தன்னேரிலாத தமிழ் –361
38. மழை - அறிவியல் – Origin of Rain
மழைக் கோள்
அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடா(து)
மழைவேண்டு புலத்து மாரி நிற்ப
நோயொடு பசி இகந்து ஒரீஇப்
பூத்தன்று பெரும நீ காத்த நாடே.
-- குமட்டூர் கண்ணனார், பதிற்றுப்பத்து. 13 :
25-28
செவ்வாய்க் கோள் சென்றவழியில் சுக்கிரன் கோள் செல்லாமல், மழை தேவையான இடங்களிலெல்லாம் நின் நாட்டில் மழை
பெய்கிறது, நோயும் பசியும் நின் குடிகளுக்கு
இல்லாமல் நீ காத்துவரும் நாடுகள் பொலிவு பெற்று விளங்கிகின்றன.
வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர
வறிது வடக்கு இறைஞ்சிய சீர் சால் வெள்ளி
பயம் கெழு பொழுதொடு ஆநியம் நிற்ப
--- பாலைக்
கெளதமனார். 24 : 23 –
25
விளங்குகின்ற கதிர்கள் வானத்திலெங்கும்
பரந்து ஒளி வீச – வடக்கே சிறிது சாய்ந்துள்ள
சிறப்பமைந்த வெள்ளி என்னும் கோளானது பயன் பொருந்திய பிற கோள்களோடு தனக்குரிய நல்ல நாளிலே
மழை பொழிவதற்கு நிற்க…..
( மழைக் கோளாகிய வெள்ளி- மழை பெய்வதற்கு ஏதுவாகச் சிறிது வடக்கே சாய்ந்து நிற்குமாறு தோன்ற “ வறிது வடக்கிறைஞ்சிய வெள்ளி” என்றார். வெள்ளி தெற்கே நின்றால் மழை இல்லை. வெள்ளி – சுக்கிரன். மேலும் காண்க : ”வயங்கு வெண்மீன் திசை திரிந்து தெற்கேகினும் …… புயன் மாறி வான் பொய்ப்பினும் “ -- ப.பாலை. 1-2. )
இருங்கண் ஞாலத்து அருந் தொழில் உதவிப்
பெரும் பெயல் பொழிந்த …………….
--இளவேட்டனார். நற்றிணை. 157 : 1 – 2-
பெரிய இடமகன்ற இவ்வுலகில் உலக உயிர்கள் எல்லாம் தழைக்கும்படி யாக மழைத் தொழிலை உதவிப் பெரிய நீர்ப்பொழிவு பொழிந்தது.
வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று – குறள்.11.
உலகம் என்றது ஈண்டு உயிர்களை அவை நிலைபெற்று வருதலால்’ உலகத்தை நிலைபெறுத்துகின்ற வானை அமிழ்தம் என்று உணர்க என்றார்.
...................................தொடரும்…………………………………
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக