தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -33.
முனைவர் இரெ. குமரன்:
தொல்தமிழர் - வழிபாடு - நற்றிணை :
“ கடவுள் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண்பூ உருகெழக் கட்டிப்
பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
அருவி இன் இயந்து ஆடும் நாடன்
மார்புதர வந்தபடர் மலிஅரு நோய்
நின் அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து
கார்நறுங் கடம்பின் கண்ணி சூடி
வேலன் வேண்ட வெறிமனை வந்தோய்
கடவுள் ஆயினும் ஆக
மடவை மன்ற வாழிய முருகே.” - பிரமசாரி, நற். 34.
முருகவேளே...! தெய்வத்தன்மை பொருந்திய மலையில் உள்ள சுனையில் இலைகளை விலக்கி மேலே எழுந்து மலர்ந்த பறிக்காமல் விட்டிருந்த குவளை மலரைப் பறித்து, அவற்றோடு குருதி போன்ற நிறமுடைய காந்தளின் ஒள்ளிய மலர்களை உருவம் விளங்கக் கட்டிச் சூரரமகள் சூடினாள் ; சூடிப் பெரிய மலையின் பக்கங்கள் எல்லாம் பொலிவு பெற அருவியின் ஒலியே இனிய இசைக் கருவிகளாகக் கொண்டு அச்சூரரமகள் ஆடுவாள். அத்தகு நாட்டையுடைய தலைவனது மார்பைப் புணர்ந்தமையால், குறைபாடில்லாத , நீங்குதற்கு அரிய இக்காம நோய் நேர்ந்தது .
இதனை நீ நன்றாக அறிந்திருந்தும், இந்நோய் நின்னால் வந்ததன்று என்பதை உணர்ந்திருந்தும் தலைநிமிர்ந்து கார்காலத்தில் மலர்கின்ற நறுமணமுள்ள கடப்பமாலையைச் சூடிப் படிமத்தான் வேண்டுதலால் வெறிகளத்துப் பலிபெற வந்தாய் . நீகடவுளர்களில் ஒருவனாகக் கருதப் பெறுதற்கு உரியவன் ஆனாலும் ஆகட்டும் ; உறுதியாக நீ அறிவற்றவனே ஆவாய்,, எனினும் நீ வாழ்வாயாக.
(பறியாக்குவளை - கடவுள் வழிபாட்டுக்கன்றிப் பிறவற்றிற்குப் பறிக்கப்படாதது.; அடை - இலை ; உருகெழ - நிறம் பொருந்த. ; படர் - வருத்தம் ; அணங்குதல் - வருத்துதல். ; மடவை - அறியாமை உடையை.)
.................This Blogger For Sale. .......................................தொடரும்...........................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக