !  இல்லறமே நல்லறமாகும் ;  அஃதும்  பிறரால் பழிக்கப்படும் குற்றம் இல்லாதவழி இயங்குமானால் மிகவும் நன்றாகும்.


அன்பும் மடனும் சாயலும் இயல்பும்

என்பும் நெகிழ்க்கும் கிளவியும் பிறவும்

ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி

 இன்றே இவணம் ஆகி …” --- அகநானூறு, 225.


 நெஞ்சே..! தலைவியின் அன்பும் மடனும் மென்மையும் ஒழுக்கமும் உயிரை மகிழ்விக்கும் இனிய சொல்லும் மனம் ஒன்றிய கொள்கையும் பிறவும் ஒரே தன்மை உடையதாய் என்றும் இருக்க, இன்று இவ்விடத்தே இருந்து மகிழ்வோம்.

வெள்ளி, 26 நவம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –365 : குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –365 : குறள் கூறும் பொருள்பெறு.
 

34

மனத்துக்கண் மாசில னாதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற.  


அறம் எனப்படுவது யாதெனின் மனத்தில் அழுக்கற்ற தன்மையே ! மனத்துள் அழுக்கைச் சுமந்து (அல்வழியில் ஈட்டிய பொருளால் அறப்பயன் கொள்ள)அள்ளி வழங்குவதெல்லாம் வெற்று ஆரவாரமாகும் ; அஃது அறமென்று கொள்ளற்க. மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் என்றார் திருவள்ளுவர்.


அவ்வியம் இல்லார் அறத்தாறு உரைக்குங்கால்

 செவ்வியர் அல்லார் செவிகொடுத்தும் கேட்கலார்.” --நாலடியார், 322.


 குற்றமற்றவர்கள் அறநெறியைப்பற்றி உரைக்கும்பொழுது, நற்பண்பில்லாத மூடர்கள் அவ்வுரையைக் காதுகொடுத்தும் கேட்கமாட்டார்கள்.

வியாழன், 25 நவம்பர், 2021

 திருக்குறள் - சிறப்புரை நூலினைக் காண்க


முனைவர் இரெ.குமரன் ( களப்பாள் வலைப்பூவில் கண்க.))

தன்னேரிலாத தமிழ் –364 38. மழை - அறிவியல்

 

தன்னேரிலாத தமிழ் –364

38. மழை  - அறிவியல்


அறிவியல் நோக்கு

 

                   சூறாவளி , பூமியைப் போல் ஒரே திசையில் சுற்றும் அடர்த்தியான, உருண்டையான நிலையற்ற இயக்கத்தைக் கொண்ட பரப்பு என்று வானிலையியல் கூறுகிறது.[1][2]. மேலும் வானிலையியலானது சூறாவளியின் போது வட துருவத்தில் சுருண்டு ஏறுகின்ற  காற்று இடஞ்சுழியிலும் தென் துருவத்தில் ஏறுகின்ற காற்று வலஞ்சுழியிலும் வீசும் என்று கூறுகிறது. --- விக்கிபீடியா.

 

.                       மேகங்கள் வலமாகச் சூழ்ந்து எழுதல்என்ற கருத்தாவது பூமியின் நிலநடுக் கோட்டிற்குத் தென்பகுதியில் நீர்ச்சுழற்சி, காற்றுச் சுழற்சி  வலமாகச் சுழன்று எழும் என்பது இன்றைய அறிவியல் உண்மை. இத்தகைய அறிவியல் உண்மையை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கச் சான்றோர் கண்டுபிடித்துள்ளனர் என்பது வியத்தற்குரியதன்றோ…!

 சங்க இலக்கியங்களில் மழை பொழிதல் குறித்த செய்தி பல பாடல்களில் இடம்பெற்றுள்ளன, ஓரிடத்திலாவது மழைபொழிதல்வருணபகவான்ஆற்றல் என்று சுட்டப்படவில்லை. சங்கச்சான்றோரின் அறிவியல் அறிவாற்றலுக்கு இஃதும் ஓர் சான்றாகும்.   

Origin of rain

“Water that is found in ponds, lakes, rivers and in oceans evaporates due to  the heat of the sun and gets into the cluster of clouds on the sky. The impregnated wet clouds pour down the rains at an opportune time, especially when the planet Venus locates itself in the northern direction. Very rarely it may go astray and bring out rains even when Venus  is found in the southern direction. This is what referred to in a few lines quoted from Pattinappalai,(1-2).

As on date the scientific fact is that  air-current and water-current are said to be revolving around the right direction on the Southern side of equator . This idea finds a place in Sangam literature is a matter of great wonder but true.

 Barring this exceptional note, what all the modern science observes on the life and death of rains are found in a number of quotations drawn from Palaikkali, Mullaippattu, Akananooru and Natrinai. It is to be noted here that nowhere in Sangam literature is foun any reference to Varuna, the rain-god mentioned in the myths and puranas of later days.” –Editor.

 முற்றும்.

செவ்வாய், 23 நவம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –363 38. மழை - அறிவியல்....

 

தன்னேரிலாத தமிழ் –363
38. மழை  - அறிவியல்


பனித்துறைப் பெருங்கடல் இறந்து நீர்பருகிக்

குவவுத்திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு

வயவுப்பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி

இருங்கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றிக்

காலை வந்தன்றால் காரே ….

                           --கருவூர்க் கலிங்கத்தார், அகநானூறு.183: 6-10

                              பெருங் கூட்டமான  மேகங்கள் திரண்டு சுருண்டு வரும் அலைகளையும் குளிர்ச்சி பொருந்திய துறைகளையும் உடைய பெருங்கடலினுட் சென்றன, சென்று  நீரினை மிகுதியாக  உண்டன. உண்டு, மேற்குத் திசையில் எழுந்து சூலுற்ற பெண் யானைக் கூட்டம் போல இடந்தோறும் இடந்தோறும் வந்து தோன்றி ஒலியுடன் மழையைப் பொழிவதற்கு ஒன்றுகூடக் கார்காலம் காலையே வந்து விட்டது.

 

……………………. இன்னீர்த்

தடங் கடல் வாயின் உண்டு சில் நீர் என

…………………. நற்றிணை.115 : 3 – 4

 மேகங்களும் இனிய நீரையுடைய பெரிய கடலகத்து வாயினால் உண்டுஎஞ்சிய கடலின் நீர் சிறிது நீர் என்னும்படி கொணர்ந்தன.

 

இரு விசும்பு அதிர மின்னிக்

கருவி மாமழை கடல் முகந்தனவே

-மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார். நற்றிணை. 329 : 10 – 11

 கருமை மிக்க வானம் ஒலியுண்டாகுமாறு இடித்து மின்னி மழைக்குரிய மேகக் கூட்டத்தோடு கடலில் சென்று நீர் முகந்து எழுந்த கார்காலம் வந்துற்றது.

மேற்சுட்டிய மேற்கோள்களில் மழை எவ்வாறு பொழிகிறது என்பதற்கான அறிவியல் நுட்பம் செறிந்த உண்மைகளை இன்றைய அறிவியல் சிந்தனைகளோடு ஒப்பிட்டு உணரவும்பழந்தமிழ்ப் புலவர்களின் அறிவியல் அறிவாற்றல் தெற்றென விளங்கக் காணலாம்.

வலமாகச் சூழ்ந்து எழுதல்  என்றால் என்ன …?

குணகடல் முகந்த கொள்ளை வானம்

பணைகெழு வேந்தர் பல்படைத் தானைத்

தோல்நிரைத் தனைய ஆகி வலன் ஏர்பு

                                     --கபிலர் அகநாநானூறு. 278: 1 – 3

மேகங்கள் கீழ்த்திசைக் கடலிடத்து நீரை முகந்து  கொண்டன ; முரசினையுடைய மன்னர்களின் பல்வகைப் படைக்கலன்களை உடைய  சேனையின்கண்ணே யானைகளின் அணிவகுப்புப் போன்று தோன்றி வலமாக எழுந்து சென்றன.

 

வலமாக எழ- மழை பொழிதல்

 

மலைமிசைக் குலைஇய உருகெழு திருவில்

பணைமுழங்கு எழிலி பெளவம் வாங்கித்

தாழ்பெயல் பெருநீர் வலனேர்பு வளைஇ

மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர

இருநிலங் கவினிய ஏமுறு காலை

                                     --மதுரை எழுத்தாளன்,அகநானூறு.84 : 1- 5

மலைமீது வில் – மேகம் முழங்க – கடல் நீரை முகந்து -  உலகினை வலனாக எழுந்து- இறங்கிப் பெய்யும் மிக்க மழை – திசையெல்லாம் மறையப் பொழிந்து நிலம் அழகுற இன்பம் எய்திய இக்காலத்தே. மழை –

 

பயங்கெழு திருவின் பல்கதிர் ஞாயிறு

வயங்கு தொழில் தரீஇயர் வலன் ஏர்பு விளங்கி

மல்குகடல் தோன்றியாங்கு .....................

               --மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார், அகநானூறு. 298: 1 – 3

உலகில் வாழும் உயிர்களுக்குப் பயன்மிக்க செல்வத்தைத் தரும் பலகதிர்களையுடைய ஞாயிறானது, அவ்வுயிர்கள் விளங்குதற்கு ஏதுவாகிய பல்வகை தொழில்களைத் தருமாறு , வலமாக எழுந்து, நீர்முக்க கடலிலே தோன்றினாற்போல.  ‘ வழையமல் அடுக்கத்து வலனேர்பு ’..அகநா. 328 : 1

திருமுருகாற்றுப்படை

உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு

பலர்புகழ் ஞாயிறு கடல் கண்டாங்கு..

.

-நக்கீரர், திருமுருகாற்றுப்படை.1, 2

உலகில் வாழும் உயிர்கள் எல்லாம் மகிழும்படி, மேருவை வலமாக எழுந்து, பற்பல சமயத்தவரும் புகழ்கின்ற ஞாயிறு கீழ்க் கடலிடத்தே எழக் கண்டாற்போன்று..

 

ஞாயிறு, 21 நவம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –362 38. மழை - அறிவியல்

 

தன்னேரிலாத தமிழ் –362

38. மழை  - அறிவியல் – Origin of Rain

                       தான் தோன்றுவதற்கு உரிய நாளில் தோன்றும் வெள்ளி என்னும் கோள்மீன், தன்னுடைய இயங்கும் திசை மாறித் தென்திசையில் தோன்றினாலும், மழை வறக்கும்.

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்

 திசை திரிந்து தெற்கு ஏகினும்’ -- . பாலை. 1-2.

வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி

 பயங்கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப’ –பதிற்றுப். 24.

மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்

தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்

பெயல் பிழைப்பறியாப் புன்புலத்ததுவே ’– புறநா. 117).

வெள்ளி தென்புலத்து உறைய விளைவயல்

 பள்ளம் வாடிய பயனில் காலை ’– புறநா. 388.

கரியவன் புகையினும்  புகைக்கொடி தோன்றினும்

விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்

காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை ’ – சிலம்பு. 10: 100-102

 வெள்ளி என்னும் கோள்மீன் தென்திசையில் எழுதல் தீய நிமித்தமாகும்

மழையின் இயக்கம் காணல்

   …………. ……. …….. நீடிய

பன்மா உயர்சினை மின்மினி விளக்கத்துச்

சென்மழை இயக்கம் காணும்

நன்மலை நாடன் காதன் மகளே.

----பெருங்கோசிகனார். நற்றிணை. 44 : 9 – 12

                     நெடிது உயர்ந்த மரங்கள் பலவற்றின் உயர்ந்த கிளைகளில் தங்கி மிளிரும் மின்மினிப் பூச்சிகளின் ஒளியில்வானத்திற் செல்லும் மழை முகிலின் இயக்கத்தைப் பார்த்துச் செய்வன தெளியும் நல்ல மலைநாடனின் அன்பு மகள்.

வெள்ளி மீன் – பஞ்சம்  * வீனஸ் -  வெள்ளிக் கோள், கதிரவனைச் சுற்றிச் செல்லும் இரண்டாவது கோள்.

வெள்ளி தென்புலத்து உறைய விளைவயல்

பள்ளம் வாடிய பயனில் காலை

                                                --------மள்ளனார், புறநானூறு.388: 1,2

                   வெள்ளியாகிய மீன் தென் திசையில் நிற்க ; விளை வயல்களும் நீர் நிலைகளும் வற்றிய பயனில்லாத காலமாகிய வற்கடத்தில்.. (காண்க. ப.பாலை)

நீர் நுங்கின் கண் வலிப்பக்

கான வேம்பின் காய்திரங்கக்

கயம் களியும் கோடை ஆயினும்

 ஏலா வெண்பொன் போகுறு காலை

                                        --கள்ளில் ஆத்திரையனார், புறநானூறு. 389:  1- 4

                 பனநுங்கின் கண் நீரின்றி வற்ற, காட்டில் உள்ள வேம்பின் காய்கள் முற்றாதே உலர, ஆழமான நீர் நிலை வற்றி களிமயமாதற்குரிய கோடைக் காலமாயினும் பொருந்தா வண்ணம் வெள்ளிக் கோள் மற்றைக் கோள்களோடு போர் செய்யும் காலத்தே....

 

மைம்மீன் புகையினும்தூமம் தோன்றினும்

தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்

                                                                -----கபிலர், புறநானூறு.117, 1-2

                      சனி மீன் புகைதலாவது இடபம், சிங்கம், மீனம் இவற்றொடு மாறுபடுதல்; இவற்றுள் சனி தனக்குப் பகைவீடாகிய சிங்கராசியில் புகின் உலகிற்குப் பெருந் தீங்கு விளையும். தூமம் புகைக்கொடி என்றும் கூறப்படும்; தூமகேது என்பதும் இதுவே. இது வட்டம், சிலை, நுட்பம், தூமம் என்னும் மறைந்துறையும் கோள்கள் நான்கனுள் ஒன்று ; தூமகேதுவின் தோற்றம் உலகிற்குப் பெருந் தீங்கு விளைவிக்கும் என்பர்.தென் திசைக்கண் வெள்ளி மீன் சென்றால் மழை இராது.

அகன் ஞாலம் பெரிது வெம்பினும்

மிகவானுள் எரி தோன்றினும்

குளமீனொடும் தாள் புகையினும்

                                              --மதுரை நக்கீரர், புறநானூறு.395 : 33 -35

                       அகன்ற நிலவுலகம் மழையின்றி மிக்க வெம்மையுற்று வாடினும் வானத்தே எரிமீன்கள் மிகுதியாகத் தோன்றினாலும் குளமீனும் தாள் மீனும் ஆகிய விண்மீன்கள் புகைந்து தோன்றுமாயினும்….( எரி, குளம், தாள் என்பன விண்மீன் வகை இவற்றின் தோற்றம் நாட்டிற்குக் கேடுதரும் என்பது பண்டையோர் கருத்து )

( காவிரிப்பூம்பட்டினம் தோன்றிச் சிறந்து விளங்குவதற்கு முன்பே விளக்கம்பெற்ற தலைநகர் உறையூர்  - ஊரெனப்படுவது உறையூர் )

                    கால நிலைக்கேற்ப வளிமண்டலச் சுழற்சிகள் ஏற்படுவது இயல்பே; பருவம் அல்லாத காலத்தில் மழை பொழிதல் இன்றும் உண்டு.  இயற்கையை  வெகுகாலமாகப் பட்டறிவினால் ஆராய்ந்து வானியல் பற்றிய செய்திகளைப் புலவர்கள் பதிவு செய்துள்ளனர்.

நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்

பாடுஇமிழ் பனிக்கடல் பருகி வலன் ஏர்பு

கோடு கொண்டு எழுந்த  கொடுஞ்செலவு எழிலி

பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை

                                                           --நப்பூதனார், முல்லைப்பாட்டு. 5 : 1 – 6

                           அலையோசை முழங்கும் குளிர்ந்த கடல்நீரைக் குடித்து எழுந்த மேகம், இடமகன்ற உலகத்தை வளைத்து, வலமாக உயர்ந்தெழுந்து, மலைகளில் தங்கிப் புல்லிய மாலைப் பொழுதில் பெருமழையைப் பொழிந்தது. இக்காட்சி, சக்கரத்தொடு வலம்புரிச் சங்கினை ஏந்திய கைகளையும், திருமகளை வைத்த மார்பினையும் உடைய திருமால், வாமனனாகச் சென்று இரந்தபோது, மாவலி வார்த்த நீர் கையில்பட்ட அளவில், விண்ணையும் மண்ணையும் அளாவும்படி உயர்ந்ததுபோல விளங்கியது.

தொடரும்......................................................

ஞாயிறு, 14 நவம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –361 38. மழை - அறிவியல்

 


 

தன்னேரிலாத தமிழ் –361

38. மழை  - அறிவியல் – Origin of Rain

 

மழைக் கோள்

அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடா(து)

மழைவேண்டு புலத்து மாரி நிற்ப

நோயொடு பசி இகந்து ஒரீஇப்

பூத்தன்று பெரும நீ காத்த நாடே.

            -- குமட்டூர் கண்ணனார், பதிற்றுப்பத்து. 13 : 25-28

              செவ்வாய்க் கோள் சென்றவழியில் சுக்கிரன் கோள் செல்லாமல், மழை தேவையான இடங்களிலெல்லாம் நின் நாட்டில் மழை பெய்கிறது, நோயும் பசியும் நின் குடிகளுக்கு இல்லாமல் நீ காத்துவரும் நாடுகள் பொலிவு பெற்று விளங்கிகின்றன.

வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர

வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி

பயம் கெழு பொழுதொடு ஆநியம் நிற்ப

--- பாலைக் கெளதமனார். 24 : 23 –  25

 

                 விளங்குகின்ற  கதிர்கள் வானத்திலெங்கும் பரந்து ஒளி வீசவடக்கே சிறிது சாய்ந்துள்ள சிறப்பமைந்த வெள்ளி என்னும் கோளானது பயன் பொருந்திய பிற கோள்களோடு தனக்குரிய நல்ல நாளிலே மழை பொழிவதற்கு நிற்க…..

                   ( மழைக் கோளாகிய வெள்ளி- மழை பெய்வதற்கு ஏதுவாகச் சிறிது வடக்கே சாய்ந்து நிற்குமாறு தோன்றவறிது வடக்கிறைஞ்சிய வெள்ளிஎன்றார். வெள்ளி தெற்கே நின்றால் மழை இல்லை. வெள்ளிசுக்கிரன். மேலும் காண்க : ”வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கேகினும் …… புயன் மாறி வான் பொய்ப்பினும் “ -- .பாலை. 1-2. )

இருங்கண் ஞாலத்து அருந் தொழில் உதவிப்

பெரும் பெயல் பொழிந்த …………….

--இளவேட்டனார். நற்றிணை. 157 : 1 – 2-

பெரிய இடமகன்ற இவ்வுலகில் உலக உயிர்கள் எல்லாம் தழைக்கும்படி யாக மழைத் தொழிலை உதவிப் பெரிய நீர்ப்பொழிவு பொழிந்தது.

 வானின்று உலகம் வழங்கி வருதலால்

 தானமிழ்தம் என்றுணரற் பாற்றுகுறள்.11.

                  உலகம் என்றது ஈண்டு உயிர்களை அவை நிலைபெற்று வருதலால்உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை அமிழ்தம் என்று உணர்க என்றார்.

 

...................................தொடரும்…………………………………

வியாழன், 11 நவம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –360----மழை - அறிவியல்

 

தன்னேரிலாத தமிழ் –360----மழை  - அறிவியல்

38. மழை  - அறிவியல் – Origin of Rain

               மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில்இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின்வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களைஅடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகிவிடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும்ஆவியாகிவிடுவது உண்டு. ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய மழைக்காலம் என அழைக்கப்படுகின்றது.”   ---விக்கிபீடியா.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியல் அறிவு

என்றூழ் உறவரும் இருசுடர் நேமி

ஒன்றியன்சுடர் நிலை உள்படுவோரும்

                               --- நப்பண்ணனார், பரிபாடல்.19: 46, 47

என்றூழ்ஞாயிறு, நாண்மீனும் பிற மீனுமாகிய இருவகை மீன்களும். ஞாயிறு முதன்மையாகப் பொருந்த இயங்கும். இவ்வடிகளானே பண்டைக் காலத்துத் தமிழ்ச் சான்றோர் வானின்கண் உள்ள நாள், கோள் முதலியவற்றை ஆராய்ந்து அவற்றைப் பொதுவிடங்களிலே ஓவியமாகவும் வரைந்து மாந்தர்க்கு அறிவுறுத்தி வந்தமை உணரப்படும். நாள் மீன்களையும் விண்மீன்களையும் உடைய சுடர்ச் சக்கரத்தைப் பொருந்தி ஞாயிறு முதலாக வரும் கோள்களினது நிலைமையை விளக்கி ஆண்டுத் தீட்டப்பட்ட ஓவியங்களைக் காண்பர். ………தொடரும்………..