ஞாயிறு, 21 நவம்பர், 2021

தன்னேரிலாத தமிழ் –362 38. மழை - அறிவியல்

 

தன்னேரிலாத தமிழ் –362

38. மழை  - அறிவியல் – Origin of Rain

                       தான் தோன்றுவதற்கு உரிய நாளில் தோன்றும் வெள்ளி என்னும் கோள்மீன், தன்னுடைய இயங்கும் திசை மாறித் தென்திசையில் தோன்றினாலும், மழை வறக்கும்.

வசையில் புகழ் வயங்கு வெண்மீன்

 திசை திரிந்து தெற்கு ஏகினும்’ -- . பாலை. 1-2.

வறிது வடக்கு இறைஞ்சிய சீர்சால் வெள்ளி

 பயங்கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப’ –பதிற்றுப். 24.

மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும்

தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும்

பெயல் பிழைப்பறியாப் புன்புலத்ததுவே ’– புறநா. 117).

வெள்ளி தென்புலத்து உறைய விளைவயல்

 பள்ளம் வாடிய பயனில் காலை ’– புறநா. 388.

கரியவன் புகையினும்  புகைக்கொடி தோன்றினும்

விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்

காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை ’ – சிலம்பு. 10: 100-102

 வெள்ளி என்னும் கோள்மீன் தென்திசையில் எழுதல் தீய நிமித்தமாகும்

மழையின் இயக்கம் காணல்

   …………. ……. …….. நீடிய

பன்மா உயர்சினை மின்மினி விளக்கத்துச்

சென்மழை இயக்கம் காணும்

நன்மலை நாடன் காதன் மகளே.

----பெருங்கோசிகனார். நற்றிணை. 44 : 9 – 12

                     நெடிது உயர்ந்த மரங்கள் பலவற்றின் உயர்ந்த கிளைகளில் தங்கி மிளிரும் மின்மினிப் பூச்சிகளின் ஒளியில்வானத்திற் செல்லும் மழை முகிலின் இயக்கத்தைப் பார்த்துச் செய்வன தெளியும் நல்ல மலைநாடனின் அன்பு மகள்.

வெள்ளி மீன் – பஞ்சம்  * வீனஸ் -  வெள்ளிக் கோள், கதிரவனைச் சுற்றிச் செல்லும் இரண்டாவது கோள்.

வெள்ளி தென்புலத்து உறைய விளைவயல்

பள்ளம் வாடிய பயனில் காலை

                                                --------மள்ளனார், புறநானூறு.388: 1,2

                   வெள்ளியாகிய மீன் தென் திசையில் நிற்க ; விளை வயல்களும் நீர் நிலைகளும் வற்றிய பயனில்லாத காலமாகிய வற்கடத்தில்.. (காண்க. ப.பாலை)

நீர் நுங்கின் கண் வலிப்பக்

கான வேம்பின் காய்திரங்கக்

கயம் களியும் கோடை ஆயினும்

 ஏலா வெண்பொன் போகுறு காலை

                                        --கள்ளில் ஆத்திரையனார், புறநானூறு. 389:  1- 4

                 பனநுங்கின் கண் நீரின்றி வற்ற, காட்டில் உள்ள வேம்பின் காய்கள் முற்றாதே உலர, ஆழமான நீர் நிலை வற்றி களிமயமாதற்குரிய கோடைக் காலமாயினும் பொருந்தா வண்ணம் வெள்ளிக் கோள் மற்றைக் கோள்களோடு போர் செய்யும் காலத்தே....

 

மைம்மீன் புகையினும்தூமம் தோன்றினும்

தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்

                                                                -----கபிலர், புறநானூறு.117, 1-2

                      சனி மீன் புகைதலாவது இடபம், சிங்கம், மீனம் இவற்றொடு மாறுபடுதல்; இவற்றுள் சனி தனக்குப் பகைவீடாகிய சிங்கராசியில் புகின் உலகிற்குப் பெருந் தீங்கு விளையும். தூமம் புகைக்கொடி என்றும் கூறப்படும்; தூமகேது என்பதும் இதுவே. இது வட்டம், சிலை, நுட்பம், தூமம் என்னும் மறைந்துறையும் கோள்கள் நான்கனுள் ஒன்று ; தூமகேதுவின் தோற்றம் உலகிற்குப் பெருந் தீங்கு விளைவிக்கும் என்பர்.தென் திசைக்கண் வெள்ளி மீன் சென்றால் மழை இராது.

அகன் ஞாலம் பெரிது வெம்பினும்

மிகவானுள் எரி தோன்றினும்

குளமீனொடும் தாள் புகையினும்

                                              --மதுரை நக்கீரர், புறநானூறு.395 : 33 -35

                       அகன்ற நிலவுலகம் மழையின்றி மிக்க வெம்மையுற்று வாடினும் வானத்தே எரிமீன்கள் மிகுதியாகத் தோன்றினாலும் குளமீனும் தாள் மீனும் ஆகிய விண்மீன்கள் புகைந்து தோன்றுமாயினும்….( எரி, குளம், தாள் என்பன விண்மீன் வகை இவற்றின் தோற்றம் நாட்டிற்குக் கேடுதரும் என்பது பண்டையோர் கருத்து )

( காவிரிப்பூம்பட்டினம் தோன்றிச் சிறந்து விளங்குவதற்கு முன்பே விளக்கம்பெற்ற தலைநகர் உறையூர்  - ஊரெனப்படுவது உறையூர் )

                    கால நிலைக்கேற்ப வளிமண்டலச் சுழற்சிகள் ஏற்படுவது இயல்பே; பருவம் அல்லாத காலத்தில் மழை பொழிதல் இன்றும் உண்டு.  இயற்கையை  வெகுகாலமாகப் பட்டறிவினால் ஆராய்ந்து வானியல் பற்றிய செய்திகளைப் புலவர்கள் பதிவு செய்துள்ளனர்.

நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

நீர்செல நிமிர்ந்த மாஅல் போலப்

பாடுஇமிழ் பனிக்கடல் பருகி வலன் ஏர்பு

கோடு கொண்டு எழுந்த  கொடுஞ்செலவு எழிலி

பெரும்பெயல் பொழிந்த சிறுபுன் மாலை

                                                           --நப்பூதனார், முல்லைப்பாட்டு. 5 : 1 – 6

                           அலையோசை முழங்கும் குளிர்ந்த கடல்நீரைக் குடித்து எழுந்த மேகம், இடமகன்ற உலகத்தை வளைத்து, வலமாக உயர்ந்தெழுந்து, மலைகளில் தங்கிப் புல்லிய மாலைப் பொழுதில் பெருமழையைப் பொழிந்தது. இக்காட்சி, சக்கரத்தொடு வலம்புரிச் சங்கினை ஏந்திய கைகளையும், திருமகளை வைத்த மார்பினையும் உடைய திருமால், வாமனனாகச் சென்று இரந்தபோது, மாவலி வார்த்த நீர் கையில்பட்ட அளவில், விண்ணையும் மண்ணையும் அளாவும்படி உயர்ந்ததுபோல விளங்கியது.

தொடரும்......................................................

1 கருத்து: