வெள்ளி, 31 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் - ஆதித்தேச்சரம் – ஆதித்த சோழன். 18

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -

ஆதித்தேச்சரம்ஆதித்த சோழன்.18.

பிற்காலச் சோழப்பேரரசு எழுச்சியுடன் தோன்றுவதற்கு வித்திட்ட ஆதித்தசோழனின் வரலாறு, களப்பாள் ஆதித்தேச்சுரம் கோயிலுடன் தொடர்புடையதை அறிதற்குக் கீழ்க்காணும் செய்திகள் துணைபுரிகின்றன.

 

                            ஆதித்த சோழன் (பொ.ஊ. 871–907), கோப்பரகேசரி விசயாலய சோழனின் மகன். இவனும் தன் தந்தையுடன் திருப்புறம்பிய போரில் பங்குபற்றினான். பல்லவ மன்னன் அபராசித வர்மனை கொன்று தொண்டை நாட்டை கைப்பற்றினான். இவன் காலத்தில் சோழ அரசு சிற்றரசு நிலையில் இருந்து விடுபட எத்தனித்தது.[1]

 

                  மேற்கே சகயாத்திரிமலை முதல் கிழக்கே கீழ்க்கடல் வரை காவிரியின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டுவித்தான் ஆதித்தன் என்று சுந்தர சோழன் காலத்து அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. ஆதித்தன் காலத்தில் மண்டளிகள் பல கற்றளிகளாக மாற்றியமைக்கப்பட்டன என்றும் இவன் காலத்தில் சுமார் 50 கோயில்கள் வரை கட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகின்றது.wikki

……………………..தொடரும்…………………….

புதன், 29 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் -17.

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -17.

களந்தை- களப்பாள்

இறைவரின் திருப்பெயர் : ஆதித்தேச்சுவரர்

இறைவியாரின் திருப்பெயர் : பிரபாநாயகி

வழிபாடாற்றியவர் : ஆதித்த சோழன், கூற்றுவநாயனார்.

 

இவ்வூரின் சிறப்பு :  கூற்றுவநாயனாரது அவதார ஸ்தலம்  இக்களப்பாள் ஆகும். “கோதை நெடுவேற் களப்பாளனாகிய கூர்றுவனே” என்பது திருத்தொண்டர் திருவந்தாதி.

 

கல்வெட்டு வரலாறு ;  இவ்வூர்க் கோயில்களில் 12 கல்வெட்டுக்கள் இருக்கின்றன. இவைகளுள் அழகியநாதசுவாமி கோயிலின்  இரு கல்வெட்டுக்களின் மூலங்கள், தென்னிந்தியக் கல்வெட்டுத் தொகுதி எட்டில் வெளிவந்திருக்கின்றன. அவைகளுள் ஒன்றினைக் குறிப்பிடுகிறேன்…….

 

ஸ்வஸ்தி ஸ்ரீ கோமாறுபன்மர் திரிபுவனச் சக்கரவர்த்திகள்

சிறிகுலசே (க) ர தேவற்கு யாண்டு உயங [வது] உளச-ள் பங்குனி மீ களப்பாள் உடையாற் திருவாதித்தீ [சு]ர முடையாற்கு வாகூருடையார் பிள்ளை காடு [வெ] ட்டியார் மகனார் சொக்க நாய [னா]ர் கட்டின சந்தி ஒன்று.

இவற்றால் களப்பாள் என்பது ஊரின் பெயர் என்பதும் ஆதித்தேச்சரம் என்பது கோயிலின் பெயர் என்பதும் புலப்படுகின்றன.

மேற்குறித்துள்ள செய்திகள் , 

 நூல் : “ஒன்பதாம் திருமுறையில் உள்ள தலங்களின் வரலாற்றுக் குறிப்பு”-

நூலாசிரியர்: கல்வெட்டு ஆராய்ச்சி அறிஞர்

வித்துவான் வை. சுந்தரேச வாண்டையார்.

………………………….தொடரும் …………………….

செவ்வாய், 28 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் -16

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -16

 “அந்தணீர்க் களந்தை அலைபுணற் களந்தை ”எனத் திருவிசைப்பாவில் வருவதால், இக்களந்தை நீர்வளம் பொருந்தியது என்று பெறப்படுகின்றது. அதற்கு ஏற்ப இவ்வூர் முள்ளியாற்றுப் பாய்ச்சல் உடையதால் நீர் வளத்துக்குக் குறைவேயில்லை. ஆதலின் இக்களப்பாள் என்னும் ஊரே கருவூர்த் தேவரின் திருவிசைப்பாப் பெற்ற தலமாகும்.

பெரிய களந்தை ஆதிபுரீஸ்வரர் திருக்கோயிலில் பதினான்கு கல்வெட்டுக்கள் இருக்கின்றன.(A.R.E. 1927 Nos.164 – 177)

 அவைகளுள் ஒன்று நீங்கலாக (எண். 169) ஏனையவைகள் அனைத்திலும் இறைவன் திருப்பெயர்                ‘ ஆதிபுராணீஸ்வரம் உடைய நாயனார்’ என்றே குறிக்கப் பெற்றிருக்கிறது. அந்த 169 எண்ணுள்ள கல்வெட்டில் ஆதித்தேச்சுரம் உடையார் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கல்வெட்டு வேறு எங்கிருந்தோ கொண்டுவந்துவைக்கப்பட்டதாகும். கல்வெட்டுத்துறையினரும் இக்கல்லை – ‘Stray Stone – எனக்குறித்துள்ளனர். ஆதலின் இப்பெரிய களந்தை திருவிசைப்பாப் பெற்றதன்று.”

……………………..தொடரும்………………. 

வெள்ளி, 24 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் -15

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -15

”குழையராய் வந்தென் குடிமுழு தாளுங்

     குழகரே ஒழுகுநீர்க் கங்கை

அழகரே யாகில் அவரிடங் களந்தை

     அணிதிகழ் அதித்தேச் சரமே.” எனவும்

 

( திருவிசைப்பாத் திருப்பதிகங்கள் திருவாய் மலர்ந்தருளிய ‘கருவூர்த்தேவர்’ இத்தலத்தில் அருளிச் செய்த திருவிசைப்பா பத்தும் களந்தை எனும் ஊர்ப்பெயர் கொண்டு விளங்குதலைக் காணலாம்)

 

திருக்களந்தை ஆதித்தேச்சரத் திருவிசைப்பா அடிகள், இக்களப்பாள், அழலோம்பும் அந்தணர்கள் வாழுமிடம் என்பதையும் இறைவரின் திருப்பெயர் அழகர் ( அழகியநாதசுவாமி ) என்பதையும் உணர்த்துகின்றன. கயிலாசநாதர் கோயில், ஆனைகாத்த பெருமாள் கோயில் இவைகளில் உள்ள கல்வெட்டுக்கள் “இராசேந்திர சோழவளநாட்டு, புறங்கரம்பை நாட்டு அகரம் முடிவழங்குசோழபுரம்” என்று இவ்வூரைக் குறிப்பிடுகின்றன.ஆதலின் அந்தணர்கள் இவ்வூரில் இருந்து வருகின்றனர் என்பதைக் கல்வெட்டுக்களும் தரிவிக்கின்றன. இறைவற்கு வழங்கிவரும் அழகியநாதசுவாமி என்பதற்கு ஈண்டுக் குறித்துள்ள திருவிசைப்பா அடிகளிலும் சான்று இருக்கின்றது.”

……………………தொடரும்………………….. 

வியாழன், 23 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் -14

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -14

 சோழநாட்டில் களப்பாள்

செங்கற்பட்டு ஜில்லா, செங்கற்பட்டு தாலுகாவில் உள்ள பொன்விளைந்த களத்தூரே, களந்தை என்று ஒருசாராரும் தஞ்சாவூர் ஜில்லா திருத்தருப்பூண்டித் தாலுகாவில் உள்ள களப்பாழ் (களப்பாள்) என்ர ஊரே களந்தை என்று வேறு ஒரு சாராரும்  கோயமுத்தூர் ஜில்லா, பொள்ளாச்சித் தலுகாவில் உள்ள பெரிய களந்தை என்று மற்றொரு சாராரும் கூறி வருகின்றனர். இவைகலின் வன்மை மென்மைகள ஆராய்வாம்.

 பொன்விளைந்த களத்தூர், களந்தை என்று மரூஉ மொழியாக வழங்கப்பெறும். இவ்வழக்கைத் தொண்டைமண்டலசதகத்தால் அறியலாம். ஆனால், இவ்வூரில் உள்ள கோயிலின் பெயர், சயங்கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர்க்கோட்டத்துக் களத்தூர் பெருந்திருக்கோயில் என அவ்வூர்க் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. ஆதலால், இக்களத்தூர் திருவிசைப்பாப்பெற்ற கோயில் களந்தை ஆகாது.

தஞ்சாவூர் ஜில்லா திருத்தருப்பூண்டி தாலுகாவில் உள்ள களப்பாழ் (களப்பாள்) என்ற ஊரில், அழகிய நாதசுவாமி கோயில், கயிலாசநாதர் கோயில், ஆனைகாத்த பெருமாள் கோயில் என்னும் மூன்று திருக்கோயில்கள் இருக்கின்றன. அவைகளுள் அழகியநாதசுவாமி கோயிலில் உள்ள பாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி குலசேகர தேவரின் 23ஆம் ஆண்டு 204 ஆம் நாளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, அவ்வூர் இறைவனை, களப்பாள் உடையார் திரு ஆதித்தேச்சரமுடையார் என்று குறிப்பிடுகிறது. களப்பாள், களந்தை என்று மருவி வருதலும் உண்டு ஆதலில் இந்தக் களப்பாள் ஆதித்தேச்சரமே கருவூர்த்தேவர் திருவிசைப்பாப் பெற்ற தலமாகும்அந்தணர் அழலோம்பு அலைபுனல் களந்தைஎனவும்…..

…………………..தொடரும்……………………

புதன், 22 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் -13.

 

களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -13.

இறைவனின் திருவடி

தில்லைவாழ் அந்தணர்கள் எனக்கு திருமுடியைச் சூடாவிட்டாலும், அவர்களுள் முதல்வராகிய ஆடலரசனின் திருவடியை நன்முடியாகச் சூடிக்கொள்வேன்என்று எண்ணி அம்பலத்தரசனை, ‘நீயே நின் திருவடியை எனக்கு மணிமுடியாகச் சூட்டி அருள வேண்டும்என்று மனமுருகி வேண்டிக் கொண்டார்.

அன்றிரவு கூற்றுவ நாயனார் துயில்கையில் அவர் கனவில் தோன்றிய ஆடலரசன் குஞ்சித பாதத்தை தம்முடைய அடியாரின் விருப்பப்படியே மணிமுடியாகச் சூட்டினார்.

உடனே விழித்தெழுந்த நாயனார் தாம் பெற்ற பேற்றை எண்ணி மகிழ்ந்தார். இறைவனின் திருவருளை எண்ணி எண்ணி உருகினார்.

தில்லைவாழ் அந்தணர்கள் மறுத்ததை எல்லோருக்கும் முதலவான இறைவனார் நிகழ்த்தியை எண்ணி நெகிழ்ந்து பரவினார்.

தில்லைவாழ் அந்தணர்கள் சேர நாடு சென்றதற்கான காரணத்தை அறிந்து எதற்கும் அஞ்ச வேண்டாம்என்று ஓலை அனுப்பி அவர்களை சோழ நாட்டிற்கு மீண்டும் வருவித்தார் கூற்றுவர்.

தில்லைவாழ் அந்தணர்களும் இறைவனார் கூற்றுவ நாயனாருக்கு திருவருள் புரிந்ததை அறிந்ததை அறிந்து அவரிடம் பேரன்பு கொண்டு தில்லை திரும்பினர்.

பின்னர் கூற்றுவ நாயனார் இறைவனார் கோவில் கொண்டுள்ள பலத் திருத்தலங்களுக்கும் சென்று, திருத்தொண்டுகள் செய்து வழிபட்டு பேரின்பம் கண்டார். இறுதியில் நிலைத்த இன்பமான வீடுபேற்றினை இறையருளால் பெற்றார்.

கூற்றுவ நாயனார் குருபூஜை ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் பின்பற்றப்படுகிறது.

இறைவனின் திருவடித் தாமரைகளையே திருமுடியாக ஏற்றுக் கொண்ட கூற்றுவ நாயனாரை சுந்தரர் திருத்தொண்ட தொகையில் ‘ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்என்று போற்றுகிறார்.  (இனிது

இணைய இதழ்)

செவ்வாய், 21 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் -12.

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -12.

சோழநாட்டில் களப்பாள் என்னும் ஊரிலிருந்து அரசாண்ட மன்னன் அச்சுதக்களப்பாளன் என்றும் களப்பாள அரசன் மற்ற அரசர்களோடு போர்புரிந்து வெற்றி பெற்றான் என்பதை,

 

‘”படுபருந்தும் சூர்ப்பேயும் பல்லிலங்கும் நாயும்

கொடியும் கழுகுமிவை கூடி – வடிவுடைய

கோமான் களப்பாளன் கொல்யானை போமாறு

போமாறு போமாறு போம். எனும் தனிப்பாடல் சுட்டுகின்றது.

“கூற்றுவ நாயனார் என்பவர் சோழவள நாட்டிலே காவிரி நதிக்குத் தெற்கிலே திருக்களரிக்கு நிருதி திசையிலே ஒரு கூப்பிடு தூரத்திலேயுள்ள களந்தைப் பதியிலே குறுநில மன்னர் மரபிலே திருவவதாரம் புரிந்தவர். களந்தையைத் தன் பெயரால் களப்பாளை ஏழு கூற்றாகப் பிரித்தமையால் கூற்றுவனென்னும் பெயர் பெற்றார்.”

 

கூற்றுவ நாயனார் இறைவனின் திருவடியை திருமுடியாக ஏற்றவர்

கூற்றுவ நாயனார் தில்லை சிற்றம்பலத்தில் அருள்புரியும் நடராஜப் பெருமானின் திருவடிகளையே திருமுடியாக ஏற்றுக் கொண்ட மன்னர்.

திருக்களந்தை என்னும் திருத்தலத்தை குறுநில மன்னர்கள் பலர் ஆட்சி செய்தனர். அதில் களப்பாளர் மரபில் தோன்றியவர் கூற்றுவ நாயனார் என்பவரும் ஒருவர்.

பகைவர்களுடன் போர்புரிகையில் கூற்றுவனைப் போல் (எமனைப் போல்) தோன்றி மிடுக்குடன் போர்புரிந்து வென்றமையால் இவர் கூற்றுவர் என்று அழைக்கப்பட்டார்.

சிவனார் மேல் ஆழ்ந்த அன்பும் பெரும் பக்தியும் கொண்டமையால் கூற்றுவ நாயனார் என்று ஆனார். ஆதலால் இவரின் இயற்பெயரை அறிய இயலவில்லை.

களந்தை என்னும் ஊரில் இருந்த அம்மன்னர் பல மன்னர்களுடன் போர் செய்து வெற்றி பெற்றார். அந்த வெற்றிகளால் செருக்குறாமல் இறைவனை நினைத்த வண்ணம் இருந்தார்.

எல்லாம் அவனின் திருவருள்என்ற எண்ணத்தினைக் கொண்டவராக இருந்ததால் அரனாரின் திருநாமத்தை மறவாமல் ஓதியபடியே இருப்பார்.

சிவனடியார்களைக் கண்டால் அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுப்பார். மேலும் பலவகையான சிவத்தொண்டுகளிலும் ஈடுபட்டு பேரின்பம் கண்டார்.

……………………………………..தொடரும்…………………………………….

திங்கள், 20 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் -11.

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை-கூற்றுவனார் -11.

 

கூற்றுவ நாயனார்

 

”மல்லன் ஞாலம் புரக்கின்றார் மணிமா மவுலி புனைவதற்குத்

தில்லைவாழ் அந்தணர் தம்மை வேண்ட அவருஞ் செம்பியர்தந்

தொல்லை நீடுங் குலமுதலோர்க்கன்றிச் சூட்டோம் முடியென்று

நல்காராகிச் சேரலநன்தன் மலைநாடு அணைய நண்ணுவர்”  எனவும் சேக்கிழார் கூற்றுவநாயனார் குறித்துக் கூறுவார்.

 

சைவ சமய 63 நாயன்மார்களில், 'களப்பாளர்' குலத்தைச் சேர்ந்த நாயன்மார். கூற்றுவர் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். களந்தை என்னும் பதியிலே கூற்றுவர் என்னும் குறுநில மன்னர் ஒருவர் இருந்தார்.

கூற்றுவர் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[1]. களந்தை என்னும் பதியிலே கூற்றுவர் என்னும் குறுநில மன்னர் ஒருவர் இருந்தார்[2]. அவர் சிவபெருமானது திருநாமத்தினை நாடோறும் ஓதியும் சிவனடியார் பாதம் பணிந்தும் ஒழுகினார். அவ்வொழுக்கத்தின் வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப் பெற்று மாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள்வலிமையாலே நால்வகைச் சேனையும் சிறக்கப்பெற்று மாற்றார்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். தம் தோள் வல்லாமையால் பல போர்களிலும் பல அரசர்களையும் வென்று அவர்களது வளநாடுகளையெல்லாம் கவர்ந்தார். மணிமுடி ஒன்றொழிய அரசர் திருவெல்லாமுடையாராய் விளங்கினார்.

மணிமுடி சூட்டிக் கொடுக்கும்படி அதனைச் சூட்டும் உரிமையுடைய தில்லைவாழந்தணர்களைக் கேட்டார். அவர் சோழர் குல முதல்வர்களுக்கு அன்றி முடி சூட்டமாட்டோம் என்று மறுத்துத் தம்மில் ஒரு குடியை மணிமுடியைக் காவல் செய்யும்படி வைத்து, இவராணைக்கு அஞ்சி சேர நாட்டிற்குச் சென்றுவிட்டனர்.

அது கண்ட கூற்றனார் மனம் தளர்ந்து முடியாக உமது பாதம் பெற வேண்டும்என்று ஆடவல்லானைப் பரவி, அந்நினைவுடன் துயின்றார். அன்றிரவு மன்றிலாடும் பெருங்கூத்தர் எழுந்தருளி, தமது திருவடிகளையே முடியாக அவருக்குச் சூட்டியருள, அவற்றைத் தாங்கி அவர் உலகினைத் தனியாட்சி புரிந்தனர். இறைவர் கோயிலெல்லாம் உலகுவாழப்பூசை புரிவித்தனர். இவ்வாறு உம்பர் மகிழ நல் அரசாட்சி புரிந்திருந்து உமையொருபாகர் திருவடி சேர்ந்தனர். “ Wikipedia)

 

களப்பிர அரசர்கள் சமணர்கள் என்றும் வைணவர்கள் என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. இவர்தம் கடவுள் பெயர் அச்சுதன், அச்சுதன் சமணருக்குரிய அருகக்கடவுளையும் குறிக்கும்; வைணவருக்குரிய திருமாலையும் குறிக்கும் . களப்பிர அரசர்கள் அச்சுதன் என்னும் சிறப்புப் பெயரையும் கொண்டிருந்தனர். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆசாரிய புத்த தத்ததேரர் (பூதமங்கலம்) சோழநாட்டுத் தமிழர் ; ஒரு பெளத்த பெரியார். இவர் வினய வினிச்சயம் எனும் பாலி  மொழி நூலைக் களம்ப அரசன் காலத்தில் எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் அச்சுத விக்கந்தன் களப்ப (களப்பிர) குலத்தில் பிறந்தவன் என்று கூறியுள்ளார். இதில் களப்ப குலம் எது என்பது ஆய்வுக்குரிய  செய்தியாகும்.

…………………..தொடரும்…………………..

சனி, 18 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை-கூற்றுவனார் -10

 

களப்பிரர் _ களப்பாள் :  கருநாடர்களந்தை-கூற்றுவனார் -10

 சைவசித்தாந்த சாத்திர உபதேசஞ் செய்தற்பொருட்டு எழுந்தருளிய சந்தான குரவருள் ஒருவரும் தில்லைவாழ் அந்தணருள் ஒருவருமாகிய உமாபதி சிவாச்சாரியார் அருளிய திருத்தொண்டர் புராணச் சாரத்தினுள்

“குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்

   கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப்

பொன்றாழு முடிவேண்டப் புலியூர் வாழும்

   பூசுரர்கள் கொடாது அகலப் புனிதன் ஈந்த

மன்றாடும் திருவடியே முடியாய்ச் சூடி

   மாநிலங் காத் திறைவனுறை மாடக்கோயிற்

சென்றசை யுடன் வணங்கிப் பணிகள் செய்து

    திருவருளாலமருலகஞ் சேர்ந்து ளாரே.” எனவும்

திருவாவடுதுறை ஆதீனத்துச் சிவஞான சுவாமிகள் அருலிச் செய்த திருத்தொண்டர் திருநாமக் கோவையுள்

“விறற் களந்தைக் கூற்றுவனார்” எனவும்

சேக்கிழார் சுவாமிகள் அருளிச் செய்த திருத்தொண்டர் பெரியபுராணத்துள்

“ துன்னார் முனைகள் தோள்வலியால் வென்று சூலப் படையார்

நன்னாமம் அந்தத் திருநாவினாலும் நவிலும் நலமிக்கார்

பன்னாள் ஈசனடியார்தம் பாதம் பரவிப் பணிந்தேத்தி

முன்னானாகிய நற்றிருத் தொண்டின் முயன்றார் களந்தை முதல்வனார்.” எனவும்

…………………..தொடரும்………………18/3..  

 

வெள்ளி, 17 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்—களந்தை -9

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்களந்தை -9

 

களப்பாள்

என்னும்

திருக்களந்தை ஆதித்தேச்சுர வைபவம்”  (1941) நூலாசிரியர்:  திருக்களர் மு. சுவாமிநாத உபாத்தியாயன்.

 

களப்பாள் என்பது மரூஉமொழிபெற்றுகளந்தைஎனவும் இராசாதித்தேச்சரம் என்பது முதற்குறைபெற்றுஆதித்தேச்சரம்எனவும் வழங்கலாயின.”

 

இராசாதித்தன் வழிபாடு” –இத்தலம்இராசாதித்தன் என்னும் அரசன் உண்டுபண்ணி வழிபட்டது.( கற்பக்கிரகம் பின்புறத்தில் இராசாதித்தேச்சுரம் என்றிருந்த சிலாசாதனம் மறைந்து போயிற்று.)

 

”சைவ சமயம் தழைத்தோங்கற்பொருட்டுத் திருவவதாரம் புரிந்து, தமிழ் வேதமாகிய தேவாரம், திருவாசகம் அருளிச் செய்த சமயகுரவர்களுள் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனார்

 

(சிவபெருமான் அடியெடுத்துக்கொடுக்க) திருவாய் மலர்ந்தருளிய திருத்தொண்டத் தொகையினுள்

 

‘ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோ னடியேன்’

எனவும்

 

 திருநாரையூர் பொல்லாப்பிள்ளையாருக்கு அமுதருத்திய  சிவாநுபூதிச் செல்வராகிய நம்பியாண்டார் நம்பி அப்பொல்லாப்பிள்ளையார் திருவருளால் அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியினுள்

 

‘நாதன் திருவடி யேமுடி யாகக் கவித்துநல்ல

போதங் கருத்திற் பொறித்தமை யாலது கைகொடுப்ப

ஓதந் தழுவிய ஞாலமெல் லாமொரு கோலின்வைத்தான்

கோதை நெடுவேற் களப்பாளனாகிய கூற்றுவனே’ எனவும்

…………………………தொடரும்………………. 

வியாழன், 16 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்--8

 களப்பிரர் _ களப்பாள்கருநாடர்--8

 

கல்லாடனார்,புறநானூறு 385 ஆம் பாடலில் மூவேந்தரையும் பாடியுள்ளார். இவர் திருவேங்கட நாட்டுக்குரியவராதலின், சோழநாட்டுப் புரவலரை (அம்பர்கிழான் அருவந்தை) வாழ்த்தும் பொழுது காவிரி மணலினும் பலவென்னாது வேங்கடமலையிற் பெய்த மழைத்துளியினும் பல்லாண்டு வாழ்கஎன வாழ்த்தியுள்ளார்.

 இதுவரை மன்னர்களுக்கு உதவிய சீறூர்த் தலைவர்கள், சிற்றரசர்கள் போன்றோர் சமண, பெளத்த மதக் கருத்துகளிலிம் தமிழருக்கே உரிய திணைப் பாகுபாட்டுத் தெய்வங்களை வணங்கும் தன்மையிலும் வணிகத்திலும் பொருளீட்டும் தமிழர்களின் செல்வத்தை, உழைப்பில் ஈடுபடாது தங்கள் உடைமையாக்கிக்கொண்டு மூட நம்பிக்கைகளை சமூகத்தில் விதைக்கும் அந்தண வைதீகர்களின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தால் மூவேந்தர்க்கும் அளித்துவந்த ஆதரவை விலக்கிக் கொண்டனர்.

தமிழ்நாட்டுச் சிற்றரசர்கள் கருநாடகத் தலைவர்களுடன் கூட்டணி சேர்ந்து மூவேந்தர்களை எதிர்த்து வென்று  புதிய ஆட்சி அமைத்தனர். இந்தக் கூட்டணியே களப்பிரர்கள் எனப்பட்டனர்.

சங்க காலச் சோழன் காலத்தில் வடபுலத்திலிருந்து வடுகரும் தென் புலத்திலிருந்து பரதவரும் தமிழகத்திற்குள் புகுந்து குறும்பு செய்து வந்தனர். இவ்வடுகரே இடைக்காலப் பல்லவ,பாண்டியர் காலத்தில் சீரழிந்து வலியழிந்தொழிந்த களப்பிரராவர். வடபுலத்திருந்த வடுகரே களப்பிரர்.

தென் புலத்தவர் மிடல் சாய

வடவடுகர் வாளோட்டிய

தொடையமை கண்ணித் திருந்து வேல் தடக்கை” –புறநானூறு,378, ஊன்பொதி பசுங்குடையார்.

தென்னாட்டிற் புகுந்து குறும்பு செய்த  பரதவருடைய வலிகெட்டொடுங்க; வடநாட்டினின்றும் போந்து குறும்பு செய்த வடுகரது ( வடுகர்தொண்டை நாட்டுத் திருவேங்கடத்திற்கு வடக்கில் உள்ள நாட்டவராதலால்  வடுகர் எனப்பட்டனர்.) வாட்படையைக் கெடுத்தழித்த , மாலையணிந்த, திருந்திய வேலேந்திய பெரிய கையையும் உடைய  சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்சேட் சென்னியை வாழ்த்திப் பாடியது.

 வடபுலத்திருந்த வடுகரே களப்பிரராவர் என்கிறார் உரை வேந்தர் ஒளவை துரைசாமிப்பிள்ளை…………………………….தொடரும்…………….. 

புதன், 15 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : கருநாடர்--7.

 

களப்பிரர் _ களப்பாள் :  கருநாடர்--7.

கல்லாடம்.

படை நான்குடன் பஞ்சவற் றுரந்து

மதுரை வவ்விய கருநட வேந்தன்

அருகர்ச் சார்ந்து நின்று அரன்பணி அடைப்ப.” –

நான்கு வகைப் படைகளுடன் வந்து பஞ்சவராகிய பாண்டியரை அகற்றிவிட்டு, மதுரையைப் பிடித்த கருநாடக வேந்தன் அருக மதத்தைச் சார்ந்திருந்த காரணத்தால் அரனாகிய சிவன் கோயில் வழிபாட்டை மறுத்துவிட்டனர் என்று , கல்லாடச் செய்யுள் கூறுகிறது.

மூர்த்தி நாயனார் புராணம்.

கானக் கடிசூழ் வடுகக் கருநாடர் காவல்

மானப்படை மன்னன் வலிந்து நிலம் கொள்வானாய்

யானை குதிரைக் கருவிப் படை வீரர் திண்தேர்

சேனைக் கடலுங்கொடு தென்திசை நோக்கி வந்தாந்-(11)

 

வந்துள்ள பெரும் படை மண் புதையப் பரப்பிச்

சந்தப் பொதியில் தமிழ்நாடுடை மன்னன் வீரம்

சிந்தச் செருவென்று தன்ஆணை செலுத்துமாற்றால்

பந்தப் பொழில் சூழ் மதுராபுரி காவல் கொண்டான்.”-(12)

வடுகக் கருநாடர் நாட்டிலிருந்து நால்வகப் படையுடன் வந்து தமிழ் நிலத்தைக் கைப்பற்றினான், என்று  கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்லாடம் விரித்துரைக்கின்றது

………………………………. தொடரும் ………

செவ்வாய், 14 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : 6.

 களப்பிரர் _ களப்பாள் : 6.

களபப்பு நாட்டைச் சேர்ந்த களப்பிரர்தான் சோழநாட்டுக் களப்பாளை உருவாக்கினார்களா? களப்பிரரை களவர்/ கள்வர் என்றும் குறிக்கிறதே?

களப்பாள் எனும் சொல் கள- களம்  என்னும் சொல்லடியாகலாம். தமிழர்தம் தொன்மை நிலப்பகுப்பில் மருதமும் ஒன்று. மருத நில மக்களுக்கு களமர் என்றும் பெயர். களமர் என்றால் உழவர் / வீரர் என்பதாம். களமர், களவர், கள்வர் ஆகிய சொற்கள் ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கில் இருந்து வருகின்றன. கள்வர் குலத்தார் அரச மரபினர் ஆவர். கள்வர் என்பது கள்ளர் வகுப்பினைக் குறிபிதாகும். “ கள்ளர்கள் கருநாடகப் பூமியிலுள்ள குடிமக்களை அடக்கியாண்டு அவர்களிடமிருந்து மகாராட்டியர் செளத் என்ற வரி வாங்கி வந்ததுபோல் ஒரு வரியும் வாங்கி வந்திருக்கின்றனர்என்கிறா அறிஞர் ந.மு. வேங்கடசாமி நாட்டார். சங்க காலத்தில் தமிழகத்தின் வடக்கிலிருந்த வேங்கடநாட்டை அரசாண்ட புல்லி என்ற அரசர்  ‘கள்வர் கோமான் புல்லி’ (அகம்.61) என்று அழைக்கபடுகிறார். வேங்கடமலை தொண்டையர்க்கு (தொண்டைமான்) உரியது. அறிஞர் மு. இராகவையங்கார் கள்வர் என்பது களப்பிரரைக் குறிக்கிறது என்கிறார்.  களப்பிரரும் பல்லவ அரசர் ஆண்ட தொண்டை மண்டலம் தவிர சேர, சோழ, பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஆண்டுள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது

…………………….தொடரும்………………… 

திங்கள், 13 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : 5

 களப்பிரர் _ களப்பாள் : 5

ஆயினும் சிலர் களப்பிரர் தாய்மொழி கன்னடம் அல்ல என்றும் பாலிபிராகிருதம் அவர்தம் தாய்மொழி என்றும் கூறுவதை இவர்கள்  மறுக்கிறார்கள். ’வேள்விக்குடிச் செப்பேடுஅளவரிய ஆதிராஜரை அகல் நீக்கி அகலிடத்தைக் களப்ரனென்னும் கலி அரைசன் கைக்கொண்டான்என்று கூறுகிறது. மூவேந்தர்களையும் வென்று ஈழத்தையும் வென்று சுமார் முந்நூறு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த களப்பிரர் குறித்து அறிந்து கொள்ள, போதிய சான்றுகள் இல்லை. வரலாற்றுச் சுவடுகள் எதுவுமே இல்லாமல் தமிழகம் இருந்திருக்கிறது, அப்படியெனில் களப்பிரர்கள்  கலகக்காரர்களா / அரச மரபினர்களா..?

கன்னட தேசத்தின் வரலாறு (கன்னட இதிஹாஸ தர்ஸன்) எனும் நூலும் பழைய கன்னட சாசனமும் இப்போதைய சிரவணபெளகொள பகுதியே பழங்காலத்தில் களபப்பு நாடு என்று பெயர் பெற்றிருந்தது என்றும் களபப்பு நாடு களவர ராச்சியம் என்பது மைசூர் பிரதேசமே என்றும் கூறுகின்றன. களவர் நாடு, களப்பிரர் நாடு என்னும் பெயர்கள் வேறு சாசனங்களிலும் கூறப்படுகின்றன. இச்சான்றுகளினால் கன்னட நாட்டவராகிய  களப்பிர அரசர் அங்கு ஒரு பகுதியான களப்பிர நாட்டை அரசாண்டனர் என்று தெரிகிறது. அவர்கள் ஏறத்தாழ கி.பி. 250இல் தமிழகத்தைக் கைப்பற்றி அரசாண்டனர் என்கிறார் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி.
 ……………………………………தொடரும்…………………….. 

ஞாயிறு, 12 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : 4.

 களப்பிரர் _ களப்பாள் : 4.

வேள்விக்குடிச் செப்பேடு, தளவாய்புரச் செப்பேடு ஆகியவற்றை ஆராய்ந்த அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி வேள்விக்குடிச் செப்பேடு களப்பிரர் என்று கூறுவதைத் தளவாய்புரச் செப்பேடு களப்பாழர் (களப்பாளர்) என்று கூறுகிறது.  “கடிராறு கவனலங்கல் களப்பாழர் குலங்கலைந்தும்என்றும்களப்பாழரைக் களைகட்ட மற்றிரண்டோன் மாக்கடுங்கோன் மானம் பேர்த்தருளிய கோன்என்று தளவாய்புரச் செப்பேடு (வரி, 131-132) கூறுகிறது. எனவே களப்பிரரும் களப்பாளரும் ஒருவரே என்று கூறுகிறார்.

மேலும் அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமிகளப்ரர், களப்பரர், களப்பிரர், களப்பாளர், களப்பாழர் என்றெல்லாம் அழைக்கப்படுவோர் களப்பிரர்களே. இவர்கள் தமிழர் அல்லர் திராவிட இனத்தைச் சார்ந்த கன்னட வடுகர்.”  என்றும் கூறுகிறார். ………………………. தொடரும்…………………………………….. 

சனி, 11 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : 3.

 

களப்பிரர் _ களப்பாள் : 3.

தமிழக வரலாற்றில்இருண்ட காலம்என்று ஒரு காலப் பகுதியை வரலாற்றறிஞர்கள் சுட்டுகின்றனர். இது, கடைச்சங்க காலத்தின் பிற்பகுதியாகும். கி.பி. 250 முதல் 550 வரை தமிழகத்தைக் களப்பிரர்கள் அரசாண்டனர் என்பர்.

கடைச்சங்க காலத்தின் இறுதியில் அரசாண்ட சேர அரசன் கோக்கோதை மார்பன், கொங்கு நாட்டை ஆண்ட கணைக்கால் இரும்பொறை, பாண்டிய நாட்டை ஆண்ட தலையாலங்கானத்துச் செருவெண்ற நெடுஞ்செழியன், சோழ நாட்டை ஆண்ட செங்கணான் ஆகிய அரசர்களைப் போரிலே வென்று சேர சோழ பாண்டிய நாடுகளோடு துளு நாடு, கொங்கு நாடு, இரேணாடு ( பல்லவ நாட்டின் ஒரு பகுதி) ஈழ நாடு ஆகியவற்றையும் களப்பிரர் கைப்பற்றினர் என்கிறார் அறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி.

களப்பாளில் இருந்தவர்களே களப்பிரர் என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். அறிஞர் டி.வி. சதாசிவ பண்டாரத்தார்களப்பாள்என்ற  சோழ நாட்டு ஊர் ஒன்றில் முற்காலத்தில் வாழ்ந்துவந்த அரசியல் தலைவன் ஒருவன்களப்பாளன்என்று சிறப்பித்து வழங்கப் பெற்றமையால் அவன் வழியினர் களப்பாளன் எனவும் களப்பராயர் எனவும் குடிப்பெயர் பெற்று, பெருமையோடு வாழ்ந்து வருவாராயினர். எனவே தமிழராகிய களப்பாளரும் ஏதிலராகிய களப்பிரரும் ஒருவரேயாவரென்னும் முடிவு எவ்வாற்றானும் ஒத்துக்கொள்ளத் தக்கதன்று என்று கூறுகிறார்.

................... தொடரும்............

வெள்ளி, 10 மார்ச், 2023

களப்பிரர் _ களப்பாள் : 2.

 

களப்பிரர் _ களப்பாள் : 2.

களப்பாள், இது ஏழு ஊர்களுக்குரிய பொதுப் பெயர். நடுவக் களப்பாள், கோயில் களப்பாள், அகரம் களப்பாள் ,தூரி களப்பாள், துயிலி களப்பாள், நருவளிக் களப்பாள், நாராயணபுரம் களப்பாள் என்பவை அருகருகே இருக்கும் ஏழு ஊர்களாகும்.

களப்பாள், வரலாற்றுப் புகழ் வாய்ந்த ஓர் ஊர். இன்று, இருந்த இடம் தெரியாமல் மண்மூடிப் போன கைலாசநாதர் கோயில், கற்சிலைகளும் இலிங்கங்களும் சிதறிக் கிடந்த இலிங்கத்தடி, பொலிவிழந்த திரெளபதி அம்மன் கோயில், அரண்மனைக் குளம், இராஜபாளையத் தெரு, இப்படி அரசர்களோடு தொடர்புடைய எச்சங்கள்! அரண்மனையே இல்லாத ஊரில் அரண்மனைக் குளம் எனும் பெயர் எப்படி வந்தது என்று கேட்டேன், “அரண்மனைக் குளத்துக்குள்ளே ஒரு சுரங்கப்பாதை இருக்கிறது என்றார் அந்தப் பெரியவர்.-----------------------------தொடரும்…………………….

வியாழன், 9 மார்ச், 2023

 

களப்பிரர் _ களப்பாள் : 1.

பிறந்த ஊருக்குப் பெருமை சேர்க்க வேண்டும்,இல்லையேல் பிறந்த ஊருக்குப் பெருமை சேர்த்தவர்களையாவது பெருமைப்படுத்த வேண்டும். அந்த வகையில் நான் பிறந்த ஊராகிய களப்பாளுக்குப் பெருமை சேர்த்த திருக்களர் மு. சுவாமிநாத உபாத்தியாயர் என்கிற மு. சுவாமிநாத மாதவராயர் அவர்கள் எழுதிய “களப்பாள் என்னும் திருக் களந்தை (1941), களப்பாள் சிவஷேத்திர விளக்கம் (1911), முப்பொருள் விளக்கம் (1911) என்னும் கிடைத்தற்கரிய மூன்று நூல்களையும் மறுபதிப்பாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பிறந்த மண் –தாய் மண்! வாழ்வது எந்த மண்ணாயினும் சாவது தாய் மண்ணில்தான் எனும் கொள்கை நம் முன்னோர்களிடத்தில் இருந்தது; இன்றும் பலருக்கும் அந்த ஏக்கம் இருப்பினும் நிறைவேற்ற ஆள் இல்லை; நிறைவேற வழியும் இல்லை. நகர்ப்புறத்தில் வாழ்வோர்க்குப் பிறந்த மண்ணின் பெருமை தெரியாமல் போவதில் வியப்பொன்றும் இல்லை.

களப்பாள், அன்று அந்த மண்ணில்…. அந்தச் சிவந்த மண்ணில், பண்ணைகள் வளமாக இருந்தன; பாட்டாளி வர்க்கமும் பலமாக இருந்தது. செங்கொடியும் சிவப்புத்துண்டும் சிவப்புச் சட்டையும் பண்ணைகளுக்குச் சிம்ம சொப்பனமாகிவிட்ட காலம் 1946,இல் நடந்த நாணலூர்க் கலகமும் களப்பாள் கலவரமும் பண்ணைகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அன்று அந்த ஊரில் உயரே பறந்த ஒரே கொடி செங்கொடி மட்டுமே. நிலப்பறி இயக்கம் நடந்தது; நில உச்சவரம்பு வந்தது. செங்கொடிகளின் அமாவாசை கூட்டமும் உழுதொழில் வேலை நிறுத்தமும் பண்ணைகளைத் தூங்கவிடாமல் செய்துவிட்டன; பெருநிலக்கிழார்கள் இடம்பெயர்ந்து விட்டனர். இன்று அந்த ஊர்……. ஒரு பெரிய திருவிழா நடந்து முடிந்ததைப் போல ஆரவாரமின்றி….! -------------------தொடரும்…………….