தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -32.
முனைவர் இரெ. குமரன்:
தொல்தமிழர் - விழாக் களம் :நற்றிணை:
நெய்தல்.
“இறவுப் புறத்து அன்ன பிணர்படு தடவு முதல்
சுறவுக் கோட்டன்ன முள் இலைத் தாழை
பெருங்களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு
நல்மான் உளையின் வேறுபடத் தோன்றி
விழவுக்களம் கமழும் உரவுநீர்ச் சேர்ப்ப
இனமணி நெடுந்தேர் பாகன் இயக்க
செலீஇய சேறிஆயின் இவளே
வருவை ஆகிய சில்நாள்
வாழாளாதல் நற்கு அறிந்தனை சென்மே.”
நக்கண்ணையார் , நற். 19.
இறா மீனின் புறம் போன்ற சருச்சரை பொருந்திய பெரிய அடியையுடையது சுறாமீன் ; அதன் முகத்தில் நீண்டுள்ள கொம்புபோன்ற முட்களை உடைய இலையைக் கொண்டது தாழை . அத்தாழை பெரிய களிற்றியானையின் கொம்பு போன்ற அரும்பு முதிர்ந்து நல்ல பெண்மான் தலை சாய்த்து நிற்றலைப்போல வேறாகத் தோன்றி விழா எடுக்கும் களமெல்லாம் நல்ல மணம் வீசும்.
மிக்க மணிகள் கட்டிய உனது நெடிய தேரைப் பாகன் செலுத்துவதால் உனது ஊருக்குச் செல்லும் பொருட்டாகச் செல்கின்றன ; ஆனால் உன்னைப் பிரிந்த இவள் பிறகு நீ வருவாய் என்று குறிப்பிட்ட சில நாள்கூட உயிர் வாழ்ந்திருக்கமாட்டாள் என்பதை நீ நன்றாக அறிந்து கொண்டு செல்வாயாக.
( தடவு - பெருமை. ; பிணர் - சருச்சரை ; உரவு - வலிமை. ; உழை - பெண்மான்.)
.................................தொடரும்..................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக