களப்பிரர் _ களப்பாள் : 1.
பிறந்த ஊருக்குப் பெருமை சேர்க்க வேண்டும்,இல்லையேல் பிறந்த ஊருக்குப் பெருமை சேர்த்தவர்களையாவது பெருமைப்படுத்த வேண்டும். அந்த வகையில் நான் பிறந்த ஊராகிய களப்பாளுக்குப் பெருமை சேர்த்த திருக்களர் மு. சுவாமிநாத உபாத்தியாயர் என்கிற மு. சுவாமிநாத மாதவராயர் அவர்கள் எழுதிய “களப்பாள் என்னும் திருக் களந்தை (1941), களப்பாள் சிவஷேத்திர விளக்கம் (1911), முப்பொருள் விளக்கம் (1911) என்னும் கிடைத்தற்கரிய மூன்று நூல்களையும் மறுபதிப்பாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பிறந்த மண் –தாய் மண்! வாழ்வது எந்த மண்ணாயினும் சாவது தாய் மண்ணில்தான் எனும் கொள்கை நம் முன்னோர்களிடத்தில் இருந்தது; இன்றும் பலருக்கும் அந்த ஏக்கம் இருப்பினும் நிறைவேற்ற ஆள் இல்லை; நிறைவேற வழியும் இல்லை. நகர்ப்புறத்தில் வாழ்வோர்க்குப் பிறந்த மண்ணின் பெருமை தெரியாமல் போவதில் வியப்பொன்றும் இல்லை.
களப்பாள், அன்று அந்த மண்ணில்…. அந்தச் சிவந்த மண்ணில், பண்ணைகள் வளமாக இருந்தன; பாட்டாளி வர்க்கமும் பலமாக இருந்தது. செங்கொடியும் சிவப்புத்துண்டும் சிவப்புச் சட்டையும் பண்ணைகளுக்குச் சிம்ம சொப்பனமாகிவிட்ட காலம் 1946,இல் நடந்த நாணலூர்க் கலகமும் களப்பாள் கலவரமும் பண்ணைகளை நிலைகுலையச் செய்துவிட்டன. அன்று அந்த ஊரில் உயரே பறந்த ஒரே கொடி செங்கொடி மட்டுமே. நிலப்பறி இயக்கம் நடந்தது; நில உச்சவரம்பு வந்தது. செங்கொடிகளின் அமாவாசை கூட்டமும் உழுதொழில் வேலை நிறுத்தமும் பண்ணைகளைத் தூங்கவிடாமல் செய்துவிட்டன; பெருநிலக்கிழார்கள் இடம்பெயர்ந்து விட்டனர். இன்று அந்த ஊர்……. ஒரு பெரிய திருவிழா நடந்து முடிந்ததைப் போல ஆரவாரமின்றி….! -------------------தொடரும்…………….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக