தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -31.
முனைவர் இரெ. குமரன்:
தொல்தமிழர் - முருகு வழிபாடு :நற்றிணை :
”பெருங்களிறு உழுவை அட்டென இரும்பிடி
உயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது
நெய்தற் பாசடை புரையும் அம் செவிப்
பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென
அரும்புண் உறுநரின் வருந்தி வைகும்
கானக் நாடற்கு இதுஎன யான் அது
கூறின் எவனோ தோழி வேறு உணர்ந்து
அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி
வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து
அன்னை அயரும் முருகு நின்
பொன் நேர் பசலைக்கு உதவாமாறே?”
நல்வெள்ளியார், நற். 47 : 1- 11.
”தோழி...!
தலைவனைப் பிரிந்ததனால் உண்டான உன் மேனி வேறுபாட்டைப் பிறிதொன்றாகக் கருதினள் அன்னை ; எனவே தெய்வத்தால் அறியப்படும் கழங்கு அம்மாறுபாட்டைக் காட்டுதலால் வெறியாட்டு நிகழ்த்தினால் நோய் தீருமென்று கருதினாள் ; உடனே ஆட்டை அறுத்து முருகவேளை வணங்கினாள் ; இச்செயல் பொன்போன்ற உனது பசலையைப் போக்கப் பயன்படவில்லை ;
எனவே புலி பெரிய களிற்றைக் கொன்றதே என்று அதன் பெண் யானை வாடிய துன்பத்தோடும் வருத்தத்தோடும் இயங்க இயலாமல், நெய்தலின் பசிய இலையைப் போன்ற அழகிய செவியைக்கொண்ட தன் கன்றினை அணைத்துக் கொண்டு, விரைவாகத் தீர்க்க முடியாத புண்ணுற்றாரைப் போல வருந்தியிருக்கும் அத்தகு கானக நாடன் தலைவன் ; அவனை அணுகி “நீ அன்பு செய்யாமையால் இப்பசலை தோன்றிற்று’ என்று யான் கூறினால் அதனால் வரும் குற்றம் உண்டோ..? இருப்பின் கூறுக.
(உழுவை - புலி. ; பாசடை - பசிய இலை. ; பைதல் - பசுமை./ இள்மை. ; கோட்டம் - மாறுபாடு.மறி - ஆட்டுக்குட்டி.)
.................This Site For Sale. .......................................தொடரும்...........................