திங்கள், 22 ஆகஸ்ட், 2022

தன்னேரிலாத தமிழ் –500: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –500: குறள் கூறும்பொருள்பெறுக.

 

688

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்

வாய்மை வழியுரைப்பான் பண்பு.


 மனத்தூய்மை உடையவனாதல்; அமைச்சர் முதலிய கற்றறிந்தார் துணையைப் பற்றி நிற்றல்; எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் துணிவு  உடையவனாதல் ஆகிய இம்மூன்றும் நிறைவாகக் கொண்டு.  தன் அரசர் ஆராய்ந்து கூறியவழி ,வாய்மை தவறாது அஃதாவது சொற்குற்றம் வாராது தூதுரைத்தல் தூது செல்வானுக்குரிய பண்புகளாம்.


தூயவாய்ச் சொல்லாடல் வன்மையும் துன்பங்கள்

ஆயபொழுது ஆற்றும் ஆற்றலும் காய்விடத்து

வேற்றுமை கொண்டாடா மெய்ம்மையும் இம்மூன்றும்

சாற்றுங்கால் சாலத் தலை.” அறநெறிச்சாரம், 154.


குற்றம் குறையின்றித் தான் நினைக்கும் கருத்துக்களை எடுத்துச் சொல்லும் ஆற்றலும்; துன்பங்கள் சூழும் காலத்திலும் தளர்ந்து விடாமல் தாங்கிக்கொள்ளும் பொறுமையும் ; தன்னை வெறுப்பவரிடத்தில் மாறுபாடு கொள்ளாத உண்மை உணர்வும் ஆகிய இம்மூன்றும் மிகவும் உயர்ந்தனவாம்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2022

தன்னேரிலாத தமிழ் –499: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –499: குறள் கூறும்பொருள்பெறுக.

 

 

684

அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன்

செறிவுடையான் செல்க வினைக்கு.


மெய்ப்பொருள் அறியும் அறிவு, அரிதாகிய தோற்றப் பொலிவு, நூல்பல கற்று ஆராய்ந்து பெற்ற கல்வி என இம்மூன்றினும் நிறைவான தேர்ச்சிபெற்ற ஒருவனே, தூது செல்லத் தகுதி உடையவனாவான்.


மருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல

உருவும் உயர்குலமும் எல்லாம்திருமடந்தை

ஆம்போது அவளோடும் ஆகும்…….”—வாக்குண்டாம், 29.


இனிமையான உறவும்; பெருகிய பொருட்செல்வமும்; சிறந்த தோற்றப் பொலிவும்; நல்ல குடிப் பிறப்பும் ஆகிய  இவையெல்லாம் திருமகள் வந்து சேருகின்றபோது, அவளோடு வந்து சேரும்.

சனி, 20 ஆகஸ்ட், 2022

தன்னேரிலாத தமிழ் –498: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –498: குறள் கூறும்பொருள்பெறுக.

 

682

அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு

இன்றி யமையாத மூன்று.


அன்புடைமை, அறிவுடைமை,  ஆராய்ந்தறிந்த செய்திகளைக் கேட்போர் மனங்கொள எடுத்துரைக்கும் சொல்வன்மை, ஆகிய இம்மூன்றும்  தூது உரைப்பானுக்கு இருக்க வேண்டிய இன்றியமையாத பண்புகளாம்.


தானத்தின் மிக்க தருமமும் தக்கார்க்கு

ஞானத்தின் மிக்க உசாத் துணையும் மானம்

அழியா ஒழுக்கத்தின் மிக்கதூஉம் இல்லை

பழியாமல் வாழும் திறம்.” அறநெறிச்சாரம், 62.


தகுதி மிக்க சான்றோர்க்கு வேண்டுவன அளித்துத் துணை புரிவதைக்காட்டிலும் சிறந்த அறமும் ; பெரியோர்களுக்கு அறிவைக் காட்டிலும் சிறந்த துணையும் ; மானம்  கெடாத உயர்ந்த நல்லொழுக்கமும் ஆகிய இம்மூன்றைக் காட்டிலும் பிறர் பழிக்காமல் வாழ்வதற்கு ஏற்ற செயல்கள், எதுவும் இல்லை என்பதாம்.

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

 

தன்னேரிலாத தமிழ் –497: குறள் கூறும்பொருள்பெறுக.

 

680

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்

கொள்வர் பெரியார்ப் பணிந்து.


தாம் ஆளும் நிலம் சிறிதாக உடையவர் (குறுநிலமன்னர்) பகைவரால் தம் மக்கள் நடுங்குதற்கு அஞ்சி ; பெருநில மன்னனோடு இணங்கிச்செல்லவே முற்பட்டு , அம்மன்னனைப் பணிந்து ஏற்றுக்கொள்வர்.


காந்து நறும் புண்ணைக் கலந்து விரும்புமே

வேந்தர் தனமே விரும்புவோர் சாந்த நூல்

கல்லார் பகை சேர் கலகம் விரும்புவார்

நல்லார் விரும்புவார் நட்பு.” ---நீதிவெண்பா, 83.


நாறும் புண்ணையே ஈக்கள் விரும்புவதைப் போல, அரசர்கள் செல்வத்தையே விரும்புவார்கள், அவ்வாறே அறநூல்களைப் படிக்காத கெட்ட எண்ணம் கொண்டவர்கள், கலகத்தையே விரும்புவார்கள் ; நல்ல அறநூல்களைப் படித்தவர்கள்  நல்லோர் நட்பையே விரும்புவார்கள்.

புதன், 17 ஆகஸ்ட், 2022

தன்னேரிலாத தமிழ் –496: குறள் கூறும் ”பொருள்” பெறுக.

 

தன்னேரிலாத தமிழ் –496: குறள் கூறும்பொருள்பெறுக.

 

677

செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை

உள்ளறிவான் உள்ளம் கொளல்.


 ஒரு செயலைச் செய்ய வேண்டிய வழிமுறையாவது, ஏற்கெனவே அச்செயலைச் செய்தவனுடைய பட்டறிவைக் கேட்டறிந்து, அதன்படி செயலாற்ற வேண்டும்,


எப் பிறப்பு ஆயினும் ஏமாப்பு ஒருவற்கு

மக்கட் பிறப்பின் பிறிது இல்லைஅப்பிறப்பில்

கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்

நிற்றலும் கூடப் பெறின்.” -அறநெறிச்சாரம், 143.


இணையில்லாத மக்கட் பிறவியில், கற்பதற்குரிய உயர்ந்த நூல்களைக் கற்றலும்; அங்ஙனம் கற்ற நூல்களைப் பெரியோர்களிடம் அணுகிக் கேட்டலும் ;கேட்ட அந்நெறிகளினின்று  பிறழாமல் ஒழுகுதலும்; கைவரப் பெற்றால் மக்கட் பிறப்பினைப் போல இன்பம் பயப்பது வேறு ஒன்றுமில்லை.