வெள்ளி, 2 அக்டோபர், 2026

தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -30. வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு

  தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -30. 

  முனைவர் இரெ. குமரன்:  

                     தொல்தமிழர் - வழிபாடு :நற்றிணை :  

“ அழிவிலர் முயலும் ஆர்வ மாக்கள்    

வழிபடு தெய்வம் கண் கண்டாஅங்கு   

அலமரல் வருத்தம் தீர யாழ நின்   

நலமென் பணைத் தோள் எய்தினம் ....”  

                           பாலைபாடிய பெருங்கடுங்கோ. நற். 9, 1 – 4. 

                       சிதைவில்லாத செயலை முயல்கின்ற ஆர்வமிக்கவர்கள் அச்செயல் நன்கு முடியத் தாம் வழிபடுகின்ற தெய்வத்தை கண்கூடாகக் கண்டாற்போல யாம் நெடுங்காலம் நின்னைப் பெற முயன்றதனால் ஏற்பட்ட மனக்கவலையும் வருத்தமும் தீரும்படி நின் அழகிய மென்மையான பருத்த தோள்களை அடைந்தோம்.  

                       ( ஆர்வமுடையவர் தம் வழிபடு தெய்வத்தைக் கண்டு தாம் விரும்பியதைப் போலத் தலைவன் தலைவியின் தோள்களை விரும்பிப் பெற்றான். (அலமரல் - மனக்கவலை ; யாழ - முன்னிலை .) 

 .......................................தொடரும்............................................  

 

;

வியாழன், 1 அக்டோபர், 2026

தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -29. நற்றிணை; கடவுள் வாழ்த்து:

    தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -29. 

  முனைவர் இரெ. குமரன்:  

        தொல்தமிழர் - வழிபாடு : 

                                நற்றிணை; கடவுள் வாழ்த்து:  

                              “திருமாலை வாழ்த்திப் பாடியது. திருமால் வேத முதல்வன்; அவனை நாமும் வணங்குவோம் என்று கூறுவதாக இப்பாட்டு அமைந்துள்ளது.”  

“ மாநிலம் சேவடியாக தூநீர்    

வளைநரல் பெளவம் உடுக்கை ஆக    

விசும்பு மெய்யாக திசை கையாக    

பசுங்கதிர் மதியமொடு சுடர் கண் ஆக   

இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய    

வேத முதல்வன் - என்ப    

தீது அற விளங்கிய திகிரியோனே.” 

                                              - பாரதம் பாடிய பெருந்தேவனார். 

                   பெரிய நிலத்தை தன் சேவடிகளாகக் கொண்டவன் ; தூய நீரையுடைய சங்குகள் ஒலிக்கும் கடலை ஆடையாகப் பெற்றவன் ; ஆகாயத்தை உடம்பாக உடையவன் ; திசைகளைக் கைகளை ஏற்றவன் ; பசுமையுடைய கதிர்களைக் கொண்ட நிலவையும் ஞாயிற்றையும் இரண்டு கண்களாக வாய்த்தவன் ; நிலம் முதலாகிய எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கியவன் ; வேதத்தாற் கூறப்படும் முதற் கடவுள் ; அவனைக் குற்றமில்லாத சக்கரத்தை உடையவன் என்று முன்னோர் கூறுவர் ; ஆகவே நாமும் அவனைக் கடவுளாகக் கொண்டு வணங்குவோம்.  

( நரல் - ஒலிக்கும் ; பெளவம் - கடல். ‘ திகிரி - சக்கரம். ; தூநீர் - தூய அலையாலே தூவப்படும் நீர் எனவும் கொள்க என்பர்.) .....................................................தொடரும்...................................